படித்தோம் சொல்கின்றோம்: கலை, இலக்கிய, சமூக, அரசியல் ஆய்வாளர் எம். வாமதேவனின் புதிய வரவுகள் ! மலையக மக்களின் வலிநிரம்பிய வரலாற்றை பேசும் இரண்டு நூல்கள் ! ! முருகபூபதி


இலங்கை மலையகம் 200 பேசுபொருளாகியிருக்கும் சமகாலத்தில்,  கலை, இலக்கிய , சமூக, அரசியல் ஆய்வாளர் எம். வாமதேவன் வரவாக்கியிருக்கும் இரண்டு புதிய நூல்கள் எனக்கு அண்மையில் படிக்கக் கிடைத்தன.

சில வருடங்களுக்கு முன்னர் வாமதேவன்,  இலங்கையில் பசுமையை படரச்செய்த மலையக மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை, மலையகத்தின் ஆத்மாவை கலை, இலக்கியம் மற்றும் ஊடகத்துறையில் பதிவுசெய்த சில ஆளுமைகள் பற்றிய தனது பசுமையான நினைவுகளை பதிவுசெய்த  நீங்காத நினைவுகளில் மலையக மண்ணின் மைந்தர்கள் என்ற நூலையும், குன்றிலிருந்து கோட்டைக்கு  என்ற நூலையும் எழுதியிருந்தார்.

இதில்  குன்றிலிருந்து கோட்டைக்கு என்ற நூல், எமது


அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்,     இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப் போட்டியில் கட்டுரைப் பிரிவில்  ஐம்பதினாயிரம் ரூபா பரிசினையும் பெற்றிருந்தது.

இலங்கையில்  அரச மட்டத்தில் பல உயர்  பதவிகளை வகித்திருக்கும் எம். வாமதேவன், தனது பேச்சிலும் செயற்பாடுகளிலும் தான் பிறந்து வளர்ந்த மலையக மண்ணின் குரலை தொடர்ந்தும் ஒலித்து வந்திருப்பவர்.

மலையக சமூகம்:  ஒரு சமகால நோக்கு என்ற நூலுக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்விப்பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பொன். இராமதாஸ் பதிப்புரையும், மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் முகவுரையும் எழுதியிருக்கிறார்கள்.

மலையகத்  தோட்டத் தொழிலாளர்களின் மாதச் சம்பள விவகாரம் தொடர்ந்தும் நீறு பூத்த நெருப்பாகவே கனன்றுகொண்டிருக்கிறது.


பிரித்தானியரால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர், கோப்பி , தேயிலை பயிர்ச்செய்கைக்காக தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட தமிழ் மக்கள்,  பசுமையை படரவைத்ததுடன், அந்நியசெலவாணியையும் அரசுகளுக்கு ஈட்டித்தந்தனர்.

இலங்கையில் பிறந்த இவர்களின் சந்ததியினர் கடலையே பார்த்திருக்கவில்லை. ஆனால், இவர்கள் எவ்வாறு தென்னிலங்கை இனவாதிகளினால், இழிவாக வர்ணிக்கப்பட்டனர் என்பதை அறிவோம்.

அவுஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கமாக வந்தவர்கள்  இந்த நாட்டு குடிவரவாளர்களாலும் அரசாலும் படகு மனிதர்கள் என்றுதான் (Boat People)   அழைக்கப்படுகின்றனர்.

இலங்கைக்கு தென்னிந்தியாவிலிருந்து பொருளாதார


நோக்கத்திற்காக அழைத்து வரப்பட்ட அந்த மக்கள் தமது வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் காணவில்லை. அதிகார பீடத்திலிருந்தவர்கள்தான் அவர்களின் மூலம் தமது பொருளாதாரத்தை வளர்த்து , விருத்தி செய்துகொண்டனர்.

இலங்கை – இந்திய பிரதமர்களின் ஒப்பந்தங்கள் மூலம் நாடற்றவர்களாக்கப்பட்டனர்.

ஒரு காலகட்டத்தில் அவர்களுக்கு வாக்குரிமையும் பறிக்கப்பட்டிருந்தது.

இம்மக்களோடு மக்களாக வாழ்ந்திருக்கும் வாமதேவன் அவர்களும் தனது வாழ்வில் பல இழப்புகளை சந்தித்திருப்பவர்.


அந்தத்  துயரங்களை ஏற்கனவே அவரது குன்றிலிருந்து கோட்டைக்கு நூலில் நாம் தெரிந்துகொண்டோம்.

அந்த நூல் அவரது தன்வரலாறாக மாத்திரமின்றி,  மலையக மக்களின் சரிதையாகவும் அமைந்திருந்தது. வாமதேவனின் மலையக சமூகம் : ஒரு சமகால நோக்கு நூல், சமூகம், பொருளாதாரம், வரலாறு முதலான மூன்று பிரிவுகளில் மொத்தம் பதினோரு விரிவான கட்டுரைகளை உள்ளடக்கியிருக்கிறது.

இலங்கை மலையக மக்களுக்கு  சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் இருக்கும் கன்ரோன் முறைபோன்ற அதிகாரப் பரவலாக்கல் அலகொன்றை வழங்கலாம் என்று  1938 ஆம் ஆண்டு காலப்பகுதியில்  அரசாங்க அதிபராக பணியாற்றிய ஆங்கிலேயர் லெனார்ட் சிட்னி வூல்ஃப்,   பிரித்தானிய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறார் என்ற தகவலை  இந்நூலின் முகவுரையில் வீரகத்தி தனபாலசிங்கம் நினைவுபடுத்துகிறார்.

  லெனார்ட் சிட்னி வூல்ஃப் அரசியல் கோட்பாட்டாளரும், எழுத்தாளரும், பதிப்பாளரும், குடிசார் சேவையாளரும் ஆவார். அவர்


புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் வெர்ஜீனியா வூல்ஃபின் கணவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. 

இலங்கையைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில் யாழ்ப்பாணம், கண்டி, அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் லெனார்ட் சிட்னி வூல்ஃப் பணியாற்றியுள்ளார்.

வாமதேவனின் இந்த நூலைப்படித்துக்கொண்டிருந்தபோது,  எமது நினைவுக்கு வந்த தகவலை இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தமானது.

1977 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெயவர்தனா தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் பதவி ஏற்றபோது,  மலையக தொழிற்சங்க  ( இ.தொ.கா ) தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அமைச்சரானார்.

  “ மலையக மக்களின் விவகாரங்களை ஆராய்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கு ,  ஒரு அறிஞர் குலாமை அமைச்சர் உருவாக்கவேண்டும் “  என்று   கல்விப் பணிப்பாளராகவும், எழுத்தாளராகவும் இயங்கிய இர. சிவலிங்கம் வலியுறுத்தியிருந்தார்.


ஆனால், அந்த யோசனை கவனத்தில் எடுக்கப்படவில்லை.

அதன் பலனை நாம் பின்னர் கண்டோம். 

1977 , 1981, 1983 ஆகிய வருடங்களில் அதே ஜே. ஆரின். பதவிக்காலத்தில் நடந்த இனவாத வன்முறைகளில் மலையக தமிழ் மக்களும் உயிர், உடைமைளை இழந்து அகதிகளாக்கப்பட்டனர்.  இந்தியாவுக்கும் திரும்பினர்.

வாமதேவன் தமது நூலில் மலையக மக்களின் வரலாற்றையும், அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் விளக்கியிருக்கிறார்.

மலையக தோட்டத் தொழிலாளர்களின் நிலவுரிமை – சவால்களும் சாத்தியங்களும் என்ற வாமதேவனின் அடுத்த நூலுக்கு சட்டத்தரணி பா. கௌதமன் முகவுரை எழுதியிருக்கிறார்.

மலையக மக்களின் காணிப்பிரச்சினை பற்றிய புரிதலை ஆழமாக்குவதற்கும் இது தொடர்பான கலந்துரையாடல்களுக்கான அடிப்படையை அமைத்துக் கொடுப்பதற்கும் இப்பிரச்சினை குறித்து அறிய விரும்புவோருக்கு ஒரு செறிவான தரவுத் தளத்தை உருவாக்கிக்கொடுக்கவும்,  காணி உரிமைப்போராட்ட செயல்வாதத்திற்கு உரம் அளிக்கவும் எம் அனைவரையும் தூண்டக்கூடிய மிகுந்த சமூக ஈடுபாட்டுடன் இந்த ஆவணத்தை வாமதேவன் வழங்கியிருப்பதாக சட்டத்தரணி பா. கௌதமன் குறிப்பிட்டிருப்பது ஏற்புடையது.

வாமதேவன் இந்த நூலை எழுதுவதற்கு முன்னர் மலையகத்தின் எட்டு


மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.

தரவுகள், தகவல்களை சேகரித்திருக்கிறார்.

மலையகம் குறித்து ஆய்வுமேற்கொள்ள விரும்பும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இந்த நூல்கள் சிறந்த உசாத்துணையாக அமையும்.

இருநூறு வருடங்களாக லயங்களில் வாழ்ந்து உரிமையுடன் கூடிய தனி வீடுகளுக்காகப் போராடும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிலவுரிமைக்காக போராடும் தொழிலாளர்க்கும்  இந்த நூல்களை வாமதேவன் சமர்ப்பணம் செய்துள்ளார்.

மலையகம் 200 பேசுபொருளாகியிருக்கும் சமகாலத்தில், அம்மக்களை ஆழமாக நேசித்துவரும் வாமதேவன், இந்த நூல்களையும்  வரவாக்கி தனது நீண்ட கால தேடலையும் பதிவுசெய்துள்ளார்.

---0---

letchumananm@gmail.com

 

 

No comments: