கர்ணன் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 சரித்திர, புராண கதா பாத்திரங்களை முன்னிறுத்தி படங்களை


தயாரித்து தமிழ் திரையுலக வரலாற்றில் இடம் பிடித்தவர் தயாரிப்பாளரும், இயக்குனருமான பி ஆர் பந்துலு. தனது நெருங்கிய நண்பரான சிவாஜி கணேசன் நடிப்பில் இவர் தயாரித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி கண்டது. சில ஆண்டுகள் கழித்து மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமான அரங்க அமைப்புடன் ,ஏராளமான நடிகர்களுடன் கலரில் இவர் உருவாக்கிய படம்தான் கர்ணன்.


மஹாபாரதத்தில் பெரிதும் உயர்த்தி பேசப் படும் கொடைவள்ளலான

கர்ணன் வேடத்தில் சிவாஜி நடிக்க இந்தப் படம் உருவானது. புராண, சரித்திர படங்களில் இருந்து ரசிகர்களின் கவனம் சமூகப் படங்கள் பக்கம் திரும்பிக் கொண்டிருந்த கால கட்டத்தில் இப்படியான ஒரு முயற்சியில் அவர் ஈடுபட்டார். ஏ எஸ் நாகராஜன் ( ஏ பி நாகராஜன் அல்ல ) எழுதிய திரைக் கதையை கொண்டு படம் உருவானது. கட்டபொம்மனுக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி இப் படத்துக்கும் வசனங்களை எழுதினார்.

பஞ்ச பாண்டவர்கள் பிறப்பதற்கு முன் குந்திதேவிக்கு பிறந்து அவளால் ஆற்றில் விடப்பட்டு, தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு , பின்னர் துரியோதனனால் அங்க தேசத்துக்கு அரசனாக முடி சூடப்பட்டு ஆட்சி செய்யும் கர்ணன் கொடையில் சிறந்து விளங்குகிறான். ஆனாலும் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்ற அவப் பெயர் அவனை விடாது துரத்துகிறது. இறுதியில் பாரதப் போரின் போது அவன் யார் என்ற உண்மை உலகிற்கு தெரிய வருகிறது. அவனோ தான் செய்த அனைத்து தான தர்மங்களின் புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தர்ப்பணம் செய்து விட்டு புகழுடம்பெய்துகிறான். இந்த கதையே கர்ணன் என்ற பெயரில் படமானது.

இதில் கர்ணனாக வரும் சிவாஜி படம் முழுதும் பாதிக்கப் பட்ட வேங்கையாக காட்சியளிக்கிறார். குரல், முகபாவம் எல்லாம் அதற்கு பொருந்துகிறது. அவருக்கு ஜோடி தேவிகா. கணவருக்கு ஆறுதல் சொல்லும் கட்சியில் இருவர் நடிப்பும் பிரகாசிக்கிறது. துரியோதனனாக வரும் அசோகன், அவர் மனைவி பானுவாக சாவித்திரி இருவரும் பாத்திரத்துடன் ஒன்றிப் போகிறார்கள். குந்தி தேவியாக வரும் எம் வி ராஜம்மா பிள்ளைகளை நினைத்தே சதா உருகுகிறார். அவரும் சிவாஜியும் சந்திக்கும் காட்சி உணர்ச்சிகரமாக அமைந்தது. இருவர் நடிப்பும் பிரமாதம். அதே போல் கண்ணனும், குந்தி தேவியும் சந்திக்கும் காட்சியும் அருமை.


பாதிப் படத்துக்கு மேல் கிருஷ்ணராக வரும் என் டி ராமராவ் படத்தை தூக்கி நிறுத்த உதவுகிறார். அளவான வசனம், நிதானமான நடிப்பு பலே ராமராவ். அருச்சுனனாக வரும் முத்துராமன் கவர்வதை விட சகுனியாக வரும் டீ எஸ் முத்தையா நன்றாக கவர்கிறார். குலதெய்வம் ராஜகோபால் பாத்திரம் படத்தோடு ஒன்ற மறுக்கிறது.

இவர்களுடன் ஓ ஏ கே தேவர், ஜாவர் சீதாராமன், சந்தியா, கே . நடராஜன், ஜி. சகுந்தலா, சண்முகசுந்தரம், குமாரி ருக்மணி, எம் கே

முஸ்தபா, ஏ கே வீராசாமி, எஸ் வி ராமதாஸ், வி எஸ் ராகவன் என்று பலரும் படத்தில் இடம் பெற்றார்கள் . இவர்களுடன் நூற்றுக் கணக்கான துணை நடிகர்களும் படத்தில் தோன்றினார்கள்.

ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற வெளிப்புறக் காட்சிகள் படத்துக்கு சிறப்பு சேர்த்தன. அதே போல் கங்கா அமைத்த பிரம்மாண்டமான அரங்க அமைப்புகள் படத்தின் தரத்தை உயர்த்தியாது. வி ராமமூர்த்தி இவற்றை எல்லாம் அழகுற ஒளிப்பதிவு செய்தார். ஆர் தேவராஜன் படத்தொகுப்பை கையாண்டார்.


படத்துக்கு மகுடமாக அமைத்தது கவிஞர் கண்ணதாசனின் முத்தான பாடல்களும், மெல்லிசை மன்னர் விசுவநாதன் ராமமூர்த்தியின் இனிமையான இசையுமாகும். கீதையின் சாரத்தை விளக்கும் மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன் கேள், மரணத்தருவாயில் இருக்கும் கர்ணன் நிலையை விளக்கும் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது இரண்டு பாடல்களும் உள்ளத்தை தொட்டன. கண்ணுக்கு குலமேது பாடல் நெஞ்சுக்கு ஒத்தடம் கொடுப்பது போல் அமைந்தது. இவற்றை தவிர இரவும் நிலவும் வளரட்டுமே, என் உயிர் தோழி கேளடி சேதி , கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே , மஞ்சள் முகம் நிறம் மாற ஆகிய பாடல்கள் ரம்மியமாக அமைந்தன.

படம் பிரம்மாண்டமாக இருந்த போதும் கர்ணனின் வீரத்தை வெளிக்

காட்டுவது போல் காட்சிகள் அமையவில்லை. அவனின் அவலத்தை விளக்குவது போலும், அவன் மீது பரிதாபம் ஏற்படுவது போலுமே காட்சிகள் அமைத்தன. இதனால் கர்ணனின் வீரத்தை ரசிகர்களால் ரசிக்க முடியவில்லை. இது படத்துக்கு ஒரு பின்னடைவையே தந்தது.

தனது பொருளாதார வசதிக்கு மீறிய நிலையில் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் நாற்பது இலட்சம் ருபாய் பொருட் செலவில் ஈஸ்ட்மன் கலரில் கர்ணன் படத்தை எடுத்தார் பந்துலு. படம் நூறு நாட்கள் ஓடிய போதும் வசூல் ரீதியில் பந்துலுவுக்கு சரிவையே கர்ணன் பெற்று தந்தது. வாரி வழங்கிய கர்ணனை ரசிப்பதற்கு ரசிகர்கள் தங்கள் பணத்தை வாரி வழங்கவில்லை .
ஆனாலும் ஐம்பது ஆண்டுகள் கழித்து கர்ணன் மீண்டும் தமிழகத்தில் வெளியான போது மகத்தான ஆதரவை ரசிகர்களிடம் பெற்றுக் கொண்டது. ஆனால் அதனை பார்க்க சிவாஜியும், பந்துலுவும் தான் இல்லை!

No comments: