தமிழ் ஊடகத்துறையில் மூன்று தசாப்த காலத்தை நிறைவுசெய்யும் தேவகௌரி சுரேன் ! முருகபூபதி


இலங்கை, இந்தியா உட்பட  கீழைத்தேய - மேலைத்தேய நாடுகளில்  ஊடகவியலாளர்கள் மிகுந்த கவனத்தை பெற்றிருப்பவர்கள்.

அவர்களுக்கு எழுத்துத்தான் வாழ்வளித்தது. அதேசமயம் பலரது உயிரையும் அந்த எழுத்து வாங்கியிருக்கிறது ! ஊடகத்துறையில் காணாமல் போனவர்கள்  ,  கொல்லப்பட்டவர்கள், அச்சுறுத்தப்பட்டவர்கள்  பற்றியெல்லாம் நாம் அறிந்திருக்கின்றோம்.

சிலர் நாடு கடத்தப்பட்டனர். வேறும் சிலர் நாடுவிட்டு நாடு ஓடியிருக்கின்றனர்.

இராணுவத் தளபதியாகவும் அரசியல் தலைவராகவுமிருந்த


நெப்போலியன் போனபார்ட் ( 1769 – 1821 ) ஒரு தடவை,                            “   வீரனிடமிருக்கும் போர் வாளைவிட எழுத்தாளனிடமிருக்கும் பேனா கூர்மையானது “  எனச்சொன்னாராம்.

எனினும், நெப்போலியன் எழுத்தாளனோ, ஊடகவியலாளனோ அல்ல!

அன்றும், இன்றும் அரசுகளும் அரசுத் தலைவர்களும் பயப்படும் தொழில்,  ஊடகத்துறை சார்ந்ததாகத்தான் இருக்கிறது !   

அதனால்தான், காலத்துக்கு காலம் ஊடகத்துறை தணிக்கைக்கும் உட்படுகிறது. அதற்கு எதிராக சட்டங்களும் இயற்றப்படுகின்றன.

எமது தமிழ் சமூகத்தில்  பெரும்பாலான பெற்றோர்கள்,  தங்கள் பிள்ளைகள் படித்து முன்னேறி,  மருத்துவராக, பொறியியலாளராக, கணக்காளராக, சட்டத்தரணியாக வரவேண்டுமென  விரும்புவதுதான்  வழக்கம்.  இந்தத் துறைகளில் தமது பிள்ளைகள் தேர்ச்சி பெறாவிட்டாலும்,  குறைந்த பட்சம் பாடசாலை ஆசிரியராக வந்தாலும் போதும் எனக்கருதுபவர்கள்.  அத்துடன் தங்கள் பிள்ளைகளுக்கு அரசாங்க வேலைதான் கிடைக்கவேண்டும் எனவும் கனவு காண்பார்கள்.

  “ கோழி மேய்ச்சாலும் கோர்னமேந்திலதான்  மேய்க்கவேண்டும்  “ என்ற வசனமும் ஒருகாலத்தில் பேசுபொருளாகவிருந்தது.

அதற்கும் காரணம் இருந்தது. அரச உத்தியோகத்தில்  இறுதிக்காலத்தில் ஓய்வுதியமும் கிடைக்கும்.  ரயில் பயணங்களில் இலவச அனுமதிச்சீட்டும் கிடைக்கும்.

இந்தப்பின்னணிக்கதைகளுடன் இந்த முதல் சந்திப்பு தொடரில் நான் குறிப்பிட விரும்பும் பத்திரிகையாளர்தான் தேவகௌரி சுரேன்.

இவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின்   தமிழ் சிறப்பு பட்டதாரி. பேராசிரியர்கள் கா. சிவத்தம்பி, அ. சண்முகதாஸ், எம். ஏ. நுஃமான், சித்திரலேகா மௌனகுரு ஆகியோரின் மாணவி. 1991 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தை விட்டு இவர் வெளியேறியதும் தேர்ந்தெடுத்துக்கொண்ட தொழில் ஊடகத்துறை சார்ந்திருந்தது.

குறிப்பிட்ட காலப்பகுதியில்  இலங்கை போர் மேகங்களினால் சூழ்ந்திருந்தது.

தேவகௌரி  தமது பட்டத்திற்கான ஆய்வாக எடுத்துக்கொண்டது, என்னையும் ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய மல்லிகை மாத இதழைத்தான்.  தேவகௌரியும், இவருடன் பல்கலைக்கழகத்தில் படித்த சூரியகுமாரி பஞ்சநாதனும் வீரகேசரியில் பயிற்சிப் பத்திரிகையாளர்களாக இணைந்தனர்.


இச்செய்திகள் என்னை வந்தடைந்தபோது நான் அவுஸ்திரேலியாவிலிருந்தேன். மல்லிகையும் வீரகேசரியும் எனது வாழ்விலும் இரண்டறக் கலந்திருப்பவை.

1997 ஆம் ஆண்டு நான்  இலங்கை வந்த சமயத்தில் இலக்கிய நண்பர் ( அமரர் ) நீர்வைபொன்னையன் கொழும்பில் பெண்கள் ஆய்வு நிலையத்தில் ஒரு கருத்தரங்கிற்கு அழைத்திருந்தார்.  அக்கருத்தரங்கிற்கு தேவகௌரியும் வந்திருந்தார். நீர்கொழும்பில் ஏற்கனவே அறிமுகமாகியிருந்த சூரியகுமாரிதான் தேவகௌரியை அன்று எனக்கு அறிமுகப்படுத்தினார்.

பின்னாளில் இவர்கள் இருவரும் எமது குடும்பத்திலும் இணைந்துகொண்டனர் என்பது வேறு கதை.

தேவகௌரி, வீரகேசரியிலிருந்து விலகி,  தினக்குரல் பத்திரிகையின் வாரப்பதிப்பின் ஆசிரியராகவிருந்த சமயத்தில் என்னையும் பேட்டி கண்டு எழுதினார்.  எனது கங்கை மகள் சிறுகதையையும் வெளியிட்டார்.

1971 ஏப்ரில் கிளர்ச்சியின்போது, கதிர்காமத்தில் இராணுவ   அதிகாரி 


ஒருவனால் பாலியல் வன்முறைக்கு இலக்காகி கொல்லப்பட்ட பிரேமாவதி மனம்பேரியின் வாழ்க்கையை சித்திரிக்கும் கதைதான் கங்கை மகள்.

அக்கதையை துணிந்து வெளியிட்டவர் தேவகௌரி.  இவர் பெண்கள் தொடர்பான கருத்தரங்குகள் பலவற்றிலும் உரையாற்றியவர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா பெற்றவர்.

2004 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தலைநகர் கன்பராவில் நாம் நடத்திய நான்காவது தமிழ் எழுத்தாளர் விழாவிலும் சிட்னியிலும் மெல்பனிலும் நடந்த இலக்கிய சந்திப்புகளிலும் உரையாற்றினார்.

தினக்குரலிலிருந்து விலகியதும், சுவீடன் நாட்டின் போஜோ என்ற ஊடகவியற் கற்கைக்கான நிறுவனத்தினதும், அந்நாட்டின்  பல்கலைக்கழகம் ஒன்றினதும்  அனுசரணையுடன் கொழும்பில் நடத்தப்பட்ட இதழியல்   கல்லூரியில் விரிவுரையாளரானார்.

ஊடகத்துறையிலேயே தனது பணியை தொடர்ந்துவரும் தேவகௌரி,  கலை, இலக்கிய ஆர்வலருமாவார்.  

“ சிந்தனைச் சுதந்திரத்திற்கான வழியாக  ஊடகத்துறை


இருந்ததாலேயே, அதனைத் தான்  தொழிலாக ஏற்றுக்கொண்டதாக “ ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கும் தேவகௌரி,  மேலும் இவ்வாறு சொல்கிறார்:  “ அதை கற்பிக்கும்போதும் மற்றவா்களிடையே சிந்தனையை விரிவுபடுத்தி ஆளுமையில் பல பாரிமாணங்களை ஏற்படுத்த முடியும். அதை ஊடகங்களுடாக வெளிப்படுத்தவும் முடியும். இந்த வழியை நான் மற்றவர்களுக்கு முறைமைப்படுத்தப்பட்ட கல்வியினுாடாக வழங்கும்போது தொழில் திருப்தி ஏற்படுகிறது.  “

 “ இலக்கியவாதிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையே நூலிழைதான்  வித்தியாசம்   “ என்று சொல்பவர்களும் இருக்கின்றனர்.

ஆனால், தேவகௌரி  இவ்வாறு சொல்லியிருக்கிறார்:

                       “ ஊடகவியலாளா்கள் அனைவரும் இலக்கியவாதிகளல்லா். அதே போல் இலக்கியவாதிகளும் ஊடகவியலாளராக செயற்படுகின்றனா் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால்,  இலக்கிய வாதிகளில் சிலா் ஊடகவியலாளா்களாக இணைந்து செயலாற்றுகின்றனா். ஊடகவியல் என்பது உண்மையை துல்லியமாக பக்கச் சார்பின்றி முன்வைத்தலாகும்.

இதற்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தம் இல்லை.  இலக்கியவாதிகளின் சமூக ஆர்வம், மொழி ஆளுமை ஊடகவியல் துறைக்குப் பெரிதும் கைகொடுக்கும். ஆரம்பத்தில்,  எழுதத் தெரிந்த இலக்கியவாதிகள்தான் ஊடகத்துறையில் இணைந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியா் கைலாசபதி ஒரு சிறந்த இலக்கியவாதி , விமர்சகா்,  ஆய்வாளர். அவா் தினகரன் ஆசிரியராக இருந்தவா்.  “ என்று தனது கருத்துக்கு தேவகௌரி வலுச்சேர்த்திருப்பவர்.

சவால்களைச் சந்திக்கவேண்டியதுதான் ஊடகத்துறை என்பதை  நன்கு தெரிந்தும்,  மூன்று தசாப்தங்களுக்கு முன்பே, அந்த போர் நெருக்கடி காலத்திலேயே தனக்குப்பிடித்த தொழில் துறையை தேர்ந்தெடுத்திருக்கும் தேவகௌரியின் மனவலிமையை பாராட்டவேண்டும்.

இவர் எழுதிய  எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள்  ஆய்வு நூலின் பதிப்புரையில், மல்லிகை ஜீவா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

 “ இந்த ஆய்வு நூலை வெளியிடுவதில் எனக்கொரு மனநிறைவு. புதிய தலைமுறை விமர்சகர் ஒருவரைச் சுவைஞர்களுக்கு அறிமுகப்படுத்திவைக்க முடிகின்றதே என்ற மகிழ்ச்சி. அதற்கு – அவரது பட்டப்படிப்பு ஆய்வுக்கு – எனது அசுர உழைப்பால் மலர்ந்து வெளிவந்துகொண்டிருந்த மல்லிகை தளமாகவும் – களமாகவும் பயன்பட்டுள்ளது என்பதை நினைக்கையில் மனசில் ஒரு பெருமித உணர்வு, நிறைவு நிரம்பிய மனச்சந்தோஷம்  “

132 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூலுக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி முன்னுரை வழங்கியிருக்கிறார்.

நூலகம் ஆவணகத்தில் இந்நூலை தரவிறக்கம் செய்தும் படிக்கலாம்.

தேவகௌரி தொடர்ந்தும்  புதிய தலைமுறை ஊடகவியலாளர்களை உருவாக்கவேண்டும் என வாழ்த்துகின்றோம்.    

---0--- 

No comments: