அன்புத் தமிழ் மகனே கேளடா!

 



 






தாயாகி நானுன்; கருவிற் பதித்த

தலையாய மொழியும் தமிழல்லவா?

ஆயிரம் மொழிகள் உலகில் இருப்பினும்

அன்புத் தாய்மொழிக்(கு) ஈடாகுமோ?

 

அன்பொடு பால்தனைப் பருக்கிடும் போதிலும்

ஆசையாய்த் தமிழ்தனைக் குழைத்தூட்டினேன்

இன்றமிழ்  கற்றுநீ புலமைபெற் றெதிர்வரும்;

சந்ததிக் களித்திடக் காத்திருப்பேன்!












தோளிலும் மார்பிலும் துள்ளிப்; புரண்டபின்

தொட்டிலில் தூங்கிடக் கிடத்தியபின்

ஏழிசை நாணிடும் இசைகூட் டியேநான்

இசைத்திடும் பாட்டெலாம் தேன்தமிழே!

 

தெய்வத்; தமிழ்தனை மாசுப டுத்திடச்

சிறுமையர் கங்கணங் கட்டுகிறார்!

ஐயகோ இந்த அவலம் நிறுத்திட

ஆருக்கும் துணிவு பிறக்கலையா?

 

 

ஆக்கமும் சோபிக்க ஆங்கிச் சொற்களை

அங்கிங்  கென்றவர் கலந்திடுவார்

கேட்பதற் ஆளில்லை என்ற  துணிவொடு

கீழ்த்தரக் கொச்சைக் கதைசமைப்பார்!  

 

மானமோ மாறிலாத் தமிழுணர் வோடவர்

மனச்சாட் சியுந்தான் மறைந்தனவோ? 

வான மளந்த செந்தமிழ் தன்னை

மாசுசெய் வோர்களைச் சாடிடுவாய்!

;

மறைமலை யோடினி விகவும் முவவும்;

மறுபடி பிறந்துதான் வரவேண்டுமோ?

கறைமிகு கலியுகம் மறைந்த பின்னரா

கன்னித் தமிழுக்(கு) விடிவுவரும்?

 

மகனே மேலுங் கேட்பாய்!

 

பிறமொழிக் கலப்பிலாச் சுத்த தமிழைநீ

பிறக்கமுன் இருந்துதான் கேட்டுவந்தாய்

இறக்கும் வரைநீ இதனையே காத்திடு 

எட்டரின்  கதைகளைப் படித்திடாதே!

 

தமிழினைக் கொச்சைப் படுத்திடும் உரிமையைத்

தவறுசெய் வோர்க்குக் கொடுத்தவர்யார்?

அமிழ்தினும் இனியநற் தமிழொடு நஞ்சென

ஆங்கிலங் கலப்பது துரோகமன்றோ?

 

ஆங்கில மொழிதனைப் பாங்குடன் கற்பது

அவசிய மென்பதில் ஐயமேது?

ஓங்கி வளர்ந்த உலக மொழியது

உழைத்திடத் தொழில்பெற வழிகாட்டுமே!

 

தமிழரின் பிள்ளைகள் ஆங்கிலம் கற்பதில்

தவறொன் றுமில்லைத் தெரிந்திடுவாய்!

தமிழொடு ஆங்கிலம் கலந்து எழுதுவோர்

தரமற்ற போக்கையே கண்டிக்கிறேன்!

 

தாய்மொழி உணர்வெலாம் தாரை வார்த்தபின்

தமிழன் நான்;என் றவர் கூறலாமோ?

தூய தமிழதன் தொன்மைப் புகழெலாம்

துய்த்தபின் திருந்தினால் மகிழ்ந்திடுவேன்!

                   --------------- உனது தமிழம்மா

 


ஆக்கம்
சிவஞானச் சுடர்

கலாநிதி பாரதி இளமுருகனார்

(வாழ் நாள் சாதனையாளர்).

No comments: