தமிழ் தலைவர்களின் இராஜதந்திர ஆளுமை

 June 22, 2024


இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய் சங்கருடனான சந்திப்பின் போது, தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் முரண்டு பேசியமையானது, தமிழ் தலை வர்களின் அரசியல் பொறுப்பற்ற தனத்தை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கி;ன்றது. தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே ஆதரவு – எதிர்ப்பு என்னு மடிப்படையிலேயே, கருத்துக்கள் காணப்படுகின்றன. குறிப்பாக எம்.ஏ.சுமந்திரன் தமிழ் பொது வேட்பாளரை தோற் கடிக்காமல் விடப்போவதில்லை என்று சூளுரைத்திருக்கின்றார்.

இதேபோன்று, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தேர்தலை பகிஷ்கரிப்பதாக அறிவித்திருக்கின்றது. இந்த நிலையில் இவ்வா றான முரண்பாடுள்ளவர்கள் பங்குகொள்ளும் இடத்தில் எவ்வா றான விடயங்களை பேச வேண்டும் என்னும் புரிதல் தமிழ் கட்சி களின் தலைவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். கருத்துக்களை முன்வைக்க வேண்டும். ஆனால் நாசுக்காக, தந்திரோபாயமாக முன்வைக்க வேண்டும். இத்தனை அனுபவங்களுக்கு பின்னரும் கூட, அவ்வாறான அரசியல் திறனை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கற்றுக்கொள்ளவில்லையா?

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் புரிதலை உற்றுநோக்கினால், தூதரக அதிகாரிகளுக்கும் இந்தியாவின் உயர்மட்ட இராஜதந்திரிகளுக்கும் இடையில் வேறுபாடு தெரியாதவர்களாகவே இருக்கின்றனர். இதற்கு அரசியலில் பழுத்தவர் என்று கருதப்படும் இரா.சம்பந்தன் கூட கடந்தகாலத்தில் விதிவிலக்காக இருந்ததில்லை.

சம்பந்தன் வரலாறு தொடர்பில் பேச முற்படுகின்றபோது, அதனால் இராஜதந்திரிகள் பலர் எரிச்சலடைந்திருக்கின்றனர். ஏனைய கட்சிகளின் தலைவர்களுடன் பேசுகின்ற போது, அதனை நட்புரீதியில் கூறியும் இருக்கின்றனர்.

இராஜதந்திரிகள் வழங்கும் சொற்ப நேரத்திற்குள், தமிழ் மக் களின் பிரச்னைகளை மனக்குறைகளை முடிந்தவரையில் எடுத்து ரைக்கும் வல்லமையுடன் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இருக்க வேண்டும் –

அதேவேளை, சந்திப்பு முடிந்ததும் தங்களை வல்ல வர்கள் போன்று காண்பிக்கும் நோக்கிலும் வார்த்தைகளை பயன் படுத்தக் கூடாது. இது தொடர்பில் என்னதான் அறிவுரைகளை வழங்கினாலும், நமது அரசியல்வாதிகளோ மீண்டும், ஒரே தவறு களையே செய்து கொண்டிருக்கின்றனர்.

75 வருடகால அரசியல் வரலாற்றின் தொடர்ச்சிதான் இன்றைய அரசியல். இந்தக் காலகட்டத்தில் பிராந்திய மற்றும் சர்வதேச தரப்புக்களுடன் ஊடாடிய பல அனுபவங்கள் தமிழர் அரசியலுக்குண்டு. ஆனால், இத்தனை அனுபவங்களுக்கு பின்னரும் கூட, சவுத் புளொக்கின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஒருவருடன் எவ்வாறு பேசவேண்டும் என்பதை இன்னும் புரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர் அரசியலில் பழுத்தவர்கள் என்போர்.

ஒரு நாட்டை அணுகும் போது, எங்களுடைய விருப்பங்களை மனக்குறைகளை சொல்லத்தான் வேண்டும். ஆனால், அதனை கூறும் போது, அந்த நாட்டின் கொள்கை நிலைப்பாடு என்ன, அவர்களுக்கு இலங்கையின் மீதுள்ள ஆர்வம் என்ன – குறிப்பாக வடக்கு, கிழக்கின் மீது, இந்தியா எவ்வாறான கரிசனைகளை கொண்டிருக்கின்றது? இந்தக் கேள்வி களின் அடிப்படையில்தான் விடயங்களை நோக்கவேண்டும்.

இராஜதந்திர உலகை புரிந்துகொள்வதில் தமிழ் அரசியல்வாதிகளின் நிலையோ, விடிய – விடிய இராமாயணம், ஆனால் விடிந்தவுடன் – இராமர் சீதைக்கு யாராம் – என்பதுபோலவே இருக்கின்றது.

நன்றி ஈழநாடு 

No comments: