உலகச் செய்திகள்

போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் காசாவின் ரபாவில் மோதல் உக்கிரம்

உலகில் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டோர் எண்ணிக்கை 120 மில்லியனாக சாதனை உச்சம்

இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு 651.51 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு

தொடரும் தாக்குதல்: காசாவில் விரைவில் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்புகள் குறைவு

ரஷ்யாவின் வட்டியால் உக்ரைனுக்குக் கடன்

மாலைதீவுக்கு இந்தியா ஒரு மூலோபாய பங்காளியாக முன்பை விட ஏன் அதிகமாக தேவைப்படுகிறது?போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் காசாவின் ரபாவில் மோதல் உக்கிரம்

வான், தரை மற்றும் கடல் வழியாக கடும் தாக்குதல்

June 14, 2024 10:04 am 

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான சாத்தியம் இன்னும் இருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்திருக்கும் நிலையில் காசாவின் ரபா நகரில் இஸ்ரேலிய ஹெலிகொப்டர்கள் நேற்று (13) தாக்குதல் நடத்தியதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டிருப்பதோடு அங்கு ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேலிய படைகள் இடையே வீதிகளில் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

எகிப்து எல்லையை ஒட்டிய ரபாவில் கடந்த மே ஆரம்பம் தொடக்கம் இஸ்ரேலியத் தரைப்படை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இடம்பெயர்ந்த மக்கள் நிரம்பி வழியும் இந்த நகர் மீதான படை நடவடிக்கைக்கு சர்வதேச அளவில் எச்சரிக்கை விடுத்த போதும் அங்கு உக்கிர தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

ரபாவின் மேற்குப் பக்கமாக இஸ்ரேல் வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக தாக்கி வருகிறது.

போர் விமானங்கள், அபச்சேக்கள் (ஹெலி) மற்றும் ஆளில்லா விமானங்கள், தவிர இஸ்ரேலிய பீராங்களிகள் மற்றும் இராணுவ போர்க் கப்பல்கள் அனைத்தும் ரபாவின் மேற்கு பக்கமாக கடுமையாக தாக்கதல்களை நடத்தி வருகின்றன’ என்று அங்குள்ள குடியிருப்பாளர் ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதி வீதிகளில் தமது போராளிகள் இஸ்ரேலிய படையுடன் சண்டையிட்டு வருவதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவான இஸதீன் அல் கஸ்ஸாம் படை தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு தொடக்கம் மேற்கு ரபாவை நோக்கி இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறி வருவதால் அங்குள்ள மக்கள் வெளியேறி வருகின்றனர்.

அங்கு குடியிருப்புப் பகுதிகள் வெடி வைத்து தகர்க்கப்படுவதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாமில் உள்ள அல் லுஹ் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அங்கிருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் பெரும்பாலும் சிறுவர்கள் உட்பட பலர் காயமடைந்திருப்பதாகவும் அங்குள்ள வபா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் கொல்லப்பட்டு மேலும் 105 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 250 நாட்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 37,232 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 85,037 பேர் காயமடைந்துள்ளனர்.

பிளிங்கன் நம்பிக்கை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டு, பாதுகாப்புச் சபையால் உறுதி செய்யப்பட்ட மூன்று கட்ட போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு கடந்த செவ்வாயன்று பதில் அளித்திருந்தது.

இதில் ஹமாஸ் செய்திருக்கும் திருத்தங்கள் ‘சிலது சாத்தியமானது என்றும் மேலும் சிலது சாத்தியமில்லை’ என்றும் பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்த முயற்சியாக மீண்டும் ஒருமுறை பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிளிங்கன், தனது கடைசி நிறுத்தமாக நேற்று முன்தினம் கட்டார் பயணித்தார்.

‘உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு பிராந்திய தலைவர்களுடன் அமெரிக்கா தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றும்’ என்று அங்கு அவர் குறிப்பிட்டிருந்தார்.

காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் அங்கிருந்து இஸ்ரேலிய துருப்புகள் முழுமையாக வாபஸ் பெறுவதையே ஹமாஸ் கோருகிறது என்று அதன் மூத்த அதிகாரியான ஒசாமா ஹம்தான் குறிப்பிட்டிருந்தார். எனினும் இதனை இஸ்ரேல் நிராகரித்து வருகிறது.

முன்மொழியப்பட்டிருக்கும் போர் நிறுத்தத் திட்டத்தில் ஆறு வார போர் நிறுத்தம், பணயக்கைதிகள் – கைதிகள் பரிமாற்றம் மற்றும் காசாவில் மீள்கட்டுப்பமானம் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றிருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டபோதும் இஸ்ரேல் தரப்பில் இருந்து இன்னும் உறுதியான பதில் கிடைக்கவில்லை. இந்தத் திட்டத்திற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசின் தீவிர வலதுசாரிகள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், இஸ்ரேல் மீது நேரடி அழுத்தம் கொடுக்கும்படி பிளிங்கனை கேட்டுள்ளது.

‘புதிய (போர் நிறுத்த) முன்மொழிவு தொடர்பில் இஸ்ரேலின் இணக்கம் பற்றி அவர் தொடர்ந்து கூறுகின்றபோதும், இது பற்றி இஸ்ரேலின் எந்த ஒரு அதிகாரியும் பேசியதாக நாம் கேட்கவில்லை’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் போரை முடிப்பது தொடர்பில் இரு தரப்பினதும் நிலைப்பாட்டிலேயே முட்டுக்கட்டை நீடிப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

போர் நிறுத்தத் திட்டம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதை இஸ்ரேல் எழுத்து மூலம் உறுதி செய்ய வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்துகிறது.

ஆனால் ஹமாஸின் ஆட்சி மற்றும் இராணுவ பலம் முடிவுக்கு வரும் வரை போர் முடியாது என்று நெதன்யாகு குறிப்பிட்டு வருகிறார்.   நன்றி தினகரன் 
உலகில் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டோர் எண்ணிக்கை 120 மில்லியனாக சாதனை உச்சம்

June 14, 2024 1:18 pm 

உலகில் சாதனை எண்ணிக்கையாக 120 மில்லியன் மக்கள் போரினால் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை 12 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வந்திருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

உலகில் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை தற்போது ஜப்பான் மக்கள் தொகைக்கு சமமாக அதிகரித்திருப்பதாக ஐ.நா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சூடான் மற்றும் காசா போர்கள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாகி இருப்பதாக அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் தலைவர் பிலிப்போ கிராண்டி குறிப்பிட்டார்.

‘இவர்கள் அகதிகள், தஞ்சம் தேடுவோர், உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்கள், சச்சரவாலும் துன்புறுத்தலாலும், இன்னும் வேறு அதிகரிக்கும் சிக்கலுடைய வன்முறை வகைகளால் வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டவர்கள்’ என்று அவர் குறிப்பிட்டார்.

மக்களை இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளிய சூழல்களில் மிக மோசமானது சூடான் போர் என்று கிராண்டி சுட்டிக்காட்டினார்.

இதில் ஒன்பது மில்லியனுக்கும் மேற்பட்டோர் உள்நாட்டளவில் இடம்பெயர்ந்தனர் என்றும் மேலும் இரண்டு மில்லியன் பேர் அண்டை நாடுகளுக்குத் தப்பியோடினர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மக்கள் வந்து சேர்கிறார்கள்’ என்று சாட் நாட்டில் தஞ்சம் புகுவோரை அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

காசாவில் நிலவிவரும் நெருக்கடியால் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அவர்களில் பலர் பலமுறை இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றும் கூறப்பட்டது.

எனினும் உலகில் அதிக இடம்பெயர்ந்தோர் பிரச்சினையை எதிர்கொள்ளும் நாடாக சிரியா உள்ளது. அங்கு 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்த நிலையில் தொடர்ந்தும் சுமார் 14 மில்லியன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் வாழ்கின்றனர்.

‘சர்வதேச புவிசார் அரசியலில் மாற்றம் இல்லாவிட்டால், துரதிர்ஷ்டவசமாக, இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை காண முடியுமாக இருக்கும்’ என்று கிராண்டி குறிப்பிட்டார்.   நன்றி தினகரன் 

இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு 651.51 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு

- இந்திய ரிசர்வ் வங்கி

June 13, 2024 4:51 pm 

இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 651.51 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த இறுதி வாரத்தில் மாத்திரம் 4.837 அமெரிக்க டொலர்களால் உயர்ந்த இந்திய அந்நிய செலாவணிக் கையிருப்பு 651.51 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்றில் இது புதியதொரு மைல்கல் சாதனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆளுநர் சக்திகாந்த தாஸ் விடுத்துள்ள அறிக்கையில், மே 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்திற்கு முற்பட்ட வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.027 பில்லியன் டொலர்களால் குறைவடைந்து 646.673 பில்லியன் டொலர்களாகக் காணப்பட்டது. அதேநேரம் கடந்த மே மாதம் 10 ஆம் திகதி 648.87 பில்லியன் டொலர்களாக இருந்தது.

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பில் யூரோ, பவுண்ட்டு மற்றும் யென் போன்ற அமெரிக்க டொலர் அல்லாத வெளிநாட்டு நாணய சொத்துக்களும் அடங்கும். தங்கத்தின் கையிருப்பு 56.501 பில்லியன் டொலர்களாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 

தொடரும் தாக்குதல்: காசாவில் விரைவில் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்புகள் குறைவு

அமெரிக்கா அவநம்பிக்கை: லெபனானிலும் பதற்றம் அதிகரிப்பு

June 15, 2024 7:48 am 

இஸ்ரேலிய இராணுவம் காசாவின் தெற்கு நகரான ரபாவில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் அமெரிக்கா முன்வைத்த போர் நிறுத்தத் திட்டம் தொடர்பான எதிர்பார்ப்பு குறைந்து வருகிறது.

பாதுகாப்புச் சபையால் உறுதி அளிக்கப்பட்ட மூன்று கட்ட போர் நிறுத்தத் திட்டத்தை முன்னெடுக்கும் இராஜதந்திர முயற்சிகள் இடம்பெறும் நிலையில், எகிப்து எல்லையை ஒட்டிய ரபாவில் இஸ்ரேல் கடந்த இரு தினங்களாக தாக்குதல்களை அதிகரித்துள்ளது.

அந்த நகர வீதிகளில் இஸ்ரேலிய தரைப்படை மற்றும் பலஸ்தீன போராளிகள் இடையே மோதல் வெடித்திருப்பதோடு, அங்கு ஹெலிகல் மூலம் சூடு நடத்தும் இஸ்ரேல் போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள், போர்க் கப்பல்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதனால் அங்கு அடைக்கலம் பெற்றிருந்த மக்கள் மீண்டும் ஒருமுறை வெளியேறி வருவதோடு உயிர்ச்சேதங்களும் பதிவாகி உள்ளன.

காசாவின் மற்றப் பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன. வடக்கில் காசா நகரில் உள்ள வீடு ஒன்றின் மீது கடந்த வியாழக்கிழமை (13) இடம்பெற்ற வான் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

காசா நகரின் நபெக் வீதியில் இருக்கும் வீட்டின் மீது இரு ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அங்குள்ள வபா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

காசா நகரில் குடியிருப்புப் பகுதி மீது இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுவர் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகரில் மேற்கில் உள்ள ஹைதர் சதுக்கத்திற்கு அருகில் பக்ரி குடும்பத்திற்குச் சொந்தமாக வீடு ஒன்றின் மீதே தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக உள்ளூர் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தெற்கு நகரான கான் யூனிஸின் துறைமுகப் பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் வீசிய குண்டு மழையில் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டிருப்பதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் 37,200க்கும் அதிமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

‘நம்பிக்கை இழக்கவில்லை’

காசாவில் போர் தொடர்ந்து தீவிரமாக நீடித்து வரும் நிலையில் கூடிய விரைவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இத்தாலியில் ஜி7 மாநாட்டில் பங்கேற்றிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இன்னும் ‘நம்பிக்கை இழக்கவில்லை’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்டிருக்கும் போர் நிறுத்தத் திட்டத்திற்கு, ஹமாஸ் அமைப்பு திருத்தங்களுடன் பதிலளித்திருந்தது. அது நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வாபஸ் பெறுவதை உறுதி செய்வதாகவே ஹமாஸின் பதில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் போர் நிறுத்தத் திட்டத்தை இஸ்ரேல் செயற்படுத்துவது பற்றி ஹமாஸ் அமைப்பு சந்தேகத்தையும் வெளியிட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் இணங்கியதாக அமெரிக்கா கூறுகின்றபோதும் இஸ்ரேல் தரப்பில் இருந்து இன்னும் உறுதியான பதில் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் போர் நிறுத்தம் ஒன்று கூடிய விரைவில் ஏற்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பைடன் ‘இல்லை’ என்றே பதிலளித்தார்.

இந்தப் போர் காசாவில் உள்ள 80 வீதத்திற்கும் அதிகமான மக்களை தமது வீடுகளை விட்டு வெளியேற்றி இருப்பதோடு நகரங்கள் முற்றாக சின்னபின்னமாக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் அங்கு பட்டினி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

‘எமக்கு தீர்வொன்று வேண்டும். நாம் எமது வீடுகளுக்கு திரும்ப வேண்டும். இந்த வாழ்க்கையில் களைத்துவிட்டோம்’ என்று மத்திய காசா நகரான டெயர் அல் பலாவில் இடம்பெயர்ந்து கூடாரத்தில் தங்கி இருக்கும் சலாமா அபூவல் கும்புஸ் குறிப்பிட்டார்.

காசாவில் பிடிக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு அவர்களின் குடும்பங்களில் இருந்து இஸ்ரேலிய அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. ஹமாஸுடன் உடன்பாடு ஒன்றுக்கு வருவதற்கு அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தப் போர் வெடிக்கக் காரணமான கடந்த ஒக்டோபர் 7 அன்று இடம்பெற்ற இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலின்போது சுமார் 250 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். கடந்த நவம்பரில் ஒரு வாரம் நீடித்த போர் நிறுத்தத்தின்போது 100 பணயக்கைதிகள் வரை விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து சுமார் 80 பேர் பயணக்கைதிகளாக இருப்பதோடு 40 உயிரிழந்த பணயக்கைதிகளின் சடலங்களும் இருப்பதாக நம்பப்படுகிறது.

எனினும் காசாவில் உள்ள பணயக்கைதிகள் பற்றி யாருக்கு தெரியாது என்று ஹமாஸ் பேச்சாளர் மற்றும் அந்த அமைப்பின் அரசியல் பிரிவு உறுப்பினரான ஒசாமா ஹம்தான் அமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

போர் வெடிப்பதற்கு காரணமான ஒக்டோபர் 7 தாக்குதலை நடத்தியதற்கு ஹமாஸ் வருந்துகிறதா என்று இதன்போது ஹம்தானிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘ஆக்கிரமிப்புக்கான எதிர்வினையாகவே அது இருந்தது’ என்று பதிலளித்தார்.

பஞ்சம் அதிகரிப்பு

இதேவேளை ஊட்டச்சத்து குறைபாட்டால் காசாவில் 12 வயது சிறுவன் ஒருவன் நேற்று மரணித்தாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. முஸ்தபா ஹிஜாசி என்ற அந்த சிறுவன் டெயர் அல் பலாஹ்வில் உள்ள அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமளையில் உயிரிழந்துள்ளார்.

காசா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புபட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்திருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கு காசாவில் பஞ்சம் அதிகரித்திருப்பதாகவும் 200,000இற்கும் அதிகமான பலஸ்தீன சிறுவர்கள் இடையே ஊட்டச்சத்து குறைபாட்டுக்கான அறிகுறிகள் தெரிவதாகவும் கமால் அத்வான் மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் ஹொசான் அபூ சபியா குறிப்பிட்டுள்ளார்.

அல் அரபியா தொலைக்காட்சிக்குப் பேசிய அவர், காசா மனிதாபிமான நெருக்கடி ஒன்றை எதிர்கொண்டிருப்பதாக எச்சரித்தார். ‘மாவை தவிர எந்த உணவுப் பொருளும் வடக்கு காசாவில் இல்லை. பஞ்சத்தின் அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு அனைத்து சர்வதேச நிறுவனங்களுக்கும் நான் ஒரு துயர அழைப்பை விடுக்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டார்.

காசாவில் ஏற்கனவே உணவு, மருந்து, எரிபொருளுக்கு தட்டுப்பாடு இருக்கும் நிலையில் கடந்த மே ஆரம்பத்தில் எகிப்துடனான ரபா எல்லைக் கடவையை இஸ்ரேலியப் படை கைப்பற்றியதை அடுத்து நிலைமை மோசடைந்துள்ளது. இந்த எல்லைக் கடவை காசாவுக்கான உதவிகள் வரும் வாயிலாக இருந்த நிலையில், அது தற்போது மூடப்பட்டுள்ளது.

‘இஸ்ரேல் உதவிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி, தாக்குதல்களை நிறுத்தி மற்றும் முக்கிய சேவைகளை மீள ஆரம்பிக்காத பட்சத்தில் விரைவில் காசாவில் பஞ்சம் ஏற்படும்’ என்று நிவாரண அதிகாரிகள் மற்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

பொரும்பாலான காசா குடியிருப்பாளர்கள் ‘கொடிய அளவில் பட்டினி மற்றும் பஞ்சம் போன்ற நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும்’ உலக சுகாதார அமைப்பு அண்மையில் எச்சரித்திருந்தது.

முழு அளவில் போர் அச்சுறுத்தல்

காசா போர் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்திருக்கும் சூழலில் இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே அடிக்கடி மோதலைத் தூண்டி வருகிறது. ஹிஸ்புல்லா மூத்த தளபதி ஒருவர் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் அந்தப் போராட்ட அமைப்பு பதில் நடவடிக்கையாக நேற்றும் இஸ்ரேல் மீது சரமாரி ரொக்கெட் மற்றும் ஆளில்ல விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது முழு அளவில் போர் ஒன்றாக வெடிக்கும் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.

தெற்கு லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டு வருவதாகவும் எல்லை நகரான கிர்யாத் ஷமோனின் சுற்றுப்புற பகுதிகள் இலக்காகி வருவதாகவும் இஸ்ரேலிய அவசர சேவைகள் பிரிவு நேற்று தெரிவித்தது.

வடக்கு காசாவில் எச்சரிக்கை சைரன் ஒலி எழுப்பப்பட்டிருப்பதோடு பொருட் சேதங்கள் பதிவாகி இருப்பதாகவும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அவசர சேவை பிரிவு குறிப்பிட்டது.

இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து தொடர்ந்து மூன்றாவது நாளாகவே ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தெற்கு லெபனானின் டைரே மாவட்டத்தில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஏழு பேர் காயமடைந்ததாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

இதன்போது ஜென்னத் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றே தாக்கப்பட்டிருப்பதாக அந்த செய்தி கூறுகிறது.

பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் இன்னும் நிறுத்தப்படவில்லை. உக்ரைனியருக்கு சொந்தமான சரக்குக் கப்பல் மற்றும் மேலும் இரு கப்பல்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் ஒரு கப்பலில் சேதங்கள் ஏற்பட்டு தீ பரவி இருப்பதோடு ஒருவர் காயமடைந்திருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 


ரஷ்யாவின் வட்டியால் உக்ரைனுக்குக் கடன்

June 15, 2024 9:26 am 

ஜி7 நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு 50 பில்லியன் டொலர் கடன் வழங்க இணங்கியுள்ளனர்.

முடக்கப்பட்ட ரஷ்யச் சொத்துகளில் இருந்து கிடைக்கும் வட்டியைப் பயன்படுத்தி அந்தக் கடன் தொகை கொடுக்கப்படும். இத்தாலியில் நடைபெறும் ஜி7 நாடுகளின் உச்சநிலை மாநாட்டில் உக்ரைனுக்குக் கடன் கொடுக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.

ரஷ்யாவுடன் இரண்டு ஆண்டுக்கும் மேலாகத் தொடரும் போரில் கூடுதலான நாடுகளின் ஆதரவைப் பெற உக்ரைன் முயன்று வருகிறது.

இந்தக் கடனுதவி, ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் உலகம் ஒன்றுபட்டுள்ளதை ரஷ்யாவுக்குக் காட்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார். உக்ரைனுடன் பத்தாண்டுப் பாதுகாப்பு உடன்பாட்டுக்கும் அமெரிக்கா உறுதி தெரிவித்துள்ளது.

அதன்படி அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் முதலியவற்றைக் கொடுக்கும். மேலும் அமெரிக்கா அதற்குப் பயிற்சி அளிக்கும், உளவுத் தகவல்களையும் உக்ரைனுடன் பகிர்ந்துகொள்ளும்.

உடன்பாடு, நேட்டோ அமைப்பில் அங்கத்துவம் பெற உக்ரைனுக்குப் பாலமாக அமையும் என்று அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கூறுகிறார்.   நன்றி தினகரன் 


மாலைதீவுக்கு இந்தியா ஒரு மூலோபாய பங்காளியாக முன்பை விட ஏன் அதிகமாக தேவைப்படுகிறது?

June 14, 2024 7:25 pm 

தீவு நாடான மாலைதீவு ஒரு முக்கியமான புவிசார் அரசியல் மார்க்கமாக தன்னைக் காண்கிறது. இந்தியாவுடனான அதன் உறவுகள் மொஹமட் முய்ஸுவின் புதிய ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் சிதைந்துள்ளன.

அதே நேரத்தில், மாலைதீவுகள் சீனாவின் சுற்றுப்பாதையை நெருங்கி வருவதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், உண்மைகளை கவனமாக ஆராய்ந்தால், மாலைதீவுகள் சீனாவுடன் மிகவும் இணக்கமாக இருப்பதைக் காட்டிலும் இந்தியாவுடனான தனது உறவை வலுப்படுத்துவதன் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்தியா-மாலைதீவு உறவின் அடித்தளங்கள் பல தசாப்தங்களாக பரஸ்பர ஆதரவு மற்றும் ஒத்துழைப்பால் உருவாக்கப்பட்டவை. மாலைதீவிற்கு இந்தியா தொடர்ந்து உதவியாக இருந்து வருகிறது. அந்த நாடு முழுவதும் முக்கியமான வளர்ச்சித் திட்டங்களை இந்தியா ஆதரிக்கிறது.

இந்தியா தற்போது மாலைதீவில் 23 மில்லியன் டொலர் மதிப்பிலான 65 சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒத்துழைத்து வருகிறது. இந்த திட்டங்கள் மீன் பதப்படுத்தும் ஆலைகள் மற்றும் போதைப்பொருள் மறுவாழ்வு மையங்கள் முதல் கலாச்சார மையங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் வரை பல்வேறு வகையான திட்டங்களை உள்ளடக்கியது.

அபிவிருத்தி உதவிக்கு அப்பால்,அந்நாட்டின் வரவு செலவுத்திட்டத்திற்காக 50 மில்லியன் டொலர்களை திறைசேரிமுறியாக இந்தியா வழங்கியுள்ளது. மாலைதீவின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை இந்த முக்கியமான நிதி ஆதாரம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தற்போது நடைபெற்று வரும் பாரிய மாலே இணைப்புத் திட்டம், உருமாற்ற உள்கட்டமைப்பு முயற்சி என்பன மாலைதீவின் எதிர்காலத்தில் இந்தியாவின் முதலீட்டின் ஆழத்தை எடுத்துக்காட்டுகிறது. 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள இந்திய மானியம் மற்றும் சலுகைக் கடனின் ஆதரவுடன், இந்தத் திட்டம் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதையும் மாலைதீவு நாட்டு மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாலைதீவிற்கு இந்தியாவின் உதவி வெறும் பண உதவிக்கு அப்பாற்பட்டது. இரு நாடுகளும் ஆழமான கலாச்சார, வரலாற்று மற்றும் மூலோபாய உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன, மாலைதீவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை இந்தியா தொடர்ந்து மதித்து வருகிறது.அதன் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தவோ அல்லது அதன் விருப்பத்தை திணிக்கவோ ஒருபோதும் முயலவில்லை.

மாலைதீவின் நம்பகமான பங்காளியாக இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது, நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது உதவிக்கரம் நீட்டுகிறது. 2004 சுனாமியால் மாலைதீவுகள் பேரழிவிற்குள்ளானபோது, ​​பாதிக்கப்பட்ட தீவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக இந்தியா உடனடியாக ராணுவக் கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பியது.

இந்தியாவின் விரைவான செயற்பாடு மற்றும் மனிதாபிமான உதவி முயற்சிகள் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற உதவியது. மாலைதீவு மக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை இந்தியா வழங்கியது. கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, ​​​​ மாலைதீவிற்கு அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது.அந்த தீவு தேசம் வைரஸை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கான ஆதாரங்களைக் கொண்டுள்ளது என்பதை உறுதி செய்தது. இத்தகைய நெருக்கடியான தருணங்களில் மாலைதீவுக்கு ஒத்துழைக்க இந்தியா தயாராக இருப்பது இருதரப்பு உறவின் ஆழத்தையும் அதன் கடல்சார் அண்டை நாடுகளின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சீன முதலீடு மற்றும் கடன்கள் என்பன வெளிப் பார்வையில் கவர்ச்சியாகத் தோன்றினாலும், மாலைதீவுகள் எச்சரிக்கையுடன் செயல்படுவது புத்திசாலித்தனமாக இருக்கும். சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (BRI) பல நாடுகளை கடன் பொறிகளில் சிக்க வைத்துள்ளது.

சீனாவிடம் தனது எதிர்காலத்தை அடகு வைப்பதன் மூலம், மாலைதீவுகள் அதன் இறையாண்மையை சமரசம் செய்து, சிறிய நாடுகளை தனது சொந்த லாபத்திற்காக சுரண்டும் சாதனையுடன் வெளி சக்தியை அதிகமாகச் சார்ந்திருக்கும் அபாயம் உள்ளது.

மேலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவும் தகராறுகளில் சீனாவின் நிலைப்பாடு மற்றும் அதன் வளர்ந்து வரும் இராணுவப் பிரசன்னம் மாலைதீவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது. சீனாவுடன் மிக நெருக்கமாக இணைந்திருப்பது, நம்பகமான பங்காளி மற்றும் பிராந்திய அதிகார மையமான இந்தியாவுடனான மாலைதீவின் உறவுகளை சீர்குலைக்கும்.

தாழ்வான தீவு நாடாக, காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாலைதீவு முன்னணியில் உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முன்முயற்சிகள் மற்றும் நிலையான வளர்ச்சியில் உலகளாவிய முன்னணியில் உள்ள இந்தியா, சுற்றுச்சூழல் அபாயங்களைக் குறைப்பதற்கும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு ஏற்பவும் மாலைதீவுகளின் முயற்சிகளில் விலைமதிப்பற்ற கூட்டாளியாக இருக்க முடியும்.

சூரிய சக்தி, கடலோரப் பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவம் போன்ற துறைகளில் இந்தியாவின் நிபுணத்துவம் மாலைதீவின் நீண்டகால உயிர்வாழ்விற்கு முக்கியமானது.

இந்தியாவின் வளர்ச்சிக்கான உதவிகள் எந்தவிதமான நிபந்தனைகளும் அற்றவை. சீனாவின் முதலீடுகள் பெரும்பாலும் மறைந்திருக்கும் செலவுகள் மற்றும் நீண்ட காலத்திற்கு மாலைதீவின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டுள்ளன.   நன்றி தினகரன் 
No comments: