கறுப்பு ஜூலையும் ஜனாதிபதி வேட்பாளர்களும்…!

 July 25, 2024


கறுப்பு ஜூலை ஆண்டுதோறும் நினைவு கொள்ளப் படுகின்றது. ஒவ்வோர் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் போட்டிபோட்டுக் கொண்டு இதனை நினைவுகொள்வதுண்டு. இதன்மூலம், தாங்கள் தமிழ்த் தேசிய அரசியலுடன் ஒன்றித்துப் பயணிப்பதாக நிரூபிக்க முடியுமென்று நம்புகின்றனர். 2009இற்கு பின்னரான அரசியல் சூழலில் தமிழ் மக்களின் அரசியல் என்பதே நினைவுகூரலாகத்தான் சுருங்கிக் கிடக் கின்றது. செயலை விடவும் நினைவுகூரல்களை செய்வதையே தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினரும் ஓர் இலகு அரசியலாக முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால், நினைவுகூரல்களின்போது நினைத்துக்கொள்ள வேண்டிய விடயம் என்ன? தமிழ் மக்கள் கடந்த ஒரு நூற் றாண்டாக அரசியல் ரீதியில் பின்தங்கிய நிலையிலேயே இருக் கின்றனர். பின்தங்கியநிலை என்பது அறிவு சம்பந்தப்பட்டதல்ல மாறாக, அடைவு சம்பந்தப்பட்டது. அறிவு அடைவை தரவில் லையாயின், அந்த அறிவால் பயன் என்ன? அரசியல் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு தொடர் செயல்பாடு. அந்தத் தொடர் செயல்பாட்டில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டேயிருக்கின்றனர் –

ஏன்? கறுப்பு ஜூலை தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையில் தமிழ் மக்க ளுக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளுமே அவர் களின் தோல்வியின் அடையாளங்கள்தான். நவீன அரசியலில் ஒப்பாரிகளுக்கும் ஆவேசங்களுக்கும் பொருளில்லை. விவே கத்துக்கும் தந்திரோபாயத்துக்குமே பொருள் உண்டு. ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில்தான் கறுப்பு ஜூலையை தமிழ்த் தேசிய தரப்பினர் நினைவு கொள்கின்றனர்.

இந்த நினைவேந்தலின்போது இந்த ஜனா திபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். மறுபுறமாக, கறுப்பு ஜூ லையில் தமிழர்களின் சொத்துகளை இலக்கு வைத்த அரசியல் பாசறையில் வளர்ந்த இன்னொருவரும் போட்டியிடுகின்றார். இவ்வாறான சூழலில் இவர்களுக்கு வாக்களியுங்கள் என்று தமிழ்த் தேசிய கட்சிகள் கூறமுடியுமா?

தமிழ் அரசுக் கட்சியால் அது முடியுமா? தமிழ் பொது வேட்பாளரை தோற்கடிப்பேன் என்று சுமந்திரனால் கூற முடியுமா? இம்முறை கறுப்பு ஜூலையின் நினைவுகூரல் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு சவாலானது. ஏனெனில், கறுப்பு ஜூலையின் சூத்திரதாரிகளை உருவாக்கிய கட்சியினர்தான் தென்னி லங்கையின் பிரதான வேட்பாளர்களாக இருக்கின்றனர்.

இவர் களை நிராகரித்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி – அவரை நோக்கி தமிழ் மக்களை அணிதிரட்டுவதுதான் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலையாய பணியாக இருக்க வேணடும். இந்தப் பின்புலத்தில் சிந்தித்தால் தமிழ்த் தேசிய கட்சிகளின் கறுப்பு ஜூலை பிரகடனமாக இருக்க வேண்டியது – தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமையை காண்பிக்க வேண்டும் என்பதே.   நன்றி ஈழநாடு 


No comments: