ஜெய்சங்கரின் சந்திப்பு

 June 21, 2024


இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கும் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றிருந்தது. அரை மணித்தியால சந்திப்பின்போது, தமிழ் கட்சிகளின் உறுப்பினர்கள் கூறியமையை ஜெய்சங்கர் செவிமடுத்தார்.

தமிழ் கட்சிகளின் தலைவர்கள் என்போர் வழமைபோலவே தங்களின் ஒற்றுமையின்மையை ஒரே குரலில் பேச முடியாத கையறு நிலையை மீண்டும் ஒருமுறை இந்தியாவின் முன்னால் நிரூபிப்பதில் – தங்களின் ஆளுமையை நிரூபிக்கத் தவறவில்லை.

முன்னைய சந்திப்புகளின்போது சில விட யங்களை கூறிச் செல்லும் வெளியுறவு அமைச்சர், இம்முறை எதனையும் கூறவில்லை. இவர்களை செவிமடுக்கும் பணி யையே செய்திருந்தார். இந்த சந்திப்பின் நோக்கம் ஒன்றுதான் – அதாவது, இந்தப் பயணமானது இந்திய அயலுறவு கொள்கையின் அடிப்படையில் நடைபெற்ற ஒன்றாகும் – அதாவது மூன்றாவது தடவையாக பதவியேற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் வெளியுறவு அமைச்சராக பதவியேற்றிருக்கும் ஜெய்சங்கர் அவர்கள் உடனடி அயல்நாட்டுக்கான பயணத்தை மேற்கொள்ள வேண்டியதன் சம்பிரதாயமாகவே இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார்.

அத்துடன் ஓகஸ்ட் மாதமளவில், பிரதமர் மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில், அது தொடர்பான விடயங்களை கவனிப்பதும் அவரின் பயணத்தின் நோக்கமாக இருந்திருக்கின்றது. இதன்போது, தமிழ் கட்சிகளை சந்திக்காமல் சென்றால், அது சரியல்ல என்னும் அடிப்படையில்தான் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு தொடர்பில் தங்களின் மாறுபட்ட அபிப்பிராயங்களை முன்வைத்து மூக்குடைபடும் வேலையையும் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் செய்திருக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜெயசங்கர் ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை. இதிலிருந்து ஒரு விடயம் தெளிவாகின்றது. இந்தியா விடயங்களை மிகவும் கவனமாக அவதானித்து வருகின்றது. இதேவேளை, தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் தெளிவான பார்வையையும் கொண்டிருக்கின்றது.

இதன் காரணமாகவே தமிழ் கட்சிகளிடம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் அவர் குறிப்பிட வில்லை. அத்தோடு, பிரதான வேட்பாளர்கள் அனைவரும் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பேசிவருவதாக சந்திப்பில் பங்குகொண்டிருந்த தமிழ் கட்சிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

பிரதான வேட்பாளர்கள் அனைவருமே, அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பேசுகின்ற போது இந்த விடயத்தில் இந்தியாவின் தலையீட்டுக்கு அவசியமில்லைதானே! இந்தியாவிடம் எதிர்பார்ப்பதற்கு முன்னர், தமிழ் கட்சிகள் என்போர் தங்களை அரசியல் ரீதியில் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டுமென்று ஈழநாடு தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக் கின்றது.

இந்த விடயத்தில் இதுவரையில் தமிழ் கட்சிகள் முன்னேறவில்லை. இனியும் முன்னேறுவது சந்தேகம்தான்.

நன்றி ஈழநாடு 

No comments: