உலகச் செய்திகள்

பைடன் – ட்ரம்ப் முதலாவது விவாதத்தில் கடும் மோதல்

மாலைதீவுடனான சீனாவின் நீர் இராஜதந்திரத்தை முறியடிக்க திபெத்தின் பெயரை மாற்ற முயற்சி

வடக்கு காசாவில் முன்னேறும் இஸ்ரேலியப் படை பலஸ்தீனரை தெற்கை நோக்கி செல்ல உத்தரவு

வடக்கு, தெற்கு காசாவில் குண்டு மழை பொழியும் இஸ்ரேலியப் படை ரபாவில் ஹமாஸுடன் மோதல்

காசாவில் பாடசாலை, வீடுகள் மீது இஸ்ரேல் சரமாரித் தாக்குதல்: 40 பலஸ்தீனர்கள் பலி

ஜூலியன் அசாஞ்ச் விடுதலை


பைடன் – ட்ரம்ப் முதலாவது விவாதத்தில் கடும் மோதல்

June 29, 2024 1:40 pm 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக முதல் நேரடி விவாதத்தில் மோதியுள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. பைடனும், ட்ரம்ப்பும் இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆவதற்குக் களம் இறங்கியுள்ளனர்.

அமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சி ஜனாதிபதி தேர்தலுக்காக இரண்டு நேரடி விவாதங்களை நடத்துகிறது. முதல் விவாதம் இலங்கை நேரப்படி நேற்று (28) நடந்தது.

இதில் பங்கேற்ற பைடனும், டிரம்பும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. பைடன் பேசும்போது அவ்வப்போது குழறினார். குடியேறிகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக ட்ரம்ப் சாடினார். ஆதாரமில்லாமல் அவர் அவ்வாறு சொல்வதாக பைடன் பதிலளித்தார்.

ட்ரம்ப் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் என பைடன் கூறியதோடு அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான ஜனாதிபதி பைடன் என்று ட்ரம்ப் சாடினார்.

விலைவாசி உயர்வு, பொருளாதாரம், அமெரிக்கர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, உக்ரைன் போர், காசா போர், பருவநிலை மாற்றம் முதலிய அம்சங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

அமைதியாக ஆரம்பித்த விவாதம் ஒரு கட்டத்தில் உக்கிரமடைந்தது. இருவரும் தனிப்பட்ட வாதத்தில் இறங்கினர்.   நன்றி தினகரன் 

 



மாலைதீவுடனான சீனாவின் நீர் இராஜதந்திரத்தை முறியடிக்க திபெத்தின் பெயரை மாற்ற முயற்சி

June 29, 2024 4:06 pm 

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் இழுபறி , குறிப்பாக நீர் வளங்கள் மற்றும் பிராந்திய உரிமைகோரல்களின் முக்கியமான பிரச்சினைகள், பிராந்தியத்தின் சிக்கலான இயக்கவியலை எடுத்துக்காட்டுகிறது. திபெத்தில் நீர் பாதுகாப்பு பிரச்சாரங்களை ஊக்குவிக்கும் அதே வேளையில், திபெத்திய பனிப்பாறைகளில் இருந்து மாலைதீவுக்கு தண்ணீரை பரிசாக வழங்கும் சீனாவின் சமீபத்திய சைகை, அதன் நடவடிக்கைகளால் எழும் சுற்றுச்சூழல் கவலைகள் மற்றும் அதன் மூலோபாய நோக்கங்களை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

திபெத்தின் நீர் மூலங்களை சீனா சுரண்டுவதாகக் கூறப்படும் விடயங்களும் எல்லைகளில் மேற்கொள்ளப்படும் அதன் முயற்சிகளுடன் , இந்தியாவின் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. இதற்கு பதிலடியாக, திபெத்தில் உள்ள இடங்களை மறுபெயரிடுவது உட்பட இதேபோன்ற தந்திரங்களை புது டெல்லி ஒரு ராஜதந்திர பதிலடியாக கருதுகிறது.

இந்த நடவடிக்கைகளின் மூலோபாய தாக்கங்கள், இமயமலைப் பகுதியில் செல்வாக்கு மற்றும் கட்டுப்பாட்டிற்கான பரந்த போட்டியை பிரதிபலிக்கும் . இரு நாடுகளும் மேலாதிக்கத்திற்காக போட்டியிடுவது பதற்றங்களை நீடிக்கின்றன. இராஜதந்திர மற்றும் மூலோபாய சூழ்ச்சிகளின் கவனமாக சமநிலை தேவைப்படுகிறது.

நரேந்திர மோடி அரசாங்கம் அதன் விருப்பங்களைக் கருத்தில் கொண்டு, நிலைமை நுட்பமான அதிகார சமநிலையையும், சிக்கலான புவிசார் அரசியல் சவால்களுக்கு வழிவகுப்பதில் மூலோபாய தொலைநோக்குப் பார்வையின் கட்டாயத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மாலைதீவைக் கவரும் முயற்சியில், சீனா திபெத்திய பனிப்பாறைகளில் இருந்து 3,000 மெட்ரிக் டன் தண்ணீரை தீவு தேசத்திற்கு மார்ச் மற்றும் மே மாதங்களில் இரண்டு தனித்தனியாக பரிசாக அளித்துள்ளது. இந்த நடவடிக்கை சீனாவை ஒரு விசித்திரமான சூழ்நிலையில் தள்ளியுள்ளது. தற்செயலாக, மார்ச் 20 அன்று, முதல் தண்ணீர் அனுப்பப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, சீனா நாட்டின் நீர் பாதுகாப்பு விதிமுறைகளை வெளியிட்டது.

மே முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் இந்த விதிமுறைகள், சீனாவின் நீர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் முன்னேற்றத்தின் முன்னேற்றம் மற்றும் உயர்தர வளர்ச்சிக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. “தெளிவான நீர் மற்றும் செழிப்பான மலைகள் விலைமதிப்பற்ற சொத்துக்கள்” என்ற பார்வையை கடைபிடிக்கும் . சீனா, அதன் நீர் மூலங்களை பாதுகாக்கவும், இணக்கமான சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பீஜிங், ஒரு சமூக ஊடக பிரச்சாரத்தில், திபெத் முழுவதும் வசிப்பவர்களிடம் தண்ணீரை சேமிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. பல சமூக ஊடகப் பதிவுகள், சாக்யா கவுண்டியில், திபெத்தியர்கள் தண்ணீரைச் சேமிக்க வலியுறுத்துவதாகக் கூறுகின்றன.இது பாட்டில் தண்ணீர் நிறுவனங்கள் திபெத்தின் பழமையான நீர் வளங்களை லாபத்திற்காக சுரண்டுவதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், சீனாவை விட திபெத்தின் நீர் வளங்கள் ஒப்பீட்டளவில் அதிக அளவில் இருப்பதாக சீன நோக்கர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கம் மற்றும் அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் திபெத்தில் உள்ள நதிகளுடன் தொடர்புடைய அருவமான புத்த பாரம்பரியம் ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இந்த வளங்களை பீஜிங் பயன்படுத்தி வருகிறது.

திபெத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) உறுப்பினர்களுடன் இணைந்ததாகக் கூறப்படும் நனப்பு ஸ்பிரிங் போன்ற பெரும்பாலான சீன பாட்டில் தண்ணீர் நிறுவனங்கள், நீர் ஆதாரங்களைச் சுரண்டுகின்றன. இது ஏற்கனவே உள்ள மற்றும் முன்மொழியப்பட்ட நதி நீர் பரிமாற்ற திட்டங்களுக்கு மேலதிகமாக மேற்கொள்ளப்படும் செயற்பாடாகும்.

கடந்த காலங்களில் புது தில்லி, மாலைதீவுகளுக்கு குடிநீரை நன்கொடையாக வழங்கியிருந்தாலும், ஆண்களுக்கான இத்தகைய கொள்முதலுக்காக இமயமலையின் பலவீனமான சூழலியலை சேதப்படுத்தவில்லை என்று நோக்கர்கள் கருதுகின்றனர்.

திபெத்தில் இருந்து மாலைதீவுக்கு “பனிப்பாறை நீரை” அனுப்பும் சீனாவின் நடவடிக்கை, திபெத்தின் பெயரை பீஜிங்கிற்கு விருப்பமான ‘ஜிசாங்’ என்று முறைப்படுத்தும் முயற்சி அதன் மறைமுக அரசியல் நோக்கத்திற்கும் உதவுகிறது.

அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட இடங்களின் பெயர்களை சீனா பலமுறை மாற்றியது. அருணாச்சலப் பிரதேசத்தை ‘ஜாங்னான்’ அல்லது தெற்கு திபெத் என்று குறிப்பிட்டு சீனா தனது பிரதேசமாக உரிமை கோருகிறது. அருணாச்சலத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன மற்றும் திபெத்திய பெயர்களுடன் சீனா மறுபெயரிட்டுள்ளது. அருணாச்சலத்தில் உள்ள இடங்களின் பெயரை மாற்றும் சீனாவின் முயற்சியை புது தில்லி தொடர்ந்து நிராகரித்து, அந்த மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று வலியுறுத்துகிறது.

கடந்த செப்டம்பரில் புது தில்லியில் ஜி20 தலைவர் உச்சிமாநாட்டிற்கு சில மாதங்களுக்கு முன்பு, லடாக்கில் உள்ள அருணாச்சல மற்றும் அக்சாய் சின் மீது பிராந்திய உரிமையை உறுதிப்படுத்தும் புதிய வரைபடத்தை பீஜிங் வெளியிட்டது. 2023 ஆம் ஆண்டு சீனாவின் ‘தரநிலை வரைபடத்தின்’ பதிப்பில், அதன் இயற்கை வள அமைச்சினால் அதன் நிலையான வரைபட சேவை வலைத்தளத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது, அக்சாய் சின் மற்றும் அருணாச்சல் ஆகியவை சீன எல்லைகளுக்குள் குறிக்கப்பட்ட தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிரதேசங்களில் அடங்கும்.

இதற்கு பதிலடியாக, விரிவான வரலாற்று ஆராய்ச்சியின் ஆதரவுடன் திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் (TAR) கிட்டத்தட்ட 30 இடங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் இந்திய இராணுவம் இதேபோன்ற தந்திரங்களை திட்டமிட்டுள்ளது.   நன்றி தினகரன் 




 

வடக்கு காசாவில் முன்னேறும் இஸ்ரேலியப் படை பலஸ்தீனரை தெற்கை நோக்கி செல்ல உத்தரவு

தெற்கு ரபாவில் தொடர்ந்தும் உக்கிர தாக்குதல்

June 29, 2024 9:52 am 

வடக்கு காசாவின் காசா நகர சுற்றுப்புறத்திற்குள் நுழைந்த இஸ்ரேலியப் படை அங்குள்ள பலஸ்தீனர்களை தெற்கை நோக்கிச் செல்ல உத்தரவிட்டபோதும், தெற்கின் ரபா நகரில் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறி வருவதோடு சரிமாரி வான் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன.

காசா நகரில் ஷஜையா சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியை நோக்கி இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறிய நிலையில் அங்கு கடும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. அங்கு ஆளில்லா விமானத் தாக்குதல்களும் இடம்பெற்றதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கு போர் வெடித்த ஆரம்பத்தில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்கள் நடத்திய நிலையிலேயே படையினர் மீண்டும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

‘போர் மீண்டும் ஆரம்பமானது போன்று சத்தம் இருந்தது. எமது பகுதியில் தீவிர குண்டு வீச்சில் பல வீடுகளும் அழிக்கப்பட்டதோடு கட்டடங்கள் அதிர்ந்தன’ என்று காசா நகரைச் சேர்ந்த 25 வயது முஹமது ஜமால் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை இரவு ஷெஜையாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சிவில் அவசர சேவை பிரிவு குறிப்பிட்டுள்ளது. இடிபாடுகளில் பலரும் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்பாளர்களுக்கு அங்கு செல்ல முடியாதிருப்பதாக அது தெரிவித்தது.

இஸ்ரேலியப் படை முன்னேறி வந்ததை அடுத்து பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் பைகள் மற்றும் உணவை சுமந்து கொண்டு வீதி நெடுகவும் ஒடும் காட்சியை ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளிட்டுள்ளது. சில ஆண்கள் காயமடைந்த சிறுவர்களை சுமந்தபடியும், மேலும் சிலர் கயத்தால் இரத்தம் சொட்ட செல்வதையும் அந்தப் படங்கள் பதிவிட்டுள்ளன.

‘ஆக்கிரமிப்பாளர்கள் (இஸ்ரேல்) எம்மை இலக்கு வைப்பதை உங்களாலும் பார்க்க முடியும். உங்களால் சிறுவர்களையும், சிறுவர்கள் இலக்கு வைக்கப்பட்டிருப்பதையும் பார்க்க முடியும்’ என்று இரத்தக் காயத்துடன் சிறுவன் ஒருவனை சுமந்து செல்லும் ஆடவர் ஒருவர் தெரிவித்தார்.

இங்கு வடக்குப் பகுதியில் இஸ்ரேலிய டாங்கி ஒன்றை இலக்கு வைத்து முன்கூட்டி வைக்கப்பட்ட வெடிபொருளை வெடிக்கச் செய்ததாக இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு தெரிவித்துள்ளது.

போராளிகள் பொதுமக்கள் இடையே ஒளிந்திருப்பதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் இராணுவம் மோதல் நடைபெறும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும்படி எச்சரித்துள்ளது. ‘உங்களின் பாதுகாப்புக்காக தெற்கில் சலா அல் தீன் வீதியில் உள்ள மனிதாபிமான வலயத்தை நோக்கிச் செல்லுங்கள்’ என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் அவிசாய் அட்ராயி எக்ஸ் சமூகதளத்தின் ஊடக ஷெஜையாவில் உள்ள குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளார்.

டாங்கிகள் முன்னேறி வருவதோடு கிழக்கு புறநகர் பகுதியில் இருக்கும் மக்கள் இஸ்ரேல் தெற்கு வீதியை முடக்கிய நிலையில் தாக்குதலுக்கு மத்தியில் மேற்கை நோக்கி செல்கின்றனர் என்று காசா ஊடகங்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வியாழன் நள்ளிரவு கடந்த நிலையில் மத்திய காசாவின் அல் நுஸைரத் முகாமில் உள்ள பலஸ்தீன சிவில் பாதுகாப்பு சேவை தலைமையகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதாக மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் 7 இல் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இந்த மீட்புச் சேவையைச் சேர்ந்த 74 உறுப்பினர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். மறுபுறம் எகிப்து எல்லையை ஒட்டிய ரபாவில் கடந்த மே ஆரம்பம் தொடக்கம் படை நடவடிக்கையை முன்னெடுத்திருக்கும் இஸ்ரேலியப் படை அங்கு பல பகுதிகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. நகரின் மேற்கில் இடம்பெற்ற இஸ்ரேலிய செல் தாக்குதலில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

அண்மைய நாட்களாக ரபாவில் இஸ்ரேலிய படையின் ஊடுருவல் அதிகரித்திருப்பதோடு அங்கு இடம்பெற்று வரும் மோதல்களில் இஸ்ரேலிய படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதை அந்த இராணுவம் உறுதி செய்துள்ளது. நஹால் படைப்பிரிவின் 93ஆவது பட்டாலியனின் 19 வயது சார்ஜன்ட் ஒருவர் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்தது.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இதுவரை 667 இஸ்ரேலியப் படையினர் கொல்லப்பட்டு சுமார் 4,000 படையினர் காயமடைந்திருப்பதாக இஸ்ரேல் தரப்பு உறுதி செய்துள்ளது.

எட்டு மாதங்களுக்கு மேலாக நீடிக்கு காசா போரில் இதுவரை 37,700க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு அங்கு முழு அளவிலான பஞ்சம் ஒன்று ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. சுமார் அரை மில்லியன் மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘நாம் காசா நகரில் பட்டினியாக இருப்பதோடு, டாங்கிகள் மற்றும் விமாங்கள் துரத்துகின்ற நிலையில் இந்தப் போர் முடிவதற்கான எந்த நம்பிக்கையும் இன்றி இருக்கிறோம்’ என்று ஜமால் என்பவர் குறிப்பிட்டார்.   நன்றி தினகரன் 




வடக்கு, தெற்கு காசாவில் குண்டு மழை பொழியும் இஸ்ரேலியப் படை ரபாவில் ஹமாஸுடன் மோதல்

June 27, 2024 6:37 am 

40 பேருடன் தரைமட்டமாக்கப்பட்ட வீட்டில் 15 பேர் பலி

காசாவில் பல பகுதிகளிலும் இஸ்ரேலியப் படை நேற்றும் (26) தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியதோடு தெற்கு நகரான ரபாவில் இரவு தொடக்கம் கடும் மோதல்கள் இடம்பெற்று வந்ததாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரபாவின் மேற்கில் உள்ள டெல் அல் சுல்தான் பகுதியில் மோதல்கள் உக்கிரம் அடைந்திருந்ததாகவும் கடும் மோதல்களுக்கு மத்தியில் டாங்கிகள் வடக்கை நோக்கி முன்னேற முயன்றதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். டாங்கி எதிர்ப்பு ரொக்கெட்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகளைப் பயன்படுத்தி இஸ்ரேலியப் படை மீது தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே ஆரம்பம் தொடக்கம் காசாவின் தென் முனைப் பகுதியான எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரிலேயே தரைவழி மோதல்கள் தீவிரம் அடைந்துள்ளன. இங்கு காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருந்த நிலையில் இஸ்ரேலின் படை நடவடிக்கையை அடுத்து பெரும்பாலான மக்கள் இங்கிருந்து மீண்டும் ஒருமுறை இடம்பெயர்ந்தனர்.

இஸ்ரேல் நேற்றுக் காலை நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் ரபாவில் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

ரபா மற்றும் எகிப்து எல்லைக்கு இடையே ஆயுதங்களை கடத்துவதுடன் தொடர்புபட்ட ஹமாஸ் போராளி ஒருவரை இஸ்ரேலியப் படை கொன்றதாக அந்த இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு காசா நகரான பெயித் லஹியாவில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் வீடு ஒன்று தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் 15 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரம் தெரிவித்தது. அபூ அவாத் குடும்ப வீடே இதன்போது தாக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் இடம்பெறும்போது அந்த வீட்டில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட சுமார் 40 பேர் இருந்ததாக காசாவின் மருத்துவ சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடிபாடுகளில் உயிர்தப்பியவர்களை மீட்கும் முயற்சியில் மீட்பாளர்கள் ஈடுபட்டு வந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசா நகரில் உள்ள எல்லைகள் அற்ற மருத்துவர் அமைப்பின் சிகிச்சை நிலையம் ஒன்றுக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 33 வயதான உடல் சிகிச்சை நிபுணர் பாதி அல் வதியா மற்றும் மூன்று சிறுவர்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.

காசாவில் எந்த இடமும் பாதுகாப்பானதாக இல்லை என்று குறிப்பிட்டிருக்கும் மேற்படி பிரான்ஸைச் சேர்ந்த தொண்டு அமைப்பு, ‘இஸ்ரேலியப் படைகள் தொடர்ச்சியாக சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உயிர்காக்கும் மனிதாபிமான உதவிகளை நாம் வழங்குவதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கி வருகிறது’ என்று தெரிவித்தது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதலைத் தொடர்ந்து வெடித்த காசா போரில் இதுவரை 37,718 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்கள் குறுகிய காசா பகுதியை சின்னாபின்னமாக்கியுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்கா ஆதரவான சர்வதேச போர் நிறுத்த முயற்சிகளும் தோல்வி கண்டு வருகின்றன. எட்டப்படும் எந்த ஒரு உடன்படிக்கையும் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஹமாஸ் உறுதியாக இருப்பதோடு தற்காலிக போர் நிறுத்தத்திற்கே இணங்குவதாகக் குறிப்பிடும் இஸ்ரேல் ஹமாஸை ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று கூறி வருகிறது.

இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் வடக்கு காசாவில் உணவுப் பற்றாக்குறை மோசமடைந்திருப்பதோடு ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 7 தொடக்கம் இதுவரை ஊட்டச்சத்து குறைபாட்டால் குறைந்து 30 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘இங்கே மாவு மற்றும் பொதியிடப்பட்ட உணவுகள் மாத்திரமே இருக்கின்றன. மரக்கறிகள், இறைச்சி மற்றும் பால் எதுவும் இல்லை. எனது இடையில் நான் 25 கிலோ குறைந்துவிட்டேன்’ என்று காசா நகரில் தனது குடும்பத்துடன் வசிக்கும் அபூ முஸ்தபா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.

காசாவின் ஜபலியா அகதி முகாமின் உதவி விநியோகிக்கும் இடத்திற்கு முன்னால் பலர் வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதோடு அது அல் ஜசீரா செய்தி நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சொற்ப அளவான உணவுக்காக மூன்று மணி நேரத்திற்கு மேல் காத்திருப்பதாக வரிசையில் இருக்கும் குடியிருப்பாளர்கள் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த உணவு வீட்டில் காத்திருக்கும் 15 பேருக்கும் போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘வடக்கு காசாவில் சந்திக்கும் வேதனைகள் மன்னிக்க முடியாதவை’ என்று அந்த வரிசையில் காத்திருக்கும் மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

‘1948 போர் தொடக்கம் இவ்வாறான ஒரு பஞ்சத்தை சந்தித்ததில்லை. இந்த சாதாரணமான (உதவி) திட்டங்கள் கூட இல்லாவிட்டால் பட்டினியால் நாம் உயிரிழப்போம்’ என்று அவர் கூறினார்.

இதேவேளை இஸ்ரேலின் லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதல் அதிகரித்திருக்கும் சூழலில் அது முழு அளவில் போராக வெடிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான மற்றொரு போர் மத்திய கிழக்கில் பயங்கர விளைவுகளை ஏற்படுத்துவதுடன் இலகுவாக பிராந்திய போர் ஒன்றாக மாறிவிடும்’ என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின், அமெரிக்கா சென்றிருக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்டிடம் தெரிவித்துள்ளார்.

‘பதற்றம் அதிகரிப்பதை தடுப்பதற்கு இராஜதந்திரமே சிறந்த வழி’ என்றும் ஒஸ்டின் குறிப்பிட்டுள்ளார்.

எல்லை பதற்றத்தை இராஜதந்திர வழி ஒன்றில் தீர்ப்பது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட அமெரிக்க அதிகாரிகள் கூறி வருவதோடு அனைத்து சாத்தியமாக நிலைகளுக்கும் இஸ்ரேல் தயாராக உள்ளது என்று கல்லன்ட் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 





காசாவில் பாடசாலை, வீடுகள் மீது இஸ்ரேல் சரமாரித் தாக்குதல்: 40 பலஸ்தீனர்கள் பலி

ஹமாஸ் தலைவரின் சகோதரியும் உயிரிழப்பு

June 26, 2024 9:49 am 

காசாவில் பாடசாலைகள், வீடுகள் மற்றும் மருத்துமனைக்கு ஆண்டிய பகுதியில் இஸ்ரேல் நேற்றும் நடத்திய கடுமையான தாக்குதல்களில் சுமார் 40 பலஸ்தீனர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு காசாவில் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வரும் சனநெரிசல் மிக்க அல் ஷட்டி அகதி முகாம் மற்றும் ஷெஜையா பகுதியில் உள்ள ஹனியே மற்றும் சமிலி குடும்பங்களின் வீடுகள் மீது நேற்றுக் காலை இடம்பெற்ற தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

காசா நகரின் ஷெஜையாவில் பட்டினி நெருக்கடி அண்மைய வாரங்களில் தீவிரம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காசா நகரில் இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் இரு பாடசாலைகள் மீதும் இஸ்ரேல் நேற்று குண்டு வீசியது. இதில் நான்கு சிறுவர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டது.

மேலும் இஸ்ரேலிய தாக்குதலில் அழிக்கப்பட்டிருக்கும் அல் ஷிபா மருத்துவமனை மற்றும் யார்மூக் வீதிக்கு அருகிலும் இஸ்ரேல் கடும் வான் தாக்குதல்களை நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அல் ஷட்டி அகதி முகாமில் இடம்பெற்ற தாக்குதலில் கட்டாரை தளமாகக் கொண்டு செயற்படும் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியேவின் சகோதரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

‘ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியேவின் சகோதரி சஹ்ர் ஹனியே உட்பட இந்தத் தாக்குதலில் 10 பேர் உயர் தியாகம் செய்துள்ளனர்’ என்று காசா சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசல் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

பல உடல்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் அவைகளை மீட்பதற்கு தம்மிடம் பொருத்தமான உபகரணங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இஸ்ரேல் அனைத்து சர்வதேச சட்டங்கள், மனித நெறிகள் மற்றும் பெறுமானங்களையும் மீறி அப்பாவி பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்து அவர்களுக்கு எதிராக மிகக் கொடூரமான படுகொலைகளை செய்து வருகிறது என்பதை இந்தத் தாக்குதல்கள் காட்டுகின்றன’ என்று ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில் மத்திய காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனியேவின் மூன்று மகன்கள் மற்றும் நான்கு பேரக் குழுந்தைகள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் தமது குடும்பத்தில் சுமார் 60 உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அப்போது ஹனியே கூறியிருந்தார்.

தெற்கு காசாவில் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரில் தொடர்ந்து மோதல் நீடிப்பதோடு இஸ்ரேலிய டாங்கிகள் அந்த நகரின் மேற்குப் பக்கமாக மேலும் முன்னேறியதாக அங்குள்ள குடியிருப்பாளர்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எட்டு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் போரில் 37,600க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் போர் நிறுத்த முயற்சிகளும் தொடர்ந்து தோல்வி கண்டு வருகின்றன.   நன்றி தினகரன் 





ஜூலியன் அசாஞ்ச் விடுதலை

June 26, 2024 8:00 am 

அமெரிக்க நிர்வாகத்துடன் உடன்பாடு ஒன்றை எட்டிய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டனில் ஐந்து ஆண்டுகள் சிறை அனுபவித்த நிலையில் விடுதலை பெற்றுள்ளார். இதன்மூலம் அவரது பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் முடிவுக்கு வரவுள்ளது.

இராணுவ ரகசியங்களை அப்பலப்படுத்திய குற்றச்சாட்டில் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிராக போராடி வந்த அசாஞ்ச் லண்டனில் உள்ள சிறையில் இருந்து பிணையில் விடுதலை பெற்றதாக விக்கிலீக்ஸ் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தகவல்களை பெற்றது மற்றும் அம்பலப்படுத்திய சதி மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் 52 வயதான அசாஞ்ச் லண்டனில் இருந்து பாங்கொக் பயணித்ததோடு தொடர்ந்து அமெரிக்க ஆட்புல பகுதியான வடக்கு மரியானா தீவுகளின் தலைநகர் சாய்ப்பானுக்கு செல்லவுள்ளார்.

அங்கு அவர் இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதோடு அவர் ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் பிரிட்டனில் சிறை அனுபவித்ததற்கு இணையாக ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உடன்படிக்கையின்படி அவர் அவுஸ்திரேலியா திரும்பவுள்ளார்.

2010 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்தி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய அசாஞ்சை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க அரசு அறிவித்தது.

இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றில் சிக்கிய அசாஞ்ச் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்கு லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் அடைக்கலம் பெற்றிருந்தார். எனினும் அவருக்கான அடைக்கலத்தை ஈக்வடோர் வாபஸ் பெற்றதை அடுத்து 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





No comments: