“தலைமுறைவேறுபாடின்றி அனைவரையும் இணைத்து இயக்கும் எழுத்தூழியன் முருகபூபதி “ எழுத்தாளர் முருகபூபதிக்கு மெல்பனில் நடந்த பாராட்டுவிழாவில் நிகழ்த்தப்பட்ட தலைமையுரை - கிறிஸ்டி நல்லரெத்தினம்




எங்கள் மத்தியிலிருக்கும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளரும், தன்னார்வத் தொண்டருமான திரு. லெட்சுமணன் முருகபூபதிக்கு அறிமுகம் அவசியமில்லை.

1987 ஆம் ஆண்டு முதல் இவர் அவுஸ்திரேலியாக் கண்டத்தில் வாழ்ந்துவருகிறார். “உள்ளார்ந்த கலை, இலக்கிய, ஊடக ஆற்றல் மிக்கவர்கள் உலகின் எந்தத் திசைக்கு சென்று வாழநேரிட்டாலும், தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.“  இது நான் சொல்லும் கூற்று அல்ல.

எங்கள் முருகபூபதி, இந்த வாக்குமூலத்தை தொடர்ந்தும் தனது பதிவுகளில் எழுதி வந்திருப்பவர். இந்த வாக்குமூலத்தையே பின்பற்றுபவராக இவர் எங்கள் மத்தியில் தொடர்ந்தும் இயங்கி வந்திருக்கிறார். எழுத்தைத் தவிர வேறு தொழில் எதுவும் தெரியாமல், இந்த நாட்டுக்கு வந்திருக்கும் இவர், எழுத்தையும் கைவிடாமல் சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் இங்கே வந்த பின்னர் உருவாக்கிய இலங்கை மாணவர் கல்வி நிதியம் மற்றும் எமது தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்பன இற்றை வரையில் தங்கு தடையின்றி இயங்கி வருகின்றது.

எழுத்தாளர் முருகபூபதிக்கு ஒரு பாராட்டு விழாவை நடத்தவேண்டும்என்று எமது சங்கத்தின் செயற்குழுவில் வலியுறுத்தியவர் எழுத்தாளர் பாடும் மீன் ஶ்ரீகந்தராசா அவரது தலைமையில் நாம் ஒரு உபகுழுவை அமைத்து இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்வந்தோம்.

கனடாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் தமிழ்


இலக்கியத் தோட்டம் முருகபூபதிக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 04 ஆம் திகதி வாழ்நாள் சாதனையாளர் இயல்விருதினை வழங்கி கௌரவித்திருக்கிறது. அதன்பின்னர், கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி பிரான்ஸில், வென்மேரி அறக்கட்டளை நிறுவனம், முருகபூபதியின் தொடர்ச்சியான இலக்கியப்பணிக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி பாராட்டியிருக்கிறது.


முருகபூபதி, இதற்கு முன்னரும் பல இலக்கிய விருதுகளை பெற்றிருப்பவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனினும் சிலவற்றை தற்போது நான் அறிந்தவரையில் நினைவூட்ட விரும்புகின்றேன். இலங்கையில் தேசிய சாகித்திய விருதுகளை இரண்டு தடவைகள் பெற்றிருக்கும் முருகபூபதி, அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னர், மெல்பனில்

இயங்கும் இலங்கை தமிழ்ச்சங்கம், மெல்பன் தமிழ்ச்சங்கம், எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றம், அக்கினிக்குஞ்சு இணைய இதழ் ஆகியனவற்றின் பாராட்டு விருதுகளையும் பெற்றிருப்பவர். அத்துடன் 2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவுஸ்திரேலியா தினத்தின்போது டெறபின் மாநகர சபையினால் சிறந்த பிரஜைக்கான விருதினையும் அதன் பின்னர் 2011 இல் விக்ரோரியா மாநிலத்தின் பல்தேசிய கலாசார ஆணையத்தின் விருதினையும், 2022 இல் அவுஸ்திரேலியா AUS TAMIL TV வழங்கிய Tamil Linguistics விருதும் பெற்றிருக்கிறார்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம். இந்த தமிழ் இலக்கியத்தோட்டம் பற்றிய பூரண விபரங்களையும் நீங்கள் இந்த அமைப்பின் இணையத்தளத்தில் மேலும் தெரிந்துகொள்ளமுடியும். Tamil Literary Garden :  https://www.tamilliterarygarden.com

கனடாவை தளமாகக்கொண்டியங்கும் இந்நிறுவனத்தின் ஸ்தாபகர்


பிரபல எழுத்தாளர் . முத்துலிங்கம். இவரது ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட அறக்கட்டளை வருடந்தோறும் தமிழ் கலை, இலக்கியத்துறைகளில் சாதனைகள் புரிந்தவர்களை இனம் கண்டு, இயல்விருது வழங்கி வருகிறது. இதுவரையில், தமிழ்நாட்டில், சுந்தரராமசாமி, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், பேராசிரியர் .இரா.வேங்கடாசலபதி,  அம்பை, வெங்கட் சாமிநாதன், நாஞ்சில் நாடன், உட்பட பலருக்கும் இலங்கை எழுத்தாளர்கள் கே. கணேஷ், எஸ். பொன்னுத்துரை, மல்லிகை ஜீவா மற்றும் நாடகக்கலைஞர் தாஸீஸியஸ், ஆவணப்பதிவாளர் பத்மநாப ஐயர் ஆகியோருக்கும் இயல் விருது வழங்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான இயல்விருதினை எமது முருகபூபதி பெற்றிருக்கிறார். இவருடன் தமிழக பிரபல எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கும் இம்முறை இயல் விருது கிடைத்துள்ளது. முருகபூபதி, இந்த இயல்விருதினை கனடாவுக்கே சென்று பெற்று வந்திருப்பவர்.

வென்மேரி அறக்கட்டளை விருது இலங்கை வடமாகாணத்தில் வென்ஸிலாஸ்மேரி தம்பதியரின் குடும்பம் கலை, இலக்கியம், விஞ்ஞானம், விளையாட்டு, கல்வி, ஆவணப்படுத்தல் முதலான துறைகளில் ஈடுபட்டுழைத்தவர்களை தெரிவுசெய்து சாதனையாளர் விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த அமைப்பின் முதலாவது விருது விழா கடந்த 2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதற்கு பிரதம ஆலோசகராக விளங்கும் பேராசிரியர் சிவலிங்க ராஜா அவர்களின் தலைமையில் இயங்கும் ஒரு குழு நீண்ட நாட்களாக தேர்வுசெய்து பரிசீலித்து சாதனையாளர்களை பரிந்துரைக்கின்றது. இதன் பிரகாரம், கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களை தெரிவுசெய்து விருது வழங்கிய வென்மேரி அறக்கட்டளை, கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழர் புகலிட நாடுகளில் வசிப்பவர்களை தேர்வு செய்தது.

அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, நோர்வே முதலான நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இம்முறை விருது வழங்கி கௌரவித்திருக்கும் வென்மேரி அறக்கட்டளையின் நிறுவனர் திரு. வென்ஸிலாஸ் அநுரா.

இந்த அமைப்புகள் வெளியிட்டிருக்கும் சிறப்பு மலர்களில் மேலதிக விபரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். வென்மேரி அறக்கட்டளையின் விருது விழா மீண்டும் இந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கனடாவில் நடைபெறவிருப்பதாக அறிகின்றோம்.

முருகபூபதி இதுவரையில் சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு, பயண இலக்கியம், புனைவு சாராத பதிவுகள், சிறுவர் இலக்கியம் முதலான துறைகளில் முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சில நூல்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சில நூல்களை அமேசன் கிண்டிலிலும் தரவிறக்கம் செய்து படிக்க முடியும். இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் சில பல்கலைக்கழக மாணவர்கள் முருகபூபதியின் படைப்புகளிலிருந்து தமது B A – MPhil ஆய்வுகளையும் மேற்கொண்டிருக்கின்றனர்.

முருகபூபதியை இலங்கையில் மல்லிகை, ஞானம், படிகள், ஜெர்மனியில் மண் முதலான இலக்கிய இதழ்கள் அட்டைப்பட அதிதியாக கௌரவித்துள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி முருகபூபதிக்கென கடந்த ஆண்டு சிறப்பிதழும் வெளியிட்டுள்ளது.

முருகபூபதியின் நூல்களையும், அட்டைப்பட அதிதியாக கௌரவித்த இலக்கிய இதழ்களையும், முருகபூபதி தொகுத்திருக்கும் சில நூல்களையும் இங்கே இடம்பெறும் கண்காட்சியில் நீங்கள் பார்க்க முடியும். சில நூல்கள் அவரிடம் சொற்ப பிரதிகள்தான் இருக்கின்றன.

முருகபூபதி, என்னையும், அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் இணைத்துவிட்டவர். சுருக்கமாகச்சொல்வதாயின், தலைமுறைவேறுபாடின்றி அனைவரையும் இணைத்து இயக்கும் எழுத்தூழியன்தான் முருகபூபதி. அதற்கு அவர் சார்ந்திருக்கும் எமது சங்கமும் அவர் பல வருடங்களுக்கு முன்னர் உருவாக்கிய தன்னார்வத் தொண்டு நிறுவனம் இலங்கை மாணவர் கல்வி நிதியமும் சிறந்த சான்றுகள்!

 

 

 

No comments: