“திருவாசகத்துக்கு உருகாதார்
ஒரு வாசகத்துக்கும் உருகார்"
என்னும் வாக்குக்கேற்ப, மணிவாசகர் தில்லையிலே “திருக்கோத்தும்பி” ஐ அருளிச் செய்தார்.
“பூ ஏறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ”
அரச வண்டே!
பூ ஏறு கோனும் - தாமரை மலரில் ஏறி அமர்ந்துள்ள பிரமனும், புரந்தரனும் - இந்திரனும், பொற்பு அமைந்த - அழகு அமைந்த, நா ஏறு செல்வியும் - பிரமனது நாவில் தங்கிய கலைமகளும், நாரணனும் - திருமாலும், நான்மறையும் - நான்கு வேதங்களும், மாவேறு சோதியும் - பெருமை மிகுந்த ஒளி வடிவினனாகிய உருத்திரனும், வானவரும் - மற்றுமுள்ள தேவர்களும், தாம் அறியா - தாம் அறியாவொண்ணாத, சே ஏறு சேவடிக்கே - இடப வாகனத்தில் ஏறுகின்ற சிவபெருமானுடைய
திருவடிக் கண்ணே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.
என்ற பொருட்படும் அந்தப் பாடலோடு தொடரும் “திருகோத்தும்பி”
ஐத் தன் திருவாசக இசைப் பாடல்களில் பயன்படுத்திய போது தன் மகள் பவதாரிணியை இணைத்துப் பாடவைத்திருக்கிறார்.
இசைஞானி இளையராஜாவின் பக்தி இசை இலக்கியங்களான “அம்மா பாமாலை”, ரமண மாலை (ஆராவமுதே) ஆகியவற்றில் தன் செல்வமகள் பவதாரிணிக்கும் பாடல்களைப் பகிர்ந்தளித்து வழங்கியவர் தன் ஆன்மிக இசைப் பயணத்தில் கூடவே வைத்திருந்தார்.
முறையே தன் திருவாசக இசைப் பணியில் சரியாக இருபது வருடங்களுக்கு முன், சிவனோடு ஐக்கியம் கொள்ள வைக்கும் பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாட வைத்தன் பொருளை பவதாரிணியின் இன்மையோடு பொருத்திப் பார்த்து உணர்வு வசப்பட்ட நிலையில் இருக்கின்றேன்.
“தாயான இறைவன்” எனும் ஈசன் திருவடிகே அழைத்துப் போகும் அந்தப் பாடல் பவதாரிணியின் ஆன்ம ஈடத்துக்குப் போய்ச் சேரட்டும்.
(அறிவுச் சமூகம் - இசை ஆய்வு நடுவகம் ஒருங்கிணைப்பில் தமிழிசைத் தென்றல் பவதாரிணி நினைவேந்தலில் நான் பகிர்ந்த அஞ்சலிப் பகிர்வின் ஒரு பகுதி இது)
கானா பிரபா
ஒளிப்படம் நன்றி : மு.உதயா
No comments:
Post a Comment