படித்தோம் சொல்கின்றோம்: பெண்களின் தார்மீகக் குரலைப் பேசும் அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள் ! முருகபூபதி

உலகநாடுகள் அனைத்திலும் குடிசன மதிப்பீட்டைப் பார்த்தால், அதில்


பெண்களின் எண்ணிக்கைதான் அதிகம்! பெண்களுக்கு ஆயுளும் அதிகம்.

எனினும்,  தேர்தல்களில் பெண்களுக்கான வாக்குரிமை காலம் கடந்துதான் கிடைத்தது.  பின்னாளில்  இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, இஸ்ரேல், பிலிப்பைன்ஸ், பர்மா, அவுஸ்திரேலியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் முதலான நாடுகளில் பெண்கள் ஆட்சி அதிகாரமும் பெற்றனர்.

பொதுமக்கள் பயணிக்கும் பேரூந்து, ரயில், விமானம் முதலானவற்றை இயக்கி , செலுத்தும் திறனும் பெற்றனர்.

வருடந்தோறும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் பிரகாரம்  ஆண்டுதோறும் மார்ச் மாதம் அனைத்துலக பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.


ஆயினும்,  பெண்கள் மீதான வன்முறைகள் பல கோணத்தில் முற்றுப்பெறாமல் தொடருகின்றன.

இந்தப்பின்னணிகளுக்கு மத்தியில்தான்  இலங்கையில் கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக எழுத்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்  மூத்த  படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான அன்னலட்சுமி இராஜதுரை அவர்களின் புதிய வரவான  “ அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள்    நூல் எமக்கு கிடைத்திருக்கிறது.

300 பக்கங்களைக்கொண்ட இந்த நூலை இலங்கை – இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் வெளியிட்டுள்ளது.

இந்த அமைப்பின் இலங்கை இணைப்பாளர் தம்பு.  சிவசுப்பிரமணியம் பதிப்புரையும் பேராசிரியர்                                    வ. மகேஸ்வரன் முன்னுரையும், கொழும்பு கதைஞர் வட்டத்தைச் சேர்ந்த இலக்கியவாதி வசந்தி தயாபரன் அணிந்துரையும் எழுதியுள்ளனர்.

 “ மகளிர் சமத்துவம் பேணி நானிலம் தழைக்க உழைத்துவரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும்  “ இந்நூலை அன்னலட்சுமி இராஜதுரை சமர்ப்பணம் செய்துள்ளார்.

1958 காலப்பகுதியில் எழுத்தாளர் சிற்பி சரவணபவன்


ஆசிரியராகவிருந்து நடத்திய கலைச்செல்வி இலக்கிய இதழில் “ யாழ்நங்கை  என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கிய அன்னலட்சுமி அவர்கள்,  திருமணத்தின் பின்னர் தமது கணவரின் பெயரையும் இணைத்துக்கொண்டு எழுத்துலகில் பிரபலமடைந்தார்.

1962 ஆம் ஆண்டில் வீரகேசரியில் துணை ஆசிரியராக இணைந்தபின்னரும், சிறுகதை, குறுநாவல், நாவல், கவிதை, கட்டுரை முதலான துறைகளில் தொடர்ந்தும் எழுதினார்.

விழிச்சுடர், ( குறுநாவல் தொகுப்பு ) உள்ளத்தின் கதவுகள்                        ( நாவல் ) நெருப்பு வெளிச்சம் ( சிறுகதைத்தொகுப்பு ) இருபக்கங்கள் ( கவிதை ) நினைவுப்பெருவெளி – ஒரு பெண் பத்திரிகையாளரின் நினைவுகள் ) ஈழத்தின் இலக்கிய ஆளுமைகள் ( கட்டுரைத் தொகுப்பு ) ஆகிய நூல்களையும் வரவாக்கியிருக்கும் அன்னலட்சுமி இராஜதுரை, வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில்  'மாணவர் கேசரி' என்னும் பக்கத்தையும் கவனித்தார். வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட 'ஜோதி' என்ற குடும்ப வார இதழ்,  மித்திரன் வார மலர் , மற்றும்  கலைக்கேசரி மாத இதழ் ஆகியனவற்றிலும் பொறுப்பாசிரியராக பணியாற்றி இளைப்பாறியிருப்பவர்தான்  இந்த மூத்த எழுத்தாளர்.

தொடக்கத்தில் சிறுகதைகள்  எழுதிக்கொண்டிருந்த அன்னலட்சுமி இராஜதுரையின் படைப்பிலக்கியத்துறையானது அவர் பத்திரிகைச்  செய்தியாளராக மாறியபோது சற்று தேக்கம் கண்டிருந்தாலும்  பல புதிய படைப்பிலக்கியவாதிகளை தான் பணியாற்றிய ஊடகத்தில் அறிமுகப்படுத்தி அவர்களையும்  வளர்த்துவிட்டவர்.

இவரது முதல் கதைத் தொகுதியான நெருப்பு வெளிச்சம்  1984 ஆம் ஆண்டு, அக்காலப்பகுதியில் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த ஈழத்து எழுத்தாளர் காவலூர் ஜெகநாதனின் முயற்சியினால் வெளியானது.

காவலூர் ஜெகநாதன் அக்காலப்பகுதியில் வீரகேசரி வார வெளியீட்டில்  தமிழக இலக்கிய மடல் என்ற பத்தி எழுத்தினையும் எழுதிவந்தார்.

அதற்காக அவர் வீரகேசரி அலுவலகத்திற்கு வரும் சமயங்களில் அன்னலட்சுமி இராஜதுரையின் கதைகளை தொகுத்து வெளியிடும் யோசனையை முன்வைத்ததுடன், அதற்கான சகல ஏற்பாடுகளையும் கவனித்தார்.

சென்னையில் நெருப்பு வெளிச்சம் தொகுப்பு  அச்சானதும், நூலாசிரியர் அன்னலட்சுமி இராஜதுரையையும் சென்னைக்கு அழைத்து ,  மூத்த இலக்கிய விமர்சகர்  ‘ சிட்டி  ‘ சுந்தரராஜன் உட்பட பல தமிழக இலக்கிய வாதிகள் முன்னிலையில் வெளியீட்டு அரங்கினையும் நடத்தினார்.

1984 ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வுகளுக்குப்பின்னர்தான் காவலூர் ஜெகநாதன் தமிழ்நாட்டில் கடத்திச்செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டார்.

அதனால் அவர் அன்று வெளியிட்டு வைத்த நெருப்பு வெளிச்சம் தொகுப்பின் பிரதிகள் பலவும் காணாமல் போய்விட்டன.

நெருப்பு வெளிச்சம் தொகுப்பு இலங்கை வாசகர்களுக்கு அன்று பரவலாகக் கிடைக்கவில்லை.

காவலூர் ஜெகநாதன் மற்றும் குறிப்பிட்ட தொகுப்பின் இழப்பின் துயரத்தையும் அன்னலட்சுமி இராஜதுரை கடந்து வந்திருப்பவர்.

ஏறக்குறைய நான்கு தசாப்த காலங்கள் தனது மனதளவில்     இந்தத்துயரத்தை சுமந்துகொண்டிருந்த அன்னலட்சுமி இராஜதுரை அவர்களுக்கு,  இலங்கை – இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம்  ஆக்கபூர்வமாக உதவியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த நிறுவகம் முன்னின்று வெளியிட்டிருக்கும் அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள் தொகுப்பினை செம்பதிப்பு எனவும் கூறலாம்.

முன்னர் நெருப்பு வெளிச்சம் தொகுப்பில் இடம்பெற்ற 11 சிறுகதைகளையும், அதன் பின்னர் காலத்துக்குக் காலம் அன்னலட்சுமி இராஜதுரை எழுதியிருக்கும் மேலும் பத்துக்கதைகளையும் சேர்த்து மொத்தம் 21 கதைகளுடன் இந்நூல் வெளிவந்துள்ளது.

அன்னலட்சுமி அவர்கள் ஒரு வெகுஜன ஊடகத்தில் நீண்ட காலம் பணியாற்றியமையால், தான்  கற்றதையும் பெற்றதையும்,  செய்திகளின் ஊடாக அறிந்துகொண்ட தகவல்களையும் மூலமாக வைத்தும் சில சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.

குறிப்பாக பெண்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், சாதீய ஏற்றத்தாழ்வுகள், சில வருடங்களுக்கு முன்னர் முழு உலகமும் சந்தித்த கொரோனா பெருந்தொற்றின் அவலம் முதலானவற்றை கருப்பொருளாக வைத்து இச்சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.

நூலின் என்னுரையில்   தனது முதல் கதைத் தொகுப்பினை அண்டை நாட்டில் வெளியிட்டு வைத்த காவலூர் ஜெகநாதனையும் நன்றியோடு நினைவுகூர்ந்துள்ளார்.

ஈழத்து இலக்கிய உலகில் நீண்டகாலமாக  பயணித்துக்கொண்டிருக்கும் அன்னலட்சுமி இராஜதுரை அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

---0---

 

 

 

No comments: