எமது
மொழியான தமிழ்மொழி மிகுந்த தொன்மை வாய்ந்ததும், இலக்கியச் செறிவும் உள்ள மொழி. இவற்றால்
நாம் பெருமைப்படுகிறோம். ஆனால் எம்மில் ஒருவர் தமிழை மட்டுமே கற்றுத் தேர்ந்தவராக இருந்தவராகவும் அதில் பாண்டித்யம் பெற்றவராகவும் இருந்தால் அவரை தமிழ் அறிஞர் என்கிறோமா? இல்லைத்தான். காரணம் அவர் உலகை அறிந்துகொள்ளக் கூடிய மொழியான ஆங்கிலத்தை அறிந்திராததே காரணமாகிறது. தமிழ் மொழியின் தொன்மையை, சிறப்பை
ஆய்வதற்கும் இன்று ஆங்கிலமே கருவி மொழியாக பயன்படுவதை நாம் அறிவோம்.
ஆங்கிலேயர்
எமது நாட்டை ஆணசடு எமது வளங்களை சூறையாடியது யாவும் இன்று வரலாறு ஆகிவிட்டது. ஆனால் அதன் பக்க விளைவுகளாக நாம் சில நலன்களையும் பெற்றுள்ளோம். அதில் ஒன்றுதான் ஆங்கிலக் கவில். இன்று
ஆங்கிலம் மூலமே நாம் உலகைப் பார்க்கிறோம். சர்வதேச மொழியான ஆங்கிலத்தை அறியாவிட்டால் நாம் கிணற்றுத் தவளைகள்தான். இலங்கை இந்தியா போன்ற நாடுகள் சுதந்திரம் பெற்ற நாடுகள்தான். ஆனால் ஆங்கில ஆதிக்கம் இன்றுவரை அங்கு நிலைபெற்றிருப்பதைக் காண்கிறோம்.
அரச கரும் மொழியென அவர்கள் தேசிய மொழியொன்றை பிரகடனப்படுத்தியபோதும்
பெரும்பாலான விஷயங்கள் ஆங்கிலத்திலேயே நடைபெறுகின்றன. வியாபாரம், உயர்கல்வி, சட்டத்துறை,
பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள் அத்தனையிலும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துவதைக் காண்கிறோம்.
ஒட்டுமொத்தமாக எமது சர்வதேச தொடர்புச் சாதனம் ஆங்கிலம்.
அறிவை விருத்தி செய்வதற்கும் ஆங்கிலம்தான் உதவுகிறது. இத்தனையையும் பார்க்கும்பொழுது
இது ஒரு சக்திவாய்ந்த மொழி என்பதில் என்ன சந்தேகம்?
இத்தகைய ஒரு அடித்தலத்தை ஒரு காலத்திலே சமஸ்கிருத
மொழி பெற்றிருந்தது. இந்தியப் பெருங்கண்டத்தின் தொடர்பு மொழியாகவும் அறிஞர்கள் மொழியாகவும்
சமஸ்கிருத மொழி இருந்துள்ளது. இந்தியப் பெருங்கண்டமோ பல மொழிகளைப் பேசும் மக்கள் வாழும்
பிரதேசம். பாரதியோ பாரத தேசத்தின் செப்புமொழி 18 என்றான். இத்தகைய இந்திய தேசத்திலே
கற்றோரை இணைக்கும் மொழியாக சமஸ்கிருத மொழி இருந்துள்ளது. கஷ்மீர் முதல் கன்னியாகுமரி
வரை தமது அறிவை வளப்படுத்த விரும்பியவர்கள் தம் தாய்மொழியுடன் சமஸ்கிருதத்தையும் கற்றுவந்தனர்.
பக்தி இயக்க கால ஆரம்பத்தில் இருந்தே சமஸ்கிருத
மொழியின் ஆதிக்கம் தென்னகத்தில் புகுந்தது. ஆரியமயமாக்கப்பட்டமை எவ்வாறு நடைபெற்றது
என்பதற்கு மகேந்திர வர்மன் காலத்து (580-630) கல்வெட்டே சான்று பகர்கிறது. 10,000 பிராமணர்கள்
வடக்கில் இருந்து வரவழைக்கப்பட்டு தமிழகத்தில் குடியேறினார்கள். இக்கால கட்டத்திலேயே
ஊர் ஊராக கோயில்களும் கட்டப்பட்டன. கோயில் கிரிகைகளை நடத்துவதற்கான நடைமுறைகளை ஆகமங்கள்
நியமனங்கள் என சமஸ்கிருத மொழியிலேயே எழுதினார்கள். மொத்தத்திலே கோவிலுடன் இணைந்த அத்தனையுமே
ஆரியமயமாக்கப்பட்டன. மக்களின் மனத்திலும் ஆரிய மயமான சிந்தனைகள் புகுந்துகொண்டன. தெய்வங்களின்
பெயர்களும் ஆரிமயமாக்கப்பட்டன.
அடியார்க்கு நல்லார்
– பக்த வத்சலம்
அம்மை அப்பன் – சாம்ப
சிவன்
உடையான் – ஈஸ்வரன்
சொக்கன் – சுந்தரன்
நடவரசன் – நடராசன்
சமஸ்கிருத மொழி அறிந்தோரே சமூகத்தில் கற்றோராக மதிக்கப்பட்டனர்.
பலர் சமஸ்கிருத மொழியைக் கற்றுத் தேர்ந்தனர். இந்த பின்னணியிலேயே தென் நாட்டிலே வடமொழி
ஆதிக்கம் வளர்வதற்கு வழி கோலியது. இன்று ஆங்கில மொழி குடையின் கீழ் பல்லின மக்களும்
ஒன்றாவது போல அன்று உயரிகளின் மொழியான சமஸ்கிருதத்தின் மூலம் பல்வேறுபட்ட மொழி பேசிய
இந்தியக் கண்டம் பூராவும் ஒன்றாக முடிந்தது. பல அறிஞர்கள் தமது மொழி விடுத்து, பரந்துபட்ட
வாசகரை மனதில் கொண்டு சமஸ்கிருத மொழியில் எழுதப் புகுந்தனர். அதனால் நீதிநூல்கள், கருத்துவ
நூல்கள், அறப் பரிபாலனம், தர்க்க சாஸ்திரம் என பல்வகை அறிவு சால் நூல்களும் சமஸ்கிருத
மொழியிலே எழுதப்பட்டன. இவ்வாறாக சமஸ்கிருத மொழியின் அந்தஸ்து மேலும் உயர்ந்தது. பண்டைய
நூல்களை எழுதும்பொழுது இறையே கூற தாம் எழுதியதாக கூறும் மரபும் இருந்துவந்துள்ளது.
அதனால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டமை யாவும் தேவ வாக்கு என்ற சிந்தனையும் வளர்ந்தது.
இப்படியான சிந்தனைகள் பல மோத சமஸ்கிருத மொழியே தேவ மொழி என்ற சிந்தனையும் வளர்ந்தது.
இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள் சமஸ்கிருதம், இலக்கிய
கலாச்சார மொழியாக விளங்கியது என்பர். ஒரு சாரார் நமது கல்விக்கும், மத சடங்கிற்கும்
மேலும் அரச பரிபாலனங்கட்கும் உபயோகித்தனர். இது பொது மக்களால் பேசப்பட்ட மொழியல்ல.
சமஸ்கிருதம் பேச்சுவழக்கில் இருந்த மொழி அல்ல. இருந்தாலும் இம்மொழி சமூக உயரிகளிடம்
கற்றோரின் மொழியாக கருதப்பட்டு பாவனையில் இருந்தது. உயர் அந்தஸ்தில் உள்ளோர் பிறர்
புரிந்துகொள்ளாது பேசுவதற்குப் பயன்பட்டது. பிரபலமான சமஸ்கிருத நாடகங்களான “சாகுந்தலம்”
“சிறிய ரதம்” வரை உயர் அந்தஸ்தில் உள்ளோர் சமஸ்கிருத மொழியில் பேசுவதாகவும் பெண் பாத்திரங்கள்
உட்பட தாழ்ந்தோர் யாவரும் சமூக வழக்கில் இருந்த மொழியில் பேசுவதாகவே அமைக்கப்பட்டன.
நாடகத்திற்கு நெறி வகுத்த “நாட்டிய சாஸ்திரமு”ம் அதையே கூறுகிறது.
தென்னகத்திலே கோயில்கள் கட்டப்பட்ட பொழுது வடக்கில்
இருந்து பிராமணரை வரவழைத்ததாகக் கண்டோம். கோயில் கட்டுவது முதல் கோயிலுக்கான விதிமுறைகளையும்
வகுத்தோர் இவர்களே. இவர்கள் உயரிகள் மொழியான சமஸ்கிருத மொழியில் பூஜைகளை செய்ய, ஓதுவார்கள்
தமிழிலே தேவாங்களைப் பாடி இது ஒரு சம்பிரதாயமாக சமூகத்தில் நிலைத்துவிட்டது.
காலத்தின் ஓட்டத்திலே சமூக சிந்தனைகள் மாற செயல்
முறைகளிலும் மாற்றம் ஏற்படுவது இயல்பு. சமஸ்கிருத மொழி வகித்த அந்தஸ்தை மேற்கு நாடுகளில்
லத்தீன் மொழி வகித்து வந்தது. அங்கும் லத்தீன் மொழி தேவபாஷையாகவும் கொள்ளப்பட்டது.
கடந்த காலங்களிலே தேவாலயங்களில் பூஜைகள் லத்தீன் மொழியிலேயே நடைபெற்றன. இன்றும் சில
முதியவர்கள் இதைக் கூறக் கேட்கலாம். இன்றோ, கத்தோலிக்க மத தேவாலயங்களிலே பூஜைகள் மக்களும்
அவற்றைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக அவர்கள் பிரதேச மொழியில் நடத்தப்படுகின்றன.
கத்தோலிக்க மதத்தைப் பொறுத்தளவில் இது இலகுவான காரியம். ரோமாபுரியில் போப்பாண்டவரின்
தலைமையில் திருச்சபையின் கீழ் இயங்குபவை உலகளாவிய கத்தோலிக்க ஆலயங்கள். ஆனால் தமிழில்
பூஜை என நியமிக்க அவ்வாறான தலைமையகம் கிடையாதுதான். ஆனால் இன்று தென்னகத் திருமணங்கள்
பல தனித் தமிழிலேயே நடைபெறுகின்றன. இவ்வாறாக நடைமுறைகள் இல்லாது இல்லை. பெரிய கோயில்களிலே
சமஸ்கிருத மொழியில் பூஜை நடைபெறுகிறது. மாற்றம் காலத்தால் சுமூகமாக நடைபெறவேண்டியது.
5 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கோயில்கள் கட்டப்பட்ட பொழுது தொடங்கிய பாரம்பரியம்
சமூக மாற்றங்கட்கேற்ப மாறவேண்டிய ஒன்றே. மாற்றம் ஒன்றே மாறாதது. இருந்தும் 1000 வருடங்கட்கு
மேற்பட்ட கால பாரம்பரியம் பழமையானது. இதை படிப்படியாக ஆச்சாரிய பெருமக்களும் பொதுமக்களும்
புரிந்துணர்வுடன் செயல்படுத்தவேண்டும்.
No comments:
Post a Comment