உலகச் செய்திகள்

 வேடமிட்ட இஸ்ரேலிய படையால் 3 பலஸ்தீனர்கள் சுட்டுக்கொலை

பெப். 08 தேர்தல்: இம்ரான் கானுக்கு மேலும் 14 வருட சிறை

காசாவில் போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் துருப்புகளை வடக்கிற்கு நகர்த்தும் இஸ்ரேல்

பொதுத் தேர்தல் ஒரு வாரத்தில்; இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை

மோனாலிசா ஓவியம் மீது ஆர்வலர்கள் ‘சூப்’ வீச்சு


வேடமிட்ட இஸ்ரேலிய படையால் 3 பலஸ்தீனர்கள் சுட்டுக்கொலை

January 31, 2024 10:19 am 

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்குள் பலஸ்தீனர்கள் போன்று வேடமிட்டு புகுந்த இஸ்ரேலிய படையினர் இரு சகோதரர்கள் உட்பட மூவரை சுட்டுக்கொன்றனர்.

ஜெனின் மருத்துமனைக்குள் ஒளிந்திருந்த மூன்று ஹமாஸ் உறுப்பினர்களே சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. நேற்றுக் காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வேடமிட்டு வந்த இஸ்ரேலிய துருப்புகள் துப்பாக்கியால் குறிபார்த்தபடி ஊடுருவுவது சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

இதில் ஜெனின் மயானத்தில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பசல் அல் கசாவி, அவரது சகோதரர் முஹமது மற்றும் மற்றுமொரு ஆடவரான ஜலம்னே ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் இஸ்ரேலிய படை தொடர்ந்து சுற்றிவளைப்புகளை நடத்தி வருவதோடு கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி தொடக்கம் அங்கு குறைந்தது 378 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 





பெப். 08 தேர்தல்: இம்ரான் கானுக்கு மேலும் 14 வருட சிறை

- அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் சிறைத் தண்டனை

January 31, 2024 11:41 am 

– அரச பரிசுகளை விற்றதாக மற்றுமொரு குற்றச்சாட்டு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 வருட சிறைத் தண்டனைன விதிக்கப்பட்டுள்ளது.

அவரது மனைவியான புஷ்ரா பீபிக்கும் 14 வருட சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்ரான் கான் பிரதமராக இருந்த வேளையில் பெற்ற அரச பரிசுப் பொருட்களை தங்கள் தனிப்பட்ட இலாபத்திற்காக விற்றதாக அல்லது வைத்திருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த பரிசுகளில் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரிடமிருந்து கிடைத்த ஒரு நகைத் தொகுதியொன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு 14 வருட சிறைத்தண்டனையுடன், சுமார் 1.5 பில்லியன் பாகிஸ்தான் ரூபா (5.3 மில்லியன் டொலர்) அபராதமும் செலுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இம்ரான் கான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, கடந்த 2018 இல் புஷ்ரா பீபியை திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே 3 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, 2023 ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட இம்ரான் கானுக்கு, அரச இரகசியங்களை கசிய விட்ட குற்றச்சாட்டில் 10 வருடன சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இம்ரான் கான், அரசியல் காரணங்களுக்காக தம் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றார்.

எதிர்வரும் பெப்ரவரி 08ஆம் திகதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், குறித்த வழக்குகள் யாவும் போலியானவை என, மிக அவசர அவசரமாக வற்புறுத்தலின் பேரில் விசாரணைகள் நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, இம்ரான் கானும் அவரது PTI கட்சியினரும் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், இந்த தண்டனை மூலம், இம்ரான் கான் அரச பதவி ஒன்றை வகிப்பதிலிருந்து 10 வருடங்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றையதினம் வழங்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து, இம்ரான் கானின் X (ட்விட்டர்) கணக்கில் வெளியிடப்பட்ட பதிவில், “பெப்ரவரி 08 ஆம் திகதி உங்கள் வாக்கு மூலம் ஒவ்வொரு அநீதிக்கும் பழிவாங்குங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவரான இம்ரான் கானும் அவரது கட்சியும் எந்த அளவிற்கு ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என்பதன் அடிப்படையில், எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள வாக்கெடுப்பின் நம்பகத்தன்மை குறித்து பலரும் ஏற்கனவே கேள்வி எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினகரன் 





காசாவில் போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் துருப்புகளை வடக்கிற்கு நகர்த்தும் இஸ்ரேல்

January 31, 2024 8:12 am 

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான புதிய உடன்படிக்கையை நோக்கி சர்வதேச மத்தியஸ்தர்கள் முன்னேறி வரும் நிலையில் இஸ்ரேலிய இராணுவம் தனது படைகளின் ஒரு பகுதியை காசாவில் இருந்து பதற்றம் நீடிக்கும் லெபனான் எல்லைக்கு நகர்த்துவதற்கு தயாராகி வருகிறது.

ஏற்கனவே காசா மக்கள் பெரும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நிலையில், பலஸ்தீன அகதி நிறுவனத்திற்கான நிதியை நிறுத்திய நன்கொடை நாடுகளை ஐ.நா தலைவர் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.இந்த அகதி நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் இஸ்ரேல் மீதான ஒக்டோபர் 7 தாக்குதலுடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டதை அடுத்தே அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட சில நாடுகள் அந்த நிறுவனத்திற்கான நிதியை இடைநிறுத்தியது.

பிராந்தியத்தில் போர் மேகம் சூழ்ந்திருக்கும் நெருக்கடிக்கு மத்தியில் ஜோர்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் மூன்று அமெரிக்கத் துருப்புகள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா சூளுரைத்துள்ளது.

இஸ்ரேலிய தரைப்படை ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் சொந்த ஊரான கான் யூனிஸில் தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதோடு, அங்குள்ள அல் அமல் மருத்துவமனையைச் சூழ பீரங்கி தாக்குதல்கள் உக்கிரமடைந்திருப்பதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சின்வாரின் அலுவலகம், இராணுவத் தளங்கள் மற்றும் ரொக்கெட் தயாரிப்பு வசதி ஒன்றில் துருப்புகள் தேடுதலில் ஈடுபட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

முற்றுகையில் உள்ள காசா மீது இஸ்ரேலிய இராணுவம் கடந்த திங்கட்கிழமை இரவு தொடக்கம் நடத்திய தாக்குதல்களில் 128 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.இதில் கிழக்கு ரபாவில் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நெருக்கமாக உள்ள குடியிருப்பு வீடு ஒன்றின் மீது நேற்று முன்தினம் இரவு வான் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனால் வீடு தரைமட்டமாக்கப்பட்டு பலரும் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை படிப்படியாக விரிவுபடுத்தப்படுவது பற்றி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம் காசா நகரின் சப்ரா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானம் ஒன்று வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் சுமார் நான்கு மாதங்களாக நீடிக்கும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 26,751 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 65,636 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவத்தது.

இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், காசாவில் உள்ள சில படைப்பிரிவுகள் வடக்குக்கு நகர்த்தப்படுவதாகவும் அங்கு வரவிருப்பதற்கு தயாராவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் அவர் ஹிஸ்புல்லா போராளிகளுடன் தினசரி மோதல் நீடிக்கும் இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையையே குறிப்பிட்டிருந்தார்.

போர் நிறுத்தப் பேச்சு

காசாவில் புதிய போர் நிறுத்த முயற்சியாக அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. தலைவர் வில்லியம் பர்ன்் கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல், எகிப்து மற்றும் கட்டார் அதிகாரிகளை பாரிஸ் நகரில் சந்தித்திருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி, இந்த முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த முன்மொழிவை ஹமாஸிடம் கொண்டு சென்று அவர்களை சாதகமான மற்றும் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் ஈடுபடுத்தவும் இந்தத் தரப்புகள் முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன், உடன்படிக்கை ஒன்று தொடர்பில் நம்பிக்கை தெரிவித்தார்.

“மிக முக்கிய, ஆக்கபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உண்மையான எதிர்பார்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று பாரிஸ் பேச்சுவார்த்தையை அடுத்து பிளிங்கன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதில் காசாவில் பிடிக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதுடன் முற்றுகையில் உள்ள காசாவுக்கு உதவிகள் செல்வது உட்பட நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கு இட்டுச் செல்லும் கட்டமைப்பு தொடர்பில் பாரிஸில் விவாதிக்கப்பட்டதாக கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பு தற்காலிகமானதன்றி முழுமையான மற்றும் விரிவான போர் நிறுத்தம் ஒன்றையே விரும்புவதாக அந்த அமைப்பின் மூத்த அதிகாரி டஹர் அல் நூநூ தெரிவித்துள்ளார். எனினும் காட்டாரின் முன்மொழிவுகள் ஹமாஸிடம் கிடைத்திருப்பது தொடர்பில் உறுதி செய்யப்படவில்லை.

பாரிஸ் பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் குறிப்பிட்டபோதும் இன்னும் குறிப்பிடத்தக்க இடைவெளிகள் இருப்பதாகவும் தரப்புகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 




பொதுத் தேர்தல் ஒரு வாரத்தில்; இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை

January 31, 2024 7:04 am 

அரச இரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு பாதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட இம்ரான் கான், ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் மூன்று ஆண்டு சிறை அனுபவித்து வருகிறார். எனினும் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அரசியல் நோக்கம் கொண்டவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் கான் போட்டியிடுவது தடுக்கப்பட்ட பாகிஸ்தான் பொதுத் தேர்தல் ஒரு வாரத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இரகசியங்கள் சட்டத்தின் கீழ் அவர் குற்றங்காணப்பட்டுள்ளார்.

இம்ரான் கானின் தஹ்ரீக்கே இன்சாப் கட்சியின் உப தலைவரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஷாஹ் மஹ்மூத் குரேஷிக்கும் சிறப்பு நீதிமன்றத்தால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் அனுப்பிய இரகசிய இராஜதந்திர கடித தொடர்பை கசியவிட்டது தொடர்பிலேயே இம்ரான் கான் மீது குற்றங்காணப்பட்டது.

2022 மார்ச் 27 அன்று ஒரு பேரணியில் தன்னை பதவியில் இருந்து நீக்க அமெரிக்க அரசு பாகிஸ்தான் அரசுக்கு ஒரு ரகசிய தகவல் அனுப்பியதாகவும், அது வொஷிங்டன் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து வந்ததாகவும் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்து, அந்த சதி தொடர்பான கடிதம் தன்னிடம் உள்ளதாக கூட்டத்தினரை பார்த்து ஒரு கடிதத்தையும் காட்டினார்.

ஆனால், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அரசுகள் இம்ரான் கானின் குற்றச்சாட்டை மறுத்தன.

தொடர்ந்து 2022 ஏப்ரல் 10 அன்று கூட்டணி கட்சிகள் இம்ரான் கான் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விளைவாக அவர் பதவி இழந்தார்.

இது தொடர்பான வழக்கு கடந்த சில மாதங்களாக சிறைக்குள் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை ஒரு கேலிக்கூத்து என்ற குறிப்பிட்ட இம்ரான் கானின் தஹ்ரீக்கே இன்சாப் கட்சி இதற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தது.

நன்றி தினகரன் 





மோனாலிசா ஓவியம் மீது ஆர்வலர்கள் ‘சூப்’ வீச்சு

January 30, 2024 9:42 am 

ஓவியர் லியோனார்டோ டாவின்சியின் பிரபல மோனாலிசா ஓவியத்தின் மீது இரு பெண் ஆர்வலர்கள் சூப்பைத் தெளித்துள்ளனர். ஆனால் ஓவியம், குண்டு கூடப் புக முடியாத கனத்த கண்ணாடிச் சட்டத்தால் மூடப்பட்டிருப்பதால் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மோனாலிசா ஓவியம் உலகின் மிகச் சிறந்த ஓவியங்களுள் ஒன்றாகும்.

அந்தச் சம்பவம் பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் நேற்று முன்தினம் (28) நடந்தது.

“எது முக்கியம்? கலையா? ஆரோக்கியமான, நிலைத்தன்மையுடன் உணவுப் பொருட்களை உண்பதற்கான உரிமையா?” என்று இரு பெண்களும் ஓவியத்துக்கு முன் நின்று கேள்வி எழுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. பிரான்ஸ் விவசாயிகள் வேலையிடத்தில் உயிரிழப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக பிரான்ஸ் விவசாயிகள் கூடுதல் சம்பளம், வரிக்கழிவு கேட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர். விதிமுறைகளைத் தளர்த்தும்படியும் அவர்கள் கோருகின்றனர்.

அதை எதிரொலிக்கப் பெண்கள் இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.   நன்றி தினகரன் 





No comments: