ஜூன் 24 : கவியரசர் கண்ணதாசன் பிறந்த தினம் ! தமிழ்கூறும் நல்லுலகில் மரணமற்ற நிரந்தரமான கவிஞன் ! ! முருகபூபதி

 “  மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்,  அவர்

மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன்,  நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை.  “


என்று 1963 ஆம் ஆண்டு தான் தயாரித்து கதை, வசனம் எழுதிய இரத்தத்திலகம் திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசன், மேற்குறிப்பிட்ட வரிகள் இடம் பெறும்,  ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு எனத்தொடங்கும் பாடலை இயற்றியிருப்பார்.

இந்திய – சீன யுத்தத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட


இத்திரைப்படத்தில், இந்தப்பாடலை ரி. எம். சௌந்தரராஜன்  பாடியிருந்தாலும், அந்தக்காட்சியில் தோன்றி  வாயசைத்திருப்பவர் கண்ணதாசன்.

பராசக்தி, கறுப்புப்பணம், இரத்தத் திலகம்,  சூரியகாந்தி, அபூர்வ ராகங்கள் முதலான சில திரைப்படங்களில் அவர் சில காட்சிகளில் மாத்திரம்தான் தோன்றினார்.

1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி முத்தையா என்ற இயற்பெயருடன் தோன்றி, கண்ணதாசனாக புகழ்பெற்று, கவியரசராகி, தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராகி, சிக்காக்கோவுக்கு சென்றவேளையில், 1981 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி அங்கே மறைந்தார்.

எழுத்தாளர் வண்ணநிலவன்,  ஒரு சந்தர்ப்பத்தில்,   சினிமா சமாச்சாரங்களை விட்டு விட்டுப்பார்த்தால், மகாகவி பாரதிக்குப்பின்னர், ஒரு முழுமையான கலைஞன் கண்ணதாசன்தான்  “ என்று எழுதியிருந்தார்.

இது வண்ணநிலவனின் அளவுகோல் !

இதழ் ஆசிரியராக, எழுத்தாளராக, அரசியல்வாதியாக, பாடலாசிரியராக, நடிகராக, பேச்சாளராக, திரைப்பட வசனகர்த்தாவாக, திரைப்படத் தயாரிப்பாளராக பன்முக ஆளுமையுடன் அவர் விளங்கினாலும், கவியரசர் என்ற நாமம்தான் இறுதிவரையில் நிலைத்து நின்றது.


நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் இயற்றியவர்.

ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், ஐங்குறுங்காப்பியம், கல்லக்குடி மகா காவியம், கிழவன் சேதுபதி, பாண்டிமாதேவி, பெரும்பயணம்,  மலர்கள், மாங்கனி,  முற்றுப்பெறாத காவியங்கள் முதலான நூல்களையும் எழுதியிருக்கும் கவியரசர் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற தலைப்பில் பத்துப்பாகங்களும் எழுதியவர்,

சிறுகதை, நாவல் முதலான துறைகளிலும் பல நூல்களை வரவாக்கியிருப்பவர்.

கவியரசரின் , சேரமான் காதலி  நாவலுக்கு  இந்திய சாகித்ய அகடமி விருது கிடைத்துள்ளது. 

கண்ணதாசன் எமது இலங்கைக்கும் வந்துள்ளார். கொழும்பு


பண்டாரநாயக்கா மாவத்தையில் இயங்கிய தந்தை செல்வநாயகம் அவர்களின் சுதந்திரன் பத்திரிகை  பணிமனைக்கும் வந்துள்ளார்.

 மட்டுநகர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செல்லையா இராசதுரையின் நண்பர். அத்துடன் இலங்கையில் பல எழுத்தாளர்களினதும் நண்பராக விளங்கியவர். அவர்களில் எஸ். பொன்னுத்துரை, டொமினிக்ஜீவா, சில்லையூர் செல்வராசன்  ஆகியோரும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.


ஒரு காலகட்டத்தில் கவியரசர் தீவிரமாக அல்ல, வேடிக்கையாகச்சொன்னது: “ நான் சொர்க்கத்திற்குச் செல்லும்போது ஒரு கரத்தில் மதுவும் மறுகரத்தில் மாதுவும் இருக்கவேண்டும். “ இந்த வேடிக்கையான கூற்றை பலரும் திரித்துப் பேசிக் கொண்டிருந்த காலத்தில் அவர் அமெரிக்கா சிக்காகோவுக்கு 1981 ஆம் ஆண்டு சென்றவேளையில் திடீரென இறந்துவிட்டார். அதற்கு முன்னர் அவர் அர்த்தமுள்ள இந்து மதம் சில பாகங்களும் எழுதி, யேசுகாவியமும் படைத்துவிட்டார்.

கண்ணதாசனின் திடீர் மறைவினால் கலங்கிப்போன அவருடை

நண்பரும் காந்தி – காமராஜ் கட்சியின் தலைவருமான குமரி அனந்தன்,  இவ்வாறு சொன்னார் :                 “ கண்ணதாசன் ஒரு கரத்தில் அர்த்தமுள்ள இந்து மதமும் மறுகரத்தில் யேசுகாவியமும் ஏந்தியவாறுதான் சொர்க்கத்திற்குச் சென்றார். “

சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையே வெறுத்து மீண்டும் ஊருக்குப் புறப்படவிருந்த கவிஞர் வாலியை, கண்ணதாசனின் ஒரு பாடல்தான் தடுத்து நிறுத்தி அவரது வாழ்வில் ஒளியேற்றியது.

அந்தப்பாடல்: கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே. அதுவே கவியரசர் இயற்றிய முதலாவது திரைப்படப்பாடல். இயக்குநர் ராம்னாத்தின் கன்னியின் காதலி திரைப்படத்திற்காக எழுதப்பட்டது.

கவியரசர் மறைவதற்கு முன்னர் எழுதிய பாடல் : “ கண்ணே கலைமானே… “ இயக்குநர் பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை திரைப்படத்திற்காக எழுதப்பட்டது.


இந்தத் திரைப்படம் 1982 இல் வெளியானது.  ஆனால்,  அந்தப்பாடல் இடம்பெற்ற திரைப்படத்தைப் பார்க்காமலேயே கவியரசர் 1981 ஆம் ஆண்டு மறைந்துவிட்டார். 

1927  ஜூன் 24 ஆம் திகதி கவியரசர் பிறந்த தினம். அவர் இன்றிருந்தால் அவருக்கு 97 வயது!

வனவாசம் – மனவாசம் ஆகிய கண்ணதாசனின் நூல்கள், அவரது  குடும்பம், அரசியல்,  சமூகம், திரைப்படவுலகம்,  குறித்த சுயசரிதையாகும்.

பல பதிப்புகளைக்கண்டுவிட்ட  வனவாசம் நூலுக்கு  எழுதிய முன்னுரையை  இவ்வாறு தொடங்குகிறார்:

" ஒரு சாதாரண மனிதனின் சுயசரிதம் இந்த அளவுக்குப் பரபரப்பாக

விற்பனையாகும் என்று நான் ஒருபோதும் கருதியதில்லை. 1962 லேயே நான்கு ரூபாய் விலையில் இதைப் பதிப்பித்தார்கள். அப்படி இருந்தும் நன்கு விற்பனையாயிற்று. அதன்பிறகு மலிவு விலையில் அழகாக அச்சிட்டு நானே வெளியிட்டேன். விலை ரூபாய் இரண்டுதான். அது ஏராளமாக விற்பனையாயிற்று. பிறகு மற்றொரு பிரசுரம் விலையை உயர்த்தி வெளியிட்டது. அதுவும் முழுக்க விற்பனையாயிற்று. இதன் பரபரப்பை உணர்ந்த ‘ குமுதம் ‘  பத்திரிகை இதன் முக்கியமான பகுதிகளை எடுத்து வெளியிட்டது.


காந்தி அடிகளின் சுயசரிதத்தை படித்த பின்பு, இதனை எழுதியதால், உண்மையை நிர்வாணமாகக் கூறுவதில் அதிக ஆசை எழுந்தது. உலகம் என்ன குளிக்கும் அறையா, இஷ்டம்போல் ஆடையின்றிக் குளிக்க? ஆற்றில் குளிக்கும்போது ஒரு கோவணமாவது கட்டிக்கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது! அவமானத்துக்குப் பயந்து வெட்கப்பட்டு, சில உண்மைகளை மறைத்தே தீரவேண்டியதாகிவிட்டது. என்னோடு பழகியவர்கள் எனக்குப்பின்னால் அதனை வெளியிட்டால், அது எனக்குச்செய்யும் உதவியாகவே இருக்கும்.

எழுதுகிறவனைப் பொறுத்தல்ல, எழுதப்படும் செய்திகளைப் பொறுத்து இது ஒரு சுவையான நூல்தான். இது வெளிவந்த நேரத்தில் தொலைபேசி மூலமாக இதைத்தேடியவர்கள் பலர். வெளிநாடுகளில் இருந்து இதை அடைவதற்குப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டவர்கள் பலர். அவர்களில் சிலருக்கு நானே அனுப்பியிருக்கின்றேன்.

ஒரு பெருமிதம் எனக்குண்டு. என் தலைமுறையில் வாழும் எந்த மனிதனுக்கும், தலைவனுக்கும், கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாதென்பதே அது. இப்படி ஒன்று அமையவேண்டும் என்றால், யாரும் நீண்ட காலம் முட்டாளாக இருக்கவேண்டும். அது எல்லோருக்கும் கைவரக்கூடிய கலை அல்ல !

மீசை முளைக்காத பருவத்திலே பிறந்த கிராமத்தை விட்டுப்பறந்து, காற்றிலே அலைமோதி , கடைசியில் தனித்துவிழுந்துவிட்ட காகிதம் ஒன்று அந்த நாள் ஞாபகத்தை அச்சிலேற்றிவிட்டது.  எப்படி வாழவேண்டும் ?  என்பதற்கு இது நூலல்ல,  எப்படி வாழக்கூடாது !  என்பதற்கு இதுவே வழிகாட்டி."


இந்த முன்னுரையே கவியரசரின் இயல்புகளுக்கு சிறந்த பதச்சோறு. எளிமையான கவித்துவம் நிரம்பப்பெற்ற வனவாசம் நூலை எத்தனை தடவை மீண்டும் மீண்டும் படித்தாலும் வாசகருக்கு சலிப்பு வராது.

“ அவமானத்துக்குப் பயந்து வெட்கப்பட்டு, சில உண்மைகளை மறைத்தே தீரவேண்டியதாகிவிட்டது. என்னோடு பழகியவர்கள் எனக்குப்பின்னால் அதனை வெளியிட்டால், அது எனக்குச்செய்யும் உதவியாகவே இருக்கும். “ என்ற வரிகளை கவனித்துப்பாருங்கள்.

கவியரசர் மறைந்து  43 வருடங்களாகிவிட்டன. இன்றும் உலகெங்கும் எங்காவது ஒரு மூலையில் அவரது ஏதாவது ஒரு பாடல் நிமிடத்திற்கு நிமிடம் ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது. அதனால் சாகா வரம் பெற்ற கவிஞராக வாழ்ந்துகொண்டேயிருக்கிறார்.

வனவாசம், ஒரு நெடுங்கதைபோலவே வாசகருடன் பயணிக்கிறது. அவர் நடந்து வந்த பாதை, தனிப்பட்ட வாழ்வில் பட்ட துயரங்கள் யாவும் ஒரு கதைபோலவே இருப்பதாக அவர் கருதியதால், வேறு பாத்திரங்களை உற்பத்தி செய்து எழுதாமல், தன்னையே ஒரு பாத்திரமாக்கி கதை சொல்லியாக எம்மோடு தொடர்ந்து வருகிறார். வாழ்க்கை வழிப்போக்கன் ஒருவனின் உயர்வு தாழ்வுகளே இந்நூல் என்றும் சொல்லியுள்ளார்.

சின்ன வயதிலேயே வீட்டை விட்டு ஓடியவர். 1944 இல் அவர் திருமகள் பத்திரிகையில் பணியாற்றியபோது பெற்ற மாதச்சம்பளம் 25 ரூபாய்தான். ஐந்துக்கும் பத்துக்கும் மற்றவர்களிடம் கையேந்தி நாடோடியாக அலைந்து திரிந்திருக்கும் கண்ணதாசன், தென்றல், மேதாவி, தாய்நாடு, அணிகலம், சண்டமாருதம் முதலான பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றி, இறுதிக்காலத்தில் தனது கண்ணதாசன் பெயரிலேயே ஒரு இதழை நடத்தியிருப்பவர்.

கண்ணதாசன்,  அரசியல் சாக்கடைக்குள்ளும் விழுந்து புரண்டு, ஞானம் பெற்று எழுந்து வந்த கதையை, அந்த வாழ்க்கைப்பாதையில் சந்தித்த விசித்திரமான மனிதர்களை, அரசியல் தலைவர்களை, எழுத்தாளர்களை, பெண் சிநேகிதிகளை படித்தவர்களை, பாமரர்களைப்பற்றியெல்லாம்   தனது சுயசரிதையில் எழுதுகிறார்.


பலதரப்பட்டவர்களுடன் அவருக்கிருந்து நெருக்கம் – ஊடல் – முரண்பாடு பற்றியெல்லாம் தெரிந்துகொள்கின்றோம். பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் தம்மையும் அவரது எழுத்துக்களில் இனம்கண்டுகொள்ளமுடியும். ஆனால், உண்மையை உண்மையாக எழுதமாட்டார்கள். கவியரசரின் பலம் பலவீனம் யாவும் அவரது எழுத்துக்களில் அம்பலமாகியிருக்கிறது.

இளமைக்காலத்தில் கலைஞர் கருணாநிதியுடன் அடுத்தவேளை சாப்பாட்டுக்கும் வழியின்றி தண்ணீரை மட்டுமே அருந்தி, வயிற்றுப்பசியை போக்கியவர். சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து நாத்திகம் பேசியவர், தி. மு. கழகத்திலிருந்து வெளியேறி சுதந்திரக்காற்றை சுவாசிக்கத் தொடங்கும் 1961 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியையே இந்த நூலில் பதிவுசெய்துள்ளார்.

தனது பத்தாண்டு கால வனவாசம் முடிந்துவிட்டதாக இறுதி 64 ஆவது அங்கத்தில் எழுதுகிறார். அந்த வனவாச காலத்தில், அவர் பெற்றுள்ள அனுபவங்கள் அவரை ஞானத்தை நோக்கியே நகர்த்தியிருக்கிறது. “ பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொருளற்ற கூட்டத்தில் இருந்து அவன் புதிய உலகத்திற்கு வந்துவிட்டான் “ என்று இந்த நூலை நிறைவு செய்கிறார்.


மனவாசம்

தி. மு. க. விலிருந்து வெளியேறிய பின்னரும் கவிஞரை விதி விட்டுவைக்கவில்லை. அரசியலே இனிமேல் வேண்டாம் என்று ஒதுங்கியவரை, ஈ .வே. கி. சம்பந்த் தொடங்கிய தமிழ் தேசிய கட்சி உள்வாங்குகிறது. அந்தக்கதையிலிருந்து ஆரம்பிக்கிறது மனவாசம். சிறுநீரகப் பரிசோதனைக்காக வேலூர் சி. எம். சி. மருத்துவமனையில் அவர் தங்கநேர்கிறது. அன்றைய நாள் 1980 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் திகதி. அன்று மாலை கல்கி  இதழில் ஆரம்பமாகவிருக்கும் மனவாசம் தொடருக்கான முன்னுரையை அவர் எழுதவேண்டும்.

கண்ணதாசனின் தம்பியும் உதவியாளருமான இராம. கண்ணப்பன் அவர் அருகே தட்டச்சுப்பொறியுடன் அமர்ந்து , கவிஞர் சொல்லச்சொல்ல எழுத்துக்களைத் தட்டவேண்டும். மருத்துவர் சாஸ்திரி கவிஞரை முற்றாகச்சோதித்துவிட்டு முடிவுகளை சொல்லும்போது, கவிஞருக்கு மூச்சுக்குழாய், நுரையீரலில் வேறு நோய்கள் தோன்றியிருக்கும் புதிய செய்தியைச் சொல்கிறார்.

அதற்கு அறுவைச்சிகிச்சை செய்தால், ஒரு பக்கம் கைகால்கள் விளங்காமல் போகலாம், பேசும் சக்தியையும் இழக்கலாம் என்றும் தெரிவிக்கிறார். மனவாசம் முன்னுரை பாதியில் நிற்கிறது. அறுவைச்சிகிச்சை செய்தால்தானே அவ்வாறு நடக்கும் , நான் செய்துகொள்ளப்போவதில்லை, புறப்படு, இன்று இரவே திருப்பதி செல்வோம் என்று புறப்பட்டவர் கவிஞர். அந்த முன்னுரையின் எஞ்சிய பகுதிகள் திருப்பதி ஏழுமலையான் சந்நிதி அடிவாரத்தில் பின்னர் எழுதப்படுகிறது.

அந்த முன்னுரையில், “ வனவாசத்தில் எல்லா உண்மைகளையும் நான் பகிரங்கமாகச் சொல்லிவிட்டதுபோல் பலபேருக்கு ஒரு பிரமை. உண்மையில் சில விஷயங்களை மறைத்திருக்கிறேன். மனிதன் மான வெட்கத்துக்கு அஞ்சி மறைத்தே தீரவேண்டிய சில விஷயங்களும் உள்ளன அல்லவா..? ‘ சுயசரிதம் ‘ எழுதும்போது அதில் நான் கற்பனைகளைக் கலப்பதில்லை. கூடுமானவரை சொல்லவேண்டியவை அனைத்தையும் சொல்லிவிடுவேன். இந்த மனவாசம் 1961 ஏப்ரல் 10 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகிறது. இதில் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கவேண்டிய நேரம் வரும்போதெல்லாம் வனவாசத்தில் விட்டுப்போன விஷயங்களைச் சொல்வேன்.

நான் பட்ட துன்பங்களைச் சபை நடுவில் வைப்பது ஒன்றுதான் எனக்கு ஏற்படும் ஆறுதல் . நான் யாருக்கு உதவி செய்தேனோ அவர்களை மறந்துவிடுவேன். என்னைப்பிறரும் கெடுத்து, நானும் கெடுத்துக்கொண்ட பிறகு, மிச்சமிருக்கும் கண்ணதாசனையே இப்போது சந்திக்கிறீர்கள். இந்த மிச்சமே இவ்வளவு பிராகசமாக இருக்குமானால், எல்லாம் சரியாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்…? “ என்று கேட்கிறார்.

கவிஞரின் வரிகள் சிந்திக்கத்தூண்டுபவை, அவரது குசும்புத்தனங்கள் ரசிக்கத்தக்கவை. அவர் எவரையும் விட்டு வைக்கவில்லை. வாழ்நாள் பூராவும் உணர்ச்சிமயமாக வாழ்ந்திருப்பவர் என்பதை இந்த நூல்கள் ஒளிவு மறைவின்றி பேசுகின்றன. பன்னிரண்டு ஆண்டுகள் தி.மு.க. முகாமில் வாழ்ந்த வாழ்க்கையை விமர்சிக்கும்போது, “ அத்தனை சுறா மீன்களுக்கிடையே அப்பாவியான இந்தச்சிறிய மீனும் எப்படியோ வாழ்ந்து வெளியேறிவிட்டது. “ என்று எழுதுகிறார்.
கட்சியில் ஆரம்ப காலத்தில் எல்லாருமே உத்தமர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால், கட்சி எப்படி வெகு வேகமாக வளர்ந்ததோ, அப்படியே கட்சித்தலைவர்களின் மனமாறுபாடும் வளர்ந்தது. ஆரம்பத்தில் போக வர வழிச்செலவு மட்டுமே கேட்டவர்கள், நாளா வட்டத்தில் புடவை, ரவிக்கைகளுக்கும் பணம் கேட்க ஆரம்பித்தார்கள். “ என்ற வரிகளை வாசித்தபோது சிரிப்பு வராமல் இருக்குமா..?

ஆலயமணி திரைப்படம் 1962 இல் வெளிவந்தது. அதில் ஒரு பாடல் சட்டி சுட்டதடா கை விட்டதடா… என்று தொடங்கும். தி.மு.க.விலிருந்து வெளியேறியதன் எதிரொலியை இந்தப்பாடலில் கேட்கமுடியும். இவ்வாறு கவிஞரது அன்றாட வாழ்வில் இடம்பெற்ற சம்பவங்கள் பல திரைப்படப் பாடல்களில் எதிரொலித்துள்ளன. மீண்டும் மீண்டும் எத்தனை தடவை படித்தாலும் வனவாசமும், மனவாசமும் சலிப்புத்தட்டாது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் ஒரு சமயம் சட்டசபையில் கவிஞருடைய இந்த நூல்களை பிரஸ்தாபித்து பேசியுள்ளார். தி. மு. க. வினரை விமர்சிக்க அவர் எடுத்துக்கொண்ட ஆயுதமாகவும் இந்த நூல்கள் அவருக்குப் பயன்பட்டன. சுயமரியாதை இயக்கமாக தொடங்கப்பட்ட பெரியாரின் திராவிடர் கழகம், பின்னர் தி. மு.க., அண்ணா தி.மு. க. ஜெ அணி - ஜானகி அணி - மறுமலர்ச்சி தி. மு.க., அம்மா தி.மு.க. எடப்பாடி அணி, ஓ.பி. எஸ். அணி, தினகரன் - சசிகலா அணி என்றெல்லாம் உருமாறிய காட்சிகள் அரங்கேறின. ஆனால், இந்த அவலத்தையெல்லாம் பார்க்காமல், தமது 54 ஆவது அகவையில் கவியரசர் விடைபெற்றுவிட்டார்.

தொலை தூரப் பயணங்களின்போது வழித்துணைக்கு எடுத்துச்செல்லவும் இந்த இரண்டு நூல்களும் பெரிதும் பயன்படும்.


இந்த இரண்டு நூல்களையும் படிக்கும்போது, கவியரசர் திரைப்படங்களுக்காக எழுதிய வாழ்க்கைத் தத்துவம் ,காதல் , ஆன்மீகம், குடும்ப உறவு, அரசியல் அதிகாரம், தலைமுறை இடைவெளி, இயற்கை, தேச நலன், நாட்டுப்பற்று தொடர்பான இன்னோரன்ன பல பாடல்கள் நினைவுக்கு வந்துகொண்டேயிருக்கும். அவர் பற்றிய நினைவுகள் நிரந்தரமானவை. மக்கள் மனங்களில் தொடர்ந்தும் வாழும் கவியரசர் அவர்.

---0---

letchumananm@gmail.com

No comments: