அரங்கில் தமிழ் அடையாளத்தை வலியுறுத்தும் கூத்துக்கலைஞரும் ஆய்வாளருமான “ பத்தண்ணா “ இளைய பத்மநாதன் ! முருகபூபதி


பம்பலப்பிட்டி ஶ்ரீ கதிரேசன் மண்டபம்.  கலா ரசிகர்கள் நிறைந்திருந்திருந்த அங்கே மேடையேறிய ஏகலைவன் கூத்தின் இறுதிக்காட்சி.   

 “ ஏழை மக்கள் எம்மை, வாழ விடா, வாழவிடா இந்த ஆளும் அரசர் ஓர் நாள்,  ஆளும் அரசர் ஓர் நாள் அழிந்துபோவார்.

ஆண்ட பரம்பரைகள்,  ஆண்ட பரம்பரைகள் பூண்டோடு ஓர் நாள் மாண்டு மடிந்து போகும். மாண்டு மடிந்துபோகும் மண்ணை விட்டே !  ஏழைகள் எழுச்சி பெற்று – ஓர் நாள் ஆள்வோரை அழித்தொழிப்பார், நிச்சயம் அழித்தொழிப்பார். 

அரங்கில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று உணர்ச்சிப்பெருக்கோடு கரகோஷம் எழுப்புகின்றனர்.

நான் அன்று பார்த்த கூத்து அரங்காற்றுகைதான்  ஏகலைவன். எழுதி ,


இயக்கியவர் இளைய பத்மநாதன் என்ற கலைஞர். 

குறிப்பிட்ட அரங்காற்றுகை 1980 களில் இடம்பெற்றதாக நினைவு.  வீரகேசரியில் பணி முடிந்து, நண்பர் தனபாலசிங்கத்துடன் அந்த மண்டபத்திற்கு விரைந்தேன்.

தோழர் சண்முகதாசனும் வந்திருந்தார். 

அரங்கம் நிறைந்த கலா ரசிகர்கள்.  இறுதிக்காட்சி உணர்ச்சிபூர்வமாக அமைந்திருந்தது.

ஏகலைவன்,  விரல் வெட்டப்பட்ட தனது கையையும் துரோணரையும் பார்க்கின்றான்.

அந்த அரங்காற்றுகை முடியும்போது இரவு ஒன்பது மணியுமாகிவிட்டது. நான் எங்கள் நீர்கொழும்பூருக்குச் செல்வதற்கு பஸ்ஸை பிடிக்கவேண்டும்.

ஏகலைவனின் இயக்குநர் பத்தண்ணாவை அன்று என்னால் சந்திக்க முடியாது போய்விட்டது.

எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தானே வாழ்க்கை.  பத்தண்ணாவை காலம் கடந்து, 1994 ஆம் ஆண்டின் பின்னர் அவுஸ்திரேலியா மெல்பனில் சந்திக்கின்றேன்.

அவ்வேளையில் அவர் நாடகக் கலைஞர் மாவை நித்தியானந்தன் மெல்பனில் ஆரம்பித்திருந்த பாரதி பள்ளியில் மாணவர்களுக்கு நாடகப்பயிற்சி வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார்.

இலங்கையில்  வடமராட்சிப்பிரதேசம்,  பல ஆற்றல் மிக்க கல்விமான்களையும் கலைஞர்களையும் படைப்பிலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் எங்கள் தேசத்திற்கு வழங்கியிருக்கிறது.

அறிஞர் கந்த முருகேசனார்,  கலைஞர் கிருஷ்ணாழ்வார், பேராசிரியர் கா. சிவத்தம்பி, எழுத்தாளர்கள் செ. கதிர்காமநாதன், ராஜஶ்ரீகாந்தன் ,  தெணியான் ஆகியோர் முதல் பல ஆளுமைகளை நாம் பட்டியலிடலாம். அந்த வரிசையில் நாம் வியந்து பார்க்கும் கலைஞர்தான் பத்தண்ணா என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும்  அண்ணாவியார் இளைய பத்மநாதன்.

1937 ஆம் ஆண்டு வடமராட்சி – நெல்லியடியில் பிறந்திருக்கும் அவர்,  கொழும்பில் எழுதுவினைஞராக பணியாற்றியவர்.

வடபுலத்தில் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியில் அங்கிருந்த கலைஞர்களினால் உருவாக்கப்பட்டிருந்த அம்பலத்தாடிகள் என்ற  கலைக்குழு,  கிராமங்கள் தோறும் அரங்காற்றுகை செய்த பிரபல்யமான  கந்தன் கருணையை மூத்த தலைமுறையினர் மறந்திருக்க மாட்டீர்கள். இதிலும் பத்தண்ணாவின் வகிபாகம் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏகலைவன் ரூபவாகினியிலும் ஒளிபரப்பாகியது.  அதனை கொட்டாஞ்சேனையில் தகவம் ராசையா மாஸ்டரின் இல்லத்திலிருந்து ஒரு நாள் இரவு,  அவரின் குடும்பத்தினர் மற்றும் பேராசிரியர் சண்முகதாஸ் – மனோன்மணி தம்பதியருடன் இருந்து பார்த்து ரசித்தேன்.


1983 கலவரத்தையடுத்து ஏதிலியாக தமிழகம் சென்றிருக்கும் பத்தண்ணா, அங்கும் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தி வந்திருப்பவர். தமிழ்நாட்டில் பல்கலை அரங்கத்தின் அரங்கக்குழுவுடன் இணைந்து, ஏகலைவன், ஒரு பயணத்தின் கதை, தீனிப்போர் முதலனவற்றை அரங்கேற்றினார்.

1994 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.  இங்கே மெல்பன் பாரதி பள்ளிக்கு எனது பிள்ளைகளை அழைத்துச்செல்லும் வேளைகளில் பத்தண்ணாவுடன் கலந்துரையாடி எனக்குத் தெரியாத பல விடயங்களை கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

பத்தண்ணா, ஏகலைவன் கூத்துக்காக முழுப்பாரதக் கதையையும் படித்தவர். அத்துடன் வில்லிபுத்தூர்  பாரதமும் படித்திருக்கிறார்.  ஆய்வுகளை மேற்கொண்டார். இவ்வாறு அவரது கடின உழைப்பில் உருவான ஏகலைவன் தொடர்பாகவே அவரை, முதல் முதலில் மெல்பனில் சந்தித்தபோது ஒரு நேர்காணலையும் எழுதினேன்.

நான் இலக்கியப்பிரவேசம் செய்து  25 ஆண்டுகள் பூர்த்தியான


காலப்பகுதி 1997 ஆம் ஆண்டில் வந்தது. அதனை எமது மூத்த படைப்பாளிகள், கலைஞர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வாக நடத்தினேன்.

பத்தண்ணா, கவிஞர் அம்பி, ஓவியர் கே. ரி. செல்வத்துரை, எஸ்.பொன்னுத்துரை ஆகியோர் அன்று பாராட்டப்பட்டனர்.  பேராசிரியர் ஆசி. கந்தராஜா தலைமையில் அந்த நிகழ்வு மெல்பன் வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் நடந்தது.

அன்று வெளியிடப்பட்ட நம்மவர் மலரில் பத்தண்ணாவுடனான நேர்காணலும் வெளியானது.

அதில் பத்தண்ணா சொன்ன கருத்தை கவனிக்கவும்:

 “ பிரபுக்களுக்கும் விவசாயி பாட்டாளிகளுக்கும் இடையே முரண்பாடு தோன்றலாம். ஆனால், வேடர்களுக்கும் அரசர்களுக்கும் இடையே என்ன முரண்பாடு? இது ஒரு விமர்சனம். வேடர்களுக்கு வேட்டையே தொழில். ஜீவாதராம். ஆனால், அரசர்களுக்கோ வேட்டை ஒரு பொழுதுபோக்கு. அங்கேதான் முரண்பாடு. அங்கேதான் நாடகத்தின் கருவே ஆரம்பிக்கின்றது. ஆளும் வர்க்கத்திற்கும் ஆளப்படும் வர்க்கத்திற்கும் உள்ள முரண்பாடு மட்டுமல்ல, ஆளும் வர்க்கத்துக்குள் உள்ள முரண்பாட்டையும் துரியோதனன் மூலம் நாடகம் பேசுகிறது. துரோணருக்கும் மனக்குழப்பம் ஏற்படுகிறது.  முன்பு அவர் ஒரு பரம ஏழை. இப்பொழுது அரச குரு. இப்பாத்திரப்படைப்பு, இந்தியாவில் பிராமணிய எதிர்ப்பாளர் மத்தியில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

 ஏகலைவனின் நண்பர்கள், முக்கியமாக தந்தை, யாவுமே அரசியல்
நிலைப்பாடுகள்தான். பாரதத்தில் அர்ஜுனனுக்குக் குருபக்தியை புகட்டவே ஏகலைவன் கதை வருகிறது. ஆனால், அதனைக் கூத்துவடிவில் மக்களிடம் கொண்டு சென்றபொழுது அரசியல் முன்னெடுக்கப்பட்டது. வர்க்கப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

பத்தண்ணா, அவுஸ்திரேலியாவிலும் தனது அரங்காற்றுகைகளை நிகழ்த்தியவர். இங்கே அவரது நெறியாள்கையில்  கவிஞர் அம்பியின் யாழ்பாடி, ஜெர்மன் நாடகாசிரியர் Bertolt Brecht இன் ஒரு பயணத்தின் கதை , ஆகியனவற்றையும் பார்த்திருக்கின்றேன்.

எமது அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் எழுத்தாளர் விழாக்களில்  நடந்த கருத்தரங்குகளிலும் உரையாற்றியவர்.

ஒருவிழாவில், பத்தண்ணாவின்   “ காத்தான் கூத்து  இசைக்கோலம்  “ விரிவுரைப்பாணியில் அறிமுகமானது.

பொதுவாகவே ஒருவர் தமது 60 வயதில் தனது பணிகளிலிருந்து
ஓய்வுபெற்றுவிடுவார். ஆனால், பத்தண்ணா அந்த வயதில் விக்ரோரியா பல்கலைக்கழகத்தில் பயின்று


சிறப்புப்பட்டதாரியானார் ( B. A. Hons – Performance Studies ) அத்துடன்  மொனாஷ் பல்கலைக்கழகத்தில் அரங்கக்கலைகளுக்காக  முதுகலைமானி பட்டத்தையும் பெற்றார்.

Skin is deep என்ற  தனிநபர் நாடகத்தையும் விக்ரோரியா பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் அரங்காற்றியவர்.நூல் வடிவில் வரவாகிய இவரது படைப்புகள்: ஏகலைவன், தீனிப்போர், மீண்டும் இராமாயணம் மீண்டும் பாரதம், தனு.

அரங்கின் புரிதலும் புரியாமையும் குறித்து பத்தண்ணா எழுதியிருக்கும் விரிவான ஆய்வு: அரங்கத்திறம் சிலப்பதிகாரம்.  அமுதவிழாவும் கண்டுவிட்ட எங்கள் பத்தண்ணா கொண்டாடப்படவேண்டிய ஆளுமை மிக்க கலைஞர்.

---0---

No comments: