தமிழ் திரைவானில் ரசிகர்களின் கவனத்தை கவரும் வண்ணம்
இயங்கிய நிறுவனம் கமால் பிரதர்ஸ். 1957ல் சிவாஜி, பத்மினி நடிப்பில் , கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் இவர்கள் தயாரித்த புதையல் படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று கொண்டது. தொடர்ந்து இவர்கள் தயாரித்த தெய்வப் பிறவி படமும் வெற்றிப் படமானது. ஆனால் மூன்றாவது படத் தயாரிப்பின் போது இந்தக் கூட்டணியில் விரிசல் உருவானது. சிவாஜியின் சொந்தப் படமான குங்குமம் படத்தை சரியான முறையில் எடுக்கவில்லை என்று கிருஷ்ணன் பஞ்சு மீது சிவாஜிக்கு மன வருத்தம் ஏற்பட்டதால் அவர்கள் இணைந்து பணியாற்றுவது தடைப்பட்டது. அதே சமயம் தெய்வப் பிறவியை ஏவி எம்முடன் கூட்டாக ஹிந்தியில் தயாரித்த
கமால் பிரதர்ஸ் , அப் படத்தின் தோல்வியை அடுத்து தங்களின் அடுத்த படத்தை தனியாக எடுக்கத் தீர்மானித்தது. இந்த நிலையில் தங்கள் அடுத்த படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் எடுக்கவிருந்த கமல் பிரதர்ஸ் காமாலுதீன் , சிவாஜிக்கும், கிருஷ்ணன் பஞ்சுக்கும் இடையில் ஆன பிரிவினால் வேறு நடிகரை கதாநாயகனாக போட்டு படம் தயாரிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்.
அந்த வகையில் அதே கிருஷ்ணன் பஞ்சு டைரக்ட்ஷனில் அவர்கள் தயாரித்த படம்தான் வாழ்க்கை வாழ்வதற்கே . சும்மா சொல்லக் கூடாது வாழ்க்கையை பாசிட்டிவாக எடுக்க வேண்டும் என்பது போல் படத்துக்கு வாழ்க்கை வாழ்வதற்கே என்று என்று பேர் வைத்ததை பாராட்டியே ஆக வேண்டும்.
சிவாஜி இல்லை என்றவுடன் அவர் இடத்துக்கு ஜெமினி வந்தார். பத்மினிக்கு பதில் சரோஜாதேவி. இவர்கள் இருவருடன் சாரதா, கே ஏ தங்கவேலு, டி எஸ் முத்தையா, அசோகன், எம் வி ராஜம்மா, எஸ் ராமராவ் சுந்தரிபாய், , ஜி . சகுந்தலா, சாக்ரடீஸ் தங்கராஜ் ,கே . மாலதி ஜெமினி பாலு ஆகியோரும் நடித்தார்கள். எல்லாப் படங்களிலும் ஓரிரு காட்சிகளில் வந்து விட்டு போகும் ஜெமினி பாலுவுக்கு இந்தப் படத்தில் அழுத்தமான பாத்திரம் வழங்கப்பட்டிருந்தது.
ஜெமினி பட நிறுவனத்திலும், ஆனந்த விகடனில் நீண்ட காலம் பணியாற்றியவர் கொத்தமங்கலம் சுப்பு. தில்லானா மோகனாம்பாள் நாவலை தமிழ் உலகுக்கு தந்தவர். இப் படத்தின் கதையை அவர்தான் எழுதினார். ஆனால் கதை மிக சாதாரணமானது. சிறு வயதில் ஒன்றாய் வளரும் கந்தனும், வள்ளியும் இடையில் பிரிக்கப்படுகிறார்கள் வள்ளி பணக்காரியாக வளர , கந்தன் குதிரை லாயத்தில் வளர்கிறான். இளம் வயதானவுடன் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். சிறு வயதில் கைகளில் அவர்கள் குத்திக் கொண்ட பச்சை அவர்களை அடையாளம் காட்டுகிறது. காதலும் நிறைவேறுகிறது. இதற்கு இடையில் சில பல பிரச்னைகள்.
ஜெமினி ஹீரோவான போதும் துடிப்பை காணவில்லை. படம் முழுதும் அவரின் பாத்திரம் வலுவின்றி காணப்பட்டது. சரோஜாதேவிக்கு விதவிதமாக உடை அணிந்து காட்சியளிக்கும் வேடம். போதாததற்கு அழகு ராணியாகவும் வருகிறார். ஆனாலும் சோக கட்சியில் நடிப்பை வழங்க தவறவில்லை. சாரதா இருந்தும் நடிக்க வாய்ப்பில்லை. அதனால் தானோ என்னோவோ மலையாள பக்கம் போய் விட்டார். ஆனாலும் தங்கவேலு இருக்கிறார். அதிலும் இரட்டை வேடம். அவரின் நகைச்சுவையும் டபுல்தான் ! படத்தின் ஓட்டத்துக்கு பெரிதும் உதவுவது சுந்தரிபாய்தான். கொத்தமங்கலம் சுப்புவின் மனைவியான இவர் கணவர் எழுதிய கதைக்கு தன் நடிப்பின் மூலம் உரமிடுகிறார்.
படத்துக்கு மெல்லிசை மன்னர்களின் இசை உறுதுணையாக
அமைந்தது. அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன் என்ற இலக்கிய நயமான பாடலும், திருக்குற்றால குறவஞ்சி பாடலான ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம் என்ற பாடலை ஒட்டி ஆடக் காண்பது காவிரி வெள்ளம் பாடலும் கண்ணதாசன் வரிகளில் கருத்தோடு ஒலித்தன. இது தவிர அவர் எழுதிய ஆற்றோரம் மணல் எடுத்து, அழகான மலையாளாம், நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன பாடலும் ரசமாக இருந்தது.
அமைந்தது. அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன் என்ற இலக்கிய நயமான பாடலும், திருக்குற்றால குறவஞ்சி பாடலான ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம் என்ற பாடலை ஒட்டி ஆடக் காண்பது காவிரி வெள்ளம் பாடலும் கண்ணதாசன் வரிகளில் கருத்தோடு ஒலித்தன. இது தவிர அவர் எழுதிய ஆற்றோரம் மணல் எடுத்து, அழகான மலையாளாம், நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன பாடலும் ரசமாக இருந்தது.
படத்தை எஸ் . மாருதிராவ் ஒளிப்பதிவு செய்ய ஆர் . விட்டல் படத்தொகுப்பை கையாண்டார். அன்றைய கால கட்டத்தில் எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி என்று மூவருக்கும் பொருத்தமான ஜோடியாக சரோஜாதேவி திகழ்ந்தார். அந்த வகையில் இந்தப் படமும் ஜெமினி , சரோஜாதேவி ஜோடியாக நடித்து , கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்து சுமாராக ஓடியது!
No comments:
Post a Comment