இலங்கை Sunday Observer பத்திரிகையின் முன்னாள் பிரதம
ஆசிரியரும், பிரபல எழுத்தாளருமான எச். எல். டி. மகிந்தபால கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி கொழும்பில் மறைந்துவிட்டார் என்ற செய்தியை மெல்பனில் வதியும் இலக்கிய நண்பர் எழுத்தாளர் நொயல் நடேசன் தெரிவித்தார்.
எனக்கு மகிந்தபாலவை 1995 களில்
அறிமுகப்படுத்தியவரும் நொயல் நடேசன்தான்.
அக்காலப்பகுதியில் நடேசன் உதயம் என்ற
இருமொழி ( தமிழ் – ஆங்கிலம் ) பத்திரிகையை நடத்தி வந்தார்.
உதயம் நடத்திய சில கருத்தரங்குகளிலும்
மகிந்தபால உரையாற்றினார்.
1970 களிலேயே இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா விக்ரோரியா
மாநிலத்தில் மெல்பனுக்கு தமது துணைவியார் ரஞ்சியுடன் புலம்பெயர்ந்து வந்தவர். ரஞ்சி தமிழ்ப் பெண்மணியாவார். அவரை மகிந்தபால காதலித்து மணம் முடித்தவர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. எனினும், ஒருவரை ஒருவர் குழந்தையாக நேசித்து இணைபிரியாமல் இங்கே சுமார் அரைநூற்றாண்டு காலம் வாழ்ந்தனர்.
தங்கள் இறுதிக்காலத்தில் தாயகம் சென்று வாழ
விரும்பினர். மகிந்தபாலவின் அன்புத் துணைவியார் ரஞ்சி, கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம்
கொழும்பில் மறைந்துவிட்டார்.
அதன்பின்னர் உறவினர்களின் துணையுடன் வாழ்ந்த
மகிந்தபால தனது 92 வயதில் மறைந்திருக்கிறார்.
வலதுசாரி சிந்தனைகொண்டிருந்த மகிந்தபால,
அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னரும், ஊடகத்துறையில் தன்னை மேலும்
வளர்த்துக்கொள்வதற்காக இங்கிருக்கும்
பல்கலைக்கழகத்தில் இணைந்து படித்தார். இறுதிவரையில் தொடர்ந்தும் அரசியல்
பத்தி எழுத்துக்களை ஆங்கில பத்திரிகைகளிலும் இணைய இதழ்களிலும் எழுதினார். அவுஸ்திரேலிய
அரச வானொலி ஊடகங்களிலும் உரையாற்றியிருக்கும் மகிந்தபால, மெல்பனில் பிரபலமான The Age பத்திரிகையிலும் எழுதி வந்திருப்பவர்.
Colombo Telegraph இணைய இதழிலும் அரசியல், சமூக விமர்சனக்கட்டுரைகள் பலவற்றை
எழுதினார்.
இவரது தொடக்க கால கவிதை இங்கிலாந்து
ஊடகங்களிலும் வெளி வந்திருக்கின்றன.
இவரால் விமர்சிக்கப்படாத இலங்கை அரசியல் தலைவர்கள் எவருமிலர். உலக அரசியல் குறித்தும் விமர்சனக்கட்டுரைகள் எழுதியிருப்பவர்.
மகிந்தபால, விக்ரோரியா மாநிலத்தில் இயங்கும் (Society for Peace Unity and Human Rights for Sri Lanka - SPUR ) என்ற அமைப்பிலும் முக்கிய அங்கம் வகித்தவர். இவரது ஆலோசனைகளை இந்த அமைப்பு எப்பொழுதும் கவனத்தில் கொண்டிருந்தது.
இங்கு வாழும் தமிழ்த்தேசிய உணர்வாளர்களின் பார்வையில்
குறிப்பிட்ட அமைப்பு கடும்போக்கானது. அதனால், மகிந்தபால விமர்சனங்களுக்கும்
உள்ளாக்கப்பட்டவர்.
எனினும் தனது கருத்துக்களுக்கு எதிர்வினைகள்
வரும்போதெல்லாம் சிரித்துக்கொண்டே கடந்து செல்லும் இயல்பினைக்கொண்டிருந்தார்.
அவரது முகத்தில் எப்போதும் மந்திரப்புன்னகை
தவழும். பழகுவதற்கு எளிமையானவராகவும் இருந்தமையால் எனது நண்பர்கள் வட்டத்திலும்
இணைந்திருந்தார்.
பேராசிரியர் கைலாசபதி, ஏ.ஜே.கனகரட்னா
பற்றியெல்லாம் அவ்வப்போது என்னுடன் அவர் கலந்துரையாடுவார். இவர்கள் பற்றி எழுதப்பட்ட ஆங்கில நூல்களையும்
என்னிடமிருந்து படிக்க எடுத்துச்சென்றிருக்கிறார்.
நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலை மெல்பனில்
வதியும் எழுத்தாளர் நல்லைக்குமரன் குமாரசாமி ஆங்கிலத்தில் Butterfly
Lake என்ற
பெயரில் மொழிபெயர்த்தபோது, அதனை அழகாக செம்மைப்படுத்தியவர் மகிந்தபால.
எனதும் சில ஆக்கங்களை அவர் ஆங்கிலத்தில்
செம்மைப்படுத்தித் தந்திருக்கிறார்.
எப்பொழுதும் தேடல் மனப்பான்மையுடன் மற்றவர்களுடன் கலந்துரையாடி தரவுகளை திரட்டி எழுதும்
மகிந்தபால, ஒரு தடவை எனது வாழ்க்கையையும் திசை திருப்புவதற்கு முயன்றார்.
சமகாலத்தில் இலங்கை அரசியல் பொதுவெளியில்
கடும் விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் இலக்காகியிருக்கும் ஒரு அமைச்சர்,
மெல்பனுக்கு வந்தவிடத்தில் ஒரு விபத்தினால் படுகாயமடைந்து மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்தார். அக்காலப்பகுதியில்,
அந்த அமைச்சர் இலங்கையில் ஊடகத்துறைக்கு பொறுப்பாகவிருந்தவர்.
அரச சார்பு ஊடகத்தின் தமிழ்ப்பிரிவுக்கு
ஒருவர் தேவை என்று அந்த அமைச்சர் மகிந்தபாலவிடம் கேட்டதும், இவர் என்னை அவருக்கு
அறிமுகப்படுத்தி, அதற்கான விண்ணப்பத்தையும் தானே தயார் செய்து அந்த அமைச்சரிடம்
கையளித்தார்.
இலங்கை அரசியல் நிலைமைகள் அடிக்கடி மாறும்
என்பதை நன்கு தெரிந்திருந்தமையால், அந்தப் பதவியை நான் மறுத்தேன்.
அதனால், சற்று ஏமாற்றமடைந்த நண்பர்
மகிந்தபாலவிடம், அவர் 1970 களில் ஏன் இலங்கையை விட்டு புலம்பெயர்ந்தார் என்பதை
நினைவுபடுத்தினேன்.
குறிப்பிட்ட அந்த ஆண்டு நடைபெற்ற
பொதுத்தேர்தலில் வெற்றியீட்டிய ஶ்ரீலங்கா
சுதந்திரக்கட்சி, கம்யூனிஸ்ட், சமசமாஜ கட்சிகளின்
கூட்டரசாங்கம் பதவிக்கு வந்தது.
அதனையடுத்து, ஏரிக்கரை பத்திரிகை நிறுவனத்திற்கு முன்பாக பாரிய
ஆர்ப்பாட்டம் நடந்தது. ஐக்கிய
தேசியக்கட்சியின் ஆதரவு கொண்டிருந்த அந்த நிறுவனம், அதன் பின்னர் அரசுடைமையானது.
அதற்குப்பிறகு பதவிக்கு வரும் அரசுகளின் முழுக்கட்டுப்பாட்டில் இன்று வரையில்
இயங்கி வருகிறது.
அன்று 1970 இல் அங்கே நேர்ந்த
நெருக்கடியினாலேயே தாயகத்தை விட்டு வெளியேறியவர்தான் மகிந்தபால.
ஊடக சுதந்திரத்திற்காக குரல்
கொடுத்துவந்திருப்பவர், என்னை அந்த
அமைச்சரிடம் பரிந்துரைத்தமை வியப்பானதுதான்.
எனது மறுப்பின் பின்னரும் என்னுடன்
தொடர்ந்து உள்ளன்புடன் உறவாடியவர்.
தமிழ் அபிமானியும் மொழிபெயர்ப்பாளரும் சிங்கள இலக்கியவாதியுமான மடுள்கிரியே விஜேரட்ண மெல்பனுக்கு வருகை தந்தபோது, அவர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கும் மகிந்தபால
அவர்கள்தான் தலைமை தாங்கினார்.
தனது தொன்னூறு வயதிலும் எழுதிக்கொண்டே
இருந்தார். தனக்கு வரும் மின்னஞ்சல்களுக்கும் தவறாமல் பதில் எழுதினார்.
முன்னர் இலங்கையிலிருந்த காலப்பகுதியில்
உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்திலும் தலைவராக பதவி வகித்தவர்.
அண்மையில் கொழும்பில் இச்சங்கம் நடத்திய
விழாவில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
தான் நேசித்த தாயகத்திலிருந்து நெருக்கடி
காலத்தில் வெளியேறி, அவுஸ்திரேலியா புகலிட
வாசியாக வாழ்ந்த மகிந்தபால, மீண்டும்
தாயகம் திரும்பி, அந்த மண்ணிலேயே நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார்.
அன்னாரின் மறைவு குறித்து ஆழ்ந்த
அனுதாபங்களைத் தெரிவுக்கும் அவரது
ஊடகத்துறை நண்பர்களிடத்தில் எனது துயரங்களையும் பகிர்ந்துகொள்கின்றேன்.
--0--
No comments:
Post a Comment