உலகச் செய்திகள்

போர் வெடித்தால் பரஸ்பரம் உதவ ரஷ்யா – வட கொரியா ஒப்பந்தம்

கடும் மோதலுக்கு மத்தியில் காசாவெங்கும் இஸ்ரேலியப் படை தொடர்ந்து குண்டு மழை

இஸ்ரேல்–லெபனானில் தொடர்ந்தும் மோதல்

ஹிஸ்புல்லா எச்சரிக்கை 

ஹமாஸை ஒழிக்க முடியாது


போர் வெடித்தால் பரஸ்பரம் உதவ ரஷ்யா – வட கொரியா ஒப்பந்தம் 

June 22, 2024 8:42 am 

ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடந்தால் மற்ற நாடு உடன் அனைத்து இராணுவ உதவிகளையும் வழங்கும் வகையில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் வட கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார்.

எட்டப்பட்டிருக்கும் இந்தப் பாதுகாப்பு உடன்படிக்கை 1961 இல் பனிப் போர் கூட்டணிகளான சோவியட் ஒன்றியம் மற்றும் வட கொரியா இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை புதுப்பிப்பதாக பார்க்கப்படுகிறது. 1990இல் சோவியட் ஒன்றியம், தென் கொரியாவுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தியதை அடுத்து முந்தைய உடன்படிக்கை கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விரிவான மூலோபாய கூட்டணி ஒன்றாக விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் கடந்த புதன்கிழமை (19) இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

‘இரண்டில் ஒரு தரப்பு ஆயுதப் படையெடுப்பு மற்றும் போர் ஒன்றை எதிர்கொண்டால் ஐ.நாவின் உறுப்புரை 51 மற்றும் இரு நாட்டினதும் சட்டங்களுக்கு அமைய மற்றத் தரப்பு இராணுவ மற்றும் பிற உதவிகளை வழங்குவதற்கு அனைத்து வழிகளையும் உடனடியாகப் பயன்படுத்த வேண்டும்’ என்று இந்த ஒப்பந்தத்தின் உறுப்புரை 4 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்ரைனுடன் போரில் ஈடுபட்டிருப்பதோடு வட கொரியா தனது அண்டை நாடான தென் கொரியாவுடன் போர் பதற்றத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

கிழக்காசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் புட்டின் வட கொரியாவில் இருந்து வியாழக்கிழமை (20) வியட்நாமை சென்றடைத்தார்.   நன்றி தினகரன் 




கடும் மோதலுக்கு மத்தியில் காசாவெங்கும் இஸ்ரேலியப் படை தொடர்ந்து குண்டு மழை 

ரபா நகரை முழுமையாக கைப்பற்ற முழு வீச்சில் தாக்குதல்

June 22, 2024 2:02 pm 

காசாவின் தெற்கு நகரான ரபா மற்றும் ஏனைய பகுதிகள் மீது இஸ்ரேலியப் படை நேற்றும் கடுமையான தாக்குதல்களை நடத்தியதோடு பலஸ்தீன போராளிகளுடன் சண்டையிட்டு வந்ததாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் இஸ்ரேலிய இராணுவத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இதில் எகிப்து எல்லையை ஒட்டிய காசாவின் தென் முனையில் இருக்கும் ரபாவை கைப்பற்றும் தனது படை நடவடிக்கையை பூர்த்தி செய்யும் முயற்சியில் இஸ்ரேலியப் படை ஈடுபட்டு வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருந்து வந்த ரபா மீது சர்வதேச எதிர்ப்புக்கு மத்தியிலும் இஸ்ரேல் கடந்த மே ஆரம்பத்தில் படை நடவடிக்கையை ஆரம்பித்தது.

நகரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் டாங்கிகள் முன்னேறி வருவதோடு இஸ்ரேலியப் படை ஏற்கனவே கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை கைப்பற்றியுள்ளது. வான், தரை மற்றும் கடற்கரைக்கு அப்பால் போர் கப்பல்கள் மூலம் சரமாரித் தாக்குதல்களை நடத்தும் நிலையில் இங்குள்ள மக்கள் வெளியேறி வருகின்றனர். காசாவின் ஏனைய பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களால் இடம்பெயர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ரபாவில் அடைக்கலம் பெற்றிருந்தனர்.

இஸ்ரேலியப் படை நேற்று நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில் 12 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரபாவில் உளவுத் தகவல் அடிப்படையிலான துல்லியமான படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. போராளிகள் பயன்படுத்தும் சுரங்கப்பாதைகளுக்கு அருகில் துருப்பினர் சண்டையிட்டு வருவதாகவும் அது கூறியது.

கடந்த இரண்டு தினங்களாக இஸ்ரேலிய சுற்றிவளைப்புகள் அதிகரித்திப்பதாக ரபா குடியிருப்பாளர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சத்தங்களை கேட்கும்போது இடைவிடாது உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருவது தெரிகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘கடந்த இரவு மேற்கு ரபாவில் மோசமான இரவாக இருந்தது. ஆளில்லா விமானங்கள், விமானங்கள், டங்கிகள் மற்றும் கடற்படை படகுகள் இங்கு குண்டுகளை வீசின. ஆக்கிரமிப்பாளர்கள் நகரை முழுமையாக கட்டுப்படுத்த முயல்கிறார்கள் என்று நாம் உணர்கிறோம்’ என 45 வயதான ஹாதம் குறுஞ்செய்தி வழியாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

‘எதிர்ப்புப் போராளிகளிடம் இருந்து அவர்கள் கடும் தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் நிலையில் அது அவர்களின் முன்னேற்றத்தை மெதுவடையச் செய்துள்ளது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எட்டு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் போரில் இஸ்ரேலிய படையினர் காசாவில் இன்னும் நுழையாத இரு பகுதிகளான ரபாவின் தென் முனை மற்றும் மத்திய காசாவில் டெயிர் அல் பலாஹ்வை சூழவுள்ள பகுதிகளில் அதிக அவதானம் வெலுத்தி வருகின்றனர்.

‘ரபாவின் ஒட்டுமொத்த நகரும் இஸ்ரேலிய படை நடவடிக்கை இடம்பெறும் பகுதியாக உள்ளது’ என்று ரபா மேயரான அஹமது அல் சோபி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த நகரம் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதோடு இஸ்ரேலிய குண்டு வீச்சுகளால் மக்கள் தாம் தமது கூடாரங்களிலேயே கொல்லப்பட்டு வருகின்றனர்’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நகரில் மருத்துவ வசதிகள் இயங்கவில்லை என்று குறிப்பிட்ட சோபி, எஞ்சியுள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தமது நாளாந்த குறைந்தபட்ச உணவு மற்றும் நீருக்கும் பற்றாக்குறை நீடிப்பதாக குறிப்பிட்டார்.

ரபா நகரின் தூர மேற்குப் பக்கமாக 100,000க்கும் அதிகமான மக்கள் தொடர்ந்து வசித்து வருவதாக பலஸ்தீனர்கள் மற்றும் ஐ.நா. தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். கடந்த மே ஆரம்பத்தில் இஸ்ரேல் படை நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு முன்னர் காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் ரபா நகரிலேயே அடைக்கலம் பெற்றிருந்தனர்.

ரபாவில் உள்ள ஷபூரா முகாமில் டாங்கி எதிர்ப்பு ரொக்கெட்டுகளைக் கொண்டு இரு இஸ்ரேலிய டாங்கிகளை தாக்கியதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு கடந்த வியாழக்கிழமை கூறியது. இங்கிருந்து தப்ப முயன்ற இஸ்ரேலியப் படை வீரர் ஒருவரையும் கொன்றதாக அது கூறியது. இது தொடர்பில் இஸ்ரேல் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

அருகிலுள்ள கான் யூனிஸ் நகரில் நேற்று இடம்பெற்ற இஸ்ரேலிய வான் தாக்குதலில் தந்தை மற்றும் மகன் உட்பட மூவர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேநேரம் வடக்கில் உள்ள காசா நகரின் சில புறநகர் பகுதிகளில் இஸ்ரேலியப் படை தொடர்ந்து முன்னேறி வருகிறது. இங்கு ஹமாஸ் தலைமையிலான பலஸ்தீன போராளிகளுடன் கடும் சண்டை நீடிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காசா நகரின் மையப் பகுதியில் இருக்கும் பல வீடுகளையும் இஸ்ரேலியப் படை அழித்ததாக குடியிப்பாளர்கள் தெரிவித்தனர்.

காசா நகரின் மாநகர வசதி மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதலில் நான்கு மாநகர பணியாளர்கள் உட்பட ஐவர் கொல்லப்பட்டதாக காசா சிவில் அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது. இங்கு இடிபாடுகளில் உயிர் தப்பியவர்களை மீட்பாளர்கள் தொடர்ந்து தேடி வந்தனர்.

கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 37,500ஐ நெருங்கியுள்ளது.   நன்றி தினகரன் 






இஸ்ரேல்–லெபனானில் தொடர்ந்தும் மோதல் 

June 22, 2024 2:02 pm

போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா எல்லையில் மீண்டும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

லெபனான் மீதான தாக்குதல் ஒன்றுக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாக இஸ்ரேல் அண்மையில் அறிவித்த நிலையில் பதிலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு போர் எச்சரிக்கையை விடுத்த சூழலில் முழு அளவில் போர் மூழும் அச்சுறுத்தல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வடக்கு இஸ்ரேல் மீது பல டஜன் ரொக்கெட் குண்டுகளை வீசியதாக நேற்று முன்தினம் ஹிஸ்புல்லா குறிப்பிட்டது. தெற்கு லெபனானில் நடத்திய வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா போராளி ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறிய நிலையில் அதற்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் நிலைகள் மீது மேலும் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டது.

இந்நிலையில் போர் விமானங்கள் இரு ஆயுத களஞ்சியங்களை தாக்கியதாகவும் ஹிஸ்புல்லாவின் பல தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியதோடு தெற்கு லெபனானில் பல இடங்களிலும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி அச்சுறுத்தல்களை நீக்கியதாகவும் அது குறிப்பிட்டது. லெபனானின் தெற்கில் நேற்றுக் காலை புதிய வான் தாக்குதல்கள் இடம்பெற்றதாக லெபனான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையிலான பரஸ்பரம் தாக்குதல்கள் நீடித்து வரும் நிலையிலேயே அது முழு அளவில் போராக வெடிக்கும் அச்சுறுத்தல் அதிகாரித்துள்ளது. இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





ஹிஸ்புல்லா எச்சரிக்கை 

June 21, 2024 4:05 pm 

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக போரைத் தொடுத்தால் இஸ்ரேலின் எந்த இடமும் விட்டுவைக்கப்பட மாட்டாது என்று எச்சரித்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேலுக்கு விமானநிலையத்தை வழங்கினால் சைப்ரஸ் நாடும் இலக்கு வைக்கப்படும் என்று கண்டித்தார்.

‘நாம் மோசமான நிலைக்கு தயாராகி வருகிறோம் என்பது எதிரிக்குத் தெரியும் என்பதோடு எமது ரொக்கெட்டுகள் எந்த இடத்தையும் விட்டு வைக்காது’ என்று கடந்த புதன்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றிய நஸ்ரல்லா குறிப்பிட்டார்.

இஸ்ரேல் எம்மை நிலம், கடல் மற்றும் வான் மார்க்கமாக எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

லெபனானில் முழு அளவில் போர் ஒன்றை நெருங்கி இருப்பதாக இஸ்ரேல் அறிவித்த நிலையிலேயே நஸ்ரல்லாவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்ல அமைப்பு பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருவதோடு அண்மைய நாட்களில் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளது.   நன்றி தினகரன் 





ஹமாஸை ஒழிக்க முடியாது

June 21, 2024 2:06 pm 

ஹமாஸ் அமைப்பை ஒழிக்க முடியாது என்று இஸ்ரேல் மூத்த இராணுவப் பேச்சாளர் கருத்து வெளியிட்டதை அடுத்து அதற்கு பதிலளித்த இஸ்ரேலிய அரசு ஹமாஸை ஒழிப்பதில் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

காசாவில் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக போரிட்டு வரும் இஸ்ரேல் அங்கு பெரும் அழிவுகளை செய்தபோதும், காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸை அகற்றுவதில் தோல்வி கண்டு வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலின் ‘சென்னல் 13’ தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த இராணுவப் பேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகரி கூறியாவது,

‘ஹமாஸ் அமைப்பை அழிப்பது, மக்களின் கண்களில் மண் வீசுவதற்கு சமம். இறுதியில் சரியான மாற்று வழியை வழங்காத பட்சத்தில், ஹமாஸ் மீண்டும் அச்சுறுத்தலாக உருவாகலாம். ஹமாஸ் ஒரு சித்தாந்தம். அதனை ஒழிக்கவே முடியாது’ என்றார்.

இந்தக் கருத்து இஸ்ரேலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் உடன் பதிலளித்திருந்தது.

ஹமாஸை ஒழிப்பது தான் இந்தப் போரின் மிக முக்கிய குறிக்கோள் என்றும் அதற்கு இஸ்ரேலிய பாதுகாப்புப் படை முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டது.   நன்றி தினகரன் 




No comments: