சமையல்காரன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தமிழ் சினிமாவிலும் , நாடகத் துறையிலும் கொடி கட்டி பறந்தவர்


நடிகவேள் எம் ஆர் ராதா. ஒரு கால கட்டத்தில் இவர் இல்லாத படமே இல்லை என்பது போல் எல்லாப் படங்களிலும் இவர் நடித்துக் கொண்டிருந்தார். அப்படி உச்சத்தில் இருந்தவர் மக்கள் திலகம் எம் ஜி ஆரை துப்பாக்கியால் சுட்ட காரணத்தால் சில ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வந்தது. அவ்வாறு சிறை சென்று மீண்ட எம் ஆர் ராதா, அதன் பின் நடித்த முதல் படம் தான் சமையல்காரன்.


சிறை சென்று ராதா திரும்பிய போது கலைஞர் மு. கருணாநிதி

தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. கலைஞர் குடும்பத்துக்கு வேண்டப்பட்டவர்களால் தயாரிக்கப்பட்ட சமையல்காரன் படத்தில் மூலம் தான் ராதா தன்னுடைய திரையுலக மறுபிரவேசத்தை ஆரம்பித்தார். அதே சமயம் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்தவர் வேறு யாருமல்ல, கருணாநிதியின் மகனான மு க முத்து ஆவார். தி மு க விலிருந்து எம் ஜி ஆர் வெளியேற்றப் பட்டு , அண்ணா தி மு க என்ற கட்சியை ஆரம்பித்து கருணாநிதியுடன் அரசியல் யுத்தம் நடத்திக் கொண்டிருந்த கால கட்டதில் முத்து படத்தில் ராதா ரீ என்ட்ரி கொடுக்கிறார் என்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பரபரப்பாக கவனிக்கப் பட்டது.

பெற்றோரை இழந்து இராணுவத்தில் பணியாற்றி விட்டு தனது உறவினர்களை சந்திக்க வருகிறான் மணி. அங்கே அவனின் குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடித்தனம் நடத்திக் கொண்டு அதே சமயம் ஒற்றுமை இல்லாமல் இருப்பதை பார்க்கிறான். தன்னுடைய தாத்தாவும், அக்காள் மகள் சீதாவும் அவர்கள் மத்தில் கஷ்டப்படுவதை பார்க்கும் அவன் , தான் அவர்களின் உறவினன் என்பதை அடையாளப்படுத்திக் கொள்ளாது ஒரு சமையல்காரனாக அவர்கள் வீட்டில் பணிபுரிந்து குடும்பத்தின் ஒற்றுமைக்காக பாடுபடுகிறான்.


படத்தில் சமையல்காரன் மணியாக மு . க. முத்து நடித்திருந்தார். எவ்வித அலட்டலும் இன்றி, குரலை உயர்த்தி பேசாமல், பாத்திரத்துடன் ஒன்றிப் போயிருந்தார் அவர். பாடல் காட்சிகளிலும் அவர் நடிப்பு கவரும் வண்ணம் இருந்தது. சொந்தக் குரலிலும் பாடி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருந்தார் முத்து. சிதம்பரம் சி எஸ் ஜெயராமனின் மருமகன் ஆயிற்றே!

சீதாவாக வரும் வெண்ணிற ஆடை நிர்மலா படம் முழுவதும் சேலை அணிந்து அடக்கமாக நடித்து சோபிக்கிறார். வி. கே ராமசாமி, செந்தாமரை, மனோரமா, தேங்காய் சீனிவாசன், சி .கே .சரஸ்வதி, எம் .பானுமதி, ஆகியோரும் படத்தில் இருப்பதால் படம் கலகப்பாக நகர்கிறது.

இவர்களுடன் எம் ஆர் ராதாவும் இணைந்து கொண்டார். சிறை

சென்று மீண்ட ராதா படத்திலும் சிறையில் இருந்து வெளியே வருவதாகவே அவரின் அறிமுக காட்சி அமைந்தது நல்ல யுக்தி. அவரின் மகனாக கன்னட நடிகர் அம்ரித் நடித்திருந்தார்.

படத்துக்கான பாடல்களை வாலி இயற்ற , எம் எஸ் விசுவநாதன் இசையமைத்திருந்தார். நான் பாடிடும் பாடலின் சந்தம், உங்களில் நான் ஒருவன் , சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க , இந்தப் பெண்ணோடு பிறந்தது நடனம் ஆகிய பாடல்கள் கேட்கும் படி அமைந்தன. படத்தின் ஒளிப்பதிவை அமிர்தம் கையாண்டார்.


படத்துக்கான கதை வசனத்தை டி . என். பாலு எழுதியிருந்தார். இவர் திரையுலகிற்கு எம் ஜி ஆரின் தெய்வத் தாய் படம் மூலம் அறிமுகமாகி இருந்த போதும் , தி. மு. க வில் இருந்து எம் ஜி ஆர் வெளியேற்றப் பட்ட போது கருணாநிதியின் பக்கம் அவர் நின்று விட்டார். இதனால் படத்தில் ஆங்காங்கே எம் ஜி ஆரை கிண்டல் செய்வது போல் வாசனங்களை எழுதியிருந்தார்!

பிரபல இயக்குனர் ஏ . பீம்சிங்கிடம் நீண்ட காலம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய திருமலை, மகாலிங்கம் இருவரும் படத்தை இயக்கியிருந்தார்கள். ஆனாலும் முத்துவுக்கென்று ஒரு ரசிகர் வட்டம் இல்லாமல் போனதால் படமும் சுமாராகவே போனது!

No comments: