இலங்கைச் செய்திகள்

 மறைந்த பவதாரணிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு

2023: அந்நியச் செலாவணி வருவாயாக 14.94 பில்லியன் அமெரிக்க டொலர்

இலங்கைக்கு IMF மீண்டும் அங்கீகாரம்

நாவற்குழியில் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி

யாழில் ஈரநிலத்திற்கான இயற்கை நடைபயணம்


மறைந்த பவதாரணிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு

January 30, 2024 10:52 am 

இசைஞானி இளையராஜாவின் புதல்வி மறைந்த பவதாரணிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு கொழும்பு 7, சுதர்ஷி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை நடைபெற்றது.

இலங்கை தமிழ் கலைஞர்கள் மன்றம் ஏற்பாட்டில் கலைஞர்கள் மன்றத் தலைவர் சுருதி பிரபா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. நிலுக்ஷி வீரசிங்கம் தீப விளக்கை ஏற்றி அஞ்சலி செலத்தியதுடன் வருகை தந்திருந்த கலைஞர்கள் அனைவரும் மறைந்த பவதாரணியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இரங்கல் உரைகளை கலைஞர்கள் மன்றத் தலைவர் சுருதி பிரபா, சுதர்ஷி மண்டப தலைவர் சமன்பிரிய மாரசிங்க, இசையமைப்பாளர் கருப்பையாபிள்ளை பிரபாகரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் சீதாராமன், ஊடகவியலாளர் சியாவுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் நிகழ்த்தினர்.   நன்றி தினகரன் 

2023: அந்நியச் செலாவணி வருவாயாக 14.94 பில்லியன் அமெரிக்க டொலர்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை அறிவிப்பு

January 30, 2024 7:30 am 

நாட்டுக்குள் அந்நிய செலாவணியை கொண்டு வரும் அரசின் வேலைத்திட்டத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்குவதன் மூலம் 2023 இல், 4,75,000 கோடி ரூபாவை (14.94 பில்லியன் அமெரிக்க டொலர்) ஏற்றுமதி வருவாயாக இலங்கை பெற்றுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மதிப்பிடப்பட்ட சேவை ஏற்றுமதி உட்பட இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் இதுவாகுமென்றும் அச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 3,76,830 கோடி ரூபாய் (11.85 பில்லியன் அமெரிக்க டொலர்) என்றும் மற்றும் மதிப்பிடப்பட்ட சேவை ஏற்றுமதி வருவாய் 97,944 கோடி ரூபாய் (3.08 பில்லியன் அமெரிக்க டொலர்) எனவும் இலங்கை அபிவிருத்தி ஏற்றுமதி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், இது கடந்த ஆண்டு 2022 இல் பதிவான 14.99 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 0.39 வீத வீழ்ச்சியைக் காட்டுகிறது, ஆனால், சேவை ஏற்றுமதியின் மதிப்பிடப்பட்ட வளர்ச்சி சுமார் 63 சதவீதமாக உள்ளதாகவும் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, 2023 டிசம்பரில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 2022 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 11.25 சதவீதத்தால் 947.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது, இது, 2023 நவம்பரில் பதிவான எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 5.16 சதவீதம் குறைவு. எவ்வாறாயினும், டிசம்பர் 2023 இல், ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதிகள் நேர்மறையான அறிகுறியைக் காட்டியுள்ளன, இது ஆண்டின் மிக உயர்ந்த மதிப்பைப் பதிவு செய்தது. மேலும் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் சேவை ஏற்றுமதியின் மதிப்பிடப்பட்ட மதிப்பு 3,080.9 மில்லியன் அமெரிக்க டொலராகும். ஒப்பிடும்போது இது, 63.1 சதவீதம் ஆகும். 2022 இன் தொடர்புடைய காலகட்டத்துக்கு அதிகரித்துள்ளது ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் மதிப்பிடப்பட்ட சேவைகள் ஏற்றுமதி தகவல் தொழில்நுட்பம்/வணிக செயல்முறை முகாமைத்துவம் (ICT/BPM), கட்டுமானம், நிதிச் சேவைகள், போக்குவரத்து மற்றும் தளபாடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதென, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.    நன்றி தினகரன் 

இலங்கைக்கு IMF மீண்டும் அங்கீகாரம்

January 29, 2024 7:45 am

பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுத்தல் மற்றும் நிலையான அபிவிருத்தியை உருவாக்குவதற்காக முக்கியமான வரைபை (Growth Diagnostic Framework, (GDF) வெளியிட்டுள்ள முதலாவது ஆசிய நாடாக, இலங்கை திகழ்ந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் நிலையான அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கும் குறிப்பிடத்தக்கபடியான வளர்ச்சியை கண்டறிதல் கட்டமைப்பை (GDF) வெளியிட்ட முதல் ஆசிய நாடாக இலங்கை மாறியுள்ளதென்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இக்கட்டமைப்பானது, பொருளாதாரக் கட்டுப்பாடுகளை முறையாகப் பகுப்பாய்வு செய்ய உதவும் ஒரு விரிவான கருவியாகும்.

இந்தத் தடைகளை மிகவும் திறம்பட நீக்கி , வளர்ச்சியைத் தூண்டும் கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில் அரசாங்கத்துக்கு உதவுவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் சட்டத் துறையின் துணைப் பிரிவுத் தலைவர் Joel Turkewitz, கட்டமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “இது சவால்களை அடையாளம் காண்பது மட்டுமல்ல, இலங்கையின் தனித்துவமான பொருளாதார நிலப்பரப்புடன் எதிரொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட உத்திகளை உருவாக்குவதுமாகும்,” என்று அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகளான பீட்டர் ப்ரூவர் மற்றும் ஜோயல் டர்ர்க்விட்ஸ் ஆகியோருடன் அட்வகேட்டா தலைவர் முர்தாசா ஜாஃபர்ஜியும் கலந்து கொண்ட அட்வகேட்டா ஸ்டுடியோவின் அண்மைய தொடரில் (ஜனவரி 21) இந்த விடயம் முக்கியப்படுத்தப்பட்டது. முக்கியமான பொருளாதாரப் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதில் இலங்கையின் முன்முயற்சி அணுகுமுறையை இந்த அட்வகேட்டா கலந்துரையாடல் விளக்கியது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர், சீர்திருத்தம் மற்றும் அபிவிருத்திக்கான நாட்டின் அர்ப்பணிப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். IMF பிரதிநிதிகள் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.   நன்றி தினகரன் 
நாவற்குழியில் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி

January 29, 2024 5:52 am 

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நாவற்குழியில் சனிக்கிழமை (27.01.2024) இடம் பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நாவற்குழி முத்தமிழ் சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் கனடா இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ந. கேதீஸ்வரசிவம், செ. கிருஸ்ணகோபால், கு. கல்யாணசுந்தரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டிருந்தார்கள்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் புகட்டி, அவர்களிடையே சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக, அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்கேற்பாளர்களாக்கும் நோக்குடன் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டத்தைக் கிராமங்கள் தோறும் முன்னெடுத்து வருகிறது. இதன் தொடராகவே நாவற்குழியில் இந்நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அதிக எண்ணிக்கையான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் கனடா ரொறன்ரோவின் மனிதநேயக்குரல் அமைப்பின் அனுசரணையுடன் சூழல் விழிப்புணர்வு அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 


யாழில் ஈரநிலத்திற்கான இயற்கை நடைபயணம்

January 29, 2024 5:55 am 

சர்வதேச ஈரநில தினம் எதிர்வரும் 02ஆம் திகதி கொண்டாப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு எதிர் காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகமும், சிறகுகள் அமையமும் இணைந்து பாடசாலை மாணவருக்கான களப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர் ம.சசிகரனின் தலைமையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற கள பயணத்தின் போது, செம்மணி பிரதேசத்தில் அமைந்துள்ள ஈரநிலப் பிரதேசத்தினுள் மாணவர் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்கள் ஈரநிலத்தில் வாழும் சிற்றுயிர்கள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என்பவற்றை அவதானிக்க புலமை மிக்க வளவாளர்களால் வழிகாட்டல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இங்கு மாணவருக்கு ஈரநிலங்களின் முக்கியத்துவம், ஈரநிலங்கள் பாதுகாக்கப்படலில் ஒவ்வொரு தனி மனிதனதும் பங்களிப்பு என்பனவும் எடுத்துக் கூறப்பட்டது.

இவ் ஈரநிலத்திற்கான இயற்கை நடைபயணத்தில் மாணவர்கள் மட்டுமன்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வயது வேறுபாடின்றி மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றியதையும் அவதானிக்க முடிந்தது. யாழ். விசேட நிருபர்   நன்றி தினகரன் 
No comments: