பொம்மை - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 ஆங்கிலத்தில் திகில், மர்மம், திடீர் திருப்பம் என்று வித்தியாசமான


படங்களை இயக்கி புகழ் பெற்றவர் அல்ப்ரேட் ஹிட்ச்கொக். இவருடைய படங்கள் மொழி தெரியாதவர்களை கூட விறுவிறுப்பின் உச்சத்துக்கு எடுத்துச் செல்லும். அவருடைய இதே பாணியை பின் பற்றி தமிழிலும் ஒருவர் சில படங்களை இயக்கினார். அவர்தான் எஸ் பாலச்சந்தர். பிரபல வீணை வித்துவானான இவர் திரைப்படம் என்று வரும் போது திகில், சஸ்பென்ஸ் படங்களையே தொடர்ந்து இயக்கினார். அவ்வாறு அறுபது ஆண்டுகளுக்கு முன் அவர் இயக்கிய படம்தான் பொம்மை.

திரையுலககிற்கு புதுமுகமான சில நடிகர்களையும், ஓரளவு

அறிமுகமான சில நடிகர்களையும் ஒன்றிணைத்து குறைந்த பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்து இயக்கி , நடித்து, இசையும் அமைத்திருந்தார் அவர். ஒரு நடமாடும் பொம்மையை பிரதான பாத்திரமாகக் கொண்டு அதை சுற்றி நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாக படமாகியிருந்தார் பாலச்சந்தர்.

செல்வந்தரான சோமசுந்தரம் ஒரு ஞாயிறு காலை தன்னுடைய தொழில் பங்காளியான ஜெகதீஷுக்கும், தன் நிறுவனத்தில் பணிபுரியும் தன்னுடைய உறவினருக்கும் தான் அன்று காலை சிங்கப்பூர் செல்லப் போவதாக அறிவிக்கிறார். இதனை கேட்டவுடன் அவர்கள் சோமசுந்தரத்தை கொல்வதற்கு நூதனமான முறையில் திட்டம் தீட்டுகிறார்கள். நடமாடும் பொம்மை ஒன்றில் ஒரு வெடி குண்டை பொருத்தி அதனை சிங்கப்பூரில் இருக்கும் ஒருவரிடம் ஒப்படைக்கும் படி கோருகிறார்கள். பொம்மையின் மடியில் ஒப்படைக்க வேண்டியவரின் விலாசம் செருகப் பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் பொம்மையை ஒப்படைக்க விலாச சீட்டை சோமசுந்தரம் இழுத்து எடுக்கும் போது உள்ளே உள்ள விசை அழுத்தப் பட்டு குண்டு வெடிக்கும், சோமசுந்தரம் இறப்பார். அதன் பிறகு அவரின் சொத்துகள் எல்லாம் பங்காளி ஜெகதீஷுக்கு சென்று சேரும். அவர் தனது சகபாடிகளுக்கும் பிரித்து கொடுப்பார். இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்த முனையும் போது சதிகாரர்கள் பயணம் செய்த டக்சியில் பொம்மை தவறி விடுகிறது. அதன் பின் அது ஒரு குழந்தை, பிச்சைக்காரன், ஒரு சிறுவன், டக்சி டிரைவர், பொம்மைக்கடைக்காரன் என்று பலரிடமும் சுற்றுகிறது. அதே சமயம் எங்கே எந்த நேரம் அது வெடித்து விடுமோ என்ற பதைபதைப்பும், அச்சமும் தொடர்கிறது.


இவ்வாறு அமைந்த படத்தின் கதையில் சோமசுந்தரமாக எஸ் பாலச்சந்தர் நடித்தார். பாத்திரத்துக்கு ஏற்றாற் போல் அவருடைய உருவமும், குரலும் பொருந்தியது. மிக இயல்பாக நடித்திருந்தார் அவர். வில்லன் ஜெகதீஷ் வேடத்தை ஏற்றவர் வி எஸ் ராகவன். மேக்கப், நடிப்பு இரண்டும் பொருந்தியது. வெடிகுண்டை பொம்மையில் பொறுத்தும் பிரபாகராக ஸ்ரீனிவாசன் நடித்து இந்தப் படத்துடன் ஏனோ காணாமல் போய் விட்டார். அவரின் தங்கை மல்லிகாவாக எல் விஜயலக்ஷ்மி நடித்ததோடு ஒரு பரத நடனத்தையும் ஆடியிருந்தார். இவர்களுடன் வி கோபாலகிருஷ்ணன், எஸ் என் லக்ஷ்மி, சதன், மாலி, லஷ்மிராஜ்யம், ஆனந்த், ஆகியோரும் நடித்திருந்தனர். எல்லோரிடம் இருந்தும் இயல்பான நடிப்பையே இயக்குனர் பெற்றுக் கொண்டார்.

படத்தின் வசனங்களையும், பாடல்களையும் வித்துவான் வே

லஷ்மணன் எழுதியிருந்தார். தத்தி தத்தி நடந்து வரும் தங்க பாப்பா பாடல் எல் ஆர் ஈஸ்வரி குரலில் ஹிட்டானது. எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம் பாடலும், சுசிலாவின் குரலும், விஜயலஷ்மியின் நடனமும் பிரமாதம். அறுபது வருடங்களுக்கு முன் இந்தப் படத்தின் மூலம் தான் கே ஜே ஜேசுதாஸ் தமிழ் திரைக்கு அறிமுகமானார். அவர் மிகக் குறைந்த வாத்தியங்களோடு பாடிய நீயும் பொம்மை நானும் பொம்மை பாடல் அவருக்கு நல்லதொரு அறிமுகத்தை பெற்று தந்தது.


காலை ஒன்பது மணிக்கு தொடங்கி மாலை ஐந்து மணிக்குள் முடிவது போன்று கதையை அமைத்திருந்தார் பாலச்சந்தர். அது மட்டுமன்றி ஏராளமான சிறுவர்களுக்கும் நடிக்கும் வாய்ப்பை உருவாக்கியிருந்தார். படத்தில் பழைய சென்னை விமான நிலையத்தையும் பார்க்கக் கூடியதாக இருந்தது.

படத்துக்கு மிக அவசியமான சாவி கொடுத்தால் நடக்கும் பொம்மையை பல இடங்களிலும் தேடித் திரிந்து கடைசியில் சென்னை சைனா பஜாரில் அதனை வாங்கி படத்தில் பயன்படுத்தினார். குறைந்த செலவில் நவீனமாக தயாரான தயாரான பொம்மை வெற்றி பட வரிசையில் சேர்ந்து கொண்டது.

No comments: