எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 93 மலர்ந்துள்ள 2024 புத்தாண்டில் புதிய தலைமுறை படைப்பாளிகள் உருவாகுவார்கள் ! முருகபூபதி


நான் இலக்கியப்பிரதிகளும், செய்திகளும் எழுதத் தொடங்கிய காலத்தில், வெள்ளீய அச்செழுத்துக்களையே பத்திரிகைகளும்  , இதழ் ஊடகங்களும்  பயன்படுத்தின.

நாமும் எமது எழுத்துப்பிரதிகளை பேனையால் எழுதி, தபாலில் அனுப்பி, அவை வெளிவரும் வரையில் காத்திருப்போம்.  நாட்கள், வாரங்கள், மாதங்கள் என அதற்கான காத்திருப்பு நீடிக்கும்.

கணினியின் வருகைக்குப் பின்னர், நிலைமை தலைகீழாகிவிட்டதா..? தலைமேலாகிவிட்டதா… ?  என்பது புரியாத ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை சென்றிருந்தபோது எனது பேத்தி ஒருத்திக்கு ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்துவைக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டபோது,  அந்தப்பேத்தி, அவள் குடும்பத்தினர் மேற்கொண்ட ஏற்பாடுகளை ( குத்துவிளக்கு - அரிசி – தாம்பாளம் )  புறக்கணித்துவிட்டு, ஒரு ஐபேர்டை எடுத்து வந்து, அதில் அ, ஆ, இ, சொல்லித்தருமாறு கேட்டுக்கொண்டாள்.

குழந்தைகள் சமகாலத்தில் ஐபேர்டில்தான் நேரத்தை செலவிடுகின்றனர்.

மெல்பனில் வதியும் எனது இரண்டாவது மகளின்  பெண் குழந்தை தற்போது ஐந்தாம் தரத்தில் படிக்கிறாள். வயது பத்து.

அண்மையில் ஒரு நாள் என்னைப்  பேட்டிகண்டு  எழுதினாள்.  தான் ஆங்கிலத்தில் எழுதியதை வாசித்தும் காண்பித்தாள்.

எமது  இளமைப்பருவத்தில் இத்தகைய காட்சிகளை நாம் கண்டதேயில்லை.

அவளை உச்சிமோந்து வாழ்த்தினேன்.

எனது தொடக்க கால இலக்கியப்பிரதிகளும் வெள்ளீய எழுத்தினால் கோர்க்கப்பட்டே நூலுருப்பெற்றன.

காலப்போக்கில் இந்த நிலைமை முற்றாக மாறிவிட்டது.

சமகாலத்தில் தினமும் எங்காவது ஒரு தேசத்திலிருந்து புத்தகங்கள்  வெளிவந்துகொண்டேயிருக்கின்றன.  அச்சில் மட்டுமன்றி மின்னூல்களாகவும்  பலவற்றை பார்க்கின்றோம். தரவிறக்கம் செய்து படிக்கின்றோம்.

கடந்த 2019 ஆம் திகதி எங்கள் நீர்கொழும்பூரில் அச்சிடப்பட்டு வெளிவந்த இலங்கையில் பாரதி நூலின் இரண்டம் பதிப்பு தற்போது தமிழ்நாட்டின் புஸ்தகா பதிப்பகத்தினால் மின்னூலக வெளியாகியிருக்கிறது.

அதற்கான இணைப்பினை இத்துடன் தருகின்றேன்.  இந்த


இணைப்பினை அழுத்தி படிக்கலாம். அதற்கான கட்டணத்தையும் செலுத்தலாம்.

Pustaka: https://www.pustaka.co.in/home/ebook/tamil/ilangaiyil-bharathi

கைத்தொலைபேசியில் தொடுதிரை பாவனை அதிகரித்துவிட்டிருக்கும் சூழலில், அதன் அருகே வாயை வைத்து கட்டளை பிறப்பித்தவுடனேயே நாம் எதிர்பார்க்கும் பணியையும் மேற்கொள்ள முடிகிறது.


இந்த வியத்தகு  மாற்றங்களுக்கு மத்தியில் உலகெங்கும் நடக்கும் புத்தகத்  திருவிழாக்களையும் கண்காட்சிகளையும் அவதானிக்கின்றோம்.

இந்திய தமிழ் சினிமாவில் தோன்றிய நடிகர்கள் தத்தமக்கென அரசியல் கட்சிகளை தொடக்கியிருப்பதுபோன்று, எழுத்தாளர்களும் தத்தமக்கென பதிப்பகங்களை தொடங்கிவிட்டனர்.

அரசியலில் வாரிசு, சினிமாவில் வாரிசு போன்று இலக்கியத்திலும் வாரிசுகள் உருவாகிவிட்டனர். 

இதுபற்றி எனது இரண்டாவது மகள் வீட்டில்


பேசிக்கொண்டிருந்தபோதுதான், அவளது புதல்வியான எனது பேத்தி, தான் எழுதிய எனது நேர்காணல் தொடர்பான ஆங்கில ஆக்கத்தை எனக்கு   காண்பித்தாள்.

எங்கள் குடும்பத்திலும் ஒரு இலக்கிய வாரிசு உருவாகின்றது என்ற பெருமிதத்துடன் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் கே.சி தமிழ் மன்றம் நடத்திய வருடாந்த தமிழர் திருநாளில்  (தைத் திருநாள் கொண்டாட்டம் ) கலந்துகொண்டேன்.


மெல்பனில் கடந்த சில வருடங்களாக இயங்கிவரும் வாசகர்வட்டம் இந்த விழாவில் புத்தகக்  கண்காட்சியையும், விற்பனையையும்,  கதைசொல்லும் நேரத்தையும் ஒழுங்கு செய்திருந்தது. அத்துடன் கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பான கண்காட்சியும் நடந்தது.

இதற்காகவே தமிழ்நாட்டிலிருந்து எழுத்தாளரும் சமூகச்செயற்பாட்டாளருமான முத்துக்கிருஷ்ணன் வருகை தந்து விளக்கமளித்தார்.

 

செல்வன்கள் அரண் கேதார சர்மா, திவா விவேகானந்தன் ஆகியோர்


 தாங்கள் எழுதிய கதைகளைச் சொன்னார்கள். தேர்ந்த வாசகர்கள் அசோக், கலாதேவி பாலசண்முகன், சாந்தி சிவக்குமார் ஆகியோர் முறையே ஜெயமோகன், அம்பை, பிரபஞ்சன் ஆகியோரின் சிறுகதைகளைப்பற்றி உரையாற்றினர்.

எழுத்தாளர்  “ ஜே. கே.  “ ஜெயக்குமாரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார்.

பொதுமக்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கினார்கள்.


சிறுவர் இலக்கியம் தொடர்பான புத்தகங்களிலும் பலருக்கு  தேடல் இருந்ததை அவதானிக்க முடிந்தது.  எம்மத்தியில் வதியும்  படைப்பிலக்கியவாதிகள்,  சிறுவர்  இலக்கியம் தொடர்பாகவும் தங்கள் கவனத்தை திசை திருப்பவேண்டும்.

கேசி தமிழ் மன்றம் வெளியிட்டுவரும் இளவேனில் இதழும் மூத்த – இளம் தலைமுறையினரின் ஆக்கங்களுடன் வெளிவந்துகொண்டிருக்கிறது.

இளவேனில் இதழ்களையும் இக்கண்காட்சியில் பெற்றுக்கொள்ள முடிந்தது.

குறிப்பிட்ட ஜனவரி 27 ஆம் திகதி, எங்கள் அவுஸ்திரேலியத் தமிழ்


இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு தலைவரும் ஓவியரும் படைப்பிலக்கியவாதியுமான கிறிஸ்டி நல்லரெத்தினத்தின் பிறந்த தினம். அவருக்கு இன்ப அதிர்ச்சியூட்டும் வகையில் கேக் வெட்டி அவரது பிறந்த தினத்தையும் கொண்டாடினோம்.

 

மொத்தத்தில் கேசி தமிழ் மன்றம் நடத்திவரும் வருடாந்த தைத்திருநாள் கொண்டாட்டம் வெறுமனே பொதுமக்கள் கூடிக்கலையும் களியாட்டமாக அமையாமல், சமூகப்பயன்பாட்டுடன் நடந்து வருகிறது.  குடும்ப ஒன்று கூடலாகவும் திகழ்ந்தது


கேசி தமிழ் மன்றம் கடந்த காலங்களில்  வாராந்தம்  மெய்நிகர் ஊடாக சில நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது.

சிறுகதை எழுதுவது எவ்வாறு? என்பது பற்றி நானும் சில வாரங்கள் பயிற்சிகளை சொல்லிக்கொடுத்தேன். சில மூத்த பிரஜைகள் அதன்பின்னர் தாம் எழுதிய படைப்புகளை எனக்கு அனுப்பினர். அவற்றை  செம்மைப்படுத்தி ஊடகங்களில் வெளிவருவதற்கு ஆவனசெய்தேன்.

நாம் எத்தனை புத்தகங்கள் எழுதினோம் ?  என்பதைவிட, எத்தனை வாசகர்களை, எத்தனை  புதிய எழுத்தாளர்களை உருவாக்கினோம் என்பதும் மிக மிக முக்கியம்.

மலர்ந்துள்ள 2024 ஆம் ஆண்டில் மேலும் பல புதிய படைப்பாளிகள் எம்மத்தியில் உருவாகுவார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.

( தொடரும் )No comments: