உலகச் செய்திகள்

 அமெரிக்காவுடன் வெளிப்படையாக முரண்பட்ட இஸ்ரேல் காசாவில் தொடர்ந்தும் குண்டு மழை

ஈரானில் பாகிஸ்தான் பதில் தாக்குதல்: பதற்றம் உச்சம்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் ட்ரம்ப் முன்னிலை

கிரேக்க கப்பலின் மீது ஹூத்திக்கள் தாக்குதல்

காசாவில் அடுத்த கட்ட போர் நடவடிக்கை குறித்து இஸ்ரேல் அறிவிப்பு; உயிரிழப்புகள் தொடர்கின்றன


அமெரிக்காவுடன் வெளிப்படையாக முரண்பட்ட இஸ்ரேல் காசாவில் தொடர்ந்தும் குண்டு மழை

January 20, 2024 8:14 am 

மத்திய கிழக்கு அமைதிக்கான ஒரே வழியாக அமெரிக்கா கருதும் பலஸ்தீன நாடு ஒன்றின் உருவாக்கத்திற்கு, இஸ்ரேல் வெளிப்படையாக எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் அது காசா பகுதி மீது நேற்றும் (19) பயங்கர தாக்குதல்களை நடத்தியது.

தெற்கு காசாவின் பிரதான நகரான கான் யூனிஸில் நேற்றுக் காலை துப்பாக்கிச் சூடுகள் மற்றும் வான் தாக்குதல்கள் இடம்பெற்றதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இங்கு பலஸ்தீன இஸ்லாமிய போராட்ட அமைப்பான ஹமாஸின் பல உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் இருப்பதாக இஸ்ரேல் கூறும் நிலையிலேயே அங்கு தாக்குதல்கள் உக்கிரம் அடைந்துள்ளன.

அல் அமல் மருத்துவமனைக்கு அருகில் கடுமையான பீரங்கி தாக்குதல்கள் இடம்பெற்றதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் கூறியுள்ள நிலையில், வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதல்களில் 77 பேர் கொல்லப்பட்டு பல டஜன் கணக்கானோர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு கூறியது.

காசா நகரில் உள்ள அல் ஷிபா மருத்துவமனைக்கு அருகில் குடியிருப்பு தொகுதி ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொலைத்தொடர்புகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்பட்டிருப்பதோடு வெளியுலகுக்கு அங்கிருந்து தகவல்களை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. காசாவில் தொடர்பாடல் முடக்கத்தில் மறைந்துகொண்டு இஸ்ரேல் 15 படுகொலை சம்பவங்களில் 172 பேரை கொன்றிருப்பதாக பலஸ்தீன வெளியுறவு அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.

இந்த இராணுவ நடவடிக்கையில் தமது கவட்டி படையணியின் துருப்புகள் தூர தெற்கு பகுதியை அடைந்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் போரினால் காசாவில் 2.4 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 90 வீதமானவர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிக நெரிசல் மிக்க தற்காலிக முகாம்களில் வசிக்கும் பலரும் உணவு, நீர், எரிபொருள் மற்றும் மருத்துவ பராமரிப்பை பெறுவதற்கு போராடி வருகின்றனர். பஞ்சம் மற்றும் நோய் பரவும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அவசர உதவிகளுக்கு ஐ.நா நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 24 ஹெபடைடிஸ் ஏ (கல்லீரல் அழற்சி) சம்பவங்கள் மற்றும் கல்லீரல் வைரஸ் தொற்று பரவலுடன் தொடர்புபட்ட ஆயிரக்கணக்கான மஞ்சள் காமாலை சம்பவங்கள் காசா பகுதியில் பதிவாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

“கிட்டத்தட்ட குடிநீர் இல்லாத, சுத்தமான கழிப்பறை அல்லது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க முடியாத மனிதாபிமானற்ற வாழ்க்கைச் சூழல்கள் ஹெபடைடிஸ் ஏ மேலும் பரவ வாய்ப்பு ஏற்படுத்துகிறது” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் சரமாரித் தாக்குதலில் 24,700க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு அவர்களில் 70 வீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.

ஹமாஸை முழுமையாக ஒழிப்பதற்கு சூளுரைத்திருக்கும் இஸ்ரேல், காசாவில் தொடர்ந்தும் பலஸ்தீன போராளிகளிடம் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

“முழுமையான வெற்றியை தவிர வேறு எதிலும் நாம் திருப்தி அடைய மாட்டோம்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை (18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். அந்த வெற்றிக்கு பல மாதங்கள் எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் எச்சரித்தார்.

முழு வெற்றி என்பது பயங்கரவாத தலைவர்களை ஒழிப்பது, ஹமாஸ் செயற்பாடுகள் மற்றும் இராணுவத் திறனை தகர்ப்பது, எமது பணயக்கைதிகள் வீடு திரும்புவது அதேபோன்று காசாவை இராணுவ மயமற்ற பகுதியாக மாற்றுவதை கொண்டதாக இருக்கும் என்றார் நெதன்யாகு.

பலஸ்தீன நாடு

காசாவில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைக்கு அதன் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா ஆதரவு அளித்து வரும் நிலையில், இரு தரப்பும் வெளிப்படையாக முரண்பாட ஆரம்பித்துள்ளன.

சுவிட்சர்லாந்தின் டவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பேசிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன், பலஸ்தீன நாடு ஒன்றுக்காக அழைப்பை விடுத்துள்ளார்.

எனினும் இதனை நெதன்யாகு திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

“ஜோர்தான் நதியின் மேற்காக உள்ள ஒட்டுமொத்த பகுதியின் பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். “இது அத்தியாவசியமான நிபந்தனை என்பதோடு இது (பலஸ்தீன) இறைமை என்ற யோசனைக்கு முரணானது” என்றும் கூறினார்.

சாத்தியமான பலஸ்தீன நாடு ஒன்றை உருவாக்குவது மற்றும் அங்கீகரிப்பது இஸ்ரேலுக்கான பாதுகாப்பை அடைவதற்கு அவசியமானது என்று அமெரிக்கா நம்புகிறது.

“இதனை நாம் வெளிப்படையாக மாறுபட்டு பார்க்கிறோம்” என்று நெதன்யாகுவின் கருத்துப்பற்றி வினவியபோது அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் பேச்சாளர் ஜோன் கிர்பி பதிலளித்தார்.

இது தொடர்பில் பதிலளித்த பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பேச்சாளர் நபில் அபூ ருதைனி, சுதந்திர பலஸ்தீன நாடு இல்லாது பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை இருக்காது என்றார்.

“பலஸ்தீனிய மக்கள் மற்றும் அவர்களின் நியாயமான உரிமைகளுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு கொள்கைகள் காரணமாக முழு பிராந்தியமும் எரிமலை வெடிப்பின் விளிம்பில் உள்ளது” என்றும் கூறினார்.

அப்பாஸின் பலஸ்தீன அதிகாரசபை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை பெற்றிருந்தபோதும் அங்கு இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

குறிப்பாக துல்கரம் நகரில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் காரணமாக கடந்த புதன்கிழமை தொடக்கம் குறைந்தது ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹூத்தி தாக்குதல்கள்

இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் தினசரி இடம்பெறும் மோதல்கள், செங்கடலில் வர்த்தகக் கப்பல்கள் மீதான ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள், அதற்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் தாக்குதல்களால் காசா போர் பிராந்தியம் எங்கும் பரவும் அச்சம் அதிகரித்துள்ளது.

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கடல் மற்றும் அடென் வளைகுடாவில் செல்லும் இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஈரான் ஆதரவு ஹூத்திகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் யெமன் மீது வான் தாக்குதல்களை நடத்திய அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் தொடர்புபட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாக அந்த கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவுக்கு சொந்தமான அடென் வளைகுடாவில் செயற்பட்ட கப்பல் ஒன்றின் மீது நேற்றும் ஹூத்திக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மார்ஷல் தீவுகள் கொடியுடனான செம் ரங்கர் கப்பல் மீது இரு ஏவுகணைகள் வீசப்பட்டிருப்பதாகவும் ஆனால் அந்தப் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் கூறியது. அந்தக் கப்பல் அடுத்த துறைமுகத்தை நோக்கி பயணிப்பதாகவும் அது குறிப்பிட்டது.

இந்நிலையில் சர்வதேச கடல் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக ஹூத்தி குழுவின் பிரதிநிதிகள் மற்றும் ஈரானுடன் எகிப்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளனர்.   நன்றி தினகரன் 






ஈரானில் பாகிஸ்தான் பதில் தாக்குதல்: பதற்றம் உச்சம்

January 19, 2024 6:06 am 

 

அண்டை நாடான ஈரான் மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் தாக்குதல் இடம்பெற்று இரு நாட்களின் பின்னர் பாகிஸ்தான் நேற்று (18) இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

எல்லையில் உள்ள சிஸ்தானோ பலுகிஸ்தானில் “பயங்கரவாத மறைவிடங்கள்” மீது தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் உள்ள சிஸ்தான் பலுகிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் பல ஏவுகணைகள் தாக்கியதாகவும் குறைத்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் ஈரான ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்தத் தாக்குதலில் மூன்று பெண்கள் மற்றும் நான்கு சிறுவர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகி இருந்தது.

இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்திருக்கும் ஈரான், டெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு இந்த தாக்குதல் தொடர்பில் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் பேச்சர் நாசர் கானி தெரிவித்துள்ளார். இந்த இரு நாடுகளினதும் எல்லை பகுதியில் தாக்குதல்களை நடத்தும் ஆயுதக் குழுக்களுக்கு அடைக்கலம் அளிப்பதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலை உறுதி செய்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு, உளவுத் தகவல்கள் அடிப்படையிலான இந்த நடவடிக்கையில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டது.

இரு சிறுவர்கள் கொல்லப்பட்டதாக கூறிய பாகிஸ்தான் மீது கடந்த செவ்வாய்க்கிழமை ஈரான் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்ட நிலையிலேயே பாகிஸ்தான் இராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக ஈரான் தாக்குதலை அடுத்து ஈரான் தூதுவர் பாகிஸ்தான் திரும்புவதை தடைசெய்த பாக். அரசு ஈரானுக்கான தூதுவரையும் திரும்பப் பெற்றது.

ஈரான் மற்றும் பாகிஸ்தான் 959 கிலோமீற்றர் தூரம் கொண்ட எல்லை பகிர்ந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் ட்ரம்ப் முன்னிலை

January 17, 2024 7:16 am 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் அயோவா மாநிலத்தில் இடம்பெற்ற முதலாவது வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றியீட்டியுள்ளார்.

கடந்த திங்களன்று இடம்பெற்ற இந்தத் தேர்தலில் ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் அமெரிக்கா தூதுவர் நிக்கி ஹாலி மற்றும் புளோரிடா ஆளுநர் ரொன் டிசன்டிஸை பின்தள்ளி மூன்றாவது முறை குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதில் ட்ரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.

இதில் 40 பிரதிநிதிகளில் ட்ரம்ப் குறைந்தது 20 பிரதிநிதிகளை வெற்றுள்ளார். இதில் இரண்டு பிரதிநிதிகளை மாத்திரம் வென்ற இந்திய வம்சாவளியான விவேக் ராமசுவாமி போட்டியில் இருந்து விலகி டிரம்புக்கு ஆதரவை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு கடைசியில் இடம்பெற்றவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் இருக்கும் ட்ரம்ப், நான்கு குற்றவியல் குற்றச்சாட்டு உட்பட பல வழக்குகளை எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





கிரேக்க கப்பலின் மீது ஹூத்திக்கள் தாக்குதல்

January 18, 2024 12:20 pm 

செங்கடலில் கிரேக்கத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்றின் மீது யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் ஒன்றை நடத்திய நிலையில் அந்த கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஹூத்திக்களின் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டனின் பதில் தாக்குதல்கள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் பிராந்தியத்தில் பரவும் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.

“வர்த்தகக் கப்பல்கள் மற்றும் அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு உடனடி அச்சுறுத்தலான நான்கு ஹூத்தி பலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு எதிராக தற்காப்பு தாக்குதல்களை அமெரிக்கா மேற்கொண்டது” என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது ஹூத்திக்களுக்கு எதிராக ஒரு வாரத்திற்குள் இடம்பெறும் மூன்றாவது தாக்குதலாக உள்ளது.

முன்னதாக மோல்டா கொடியுடனான கிரேக்கத்திற்கு சொந்தமாக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் ஒன்று இடம்பெற்றதை கடல்சார் அச்சுறுத்தல் முகாமைத்துவ நிறுவனமான அம்ப்ரி உறுதி செய்தது. இந்தக் கப்பல் இஸ்ரேல் சென்று திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




காசாவில் அடுத்த கட்ட போர் நடவடிக்கை குறித்து இஸ்ரேல் அறிவிப்பு; உயிரிழப்புகள் தொடர்கின்றன

January 17, 2024 10:04 am 

தெற்கு காசாவில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கையின் தீவிரத் தன்மை குறைத்துக்கொள்ளப்படும் என்று இஸ்ரேல் அறிவித்தபோதும், காசாவெங்கும் நீடிக்கு இடைவிடாத தாக்குதல்கள் தொடர்வதோடு நூற்றுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

காசாவில் அதிகரித்துவரும் உயிரிழப்புகள் சர்வதேச அளவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான அழுத்தத்தை அதிகரித்துள்ளது. ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரஸ் திங்கட்கிழமையும் மோதல்களை நிறுத்தும்படி அழைப்பு விடுத்திருந்தார்.

“போதுமான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கும், பரந்த போர் ஒன்று வெடிப்பதை தவிர்ப்பதற்கும் உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்று தேவையாக உள்ளது” என்று குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.

காசாவில் தொடரும் போர் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கொந்தளிப்பு சூழலை ஏற்படுத்தி இருப்பதோடு இஸ்ரேலுடனான லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா போராளிகளுடன் மோதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல்கள் மீது ஹூத்திக் கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்கள் செங்கடலில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காசாவில் பலஸ்தீன போராளிகள் மற்றும் இஸ்ரேலிய படைகள் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் இஸ்ரேலிய தரைப்படையின் மற்றொரு வீரர் கொல்லப்பட்டிருப்பதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது.

தெற்கு காசாவில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோதலிலேயே 21 வயதான அந்தப் படை வீரர் கொல்லப்பட்டுள்ளார். இதன்படி காசாவில் கொல்லப்பட்்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசா மற்றும் தெற்கில் கான் யூனிஸ் மற்றும் ரபா நகரங்களை இலக்கு வைத்து சரமாரித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (15) செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட், தீவிர நடவடிக்கைகள் விரைவில் முடித்துக்கொள்ளப்படும் என்றார்.

“தீவிர நடவடிக்கை கட்டம் சுமார் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என்பதை நாங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்” என்று கூறிய கல்லன்ட் வடக்கு காசாவில் ஏற்கனவே அந்தக் கட்டத்தை அடைந்துவிட்டதாக தெரிவித்தார்.

“தெற்கு காசாவில் இந்த அடைவை எட்டுவோம் என்பதோடு அது விரைவில் முடிவுக்கு வரும். இரண்டு இடங்களிலும் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் தருணம் வரும்” என்று கூறிய அவர், அதற்கான கால எல்லை பற்றி குறிப்பிட்டு கூறவில்லை.

இதில் காசாவில் போர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நான்கு படைப்பிரிவுகளில் ஒன்று அங்கிருந்து வாபஸ்பெறும் செயற்பாட்டை பூர்த்தி செய்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் திங்கட்கிழமை உறுதி செய்தது.

எனினும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட இஸ்ரேலிய அதிகாரிகள் காசா போர் தொடர்ந்து பல மாதங்கள் நீடிக்கும் என்று எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காசாவின் பல பகுதிகளிலும் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் கடந்த திங்கட்கிழமை இரவு குறைந்தது 57 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா கூறியது.காசா நகரின் மத்திய அல் சப்ரா பகுதியில் உள்ள அல் சுசி குடும்பத்தினரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு பல டஜன் பேர் காயமடைந்துள்ளனர்.

உக்கிர தாக்குதலால் அந்த வீடு தரைமட்டமாக்கப்பட்டிருப்பதோடு கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அல் ஷிபா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அதேபோன்று காசா நகரின் தெற்கில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அல் ஹதாத் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பல குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்தும் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக உள்ளுர் தரப்புகளை மேற்கோள்காட்டி வபா செய்தி நிறுவனம் கூறியது.

குறிப்பாக ரபா நகரில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தாய், தந்தை மற்றும் அவர்களின் குழந்தைகள் என ஒட்டுமொத்த குடும்பம் உட்பட குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தெற்கு கான் யூனிஸில் ஒரே குடும்பத்தின் ஐவர் உட்பட குறைந்தது ஏழு பேர் பலியாகியுள்ளனர்.

முன்னதாக கடந்த திங்கட்கிழமை முடிவுக்கு வந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 132 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு கூறியது. கடந்த நான்கு மாதங்களாக நீடிக்கும் இஸ்ரேலின் வான், தரை மற்றும் கடல் மார்க்கமான தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 24,000ஐ தாண்டியுள்ளது. இதில் சிறுவர்கள் மற்றும் பெண்களே அதிகமாக உள்ளனர்.

இதேவேளை இரு இஸ்ரேலிய பணயக்கைதிகளுடையது எனக் கூறும் இரு சடலங்களை காட்டும் புதிய வீடியோ ஒன்றை ஹமாஸ் அமைப்பு நேற்று வெளியிட்டது. இவர்கள் காசா மீதான வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது பலஸ்தீன போராளிகளால் கடத்திச் செல்லப்பட்ட பணயக்கைதிகளில் 100க்கும் அதிகமானோர் தொடர்ந்து காசாவில் இருப்பதாக நம்பப்படுகிறது.

மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படையினரால் குறைந்தது மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹெப்ரோனுக்கு அருகில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய படையினருடன் மோதலில் ஈடுபட்ட இரு பலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக வபா செய்தி நிறுவனம் கூறியது. துல்கரமில் இடம்பெற்ற பிறிதொரு சம்பவத்தில் 37 வயது ஆடவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் தொடரும் வன்முறைகளில் 350க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 


No comments: