பாரதி இளமுருகனார் வாழ்நாட் சாதனையாளர்
புதுமை எழுத்தாளர்கள்; சிலர் ஆங்கிலம் தெலுங்கு கன்னடம் இந்தி வடமொழி முதலிய திசை மொழிக் கொடுந்தமிழ்ச் சொற்களைத் தங்கள் இட்டம்போலப் பாவித்து வருபதுபற்றிச் சென்றவாரத் தமிழ் முரசு இதழிலே எழுதியிருந்தேன். இப்படி இட்டம்போலச் செந்தமிழுடன் பிறமொழிக் கலப்பைச் செய்பவர்களால் வருங்காலத் தமிழ்ச் சந்ததியினரும் செந்தமிழ் வழக்கை மறப்பதற்குச் சாத்தியம் உண்டு என்பதையும் சுட்டிக்காட்டினேன். செந்தமிழ் வழக்கைப் பற்றி மேலும் சில தகவல்களை நேயர்களுடன் பகிர விழைகிறேன்.
தாங்கள் இழைத்துவரும்
தவறை மறைப்பதற்கு மகாகவி பாரதியார் இப்படி எழுதலாம் என்று சொன்னார் என்ற
புதுக்கதையைப் பரப்புவது எத்துணை கொடுமை?. சுயமாகச் சிந்தித்து
இயல்பாகப் பேசப்படும் இலகுவான செந்தமிழ்;நடையிலே எழுதச்
சொன்னவர் பாரதியார். தாங்கள் கொடுந்தமிழில் எழுதுவதைப் பாரதியாரும் ஆதரிக்கிறார்
என்கிற பொய்யைக் கூசாது பரப்புவதை வன்மையாகக் கண்டிக்கவேண்டும் அல்லவா?.
தமிழிலே விழுமிய
புலமைகொண்டு அழிவிலாத இலக்கியமும் இலக்கணமும் படைத்தவர்கள் எமது முன்னோர்கள்.
இவர்கள் வடசொல் திசைச் சொல் ஆகியவற்றை எவ்வளவு விகிதாசாரம் பாவிக்கலாம் என்று வரையறை செய்ததுடன் அதனைக் கடைப்பிடித்தும்
வந்துள்ளார்கள். அதாவது நூற்றுக்கு ஒருசொல் இருசொல் விழுக்காடு மட்டிலேதான் திசைச்
சொற்களைப் பாவித்து வந்துள்ளார்கள். ஆனல் இன்றைய முற்போக்குச் சிறுகதை
எழுத்தாளர்கள் சான்றோர் வரையறை செய்த எல்லையை மீறி நூற்றுக்கு 50 - 60 விழுக்காடாகத்
தங்களின் ஆக்கங்களிலே வழங்கி வருகிறார்கள்.
இந்த முறைகேடான செயல் செந்தமிழுக்கு எத்துணை அழிவைத் தரப்போகுதோ யாம்
அறியோம் பராபரமே!
இக்கால சிறுகதை
எழுத்தாளர் சிலர் கொடுந்தமிழ்ச் சொற்களை இட்டம்போலப் பாவிப்பதொடு மேலே
குறிப்பிட்டது போல பயனிலை இல்லாத எச்சத் தொடர்மொழிகளையும் கதைகளிலே
வழங்கிவருகிறார்கள். உதாரணத்துக்குச் சில
:-
நடுநிசி நேரம்! - பார்க்குமிடம் எங்கும் பயங்கர இருட்டு! -நாள்
முழுவதும் மயான அமைதி ! வீட்டில் ஒரே கொண்டாட்டம்! ஆனால் அந்தக் கணத்திலே!
இருவருக்கும் ஒரே தாகம்! பெண்ணின் அழகோ அழகு!
இத்தகைய கதைகளை
வாசிக்கும் தமிழ்ப் பிள்ளைகளும் அப்படியே அரைகுறை வசனங்களைப் பயனிலை இல்லாது
எழுதப் பழகிவிடுவார்கள் அன்றோ?
முற்றுத்
தொடர்மொழிக்குப் பொருள் விளக்கத்தைக் கொடுப்பது வினைச் சொல்லாகும்.! வினைச் சொல்
இல்லாத தொடர்மொழிகள் எல்லாம் எச்சத் தொடர்மொழிகளாகும். இன்றைய எழுத்தாளர் பலர்
சொற்களை புணர்ச்சி மரபுக்கேற்ப சேர்த்து எழுதாது செந்தமிழ் வழக்கை அழித்து
வருகிறார்கள்.
தமிழ் மொழியின்
இயற்கை ஒலிஅமைதியைப் பாதுகாப்பதற்கு ஏற்படுத்தப்பெற்ற மரபே புணர்ச்சி ஆகும்.
சொற்கள் ஓசையாலும் பொருளாலும் ஒன்றுபடுதலாகிய புணர்ச்சிக்குத் தொல்காப்பியனார் ஆறு
இயல்களிலே விதிசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓசையால் ஒன்றுபடுவது என்பது கதையை வாசிக்கும்பொழுது வாசிப்பவரின்
நாக்கிற்கு எளிமையாகவும் கேட்பவரின் காதுகளுக்கு இனிமை பயப்பதாகவும் அமைந்து
இயற்கை ஒலி அமைப்பைப் பாதுகாக்கும் மரபாகும்.இந்தத் தன்மை இயற்கையிலே
இனிமையானதமிழ்மொழியிலே பிற செயற்கை ஒலிகளைக் கலக்கவிடாது. சொற்களைப் புணர்த்த முன்பு அவற்றின் பொருளை
அறிந்து புணர்த்தல் வேண்டும. புணர்ச்சி விதிமுறைகளை மீறி; வாக்கியங்களை அமைப்பதால் அவற்றிலே பொருள் தெளிவின்மையையும்
திரிபையும் காணலாம்.
ஆனால் தமது கதை
நூல்களுக்குத் தாமே எழுதும் முகவுரைகளிலேயும் விமர்சனங்களிலும் தலைசிறந்த செந்தமிழ்க் கதை என்றும் உலகப்
புகழ்பெற்றுப் பாராட்டப்பெற்ற கதை என்றும் சிலர் வெற்றாரவாரஞ் செய்துவருவதையும்
காணலாம்.
தொல்காப்பியனார்
வரையறை செய்த இயல்கள் புணரியல் - தொகை மரபியல் - உருபியல் - உயிர்மயங்கியல் - புள்ளி மயங்கியல் -
குற்றியலுகரப் புணரியல் என்னும் ஆறாகும். இவற்றின் விளக்கத்தை இலக்கண நூல்களிலே
படிக்கலாம்.
இன்றைய எழுத்தாளர்கள் சிலராலே வழங்கப்பட்டுவரும்
பிழையான புணர்ச்சிச் சொற்கள் :- மண்குடம் - பால்க்குடம் - ஆள்ப்பலம் - கால்ப்பங்கு -
இருள்த்தோற்றம் - மாதுளைக்காய் - வாழைபழம்
- என்தாய் - அரைபங்கு - கல்எறிந்தான் பொன்காப்பு - பனைஓலை - பலாஇலை - தீஎரிந்தது
-திருஅடி - அதனால்த்தான் - ஐஞ்சஞ்சு -
வெறுஉடம்பு - பிரச்சாரம் -
கலாச்சாரம் - வயிறுவலி
- செய்ந்நன்றி - மேற்றோல் - தாள்தலை - அருள்திறம் - நாட்கள் - பொருட்;கள்
இவற்றின் சரியான புணர்ச்சிச் சொற்கள் :-
மட்;குடம் - பாற்;குடம்
- ஆட்;பலம் -
காற்;பங்கு
- -
மாதுளங்;காய் -
வாழைப்பழம் - என்றாய் - அரைப்பங்கு - கல்லெறிந்தான் - பொற்காப்பு - பனையோலை -
பலாவிலை - தீயெரிந்தது - திருவடி -அதனாற்;றான் -
ஐவைந்து - வெற்றுடம்பு - பிரசாரம் -
கலாசாரம் -
வயிற்றுவலி - செய்நன்றி - மேல்தோல் -
தாடலை - அருட்;திறம்
- நாள்;கள் -
பொருள்கள்.
மேலும் சில தொடர்ச் சொற்கள :-;
பத்து பதினொரு - பத்துப்
பதினொரு
வருங்கால கணவராகத் - வருங்காலக்
கணவராகத் -
வீட்டுக்கு போகுமாறு - வீட்டுக்குப்
போகுமாறு
எச்சரிகை கடிதம் -- எச்சரிகைக் கடிதம்
குகனை பராமரிக்கும் - குகனைப்
பராமரிக்கும்
குகனை தூக்கி - குகனைத்
தூக்கி
எனக்கு சுவாடிகா எனக்குச்
சுவாடிகா
சூதாடி காசெல்லாம் - சூதாடிக் காசெல்லாம்
அங்கு சென்றான் - அங்குச் சென்றான்
மெய்; ஞானம் - மெய்ஞ்ஞானம்
அண்மையிலே பிரசுரிக்கப்பெற்ற
சிறுகதைகளிலே இருந்து எடுத்த சில பந்திகள்
உதாரணம் - 1 :-
ஆறு மாதமாக நாங்கள் அடிக்கடி சந்தித்துப் பேசிப்
பழகியதில் இருவருக்கும் ஒருத்தரை ஒருத்தர்
பிடித்துக் கொண்டதால் எங்கள் திருமணம் இனிது நடந்தது. வாடைகைக்கு ஒரு அபார்ட்மெண்ட்டை எடுத்துக் கொண்டு இருவரும் குடிபுகுந்தோம்.
எங்கள் வாழ்க்கை சந்தோசமாக ஓடியது. சரியாக---பத்து மாதத்தில் குகனும் பிறந்தான். ஒரு வருடம் பிள்ளைப் பேறு லீவில் இருந்தேன். பின்பு குகனை அம்மாவு டன் விட்டுவிட்டு வேலைக்குப் போனேன்.
ரகுவரன் எப்போதவது கூட்டாளிகளோடு சேர்ந்து மது அருந்துவார் என்பது எனக்குத்
தெரியும். ஆனால் இப்போது தினமும் வேலை முடிந்ததும் கூட்டாளிகளோடு குடிப்பதற்கு---பப்புக்கு---போய் மது அருந்திவிட்டு இரவு பத்து----பதினொரு மணிக்கு மேல் வீடு திரும்புவது வழமையாகியது. காலையில்
எழுந்து வேலைக்குப் போக இயலாமல், லீவ் போடுவார். இதனால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.
குடிப்பழக்கத்தை விடச் சொல்லி நானும் எல்லோரும் சொல்லிப்
பார்த்தோம். ஆனால் அவர் கேட்கவில்லை. இது மட்டுமில்லை இவர் கசினோவுக்கும் சூதாடப் போவார். போக்கர்
மெசினில் சூதாடி காசெல்லாம் இழந்து வீடு வந்து சேர்வார். மது வாங்கக்
காசில்லாமல் என்னிடம் வந்து கேட்பார். நான் காசு கொடுக்க மறுத்தால் என்னை
அடித்துத் துன்புறுத்துவார். இங்கே அவுஸ்திரேலியாவில் தானே டொமஸ்டிக் வயலன்ஸ் சட்டத்தின் கீழ் காவல் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம்.
எனது பெற்றோர் அதைத்தான் செய்தார்கள். காவல் துறையினர் வீட்டுக்கே வந்து
ரகுவரனிடம், “மேலும் வன்முறை செய்தால் கைது செய்யப்படுவார்” என எச்சரிக்கை---கடிதம் கொடுத்தார்கள் “என்னால் அவருடன் இனிமேல் ஒன்றாக வாழ
முடியாது” எனக் கூற, அபார்மண்ட் வாடகை நான் கட்டுவதால், ரகுவரனை வேறு
வீட்டுக்கு--போகுமாறு கூறினார்கள். ரகுவரனும் தன் பெற்றோர் வீட்டிற்கு-போய்விட்டான்.
ரகுவரனிடம் இணக்கமான விவாகரத்து-----கோரினேன். ரகுவரன்
அதைத் தர மறுத்ததால் குடும்ப நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஒரு வருடத்திற்குப்
பின் தான் விவாகரத்து-- கிடைத்தது.
இந்தச் சிறுகதை முழுவதிலும் ஆங்கலச் சொற்கள் கலப்பு .சிவப்பு
நிறம் - 60
புணர்ச்சி செய்யப்படாத இடங்கள் - நீலநிறம்- 70
வசனப் பிழைகள் - எழுத்துப் பிழைகள் - -- 40
-------------------------------------------------------------------------------------------------------------
உதாரணம் - 2 :- வேலைத்தலத்திற்கு
முன்னே சில அரச அதிகாரிகளின் வசிப்பிடம்.
பின்னே புகையிரதப்பாதை. எதிரே
மன்னார் வீதிக்கு அப்பால் ஒரு சிங்கள மகாவித்தியாலயம்.
வளவிற்குள் ஒரு டோசர் மூன்று பக் லோடர், ஒரு ஹெவி றக், ஒரு
கல்லுடைக்கும் இயந்திரம், இரண்டு வைபிறேஷன்
மிஷின்கள், ஏழெட்டு டிராக்டர்கள். செக்கியூரிட்டி டோசர், பக் லோடர் ஹெவி றக்.
வளவைச் சுற்றி முட்கம்பி வேலி நாற்புறமும் ஓடுகிறது. தற்காலிக வேலிதான். அதற்குள்ளால்
மனிதர்களும் நாய்களும் நுழைந்து வெளியேறலாம். . வாகனங்களை நகர்த்த முடியாது;. களவெடுத்துக் கொண்டு
போக முடியாது. வாகனங்களை முன்னேயுள்ள செக்கியூரிட்டி
கேற்றிற்குள்ளால் பதிவு செய்துவிட்டுத்தான் கொண்டுபோக முடியும். ஒரு
பொறியியலாளர், அவருக்கு உதவியாக ஒரு அட்மினிஸ்றேற்றிவ்
அஷிஸ்டென்ற், இரண்டு
செக்கியூரிட்டிகள் மற்றும் இருபத்தைந்து
தொழிலாளர்கள். இங்கே ஒரு பெண் பிரஜைகளும் வேலை செய்யவில்லை.
இந்தச் சிறுகதை கதை முழுவதிலும் ஆங்கிலச் சொற்கள் சிவப்பு நிறம் 40
எச்சத் தொடர்மொழிகள் –( பச்சை நிறம்) -- பல
பிழை - சிலஅரச அதிகாரிகள்
சரி - அரச அதிகாரிகள் சிலர்.
பிழை - இங்கே ஒரு பெண் பிரஜைகளும்
சரி - இங்கே பெண்
பிரசைகள் ஒருவரும்----
பிழை -
முட்கம்பி வேலி நாற்புறமும் ஓடுகிறது –
சரி - முட்கம்பி
வேலி நாற்புறமும் போடப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------
தொல்காப்பியனார் வழிவந்த செந்தமிழ் நடை எவ்வாறு இன்றுவரை பேணப்பட்டு
வந்ததென்பதும் இன்று எவ்வாறு கொடுந்தமிழ் தலைவிரித்தாடுகின்றது என்பதும் விளக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலத்திலே எவ்வாறு
தமது ஆக்கங்களிலே செந்தமிழ் கையாளப்பெற்று வந்ததென்பதை ஆராய்வாம்.
பதினையாயிரம் செந்தமிழ்ப் பாக்களால் தமிழன்னைக்கு ஆரஞ்சூட்டி மகிழ்ந்த தங்கத் தாத்தா நவாலி ஊர் சோமசுந்தரப் புலவரின் நடை:-
“ஆயிரஞ் சுடர்க்கை அலரிவானவன் குணதிசைக் குன்றின் உச்சியை அடைய
எட்டிப்பார்க்கிறான். பூம்பொழிலகத்தும் பொய்கையின் கண்ணும் பொன்விளை செறுவினும்
பறவையினங்கள் துயிலுணர்ந்து ஒலியாநின்றன. தேமாமரங்கள் சிவந்த தளிர்களைக் கான்று
அந்தணர் ஏந்திய அடுக்குச் சுடரின் கூட்டம் போல அழகு மலியப் பூத்தன. அசோக மரங்கள்
ஒண்டொடிமார் மேனிபோலத் தண்டளிரீன்றன. வேம்புகள் ஞெண்டின் கண்போல் அரும்பி
விரிந்தன. வெள்ளில் ஒள்ளிய குறுமுறி அரும்பி நகைத்தன. தாமரை புரிநெகிழ்ந் தவிழக்
குமுதம் வாய்மூடின. கடவுளார் கோட்டத்தும் காவலர் முன்றிலினும் வால்வெண் சங்கமும்
காலை முரசும் கனை குரலியம்பின. எங்கும் புதுமணம் கமழ்ந்தது. சந்தனப் பொதியிற்
றமிழுடன் பிறந்த மந்த மாருதமும் வந்துவந்துலாவிற்று. அப்பொழுது திருந்திய அறிவுடை
அருந்தமிழ்ப் புலவனொருவன் வண்டறைந்து தேனார்ந்து வரிக் குயில்கள் இசை பாடத்
தண்டென்றலிடை விரவித் தனியவரை முனிவுசெய்யும் ஓர் பொழிலகம் புகுந்தான்” …
செந்தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் நூலின் ஆசிரியர். இரா. பி . சேதுப்பிள்ளை அவர்களின் இயற்றமிழ் .நடை
“மூவேந்தர்களுக்கும் உரிய நூலாக விளங்கும் சிலப்பதிகாரம் முத்தமிழ் நயங்களும்
அமைந்த அரிய நூலாகவும் திகழ்கின்றது. இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழில்
இயற்றமிழ், இனிய சொற்களால் மாந்தர் அறிவினைக்
கவர்ந்து உயரிய இன்பம் அளிப்பதாகும். இசைத்தமிழ்,செவியின் வாயிலாக உள்ளத்தைக் கவர்ந்து
உலப்பிலா இன்பம் பயப்பதாகும். நாடகத் தமிழ், இயற்றமிழின் அழகையும், இசைத்தமிழின் சுவையையும், காட்சியின் நலத்தோடு கலந்தளித்து மனத்தை
மகிழ்விப்பதாகும். நாடகசாலைக்குச் செல்வோர் மணிமுடி தரித்த மன்னரும்;, மதிநலஞ் சான்ற அமைச்சரும், வெம்படை நங்கையரும், பிறரும் அரங்கத்தில் நடிக்கக் கண்டு
களிப்புறுவர். பண்ணார்ந்த
பாட்டின் இசை கேட்டு இன்புறுவர். நாடகக் கதையில் அமைந்துள்ள கருத்தினை
அறிந்து நலமுறுவர். இவ்வாறு கற்றோர்க்கும் மற்றோர்க்கும் இன்பமும் பயனும் ஒருங்கே
எய்துவிக்கும் தன்மையாலேயே தமிழ் நாட்டு அறிஞர் நாடகத் தமிழைப் போற்றி
வளர்ப்பாயினர்.”
செந்தமிழ் நடையைப் பல வழிகளாலும் செழிப்புற வளர்த்த தமிழறிஞர் கலாநிதி மு. வரதராசனாரின் நடை(அவரின் சிறு கதையிலிருந்து)
“முந்திய ஆண்டைவிட இந்த ஆண்டில் சந்திரனுக்கும் எனக்கும் இருந்த தொடர்பு
வளர்ந்தது. அவன் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பழகிக்கொண்டே எனக்குக் கணக்குக்
கற்றுக் கொடுத்த உதவியைநன்றியோடு நினைத்துப் போற்றினேன்.சில நாட்களில் மாலையில்
நெடுந்தொலைவு நடந்துபோய் வரும் வழக்கத்தை மேற்கொண்டோம். பெரும்பாலும் நடக்கும்போது
பலவகையான செய்திகளைப் பேசிக்கொண்டு போவோம். தேர்வு உள்ள காலங்களில் நடக்கையில்
கையில் புத்தகமோ குறிப்போ எடுத்துக்கொண்டு மெல்லப் பார்த்துக்கொண்டே நடப்போம். அந்தச் சாலையில் இலுப்பை மரங்கள் இரு
பக்கத்திலும் நிறைய வளர்ந்திருந்தன. சில சமயங்களில் அவற்றின் பூக்கள் ஒரு
புதுமையான நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்கும். கீழே பழங்கள் போல் வெண்ணிறமாக
விழுந்து கிடக்கும். சிறுவனாக இருந்த போது அவற்றைப் பழங்கள் என்றே எண்ணிக்
கொண்டிருந்தேன். ஒருநாள் மாடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அவற்றை எடுத்துச் சுவைத்துக்
கொண்டிருந்ததைக் கண்டு, இந்தப் பழங்களைத் தின்னலாமா? என்று கேட்டேன். இவை பழங்கள் அல்ல, பூக்கள் என்று என்னைப் பார்த்துச் சிரித்தான். அன்று அவனிடமிருந்து அந்த
வேறுபாட்டை;க்
கற்றுக்கொண்டேன். ஒருநாள் சந்திரனுக்கு அதைச் சொன்னபோது இது எனக்குத் தெரியுமே! இலுப்பைப் பூ
பழம்போலவே இருக்கும். அதில் உள்ள தேனை உறிஞ்;சிச் சுவைப்பார்கள்.என்றான். அந்த
இருப்பைச் சாலை ஓரமாகவே பாடத்தில் கேள்விகள் கேட்டுக்கொண்டும் விடைகள் சொல்லிக்கொண்டும் நடப்போம்.”
தனித்தமிழுக்காகத்
தமிழ் நாட்டிலே பெரும் புரட்சி செய்து தமிழ் வளர்த்த சான்றோர் மறைமலை
அடிகளாரின் தனித்தமிழ் நடை:-
அடிகளாரின்
வாக்கியங்கள் நீளமானவை. அவற்றில் அருஞ்சொற்கள் பலவற்றை ஆங்காங்கே காணலாம். எனினும்
படிப்பதற்கு இனிமையாக இருக்கும். அவருடைய நடைக்குப் பின்வரும் மேற்கோளைத் தரலாம்.
"படைப்பு எனினும் ஒழுங்குபடுத்தல் எனினும் ஒக்கும். யாதினையோ
ஒழுங்கு படுத்தலெனின் உறுப்பின்றிப் பிண்டமாகக் கிடந்த ஒரு பொருளை உறுப்புடைத்தாக
நெறிப்படுத்து அமைத்தலாம். அவயவம் எனினும் உறுப்பு எனினும் ஒக்கும். இறைவன்றன்
அரும்பேராற்றலால் நிகழ்த்தும் படைப்புக்கு ஒப்பாக எடுத்துக் காட்டப்படும் பொருள்
ஒன்று இவ்வுலகிலில்லையாயினும், ஈண்டெடுத்துக் கொண்ட தருக்கம் இனிது
விளங்குதற் பொருட்டு ஓருதாரணம் எடுத்துக் காட்டுவாம். தச்சுத் தொழில் செய்வான்
ஒருவன் பிண்டமாகக் கிடந்த முழுமரம் ஒன்றை வாளாற் பல துண்டுகளாக ஈர்த்து
அவற்றையெல்லாம் வழுவழுப்பாக இழைத்துத் திரட்டுவனவற்றைத் திரட்டிக் கடைந்தும், குறைக்குமிடங்களில் அவற்றைக் குறைத்தும், மிகுத்தும் பலவேறு படுத்திப் பின்
அத்துண்டுகளையெல்லாம் ஒன்றாக இயைத்து ஆணியறைந்து ஒரு நாற்காலி செய்யக் காண்கிறோம்.
இங்ஙனம் பிண்டமாகக் கிடந்த முழுமரம் ஒன்றைப் பலவாகத் திரித்து
உறுப்புக்களையுடைய நாற்காலியாக ஒழுங்குபடுத்தும் முயற்சியே படைப்பென்பதாம்.
இதுபோல் இறைவனும் உறுப்பின்றி வடிவமற்றுக் கிடந்த மிகுநுட்பப் பொருளாகிய மாயையை
மலையுங் காடும் நாடுங் கடலுமாகிய உறுப்புடைய பருப்பொருளுலகமாக ஒழுங்குபட அமைத்து
உயிர்களுக்கு உதவியாக வைத்தருளினான். இங்ஙனம் செய்யப்படுவதாகிய படைப்பும் மிகு
நுண்ணிய உள்பொருண்மாயையிற் செய்யப்படுவதல்லது வெறும்பாழின்கட் செய்யப்படுவதன்றாம்.
ஆகவே, படைப்பு என்பது எக்காலத்தும் இருப்பதாகிய
உள்பொருள் ஒன்றனையே வேறு வேறாக ஒழுங்குபடுத்தி அமைக்கும் முயற்சியாமென்பது ஈண்டுக்
கூறியவற்றான் இனிது விளங்கும்”
ஈழத் திரு நாட்டிலே தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் அமைத்து 30 ஆண்டுகளாக மறைமலை அடிகளாரின் வழி யொற்றித் தமிழுக்குப் பெரும்பணி செய்த புலவர்மணி இளமுருகனாரின் தனித்தமிழ் நடை
“உலோகாயதம், பொதுவுடைமை, நாத்திகம், மாயாவாதம், முதலிய இக்காலச் சிறுமைகளிற்றப்பி
நல்வாழ்விலே தலைப்பட்டு உய்தற்கு அடிகோலுவது, பண்பட்ட இலக்கியக் கல்வியேயாம். இலக்கியம் என்பது ஓர் அழகுக் கலை. அது மக்கள்
வாழ்விலே முளைகொண்டு, அவ்வாழ்வின் செம்மைக்கு அடிப்படையான அறம் , பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்களாகிய கோடுகள்
பரப்பி அவைகளிலே விழுமிய நன்னெறிகளாய பூக்களை மலர்த்துவது. அம்முகத்தால்;மக்களை நன்மக்களாக்கி அவர்தம் சிந்தனை
சொற்செயல்களைத் தூய்மைப்படுத்தி, அவர்களிடத்திலே தெய்வத்தன்மையைப் பிறப்பிககவல்ல அழகியலுணர்வை நல்குவது.
இன்னும், இலக்கியம், கலையழகுக் காட்சிகள் நிறைந்த ஒரு
புத்தம்புதிய உலகம் போல்வது. எத்துணை ஆண்டு கழியினும் புதுமைக்குப் புதுமையாய்
பழைமைக்குப் பழைமையாய் நிலவி, உண்மை, நன்மை, அழகு என்பவற்றின் தன்மைகளை
மக்களியற்கையிற் பொதிந்து காட்டுவது. தருமர்
பொறையும், வீமன் ஆண்மையும், கன்னன் கொடையும், அரிச்சந்திரன் வாய்மையும், கண்ணப்பர் அன்பும், யூகியின் நட்பும், மங்கையர்க்கரசியின் சைவப் பற்றும், சீதையின் பெண்மையும் என்னும் இவைகளைக் கற்குந்தோறும்யாம் புதியதோர் உலகில்
வைகியின்புறுகின்றோம்”.
மேலே தரப்பெற்ற
தமிழறிஞரின் செந்தமிழ் உரைகளை வாசிக்குந்தோறும் எத்துணை இன்பம் பிறக்கின்றது.
இவர்களின் தரமிக்க வேறு பலப்பல ஆக்கங்கள் உண்டு. மேலே தரப்பெற்ற உதாரணங்களால்
அவர்கள் தத்தம் காலத்திற்கு ஏற்பச் செந்தமிழ் நடையை வெளிக்காட்டிய பாங்கும்
அவர்களின் தமிழ் ஆழுமையும் ஓரளவு தெளிவாகப் புலனாகிறது. தங்குதடையின்றிப்
பாய்ந்தோடும் தெளிந்த நீரோட்டம் போன்ற உணர்வை அல்லவா இவை வாசிக்குந்தோறும்
பிறப்பிக்கின்றது.
இன்று வெளிவரும் சில செய்தித் தாள்கள் கொலை - களவு குத்து -
வெட்டு - கற்பழிப்பு தமிழ்ச்
சிதைப்பு முதலாவற்றிற்கு முதலிடம் கொடுத்து வருவதைக் காண்கிறோம். இவற்றை இன்றைய
மக்கள் எழுத்தெண்ணிப் படித்தும்;, சீர்கெட்ட திரைப்படக் காட்சிகளைப் பேய்கள்
உறங்கும் பெருஞ்சாமம் வரையும் கண்விழித்திருந்து பார்த்து மகிழ்ந்தும், தமது பொன்னான நேரத்தைப் பலர் அவமே
கழிக்கிறார்கள். தமிழின் அழகினிமைகளை அழித்தும், இனிமை பயக்கும் பழந்தமிழ் இசையை
உருக்குலைத்தும், வேண்டப் படாத அருவருப்புக்கும் உரிய
நிகழ்ச்சிகளைக் கதைகளிலே சேர்த்தும், பாலியல் வன்முறைச் செய்திகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்தும், ஆங்கிலக் கலப்பினைச் செய்து செந்தமிழ் வழக்கைச்
சீரழித்தும் வருகின்ற ஆக்கங்களை எமது தமிழ்ப் பிள்ளைகள் வாசித்து மாளாது பாதுகாப்பது ஒவ்வொரு தமிழ் ஆர்வலரின்
தலையாய கடமை அல்லவா? சிந்தித்துச்
செயலாற்றுவோம்! செந்தமிழ் வளர்ப்போம்!
No comments:
Post a Comment