இலங்கைச் செய்திகள்

05 ஆண்டுகளில் 58,304 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள் 

இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் மேலும் 106 வீடுகள் கையளிப்பு

ஜனாதிபதியை சந்தித்தார் ஜெய்சங்கர்

மலையக மக்களின் 200 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு, இளைஞர் மாநாடு

ஜீவன் தொண்டமான் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பு !


05 ஆண்டுகளில் 58,304 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள் 

June 20, 2024 7:34 am 

நாட்டில், 2015 முதல் 2020 வரையிலான காலப்பகுதியில் 58,304 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இக்காலப்பகுதியில் இரட்டை பிரஜாவுரிமைக்காக 63,917 பேர் விண்ணப்பித்ததாகவும் இவர்களில் 58,304 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 






இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் மேலும் 106 வீடுகள் கையளிப்பு

- ஜனாதிபதி ரணில், எஸ். ஜெய்சங்கர் இணைந்து நிகழ்நிலையில் திறப்பு

June 20, 2024 2:16 pm 

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தின்போது, ​​இந்திய – இலங்கை உறவுகளில் 3 மைல்கற்கள் எட்டப்பட்டன.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் டொக்டர் ஜெய்சங்கர் கூட்டாக மெய்நிகர் ஊடாக திறந்துவைத்தனர்.

அத்துடன், கொழும்பு, திருகோணமலை ஆகிய நகர்களிலுள்ள மாதிரிக் கிராமத்திலும் 24 வீடுகள் மெய்நிகர் ஊடாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

ரூ. 6 மில்லியன் டொலர் இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை (MRCC) உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதைக் குறிக்கும் நினைவுப் படிகம் மெய்நிகர் ஊடாக திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் இணைந்து இதனைத் திறந்துவைத்தனர்.

இதில் கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஒரு மையம், ஹம்பாந்தோட்டையில் துணை மையம், காலி, அருகம்பே, மட்டக்களப்பு, திருகோணமலை, கல்லாறு, பருத்தித்துறை, மொல்லிக்குளம் ஆகிய பிரதேசங்களின் ஆள்ளில்லா கட்டுப்பாட்டு மையங்களும் அடங்கும்.

இந்திய வௌிவிகார அமைச்சர் கலாநிதி. ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இந்தியாவில் புதிய ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் அந்நாட்டு பிரதிநிதியொருவர் வௌிநாட்டுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயத்தை அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் இலங்கைக்கு மேற்கொண்டுள்ளர்.

ஜனாதிபதி மாளிகைக்கு வருகைத் தந்த இந்திய வௌிவிவகார அமைச்சருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவினால் வரவேற்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து இந்திய வௌிவிவகார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு ஆரம்பமானதோடு, இரு நாடுகளுக்கிடையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டதன் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது.

இதன்போது, இந்திய – இலங்கை உறவின் மைல்கல்லை அடையாளப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட 03 அபிவிருத்தித் திட்டங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சரினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை பிரதேசங்களில் அமைக்கப்பட்ட 106 வீடுகளின் டிஜிட்டல் பெயர் பலகையும் ஜனாதிபதியும், இந்திய வௌிவிவகார அமைச்சரும் திறந்து வைத்தனர்.

கொழும்பு – திருகோணமலையின் இரண்டு மாதிரிக் கிராமங்களில் அமைக்கப்பட்ட தலா 24 வீடுகளை ஜனாதிபதியும், இந்திய வௌிவிவகார அமைச்சரும் மக்கள் பாவனைக்காக கையளித்தனர்.

இந்தியாவின் 06 மில்லியன் நிதி உதவியில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையில் சமுத்திர மீட்பு தொடர்பாடல் மையமும் (MRCC) ஜனாதிபதி மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

இதில் கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஒரு மையம், ஹம்பாந்தோட்டையில் துணை மையம், காலி, அருகம்பே, மட்டக்களப்பு, திருகோணமலை, கல்லாறு, பருத்தித்துறை, மொல்லிக்குளம் ஆகிய பிரதேசங்களின் ஆளில்லா கட்டுப்பாட்டு மையங்களும் அடங்கும்.

வௌிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இந்திய உயர்ஸ்தானிகள் சந்தோஷ் ஜா உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.   நன்றி தினகரன் 







ஜனாதிபதியை சந்தித்தார் ஜெய்சங்கர்

June 20, 2024


இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்   நன்றி ஈழநாடு 





மலையக மக்களின் 200 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு, இளைஞர் மாநாடு

June 22, 2024

மலையக மக்கள், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து, 200 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு, நாம்-200 வேலைத் திட்டத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள, ‘இளைஞர்களின் எழுச்சி’ எனும் தொனிப்பொருளிலான இளைஞர் மாநாடு, இன்று, கண்டியில் உள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில், பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்புடன், தொண்டர் அமைப்பின் ஒத்துழைப்புடன், மாநாடு நடத்தப்பட்டது.

இதில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்டகட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் விசேட விருந்தினராக பங்கேற்றார்.
அத்துடன், அமைச்சின் செயலாளர் முகமது நபீல், இலங்கையின் தொழில்முறை மோட்டார் பந்தய பிரபல வீரர் டிலந்த மாலகமுவ, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவன பீடாதிபதி மாதவ ஹேரத், இலங்கை பிஸ்கட்டி நிறுவன முதன்மை இயக்குனர் சமித்த பெரேரா மற்றும், அமைச்சின் உயர் அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் பங்கேற்றனர்.   நன்றி ஈழநாடு 






ஜீவன் தொண்டமான் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பு !

June 21, 2024


இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி ஊடாக மலையக பெருந்தோட்ட பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டு முழுமைப்படுத்தப்பட்டுள்ள 106 தனி வீடுகளுக்கான நினைவு படிகங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஜனாதிபதி மாளிகையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் நுவரெலியாஇ கண்டிஇ மாத்தளை ஆகிய மாவட்டங்களில் முழுமைப்படுத்தப்பட்ட 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை இவர்கள் கூட்டாக மெய்நிகர் ஊடாக திறப்பு விழா செய்து வைத்தனர்.



இந்த நிகழ்வில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்து கொண்டு மலையக மக்களுக்கான தேவைப்பாடுகளை எங்ளுடைய வேண்டுகோளுக்கினங்க நிறைவேற்றிவரும் இந்திய அரசாங்கத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடதக்கது.   நன்றி ஈழநாடு 




No comments: