இலங்கைச் செய்திகள்

 கம்பன் விழா கோலாகலமாக ஆரம்பம்

அவுஸ்திரேலியா வீஸா விதிகளை கடுமையாக்குவதாக அறிவிப்பு

தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கை- சீனா 13ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகள்

ஏப்ரல் 21 தாக்குதல் புலனாய்வு தகவல் தொடர்பில் அதிகாரிகள் செயற்பட்ட விதம் சரியா?


கம்பன் விழா கோலாகலமாக ஆரம்பம்

June 15, 2024 6:00 am 

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2024 கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் கோலாகலமாக நேற்று மாலை ஆரம்பமானது. இந்த விழாவுக்கு வருகை தந்த பிரமுகர்கள் கம்பன் தலைமை அலுவலக கோட்டத்திலிருந்து ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க அழைத்துச் செல்லப்படுவதை படத்தில் காணலாம்.   நன்றி தினகரன் 





அவுஸ்திரேலியா வீஸா விதிகளை கடுமையாக்குவதாக அறிவிப்பு

June 15, 2024 1:00 am 

அவுஸ்திரேலியா அரசாங்கம் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வீஸா விதிகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி சுற்றுலா வீஸாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்று தங்கியிருந்து மாணவர் விசா பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இழக்கப்படுமென்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

யுத்தம், மோதல் மற்றும் வறுமை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி செல்வந்த நாடுகளில் தஞ்சமடைகின்றனர்.

அதேநேரத்தில் ஏராளமான மக்கள் வெற்றிகரமான எதிர்கால நம்பிக்கையுடன் அந்த நாடுகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை நாடுகின்றனர். எனினும் ஆண்டு தோறும் பல குடியேற்றவாசிகள் சட்ட ரீதியாகவும், சட்டவிரோதமாகவும் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கின்றனர். உயர் கல்விக்காக செல்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த ஆண்டு தனது வீஸா விதிகளை கடுமையாக்கும் திட்டங்களை அறிவித்தது. எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டுக்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்கவும் அவுஸ்திரேலியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் 2023ஆம் ஆண்டு ஜூலை 01ஆம் திகதி முதல் இந்த ஆண்டு ஜூன் 01ஆம் திகதிவரை சுற்றுலா வீஸாவில் வந்து மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்காலிக பட்டதாரி வீஸா வைத்திருப்பவர்கள் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக மாணவர் விசாக்களுக்கு விண்ணப்பிப்பது 2022/23 இல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நாட்டின் மாணவர் வீஸா நடைமுறையை சீர்குலைப்பதாகவும், உயர் கல்வி பெறும் உண்மையான நோக்கத்துடன் நாட்டுக்குள் வரும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்காலிக பட்டதாரி வீஸாவின் கீழ் பட்டப்படிப்புக்கு பின்னர் பணி புரியும் நேரத்தை குறைக்கவும், விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை 50 முதல் 30 ஆக குறைக்கவும், ஆங்கிலமொழித் திறனை உயர்த்தவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்திருந்திருந்தது.   நன்றி தினகரன் 





தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையருக்கு முக்கிய தகவல்:

June 15, 2024 7:30 am 

இலங்கையர் ஒவ்வொருவரினதும் உயிரியளவுகள் எனக் கூறப்படும் (Biometrics -மனித குணாதிசயங்கள் தொடர்பான உடல் அளவீடுகள் மற்றும் கணக்கீடுகள்) தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படுமென ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. முதன் முறையாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு

முதலில் இந்த அடையாள அட்டை வழங்கப்படுமென ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார். அதற்கமைய தற்போது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பாடசாலை மாணவர்களுக்கு உறுதிப்படுத்தல் கடிதம் மட்டுமே வழங்கப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   நன்றி தினகரன் 





இலங்கை- சீனா 13ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகள்

பீஜிங் நகரில் திங்களன்று ஏற்பாடு

June 15, 2024 2:00 am 

சீனாவின் பீஜிங் நகரில் எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள சீன மக்கள் குடியரசுடனான 13ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளில் பங்குபற்ற இலங்கையின் தூதுக் குழுவினர் செல்லவுள்ளனர்.

இந்த தூதுக் குழுவினருக்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன தலைமை தாங்கவுள்ளார்.

இந்நிலையில் சீன மக்கள் குடியரசின் வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் சன் வீடாங்குடன் அவர் ஆலோசனை அமர்வுகளுக்கு இணைத் தலைவராக செயலாற்றவுள்ளார். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இரு தரப்பு ஈடுபாட்டுக்கான துறைகளில் முன்னேற்றம் குறித்து இந்த விவாதங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனைகளுக்கான இலங்கையின் தூதுக் குழுவில் பீஜிங்கில் நியமிக்கப்பட்டுள்ள தூதுவர் மஜிந்த ஜயசிங்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சீனாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் ஆகியோரும் அடங்குவர். இரு தரப்பு அரசியல் ஆலோசனைகளின் 12ஆவது சுற்றுப் பேச்சு கடந்த 2023 மே மாதம் 30ஆம் திகதியன்று கொழும்பில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 






ஏப்ரல் 21 தாக்குதல் புலனாய்வு தகவல் தொடர்பில் அதிகாரிகள் செயற்பட்ட விதம் சரியா?

- வவுணதீவு சம்பவம் ஏன் LTTE அமைப்புடன் தொடர்புபடுத்தப்பட்டது

June 13, 2024 8:19 am 

– விசாரணைக்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு
– செப்டெம்பர் 15 இற்கு முன் அறிக்கை தர அறிவுறுத்தல்

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் அதற்கு முன்னர் கிடைத்த புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS), தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.என்.ஜே.டி. அல்விஸ் தலைமையிலான இந்தக் குழுவில், உறுப்பினர்களாக இலங்கை நிர்வாகச் சேவையின் விசேட தரநிலை அதிகாரியான கே.என.கே. சோமரத்ன மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி டபிள்யூ.எம்.ஏ.என்நிஷேன் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

இந்த விசாரணைக் குழுவின் செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவி ஆலோசகர் சாரதாஞ்சலி மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS),தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் எவை? அதற்கு அமைவாக போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது.

வவுணதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டமை LTTE அமைப்பினரால் என்பதை இராணுவ புலனாய்வுச் சபை (DMI), குற்றப் புலனாய்வு பிரிவு (CID) என்பன நான்கு மாதங்களாக நம்பியிருந்தமைக்கான காரணம் என்னவென்றும், மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவின் விசாராணைகளில் தெரியவந்த தகவல்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை அல்லது அது தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுக்களினால் 2021 ஜனவரி 31 ஆம் திகதி வழங்கப்பட்ட இறுதி அறிக்கையின் ஊடாக 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்படவிருந்த குண்டுத் தாக்குதல் தொடர்பாக அரச புலனாய்வு பிரிவு (SIS), தேசிய புலனாய்வுப் பிரதானி (CNI)மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு இந்திய புலனாய்வுப் பிரிவினால் முழுமையான முன்னோடி அறிக்கையொன்று வழங்கப்பட்டிருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2018 ஆண்டு, நவம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய காலப்பகுதியில் வவுணதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலைச் செய்யப்பட்ட சம்வம் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பணியகம், குற்றப் புலனாய்வு பிரிவு என்பன அறிந்துகொண்ட தகவல்கள் அறிவிக்கப்பட்டிருந்ததோடு, அதில் LTTE அமைப்புக்கு தொடர்பிருப்பதாக நம்பப்பட்டது.

இருப்பினும் மேற்படி சம்பவத்திற்கு ஆறு மாதங்களுக்கு பின்னர் இராணுவ புலனாய்வுப் பணியகம் இதில் தேசிய தவூஹீத் ஜமாத் (NTJ) அமைப்புக்கு தொடர்பிருப்பதாக அறிந்துகொண்டது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் அறிக்கையிடல் மற்றும் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு 2021 ஜனவரி 31 ஆம் திகதி இறுதி அடங்கிய இறுவட்டு ஒன்றை விசாரணை ஆணைக்குழுவிடம் வழங்கியிருப்பதோடு, அது தொடர்பில் எந்தவொரு அதிகாரியிடமும் விசாரணை நடத்தும் அதிகாரத்தை புதிய விசாரணைக் குழுவிற்கு ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

அதன்படி 2024 செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னதாக புதிய குழுவின் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 


No comments: