தமிழ் அரசு கட்சியின் தலைமை யாரிடம்?

June 13, 2024


தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதில்லை என்று இலங்கை தமிழ் அரசு கட்சி முடிவு செய்துள்ளதாக எம். ஏ. சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். இதேவேளை ஐரோப்பிய நாடு ஒன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சிவஞானம் சிறீதரன் தமிழ் பொது வேட்பாளர்தான் தங்களுடைய நிலைப்பாடு என்று தெரிவித்திருக்கின்றார். இருவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான்.

ஆனால் சுமந்திரன் ஆணித்தரமாக தமிழ் அரசு கட்சி முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றார். இதன் மூலம் என்ன விடயத்தை சுமந்திரன் நிறுவமுற்படுகின்றார்? – அதாவதுஇ இப்போதும் நான் நினைத்ததே தமிழ் அரசு கட்சிக்குள் நிகழும் அதனை எவரும் மாற்றிவிட முடியாது. ஆனால் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவோ தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை முன்கொண்டு செல்லும் சிவில் சமூக அமைப்புகளுக்கும் தலையசைக்கின்றார் அதேவேளை தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டுக்கு எதிரான கூட்டத்திலும் முன் ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார்.

விசித்திரமான தலைவர். ‘மக்கள் மனு’ வடக்கு – கிழக்கு சிவில் சமூகக் குழு ஒழுங்கு செய்திருந்த கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின்போதுஇ தமிழ் அரசு கட்சியின் இறுதி முடிவை சொல்வதற்கு கட்சியின் தலைவர் என்னும் வகையில் மாவை சேனாதிராசா இரண்டு வார அவகாசம் கோரியிருந்தார். அதன் பின்னர் சிவில் சமூக பிரதிநிதிகள் மாவை சேனாதிராசாவை உத்தியோகபூர்வமாக சந்தித்து பேசியிருந்தனர்.

அப்போதும் இரண்டு வாரங்கள் தொடர்பிலேயே மாவை குறிப்பிட்டிருந்தார். ஆனால் இன்றுவரையில் கட்சியின் முடிவை சொல்லவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில் தமிழ் அரசு கட்சி பொது வேட்பாளர் நிலைப்பாட்டை எதிர்ப்பதென்று முடிவெடுத்துள்ளதாக சுமந்திரன் கூறுகின்றார். மாவை சேனாதிராசா ஒரு பலவீனமான தலைமைத்துவத்தை வழங்கிவருகின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும்கூட இந்தளவு கையறு நிலையில் இருக்கின்றார் என்பது இப்போதுதான் தெரிகின்றது. தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டுக்கு எதிராக பிரசாரம் செய்யப் போவதாக சுமந்திரன் கூறுகின்றார்.

இந்த நிலையில் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரிக்கும் நிலைப்பாடுடைய தமிழ் அரசு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் என்ன செய்யப் போகின்றனர்? அவர்கள் ஆதரவான பிரசாரங்களை முன்னெடுப்பார்களா? சுமந்திரன் ஒருவேளை கட்சியின் பெயரால் அவ்வாறான நிலைப்பாட்டை முன்னெடுக்க முற்பட்டால் அதனைத் தோற்கடிக்க வேண்டிய பொறுப்பு ஆதரிப்போருக்கு உண்டல்லவா? இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிலைமையோ மேய்ப்பன் இல்லாத ஆட்டுக் கூட்டம் போன்றாகிவிட்டது. இந்த நிலையில் அனைவரையும் மேய்க்கும் ஆற்றல் தனக்கு மட்டுமே உண்டு என்னும் வகையிலேயே சுமந்திரன் செயல்பட்டு வருகின்றார்.

சுமந்திரனின் இலக்கு தெளிவானது. அதாவதுஇ மீண்டும் கட்சியின் புதிய தலைமைக்கான தேர்தல் நடைபெறும்போது பிடித்தெழு வதற்கு ஒரு துருப்புச்சீட்டு தேவை. சுமந்திரனை பொறுத்தவரையில் தமிழ் பொது வேட்பாளர்தான் அந்தத் துருப்புச்சீட்டு. இப்போதும் தமிழ் அரசு கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றது என்பதை நிரூபிக்க வேண்டுமாயின்இ சிறீதரன் ஆதரிப்பதை பலமாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும். இதனை சிறீதரன் புரிந்துகொள்கின்றாரா?

நன்றி ஈழநாடு 

No comments: