ஜனாதிபதி வேட்பாளராவதற்கு ஹாரிஸுக்கு போதுமான ஆதரவு
உக்ரைனின் அமைதி முயற்சிக்கு உதவ இந்தியாவுக்கு அழைப்பு
கான் யூனிஸ் தாக்குதல்களில் 81 பேர் பலி பலஸ்தீன தரப்புகள் இடையே ‘தேசிய ஐக்கிய’ உடன்படிக்கை
தொடர்ந்து பற்றி எரியும் ஹொதைதா துறைமுகம்
காசாவில் உயிரிழப்பு 39,000ஐ தாண்டியது: மக்கள் வெளியேற இஸ்ரேல் புது உத்தரவு
வடக்கு, தெற்கு காசாவில் இஸ்ரேலின் புதிய தாக்குதல் அலையில் பலர் பலி
ஜனாதிபதி வேட்பாளராவதற்கு ஹாரிஸுக்கு போதுமான ஆதரவு
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமனம் பெறுவதற்கு போதுமான பிரதிநிதிகளின் ஆதரவை பெற்றிருப்பதாக தெரியவருகிறது.
அசொசியேடட் பிரஸ் கடந்த திங்களன்று எடுத்த கருத்துக்கணிப்பின்படி, முதல் சுற்று வாக்கெடுப்பில் வேட்புமனுவில் வெற்றி பெறுவதற்குத் தேவையான 1,976 பிரதிநிதிகளின் ஒப்புதலை ஹாரிஸ் பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின் குறைந்தது 1,976 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகக் கட்சியில் தமக்கு பரந்த அளவில் ஆதரவு கிடைத்திருப்பதாக ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் 1–7 வரை இடம்பெறும் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான அபேட்சகரை தேர்வு செய்வதற்கு பிரதிநிதிகள் வாக்களிக்கவுள்ளனர். இதில் குறைந்தது 27 மாநிலங்களின் பிரதிநிதிகள் ஹாரிஸுக்கு ஆதரவை வெளியிட்டிருப்பதாக சி.பி.எஸ். செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிய 81 வயதான ஜோ பைடனும் கமலா ஹாரிஸுக்கு தமது ஆதரவை வெளியிட்டிருந்தார்.
அமெரிக்கா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளின் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தொழிலதிபர் ஜோர்ஜ் சோரஸ், கமலா ஹாரிஸுக்கு பக்கபலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், அவரது மனைவி ஹிலாரி கிளிண்டன் உட்பட பல தலைவர்கள் கமலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நன்றி தினகரன்
உக்ரைனின் அமைதி முயற்சிக்கு உதவ இந்தியாவுக்கு அழைப்பு
உக்ரைனில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு இந்தியாவை அமெரிக்கா கேட்டுள்ளது.
நாடு என்ற வகையில் பல முக்கிய துறைகளில் எம்முடன் இந்தியா பங்காளியாக செயற்படுகிறது. அந்த வகையில் உக்ரைனில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு இந்தியாவைக் கேட்டுள்ளோம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முதன்மை பிரதிப் பேச்சாளர் வேதானந்த் பட்டேல் தெரிவித்துள்ளார்.
‘உக்ரைனில் நீடித்ததும் நியாயமானதுமான அமைதியை விரைவாக ஏற்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு இந்தியா உட்பட அனைத்து பங்காளர்களையும் நாம் கேட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி தினகரன்
கான் யூனிஸ் தாக்குதல்களில் 81 பேர் பலி பலஸ்தீன தரப்புகள் இடையே ‘தேசிய ஐக்கிய’ உடன்படிக்கை
காசாவில் இஸ்ரேலின் புதிய போர் நடவடிக்கையில் பலரும் கொல்லப்பட்ட நிலையில், காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸுக்கும் ஏனைய பலஸ்தீன தரப்புகளுக்கும் இடையே பீஜிங்கில் நடந்த சந்திப்பில் ‘தேசிய ஐக்கிய’ உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டுள்ளது.
காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக உடன்படிக்கை ஒன்றை நெருங்கி இருப்பதாக அவர்களின் குடும்பத்தினரிடம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் 291 ஆவது நாளாக நேற்றும் நீடித்ததோடு தெற்கு நகரான கான் யூனிஸில் சரமாரித் தாக்குதல்களை நடத்தும் இஸ்ரேலியப் படை அங்குள்ள பொதுமக்களை வெளியேற்ற உத்தரவிட்ட நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி தப்பிச் செல்கின்றனர்.
கான் யூனிஸின் கிழக்குப் பகுதியை மீண்டும் ஒருமுறை சுற்றிவளைத்த இஸ்ரேலியப் படை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் அங்கு பீரங்கி குண்டுகளை வீசியும் வான் தாக்குதல்களை நடத்தியும் சரமாரியாக தாக்கி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் 81 பேர் கொல்லப்பட்டு மேலும் 250 க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இஸ்ரேலின் புதிய வெளியேற்ற உத்தரவினால் 400,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் வெளியேற்றத்திற்கு மத்தியில் நகரின் வீதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் பலஸ்தீன போராளிகள் சண்டையிட்டு வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைளுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் ஒருமுறை வெளியேறிச் செல்கின்றனர். நிலைமை அசாத்தியமானது. அச்சம் மற்றும் இடம்பெயர்வுகளின் சுழற்சி நீண்டு காணப்படுகிறது. அனைவரும் சோர்வடைந்துள்ளனர்’ என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
கான் யூனிஸில் இஸ்ரேலின் புதிய வெளியேற்ற உத்தரவு சுமார் 8.7 சதுர கிலோமீற்றர் பகுதியை உள்ளடக்கி இருப்பதாகவும் அல் மவாசி மனிமாபிமாய வலயத்தின் அசல் அளவில் 15 வீதத்தை குறைத்திருப்பதாகவும் ஐ.நா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்படி காசாவின் கிட்டத்தட்ட 83 வீதமான பகுதி இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவுக்கு உட்பட்ட அல்லது மக்கள் செல்வதற்கு தடையுள்ள வலயங்களாக இருப்பதாக ஐ.நாவின் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் வடக்காக காசா நகரில் பலஸ்தீன வீடுகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
எகிப்துடனான எல்லையை ஒட்டிய ரபாவில் ஹமாஸின் கடைசி படைப்பிரிவை நசுக்கியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டிருக்கும் நிலையில் அங்கு இடம்பெற்ற வான் தாக்குதலில் இரு பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்.
எனினும் ரபாவில் இஸ்ரேலியப் படையுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. நகரின் பெரும் பகுதிகளில் இஸ்ரேலிய டாங்கிகள் இயங்கி வந்தபோதும் நகரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இஸ்ரேலிய படையால் முழு கட்டுப்பாட்டை பெற முடியதிருப்பதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 84 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 329 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஒன்பது மாதங்களில் இடம்பெற்று வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,090 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும 90,147 பேர் காயமடைந்துள்ளனர்.
பலஸ்தீன ஒற்றுமை
காசா போரை ஒட்டி பத்தா அமைப்பின் நிர்வாகத்தில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் தொடர்ந்து வன்முறை நீடித்து வருகின்றன. மேற்குக் கரையில் இஸ்ரேல் நேற்று நடத்திய சுற்றிவளைப்புகளில் நேற்று ஒரு பெண் உட்பட மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் மற்றும் அதன் போட்டி அமைப்பான பத்தா உட்பட பலஸ்தீன தரப்புகள் கடந்த மூன்று தினங்களாக சீன தலைநகர் பீஜிங்கில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் தேசிய ஐக்கிய உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டுள்ளது. இது போருக்குப் பின்னர் காசாவில் ஒன்றிணைந்து ஆட்சி புரிவதற்கான உடன்படிக்கை என்று சீனா குறிப்பிட்டுள்ளது.
ஹமாஸ் மூத்த அதிகாரியான மூவா அபூ மர்சூக், பத்தா பிரதிநிதி மஹ்மூத் அல் அலூ மற்றும் மேலும் 12 பலஸ்தீன குழுக்களின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். காசாவில் போருக்குப் பின்னர், இடைக்கால நல்லிணக்க அரசு ஒன்றை அமைப்பதற்கு இவர்கள் உடன்பட்டதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். ‘நாம் இன்று தேசிய ஐக்கியத்திற்கான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டதோடு இந்த பயணத்தை நிறைவு செய்வதற்கான பாதை தேசிய ஐக்கியமாக இருக்கும் என்று நான் கூறிக்கொள்கிறேன். நாம் தேசிய ஐக்கியத்திற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்பதோடு அதற்காக அழைப்பு விடுக்கிறோம்’ என்று வாங்குடனான சந்திப்புக்குப் பின்னர் மர்சூக் தெரிவித்தார்.
பலஸ்தீன தரப்புகளுக்கு இடையிலான மோதலில் ஹமாஸ் மற்றும் பத்தா இடையிலான சமரசம் திரும்புமுனையாக பார்க்கப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு காசாவில் ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றியது தொடக்கம் இந்த இரு பிரதான தரப்புகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்தப் பிளவை களைவதில் தொடர்ந்து மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வரும் சீனா கடந்த ஏப்ரலிலும் பலஸ்தீன தரப்புகள் இடையே சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. காசா போர் முடிவில் சர்வதேச அமைதி மாநாடு ஒன்றை நடத்துவதற்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெதன்யாகு வாக்குறுதி
எவ்வாறாயினும் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போர் நிறுத்த முயற்சிகள் ஸ்தம்பித்து காணப்படுகின்றன. இந்நிலையில் தற்போது அமெரிக்கா சென்றிருக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்த வார கடைசியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கவிருப்பதோடு அமெரிக்க பாராளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.
பணயக்கைதிகளின் உறவினர்களுடன் வொஷிங்டனில் கடந்த திங்களன்று பேசிய நெதன்யாகு, ‘(உடன்படிக்கைக்கான) நிபந்தனைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது சிறந்த சமிக்ஞையாகும்’ என்றார்.
போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றுக்கான முன்மொழிவை பைடன் கடந்த மே மாதம் முன்வைத்த நிலையில் மத்தியஸ்தர்களாக செயற்படும் எகிப்து மற்றும் கட்டார் அண்மைய வாரங்களில் பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டின.
‘துரதிருஷ்டவசமாக இது ஒரே நேரத்தில் அன்றி படிப்படியாகவே நடக்கும். எவ்வாறாயினும் உடன்படிக்கை ஒன்றை நோக்கி எம்மால் முன்னேற முடியும் என்று நான் நம்புவதோடு அது பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு வழிவகுப்பதாக இருக்கும்’ என்றும் நெதன்யாகு குறிப்பிட்டார்.
எனினும் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் நெதன்யாகு முட்டுக்கட்டையாக இருப்பதாக பலஸ்தீன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ‘உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்குத் தேவையான நெகழ்வுப் போக்கை ஹமாஸ் தமது பதிலில் தெரிவித்த நிலையில் பந்து இப்போது அவர் பக்கமே உள்ளது’ என்று அந்த அதிகாரி குறிப்பிட்டதாக ரோய்ட்டர் செய்தி நிறுவனம் கூறியது.
இஸ்ரேலிய பேச்சுவார்த்தைக் குழு நாளை (25) பணயக்கைதிகளை விடுவிப்பது உட்பட போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
காசாவில் ஹமாஸ் மற்றும் மற்ற போராளிகளின் பிடியில் தொடர்ந்தும் 120 பணயக்கைதிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் உயிரிழந்திருப்பதாக இஸ்ரேல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. நன்றி தினகரன்
தொடர்ந்து பற்றி எரியும் ஹொதைதா துறைமுகம்
யெமனின் ஹொதைதா துறைமுகத்தில் எண்ணெய் தொட்டிகள் மற்றும் மின் நிலையத்தின் மீது இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலினால் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் நேற்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து போராடி வந்தனர்.
கடுமையான தீ மற்றும் கரும்புகை வானை நோக்கி எழுந்த வண்ணம் இருப்பதாக ெஹாதைதாவில் உள்ள ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் விபரித்துள்ளார். இதனைக் கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு வீரர்கள் சிறிய அளவே முன்னேற்றம் கண்டிருப்பதோடு தீ மேலும் பரவி வரும் நிலையில் அது உணவுக் களஞ்சிய வசதிகளை அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக இந்த எரிபொருள் கிடங்கை நடத்தும் யெமன் பெற்றோலிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாக ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பலஸ்தீனர்களுக்கு ஆதரவை வழங்கி வரும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு பதிலடியாகவே யெமன் மீது முதல் முறை பதில் தாக்குதலை நடத்தி இருந்தது. நன்றி தினகரன்
காசாவில் உயிரிழப்பு 39,000ஐ தாண்டியது: மக்கள் வெளியேற இஸ்ரேல் புது உத்தரவு
காசாவில் தொடர்ந்து மோதல் நீடிக்கும் நிலையில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் இடைவிடாது நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,000ஐ தாண்டியுள்ளது.
தெற்கு நகரான கான் யூனிஸில் நேற்று இடம்பெற்ற சரமாரித் தாக்குதல்களில் 27 பேர் கொல்லப்பட்ட நிலையிலேயே பலி எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. புதிய போர் நடவடிக்கைகளை முன்னேடுக்கும் வகையில் காசாவின் சில பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கான் யூனிஸின் கிழக்காக உள்ள பனீ சுஹைலா சிறு நகரில் இஸ்ரேலிய டாங்கிகள் நடத்திய சரமாரித் தாக்குதல்களில் குறைந்தது 16 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதிகளில் வானில் இருந்தும் குண்டுகளும் வீசப்பட்டுள்ளன.
கொல்லப்பட்டவர்களில் ஆறு சிறுவர்கள் மற்றும் நான்கு பெண்கள் அடங்குவதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பலரும் காயமடைந்திருப்பதாக அது கூறியது.
எனினும் கான் யூனிஸில் இடம்பெற்ற தாக்குதல்களில் மொத்தம் 27 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கொல்லப்பட்ட சடலங்கள் மற்றும் காயமடைந்தவர்களை ஏற்றிய ட்ரக் வண்டி ஒன்று கான் யூனிஸில் உள்ள அல் நாசர் மருத்துவமனையை அடைந்திருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.
‘சிறுவர்கள் உட்பட குடும்பம் ஒன்றின் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது துண்டு துண்டாக சிதறடிக்கப்பட்டுள்ளனர்’ என்று சடலங்களை எடுத்துவந்த அம்புலன்ஸ் வண்டியில் இருந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் மத்திய காசாவில் உள்ள டைர் அல் பலாஹ்வில் குடும்ப வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் பலஸ்தீன போராளிகளின் புதிய தாக்குதல்களை அடுத்து பலஸ்தீனர்களை வெளியேறும்படி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதில் கான் யூனிஸின் கிழக்கில் ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் இருந்தும் மக்களை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வெளியேற்ற உத்தரவினால் 400,000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வெளியேற்ற உத்தரவுக்கான துண்டுப்பிரசுரம் வீசப்பட்ட விரைவிலேயே மக்கள் வெளியேறுவதற்கு அவகாசம் இன்றி இஸ்ரேல் படை நடவடிக்கை ஆரம்பித்ததாக அங்கிருக்கும் அல் ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் முன்னணி தளபதிகள் உட்பட போராளிகளை இலக்கு வைத்தே இங்கு தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியபோதும் இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும் தாக்குதல்களை நியாயப்படுத்த இவ்வாறு கூறுவதாகவும் பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை காசா நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அடையாளம் இடப்பட்ட ஐ.நா. வாகன தொடரணி மீது இஸ்ரேலியப் படை தாக்குதல் நடத்தியதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசரினி எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வாதி காசா ஆற்றுப் பள்ளத்தாக்கின் தெற்காக இஸ்ரேலிய சோதனைச்சாவடி ஒன்றுக்கு அருகில் காத்துக்கொண்டிருக்கும்போது கவச வாகனம் ஒன்றின் மீது ஐந்து துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் வாகனம் கடும் சேதத்திற்கு உள்ளானதாகவும் ஐ.நா. பணியாளர்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்ல வேண்டி ஏற்பட்டதாகவும் ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கட்டார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தத்துடன் இடம்பெறும் போர் நிறுத்த முயற்சிகளும் போர் தரப்புகள் இடையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஸ்தம்பித்துள்ளது.
பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவை வியாழக்கிழமை அனுப்புவதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை (21) உத்தரவிட்டதாக பிரதமர் அலுவலகம் கூறியபோதும் அந்தத் குழு எங்கே அனுப்பப்படுகிறது என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை.
அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் உரையாற்றுவதற்காக நெதன்யாகு நேற்று (22) வொஷிங்டன் புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
வடக்கு, தெற்கு காசாவில் இஸ்ரேலின் புதிய தாக்குதல் அலையில் பலர் பலி
போரை நிறுத்த நெதன்யாகுவுக்கு கமலா ஹாரிஸ் அழுத்தம்
காசாவில் வடக்கு மற்றும் தெற்கில் இஸ்ரேல் புதிய தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அங்குள்ள மக்கள் படும் வேதனையை பார்த்து அமைதிகாக்க முடியாது என்றும் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட வேண்டும் என்றும் அமெரிக்க துணை ஜனாதிபதியும் ஜனநாயகக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட எதிர்பார்த்திருப்பவருமான கமலா ஹாரிஸ், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கடுமையான தொனியில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றிருக்கும் நெதன்யாகு அந்நாட்டு பாராளுமன்றத்தில், காசாவில் நடத்தும் போரை நியாயப்படுத்தி பேசிய நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸை தனித்தனியே சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வொஷிங்டனில் நெதன்யாகுவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமலா, இஸ்ரேலின் இருப்பு மற்றும் பாதுகாப்பு மீதான தமது கடப்பாடு உறுதியானது என்றபோதும், போரினால் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.
‘காசாவில் கடந்த ஒன்பது மாதங்களாக இடம்பெறுவது அழிவுகரமானது. இறந்த குழந்தைகள் மற்றும் விரக்தியடைந்த, பட்டினியில் உள்ள மக்கள் பாதுகாப்புத் தேடி சில நேரங்களில் இரண்டு, மூன்று அல்லது நான்கு தடவைகள் இடம்பெயர்ந்து செல்லும் படங்களை காண்கிறோம்’ என்றும் கமலா குறிப்பிட்டுள்ளார்.
‘இந்த அவலங்களை எம்மால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. துன்பங்களுக்கு மத்தியில் நாம் உணர்ச்சியற்றவர்களாக இருக்க முடியது. நான் அமைதியாக இருக்க மாட்டோன்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து பதவியில் உள்ள ஜனாதிபதி ஜோ பைடன் விலகியதை அடுத்தே கமலா ஹாரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஜனநாயகக் கட்சியில் ஆதரவு வலுத்து வருகிறது.
இந்நிலையில் நெதன்யாகுவை சந்தித்த அவர், இஸ்ரேல்–காசா விவகாரத்தில் பைடனை விட கடுமையான தொனியில் பேசியுள்ளார்.
‘இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டிய நேரம் வந்திருப்பதோடு அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டு, காசாவில் பலஸ்தீன மக்களின் வேதனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, பலஸ்தீன மக்களின் சுதந்திரம், கண்ணியம் மற்றும் சுயநிர்ணய உரிமையை செயற்படுத்தி, இஸ்ரேலை பாதுக்காக்கும் வகையில் அது முடிவுக்கு வரவேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.
இஸ்ரேலின் தற்காத்துக்கொள்ளும் உரிமைக்கு ஆதரவு வழங்குவதாகவும் வலியுறுத்திய கமலா, ஹமாஸ் அமைப்பை கொடிய பயங்கரவாத அமைப்பு என்று கண்டித்தார்.
கடந்த காலங்களில் இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவை வழங்கி வந்தவராக பார்க்கப்படும் கமலா ஹாரிஸ், 2017 இல் செனட் உறுப்பினராக தனது முதல் விஜயத்தில் இஸ்ரேலுக்கு பயணித்திருந்தோடு இஸ்ரேலைக் கண்டிக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தீர்மானத்திற்கு எதிராக செனட்டில் தீர்மானம் ஒன்றையும் கொண்டுவந்தவராவார்.
எனினும் காசா போரை ஒட்டி ஜனநாயகக் கட்சிக்குள் பெரும் பிளவு ஏற்பட்டிருப்பதோடு போரில் இஸ்ரேலுக்கு வழங்கி வரும் ஆதரவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி பைடனையும் நெதன்யாகும் நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு நெதன்யாகுவுக்கு பைடன் அழுத்தம் கொடுத்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கப் பாராளுமன்றத்தில் நெதன்யாகு உரை நிகழ்த்திய ஒரு நாளுக்குப் பின்னரே இந்த சந்திப்புகள் இடம்பெற்றன.
ஹமாஸுக்கு எதிராக ‘முழு வெற்றி’க்கு உறுதி பூண்டுள்ளதாக பாராளுமன்ற உரையில் நெதன்யாகு கூறினார். அவர் உரை நிகழ்த்தியபோது ஆயிரக்கணக்கான பலஸ்தீன ஆதரவாளர்கள் வெளியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இஸ்ரேல்–காசா போர் ஒன்பது மாதங்களுக்கு மேல் தொடர்ந்து வரும் நிலையில், இந்தப் போரை நிறுத்த உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நெதன்யாகு அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் காசாவில் இஸ்ரேலின் போர் விமானங்கள் நேற்றும் சரமாரித் தாக்குதல்களை நடத்தின. இதில் தெற்கு நகரான கான் யூனிஸ், மத்திய காசாவில் புரைஜ் அகதி முகாம் மற்றும் வடக்கில் காசா நகரங்கள் இலக்கு வைக்கப்பட்டன.
காசா நகரின் கிழக்கில் அல் சஹாப் பகுதியில் நேற்று முன்தினம் நடத்திய வான் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அல் பன்னா குடும்பத்திற்குச் சொந்தமான வீடு உட்பட இரு வீடுகளை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களிலேயே இவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தவிர காசா நகரின் அல் தராஜ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியதாகவும் அங்கு உயிரிழப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் பலஸ்தீன செய்தி செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
மத்திய காசா நிர்வாகப் பகுதியில் பல குடியிருப்புக் கட்டடங்களை இஸ்ரேலியப் படை இடித்துத் தகர்த்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக கான் யூனிஸில் மீண்டும் படை நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் கடந்த ஒருசில நாட்களில் அங்கு நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதோடு ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தப்பது.
அதேபோன்று காசாவில் எகிப்துடனான எல்லையில் உள்ள ரபா நகரிலும் கடந்த மே ஆரம்பம் தொடக்கம் இஸ்ரேல் தரைவழி படை நடவடிக்கையை முன்னேடுத்து வரும் நிலையில் பலஸ்தீன போராளிகளிடம் இருந்து தொடர்ந்து எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
ரபா எல்லைக் கடவையில் நிலைகொண்டிருக்கும் இஸ்ரேலியப் படையினர் மற்றும் வாகனங்கள் மீது மோட்டார் குண்டு தாக்குதல்களை நடத்தியதாக பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு நேற்று குறிப்பிட்டிருந்தது. கான் யூனிஸ் கிழக்குப் பகுதியில் இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் டாங்கி எதிர்ப்பு செல்களை பயன்படுத்தி இஸ்ரேலிய படையுடன் கடும் மோதலில் ஈடுபட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் இதுவரை 39,200 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதோடு 90,000இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளர்.
இந்தப் போரினால் காசாவில் உள்ள 10 பேரில் ஒன்பது பேர் இடம்பெயரச் செய்யப்பட்டிருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘மக்கள் நிரம்பி வழியும் பாடசாலைகள், உடைந்த கட்டடங்கள், மணல் அல்லது குப்பைகளுக்கு இடையே இருக்கும் தற்காலிக கூடாரங்களில் குடும்பங்கள் அடைக்கலம் பெற்றுள்ளன. இங்கு எந்த ஒரு இடமும் பாதுகாப்பானதாக இல்லை. மக்கள் செல்வதற்கும் இடமில்லை’ என்று அந்த நிறுவனம் எக்ஸ் சமூகதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment