ரஸனைக்குறிப்பு : Counting and Cracking – எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு இலங்கை தேசிய இனப்பிரச்சினையின் ஊற்றுக்கண்ணை காண்பித்த நாடகம் ! முருகபூபதி


சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தைப்  பேச வைப்பதும்தான் கலை, இலக்கியத்தின் பிரதான நோக்கமாக இருக்கும். இருக்கவும் வேண்டும்.

அந்தவகையில் அண்மையில் நான் மெல்பனில்  பார்த்து,  வியந்த Counting and Cracking – எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு நாடகம், எங்கள் சமூகத்தைப் பேசியிருக்கிறது. எங்கள் சமூகம் எனச்சொல்லும்போது, இலங்கையில் வாழும் இரண்டு மொழிகளைப்பேசும் மூன்று சமூகத்தினதும் அரசியல் மயமாக்கப்பட்ட வாழ்கையை பேசியிருக்கிறது.

அத்துடன் இனக்கலவரத்தால் தாயகம்விட்டு அவுஸ்திரேலியா வந்த


ஒரு தமிழ்க்குடும்பத்தின் புகலிட வாழ்வுக்கோலத்தையும்  தலைமுறை இடைவெளியினூடாக சித்திரிக்கிறது.

வாக்கு வங்கிக்காக  மதம், மொழி, இனம் சார்ந்து அரசியல் நடத்தி,  இயற்கை எழில் கொஞ்சும் ஒரு வளமான நாட்டை சீரழித்து குட்டிச்சுவராக்கியவர்கள் அரசியல்வாதிகள். மக்கள் பலிக்கடாவானார்கள்.

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக்கட்சிக்குள் உருவான வாரிசு அரசியல், மற்றும் அதிகாரப் போட்டியினால்,  இக்கட்சியிலிருந்து வெளியேறிய எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கா தொழிலாளிகள்,  விவசாயிகள், ஆசிரியர்கள்,  வைத்தியர்கள், பெளத்த பிக்குகளை இணைத்தவாறு , அதற்கு ஐம்பெரும் சக்திகள் ( பஞ்சமா பலவேகய ) எனப்பெயர் சூட்டிக்கொண்டு, தேர்தலில் வெற்றிபெற்று பதவிக்கு வந்தார்.

1956 ஆம் ஆண்டு அவர் சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதற்காக தனிச்சிங்களச்சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்ததையடுத்து, பிரச்சினை உக்கிரமடைந்தது.

அவ்வேளையில் சட்டமேதையும்,  சமசமாஜக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கலாநிதி கொல்வின் ஆர். டீ . சில்வா,  “ ஒரு மொழி என்றால், இரண்டு நாடுகள், இரண்டு மொழிகள் என்றால் ஒரு நாடு  “ என்ற கருத்தியலை முன்வைத்தார். வடக்கிலிருந்த பெருவாரியான தமிழர்கள் அக்காலப்பகுதியில் அவரது கட்சியை ஆதரித்தனர்.

எனினும் இலங்கையில் விதி விளையாடியது. தமிழரசுக்கட்சியின் தலைவர் செல்வநாயகமும்  அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவும்  ஒப்பந்தம் செய்துகொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு – கிழக்கில் ஓரளவு மாநில சுயாட்சி (Regional Autonomy) என்பதை பண்டாரநாயக்கா ஏற்றுக்கொண்டார்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர் ஜெயவர்தனா களனியிலிருந்து கண்டி தலதா மாளிகை நோக்கி  தனது ஆதரவாளர்களுடன் நீண்ட  பாதயாத்திரையை  மேற்கொண்டார்.

அவ்வேளையில்  கம்பகா தொகுதி எம். பி. யும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவரும், இடதுசாரி சிந்தனை கொண்டவருமான எஸ். டீ.  பண்டாரநாயக்கா தலைமையிலான குழு ஒன்று  அந்த பாதயாத்திரைக்கு எதிராக களத்தில் நின்று போராடி,  ஜே. ஆர். தலைமையில்  ‘வந்தவர்களை அடித்து கலைத்தது.  

கடும்போக்காளர்களான பௌத்த பிக்குகள் பிரதமர் பண்டாரநாயக்காவின் கொழும்பு வாசஸ்தலத்திற்கு முன்னாள் திரண்டு, குறிப்பிட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக  ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனையடுத்து பிரதமர் அந்த ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தார்.

இறுதியில் அவர் வளர்த்த கடாக்களே அவரது மார்பில் பாய்ந்தன.


பண்டாரநாயக்கா ஒரு பெளத்தபிக்குவால் 1959 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை காலை சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த வரலாற்றுப் பின்னணிகளை நன்கு தெரிந்திருந்தமையினால்,  Counting and Cracking – எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு  நாடகத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது.

எனினும் இந்த அரசியல் வரலாறு இந்நாடகத்தில் முக்கியத்துவம் பெறவில்லை.  ஆயினும் இந்த வரலாற்றின் பின்புலத்தில்தான் இந்த நாடகத்தின் கதை நகருகின்றது.

1956 ஆம் ஆண்டுக்கும் 2004 ஆம் ஆண்டிற்குமிடைப்பட்ட காலத்தில் 


தமிழ்மக்கள் மீது  நிகழ்ந்த வன்கொடுமைகள்,  கலவரங்கள், ஏதிலிகள்  உருவாக்கம்,  புலப்பெயர்வு,  கடல் மார்க்கமான அகதிகளின் வெளியேற்றம் பற்றியெல்லாம் பேசுகிறது.

இந்நாடகத்தின் பிரதியை எழுதியிருக்கும்  கலைஞர் எஸ். சக்திதரன், மேலே குறிப்பிட்ட அரசியல் தலைவர்கள் காலத்தில் இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய வவுனியா தொகுதி எம்.பி.யும் சிறந்த கணித மேதையுமான எஸ். சுந்தரலிங்கம் அவர்களின் கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இவரது தாயார் ஆனந்தவல்லி சச்சிதானந்தன் அவர்கள் அவுஸ்திரேலியா சிட்னியில் லிங்காலயா என்ற நடனப்பள்ளியை நீண்டகாலம் நடத்தி வரும் பிரபல நடன நர்த்தகி.


நாம் நீண்ட காலமாக நடத்தி வரும்  தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வளர்ச்சிக்காக ஆனந்தவல்லி அவர்கள்  1990 களில் தமது நடனப்பள்ளி மாணவிகளின் சகுந்தலம் நாட்டிய  நாடகத்தை  சிட்னி  பல்கலைக்கழ அரங்கில் நடத்தி,  அதன்மூலம்  கணிசமாக நிதிப்பங்களிப்பு செய்தவர்.

அவரது வாரிசு இன்று புகழ்பெற்ற நாடகப் பிரதியாளராக மிளிர்ந்திருப்பதுடன் இலங்கை,  மலேசியா,  இந்தியா , நியூசிலாந்து,  அவுஸ்திரேலியா, பிரான்ஸ்  முதலான நாடுகளைச்சேர்ந்த பல தேர்ச்சி பெற்ற கலைஞர்களைக்கொண்டு  இந்த நாடகத்தை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார். இதன் இயக்குநர் ஏமன் ஃபிளேக் (Eamon Flack)

முன்னர்  சிட்னியிலும் ,  அடிலைட்டிலும் பின்னர், இங்கிலாந்தில்


பெர்மிங்காமிலும் மேடையேற்றப்பட்டு, தற்போது மெல்பனில் கடந்த பல நாட்களாக மெல்பன் பல்கலைக்கழகத்தின் யூனியன் தியேட்டரில் அரங்கேறி வருகிறது.

எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் சிட்னியில் மேடையேறவிருக்கிறது. அதனையடுத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நியூயோர்க்கிற்கும் செல்கிறது.

அந்த வகையில் எம்மவர் மத்தியில் சமகாலத்தில் பேசப்படும் குறிப்பிடத்தகுந்த நாடகமாக Counting and Cracking – எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு  விளங்குகிறது.

தமிழ், சிங்கள, மற்றும்  பல்லின மக்களும் அவுஸ்திரேலியர்களும் திரண்டு வந்து அரங்கத்தை நிறைத்து பார்த்து  ரசிக்கின்றனர். அந்தவகையிலும்  இந்நாடகம் வெற்றிபெற்ற கலைப்படைப்பாகியிருக்கிறது.  


எனது அருமை நண்பர்கள் ஷோபா சக்தி மற்றும் காந்தி மக்கிண்டாயர் ஆகியோரும் இந்நாடகத்தில் பிரதான  பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

தமிழ் அரசியல்வாதியாக வரும் பிரகாஷ் பெலவாடி இந்திய கன்னட திரைப்படக் கலைஞர்.  சூரியா நடித்த சூரரைப்போற்று மற்றும்  மெட்ராஸ் கஃபே , உத்தமவில்லன் உட்பட பல கன்னட, தமிழ்ப்படங்களிலும் நடித்திருப்பவர். தொழில் முறை நாடக , திரைப்படக்கலஞர்.

எமக்கு  அன்றைய அடங்காத்தமிழர் சுந்தரலிங்கம் அவர்களை தனது அட்டகாசமான நடிப்பினால், நினைவுபடுத்துகிறார்.

தமிழ் அரசியல்வாதி மாணிக்கவாசகர், அவரது மகள் ராதா, இவரின் கணவன் திரு , மகன் சித்தார்த்தா ஆகியோரைச்சுற்றி இக்கதை, இலங்கை – அவுஸ்திரேலியா என நகர்கிறது.

ராதாவின் கணவராக நடிக்கும் ஷோபா சக்தி,  எமது புகலிட இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த படைப்பாளி. பிரான்ஸில் வதியும் 


ஷோபா சக்தி,  தனது தாயக வாழ்க்கையில் பள்ளிப்பருவத்திலேயே நாடகம், கூத்து முதலான கலைவடிவங்களில் பங்களித்திருப்பவர்.

ஷோபா சக்தி முன்னர் நடித்த  செங்கடல் (2009)  திரைப்படம்  இந்தியத் திரைப்பட விழாவின் பனோரமா பிரிவில் தேர்வானதுடன்,  பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும்  விருதுகளை பெற்றிருக்கிறது. ஷோபாசக்தி  பிரதான பாத்திரமேற்று நடித்த தீபன்  திரைப்படம் (2015) சிறந்த படத்திற்கான தங்கப்பனை விருதை கேன்ஸ் திரைப்படவிழாவில் பெற்றது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

படைப்பு இலக்கியத்திலும் பதிப்புத்துறையிலும் தொடர்ந்தும்  ஈடுபட்டவாறே திரைப்படங்களிலும் குறும்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துவருகிறார்.  இவர் நடித்த மற்றும் ஒரு தமிழகத்திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

அவுஸ்திரேலியாவில் வதியும்  கலைஞர் காந்தி மக்கின்டாயர், வாத்தியார்  என்ற  நாடகத்தில் அந்தப் பாத்திரம் ஏற்று தனிநடிப்பில் புகழ்பெற்றவர். அத்துடன் பல ஆங்கில திரைப்படங்களிலும் நடித்திருப்பவர்.


இவர்களுடன் சேர்த்து 19 பேர் பங்கேற்றிருக்கும்  Counting and Cracking – எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு   நாடகத்தில்  அனைவருமே தேர்ச்சிபெற்ற தொழில் முறைக்கலைஞர்கள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.  இவர்களையே பல பாத்திரங்களிலும் தோன்றவைத்து நாடகத்தை தொய்வில்லாமல் நகர்த்தியிருக்கும் நாடகப்பிரதி எழுதிய சக்திதரனும் இயக்குநர் ஏமன் ஃபிளேக்கும்  ( Eamon Flack ) பாராட்டப்படவேண்டியவர்கள்.

மூன்றரை மணி நேரம் இடம்பெறும் இந்த நாடகத்திற்கு இரண்டு தடவை இடைவேளை விட்டார்கள்.

எனக்கு அருகிலிருந்த ஒரு சிங்கள நண்பர்,  இடைவேளையின்போது,  இந்நாடகத்தில் வரும் மாணிக்கவாசகர் பாத்திரத்தை குறிக்கும் இலங்கை  தமிழ் அரசியல்வாதி யார்..? எனக்கேட்டார்.

சி. சுந்தரலிங்கம் எனச்சொன்னதும், அவர் உடனே கூகிளில் தேடிப்பார்த்து அன்னாரின் வரலாறை தெரிந்துகொண்டார்.

நவீன நாடக உத்திகளை கையாண்டிருப்பதும் இந்நாடகத்தில் மற்றும் ஒரு சிறப்பு.  தமிழ், சிங்களம், அரபு மொழிகளில் பாத்திரங்கள் பேசும்போது, உடனுக்குடன், மேடையிலிருக்கும் மற்றும்  சில பாத்திரங்கள் அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பினை தருவதனால்,  எவரும் புரிந்துகொள்ளத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில காட்சிகள் கண்ணீர் சிந்த வைக்கிறது.

இந்நாடகத்தில் பங்கேற்ற அனைத்துக்கலைஞர்களும் தமது பாத்திரத்தின் இயல்புகளை நன்கு புரிந்து நடித்திருந்தனர்.

இலங்கையின் இனப்பிரச்சினையின் ஊற்றுக்கண்ணின் வெட்டுமுகத்தோற்றத்தை காண்பித்திருக்கும்  இந்நாடகம் முழுமைபெற்ற ஒரு கலைப்படைப்பு.

இதுவரையில் பார்க்காதவர்கள் பார்க்கத் தவறாதீர்கள்.

----0---

letchumananm@gmail.com

 

 

 

 

 

 

 

No comments: