தெய்வத் தாய் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 


ஆரம்பக் காலம் தொட்டு எம் ஜி ஆரின் அணுக்கத் தொண்டராகவும், விசுவாசியாகவும், ஆலோசகராகவும் செயற்பட்டவர் ஆர் எம் வீரப்பன். எம் ஜி ஆர் பிக்சர்ஸில் மானேஜராக பணியாற்றி வந்த இவருக்கு 1964ம் வருடம் படத் தயாரிப்பாளராகும் யோகம் கிட்டியது. பட வியோகஸ்தர்களான சகோதரர்கள் சங்கரன், ஆறுமுகம் இருவரும் படத் தயாரிப்பாளராக மாறி எம் ஜி ஆரை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டார்கள். எம் ஜி ஆரின் கால்ஷீட் கிடைப்பது இலகுவானதல்ல என்பதை உணர்ந்த இருவரும் படத் தயாரிப்பில் வீரப்பனையும் இணைத்துக் கொண்டார்கள். ஆரம்பத்தில் தயங்கிய அவர் பின்னர் கூட்டுத் தயாரிப்பாளரானார். எம் ஜி ஆரின் சம்மதத்தை பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் வீரப்பனுக்கு தெரியுமே. தங்களின் புதிய பட நிறுவனத்துக்கு எம் ஜி ஆரின் தாயாரின் பெயரையே சூட்டி விட்டார்கள். சத்யா மூவிஸ் என்று பெயர் வைத்த பிறகு அவர்களின் படத்தில் நடிக்க எம் ஜி ஆரால் எப்படி மறுக்க முடியும். போதாக் குறைக்கு படத்துக்கு அவர்கள் வைத்த பெயர் தெய்வத் தாய். எம் ஜி ஆரின் கால்சீட் கிடைதவுடன் மள மளவென்று படத்தின் தயாரிப்பு வேலைகள் ஆரம்பமாகின.


தான் தயாரிக்கும் முதல் படம் , எம் ஜி ஆர் படம் வித்தியாசமாக

இருக்க வேண்டும் என்பதில் திடமாக இருந்த வீரப்பன் படத்தை இயக்க புது இயக்குனரான பி . மாதவனை நியமித்தார். படத்துக்கான வசனங்களை எழுத அவரால் தெரிவு செய்யப்பட்டவர் கே. பாலசந்தர். இதுவே அவரின் முதற் படமாகும். படத்தின் திரைக் கதையை தன்னோடு சேர்ந்து உருவாக்க டி என் பாலு சேர்த்துக் கொண்டார். இதுவே அவரின் முதற் படமுமாகும். அதே போல் இந்தப் படத்தில் இருந்து தான் தன்னுடைய எல்லாப் படங்களுக்கும் வாலியே பாடல்களை எழுதுவார் என்று எம் ஜி ஆர் பிரகடனப்படுத்தினார். அது மட்டுமன்றி இந்தப் படத்தில்தான் எம் ஜி ஆருக்கு ஒரு புதிய அம்மா கிடைத்தார். அவர்தான் பண்டரிபாய்!


சூதாட்டத்தையே தொழிலாகக் கொண்ட கருணாகரன் அதன் காரணமாகவே ஒரு கொலையை செய்து விடுகிறான். போலீசாரிடம் இருந்து தப்ப தன் மனைவியையும், ஒரே மகனையும் அநாதரவாக விட்டு விட்டு தலைமறைவாகி விடுகிறான். போலீசார் அவன் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டதாக நம்புகின்றனர். அவன் மனைவி சிவகாமி தனியொரு பெண்ணாக நர்ஸ் வேலை பார்த்து தன் மகன் மாறனை துப்பறியும் நிபுணனாக வளர்த்து எடுக்கிறாள். வெளிநாட்டில் பயிற்சி பெற்று நாடு திரும்பும் மாறன் கருணாகரனால் கொலை செய்யப்பட்டவனின் மகள் மேகலாவை சந்திக்க அதுவே காதலாக மாறுகிறது. குற்றவாளிகளை பிடிக்க மாறன் எடுக்கும் முயற்சியில் நகை அடைவு கடை நடத்தும் பாபா மீதும், அவனின் சகபாடி மதன் மீதும் சந்தேகம் வலுக்கிறது. பாபாவை சந்திக்க செல்லும் மாறன் மீது மறைந்திருந்து கத்தி வீசப்படுகிறது. ஆனால் பாபா அவனை காப்பாற்றி விடுகிறான். கத்தி பாபா மீது பாய்கிறது. மருத்துவமனையில் சேர்க்கப்படும் பாபா அங்கே நர்ஸாக பணிபுரியும் சிவகாமியை சந்திக்கிறான். அவளும் பாபாதான் தன் கணவன் என்று புரிந்து கொள்கிறாள். ஆனால் தான் விதவை அல்ல என்பதை வெளியே சொல்க முடியாது மனதுக்குள் அழுகிறாள்.

இப்படி அமைந்த படத்தின் வசனங்களை பாலச்சந்தர் நச் என்று எழுதியிருந்தார். அதன் காரணமாக ரசிக்கக் கூடியதாக இருந்தது. அதே போல் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் இனிமையாக அமைந்தன. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், வண்ணக் கிளி சொன்ன மொழி என்ன மொழியோ, இந்த புன்னகை என்ன விலை, ஒரு பெண்ணைப் பார்த்து நிலவை பார்த்தேன் போன்ற பாடல்கள் வாலியின் வரிகளில் விசுவநாதன், ராமமூர்த்தி இசையில் உச்சம் தொட்டன. பிற் காலத்தில் விஸ்வநாதனிடம் உதவியாளராக பணியாற்றிய ஜோசப் கிருஷ்ணா இந்தப் படத்தில் நடன இயக்குனராக பணியாற்றி , எம் ஜி ஆர் , சரோஜாதேவியை மேற்கத்திய நடனம் ஆட விட்டிருந்தார்.

மாறனாக வரும் எம் ஜி ஆரின் மிகையில்லா நடிப்பு பிரமாதம்.

காதல்,பாடல், டான்ஸ், மோதல் , சோகம், என்று எல்லாவிதத்திலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சரோஜாதேவியும் அவருக்கு குறை வைக்காமல் செம்மையாக நடித்திருந்தார். பட படவென்று பேசுவது, பின்னர் பணிவது, காதலனிடம் குறும்பு பண்ணுவது என்று எதிலும் சோடை விடவில்லை. நாகேஷின் நகைச்சுவை சூப்பர். பாட்டு வாத்தியார் சற்குணமாக வந்து அவர் பண்ணும் வேலை எல்லாமே சிரிப்புத்தான். அவருக்கு துணை கொட்டப்புளி ஜெயராமன். பாலசந்தர், நாகேஷ் காம்பினேஷன் இந்தப் படத்திலேயே தொடங்கி விட்டது. எஸ் வி சகஸ்ரநாமம் மிடுக்காகவும், மென்மையாகவும் நடிக்கிறார். எஸ் என் லட்சுமியும் அவர் பாணியில் நடிக்கிறார். நம்பியாருக்கு முறைப்பது தான் வேலை.

படத்தில் கருணாகரன், பாபா வேடத்தில் நடிக்கும் அசோகன் நடிப்பு பிரமாதம். எந்த இடத்திலும் குரலை உயர்த்தி பேசாமல் முகபாவங்களில் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தெய்வத்தாய் பண்டரிபாய். மென்மையான நடிப்பு.

படத் தொகுப்பை கையாண்ட சி பி ஜம்புலிங்கம் படத்தை தொய்வில்லாமல் நகர்த்தியிருந்தார். பி என் சுந்தரம் படத்தை ஒளிப்பதிவு செய்தார். படத்தை டைரக்ட் செய்த பி மாதவன் தன் முயற்சியில் வெற்றி கண்டார் என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் படப்பிடிப்பின் போது அவருக்கும் எம் ஜி ஆருக்கும் இடையே அவ்ப்போது உரசல் ஏற்படவே செய்தது. அதே போல் பாலசந்தரும் ஒருவித சங்கடத்துலனேயே வசனங்களை எழுதினார். இயக்குனர், வசனகர்த்தா இருவரும் புதியவர்கள், பட்டதாரிகள் ! இருவருக்கும் இது எம் ஜி ஆர் படம் என்று வீரப்பன் அடிக்கடி நினைவூட்டினார்!


இதன் காரணமாக தெய்வத் தாய் நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்ற போதும் மாதவனும், பாலசந்தரும் பின்னர் எம் ஜி ஆருடன் சேர்ந்து பணியாற்றவே இல்லை. சூப்பர் ஸ்டார் ஒருவரின் படத்தின் மூலம் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்த பாலசந்தர் , பிற்காலத்தில் மற்றுமொரு சூப்பர் ஸ்டாரை அறிமுகப் படுத்தும் வாய்ப்பையும் பெற்றார். அதே போல் ஆர் எம் வீரப்பன் நிரந்தர தயாரிப்பாளராக மாற தெய்வத் தாய் அருள் பாலித்தாள்!

No comments: