இலங்கைச் செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 21; வெளியானது அதி விசேட வர்த்தமானி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர் அறிமுக நிகழ்வு

கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளை ஜப்பான் தூதரக அதிகாரிகள் நேரில் பார்வை

கொவிட் - 19 தொற்று பரவல் காலத்தில் கட்டாய உடற் தகனக் கொள்கைக்கு அரசாங்கம் மன்னிப்புக் கோருகிறது

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெற்றிகரமாக கறுவா செய்கை

படுகொலை செய்ய சதி முயற்சி; நடவடிக்கை எடுக்க வேண்டும்


ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 21; வெளியானது அதி விசேட வர்த்தமானி 

- தேர்தல்/ வாக்களிப்பு: செப்டெம்பர் 21 (சனிக்கிழமை)

July 26, 2024 8:07 am 

– வேட்புமனு ஏற்பு: ஓகஸ்ட் 15 (வியாழக்கிழமை)
– வேட்புமனு தாக்கல்: தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில்

இவ்வருடம் இடம்பெறுமென எதிர்பார்த்திருந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய 2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதற்கான வாக்களிப்பு/ வாக்கெடுப்பு இடம்பெறும் திகதியாக செப்டெம்பர் 21, சனிக்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களை பெயர் குறித்து நியமிக்கும் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் திகதியாக ஓகஸ்ட் 15ஆம் திகதி வியாழக்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, விஜயதாச ராஜபக்‌ஷ, சரத் பொன்சேகா ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இவர்கள் தவிர, பிரதான கட்சிகளான தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அநுர குமார திஸாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சஜித் பிரேமதாஸவும் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்கத்கது.

அத்துடன் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் தங்களது வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 






யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர் அறிமுக நிகழ்வு 

July 26, 2024 1:05 am 

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டு, பதிவு செய்த புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் மற்றும் அறிமுக நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடாதிபதி பேராசிரியர் என்.கெங்காதரன் தலைமையில் கலாசாலை வீதியில் அமைந்துள்ள முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

2022ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து தொழில் நிர்வாகமாணி மற்றும் வணிகமாணி கற்கைநெறிகளுக்கு தெரிவு செய்யப்பட் சுமார் 600 புதுமுக மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழகத்தின் பதிவாளர், நூலகர், மாணவர் நலச்சேவைகள் பணிப்பாளர் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட துறை தலைவர்கள்,  இணைப்பாளர்கள் உள்ளிட்டோர் மாணவர்களுக்கான  வழிகாட்டல் மற்றும் அறிமுக உரைகளை நிகழ்த்தினர்.

யாழ். விசேட நிருபர்

நன்றி தினகரன் 




கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளை ஜப்பான் தூதரக அதிகாரிகள் நேரில் பார்வை 

July 26, 2024 1:00 am 

கிளிநொச்சி, முகமாலை மற்றும் யாழ்ப்பாணம், கேரதீவு பகுதிகளில் ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் நிலக் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளை  நேற்று வியாழக்கிழமை  ஜப்பானிய தூதரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளனர்.

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை மேம்பெடுகேணி பகுதியில் ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் வெடிபொருள் அகற்றும் பணியை மேற்கொண்டு வரும் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான   நிறுவனமான டாஸ் நிறுவனத்தினால்  வெடிபொருட்கள் அகற்றப்பட்ட நிலையில் நிறைவுறுத்தப்பட்ட பகுதிகளை  ஜப்பானிய தூதரக அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர். கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட  காணி உரிமையாளர்களோடும் அவர்கள்  கலந்துரையாடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கேரதீவு பகுதிக்கும் மேற்படி குழுவினர் சென்றனர்.  அப்பகுதியில் கடற்கரையோரங்களில் கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் கடற்கரையோரங்களில் அடையாளம் காணப்பட்டு வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதிகளை சென்று இந்தக் குழுவினர் பார்வையிட்டுள்ளனர். தற்போது அப்பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற கடற்றொழிலாளர்கள் மற்றும் அந்த பிரதேச மக்களுடனும் ஜப்பானிய தூதரக அதிகாரிகள்  கலந்துரையாடியுள்ளனர்.

ஜப்பான் நாட்டின் உயர் அதிகாரியான அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கு உதவி வழங்குதல், பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் ஆலோசகர் கடோ அகிகோ மற்றும் ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் செயலகத்தின் அதிகாரி ஆகியோரே நிலக் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட  பகுதிகளை சென்று பார்வையிட்டுள்ளனர்.    பரந்தன் குறூப் நிருபர் - நன்றி தினகரன் 






கொவிட் - 19 தொற்று பரவல் காலத்தில் கட்டாய உடற் தகனக் கொள்கைக்கு அரசாங்கம் மன்னிப்புக் கோருகிறது 

July 24, 2024 6:18 am 

கொவிட் 19 தொற்று காலத்தில் மரணித்தவர்களின் சடலங்களை தகனம் செய்தமைக்காக அரசாங்கம் மன்னிப்புக் கோரியுள்ளது. நீதி, வெளிவிவகார, நீர்வழங்கல் அமைச்சர்களான விஜேயதாச ராஜபக்‌ஷ, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஜீவன் தொண்டமான் ஆகியோர் கூட்டாக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  கொவிட் – 19 தொற்று காலப்பகுதியில் சிகிச்சை முகாமைத்துவம் தொடர்பாக சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களில், வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு விதந்துரைக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகிய 276 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.பின்னர் 2021 பெப்ரவரி மாதத்தில் அவ்வாறான நபர்களுக்கு மிகவும் மட்டுப்பாடுகளுடன் கூடிய அடக்கம் செய்வதற்கான

அனுமதி வழங்கப்பட்டது.

2021 ஜூலையில் ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் அப்போதிருந்த நீர் வழங்கல் அமைச்சால் ஆற்றுநீர், மருத்துவமனைகள், தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் ஏனைய இடங்களிலிருந்து வெளியேற்றப்படும் அசுத்தநீர் உள்ளிட்ட கொழும்பு கண்டி நீரியல் பிரதேசங்களில் SARS –COV-2 வைரசை அடையாளம் காண்பதற்கான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டது.

ஆய்வின் பிரகாரம் மேற்புற நீரில் எவ்வித வைரசும் இல்லாமை கண்டுபிடிக்கப்பட்டது.

2024 மார்ச் மாதத்தில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்படும் நீர் தொழிநுட்பத்துக்கான சீனா – இலங்கை ஒருங்கிணைந்து ஆராய்ச்சி மற்றும் மாதிரி நிலையத்தின் மூலம் இரண்டாவது கற்கையும் பூர்த்தி செய்யப்பட்டது.   நன்றி தினகரன் 






முல்லைத்தீவு மாவட்டத்தில் வெற்றிகரமாக கறுவா செய்கை

July 26, 2024 1:02 am 

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்றுமதிப் பயிரான கறுவாச் செய்கை வெற்றி கண்டுள்ளதாக ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள அம்மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தின் பண்ணை முகாமையாளர் லி.துமிலன் தெரிவித்தார்.

பொதுவாக மத்திய மலைநாட்டில் இது நன்கு வளரக்கூடியது. கண்டி, மாத்தளை, ஹப்புதலை போன்ற 
பகுதிகளிலும் சிங்கராஜ வனப் பகுதிகளிலும்  கறுவா பயிர் செய்யப்படுகின்றது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதாரணமாக வீடுகளில் இது வளர்க்கப்படுகின்றது. வர்த்தக நோக்கம் இல்லாவிட்டாலும் வீட்டுத் தோட்ட செய்கையாக இது பயிரிடப்படுகின்றது. இந்நிலையில்  முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் கறுவாச் செய்கை  மேற்கொள்ளப்படுகிறது.

அத்துடன்  கறுவாப்பட்டை பெற்றுக்கொள்ளும் செயல்முறை ரீதியான பயிற்சிகளும் விவசாயிகளுக்கு நடத்தப்படுகின்றன.  தேவையான தரமான கறுவா நடுகை பொருட்களை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.

கறுவா செய்கை தொடர்பில் விவசாயிகள் மேலதிக தகவல்களை ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.    புதுக்குடியிருப்பு விசேட நிருபர்   நன்றி தினகரன் 






படுகொலை செய்ய சதி முயற்சி; நடவடிக்கை எடுக்க வேண்டும்

சபாநாயகரிடம் சாணக்கியன் MP கோரிக்கை

July 24, 2024 6:10 am 

தம்மைப் படுகொலை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதி முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக, இணையத்தள செய்தி சேவை ஒன்று வெளிநாட்டு புலனாய்வு அமைப்பை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளமை  தொடர்பில், சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய போதே அவர், இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

என்னைப் படுகொலை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதி முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு புலனாய்வுப்பிரிவு   இனங் கண்டுள்ளதாக ”லங்கா ஈ. நியூஸ்” இணையத்தள செய்திச் சேவை கடந்த (20)   செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியின் உண்மைத் தன்மை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இவ்விடயம் தொடர்பில் நான், சபாநாயகருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளேன்.    என்னை படுகொலை செய்வதற்கு சதி செய்வதாக கூறப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஏற்கனவே ,எம்.பி. ஒருவரின் படுகொலை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் எனக் குற்றம் சாட்டப்பட்டவர். எனவே இந்த செய்தி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சபாநாயகரிடம் வலியுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.      லோரன்ஸ் செல்வநாயகம்   நன்றி தினகரன் 

No comments: