கோடுகளும் சித்திரங்களே – கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை தொடர்பான நயப்புரை முருகபூபதி


என்
பாதங்களுக்குக் கீழே

பூக்கள் இல்லை
மொய்த்துக் கிடந்தவை
முட்களே.
எனினும்
ரத்தம் துடைத்து
நடந்து வந்தேன்.

என்னைத்
தடவிச் சென்றது
தெற்கே குளித்து வந்த
தென்றல் அல்ல
நுரையீரல்களை -
கார்பன் தாள்களாய்க்
கறுக்க வைக்கும்
கந்தகக்காற்று
இருந்தும்
சுடச்சுடவே
நான்
சுவாசித்து வந்தேன்

ஆண்டு முழுவதும் இருந்த
அக்கினி நட்சத்திரத்தில்
எரிந்து போயிற்று
எனது குடை
ஆயினும்
என்
நிழலின் நிழலிலேயே
நீண்டதூரம் ஒதுங்கிவந்தேன்

என்
தலைக்கு மேலே
பருந்துகள் எப்போதும்
பறந்துகொண்டிருந்ததால்
நான் இன்னும்
செத்துவிடவில்லை
என்பதை
நித்தம் நித்தம்
நிரூபிக்க வேண்டியதாயிற்று

என் நிர்வாணத்தை
ஒரு கையால்
மறைத்துக்கொண்டு
என்
அடுத்த கையால்
ஆடை நெய்து
அணிந்து கொண்டேன்

இன்று-
என்
பிரவாகம் கண்டு கரைகள்
பிரமிக்கலாம்
ஆனால் -
இந்த நதி
பாலைவனப் பாறைகளின்
இடுக்கில் கசிந்துதான்
இறங்கி வந்தது

தனது
சொந்தக் கண்ணீரும்
சுரந்ததால்
இரட்டிப்பானது
இந்த நதி

இந்த விதை
தன்மேல் கிடந்த
பாறைகளை
முட்டி முட்டியே
முளைத்துவிட்டது

இன்று என்
புண்களை மூடும்
பூக்களினால்
நான்
சமாதானம் அடைவது
சாத்தியமில்லை
இந்தச்
சமூக அமைப்பு
எனக்குச்
சம்மதமில்லை

சரிதம் என்பது
தனி ஒரு
மனிதனின்
அறிமுக அட்டையோ...?
அல்ல
அது
முடிவைத்தேடும்
ஒரு சமூகத்தின்
மொத்த விலாசம்

இதுவோ...
ரணத்தோடு வாசித்த
சங்கீதம்...
எனது
ஞாபக நீரோடையின்
சலசலப்பு...
நசுங்கிய
நம்பிக்கைகளுக்கு
என்
பேனாவிலிருந்தொரு
ரத்ததானம்

இதில்
சில நிஜங்களைச்
சொல்லவில்லை என்பது
நிஜம்.
ஆனால் -
சொன்னதெல்லாம் நிஜம்

நான்
வரைய நினைத்தது
சித்திரம்தான்.
வந்திரப்பவை
கோடுகளே
ஆனால் -
கோடுகளும்
சித்திரங்களே!

மனித நேசம்தான்
வாழ்க்கை என்பதை
அறிய வந்தபோது
என்
முதுகில் கனக்கிறது
முப்பது வயது.

 

( கவிப்பேரரசு வைரமுத்து )

இக்கவிதை தொடர்பான எனது நயப்புரை  

 

தமிழ்நாட்டில் வதியும்  கவிஞர் வைரமுத்து அவர்கள்,  வானம்பாடி என்ற புதுக்கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்.

கவிதை முன்னர் செய்யுள் வடிவில் வந்தது.  எமக்கு தேவாரம், திருவாசகம் முதல்,  கம்பராமாயணம், சிலப்பதிகாரம், நளவெண்பா முதலான காவியங்களும் செய்யுள் வடிவில் வரவாகின.

மகாகவி பாரதியார்,  கவிதைத் துறைக்கு மறுமலர்ச்சியை தந்ததுடன்,  பல  வசன கவிதைகளும் எழுதினார். அதனால் எமக்கு அவரது உரைநடையில் குயில் பாட்டும், பாஞ்சாலி சபதமும், அவரது சுயசரிதையும் கிடைத்தன.

1970 கால கட்டத்தில் தமிழகத்திலும் இலங்கையிலும் புதுக்கவிதை இயக்கம் வீச்சோடு எழுச்சிகொண்டது.

மரபுக்கவிதைகள் எழுதிவந்த பலர் புதுக்கவிதைத் துறையிலும் பிரகாசித்தனர்.  அதே சமயம் மரபை மீறாமல் புதுக்கவிதை எழுதுங்கள் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

எனினும்,  புதுக்கவிதைகள் சந்தம், ஓசை நயத்துடனும் வெளியாகத் தொடங்கின.

கவிஞராக அறியப்பட்ட வைரமுத்து அவர்களின் வைரவரிகளில் ஆயிரக்கணக்கான திரைப்படப் பாடல்களும் உருவாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.

அவர் மரபுக்கவிதைகளும், புதுக்கவிதைகளும் எழுதியவாறே திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். அவற்றிலும் காவிய நயம் இருந்தது.

அவர் எழுதியிருக்கும் கோடுகளும் சித்திரங்களும் கவிதையானது, வாசிக்கும்போது எம்மை நாமே சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் தூண்டுகிறது.

ஒருவகையில் வலிசுமந்த மேனியராய், தோல்விகளையும் ஏமாற்றங்களையும் தொடர்ந்து சந்தித்த ஒரு மானிடனின் ஆத்மக்குரலாகவும் இக்கவிதை வெளிப்பட்டுள்ளது.

வாழ்வின்  தரிசனங்கள்தான் கவிஞர்களினதும் இலக்கியப் படைப்பாளிகளினதும் ஆக்கங்கள்.   அந்த வகையில் கோடுகளும் சித்திரங்களும் ஒரு மனிதனின் உள்ளக்கிடக்கையை மாத்திரம் பேசாமல், சமூகத்தினதும் இயற்கையினதும், சுற்றுச்சூழலினதும் கோலங்களையும் சித்திரிக்கின்றது.

தோல்விகளையோ, துன்ப துயரங்களையோ, ஏமாற்றங்களையோ, மனதில் ஏற்பட்ட காயங்களையோ திரும்பிப்பார்த்து துவண்டுவிடாமல்,  அவற்றினால் பெற்ற பலன்களை வாழ்க்கைப் பாடமாக்கிக்கொள்வது எங்கனம் என்பதையும் எளிய நடையில் சொல்லியிருக்கிறார் இந்தக் கவிஞர்.

பாதங்களின் கீழே மொய்த்துக்கிடந்தவை முட்களாகவிருந்தபோதிலும் அதனால் சிந்திய இரத்தத்தை துடைத்துக்கொண்டு முன்னகரவேண்டும் என்ற தத்துவத்தை இக்கவிதையின் முதல் வரிகள் போதிக்கின்றன.

வழிநெடுக கந்தக காற்று வீசியபோதும், அதனையும் சுவாசித்தவாறு கடந்து செல்வதற்கும்  மனதில் உறுதிவேண்டும். 

பூமியின் வெப்பத்தை தணிப்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் விமானம் ஏறிச்சென்று கூடிக் கூடி மாநாடுகள் நடத்தி ஆலோசனை செய்கின்றனர்.

ஆனால், இங்கே கவிஞர், அக்கினி நட்சத்திரத்தால் தனது குடை எரிந்துபோனாலும் கூட,  நிழலுக்கு தனது நிழலே போதும் என்ற தன்னம்பிக்கையுடன் கடக்கின்றார்.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் மேலே வண்ண வண்ண பறவைகள் மட்டுமன்றி கோழிக்குஞ்சையும்  சிறிய உயிரினங்களையும் கவ்விச்சென்றுவிடும் பருந்துகளும் கழுகுகளும் வட்டமிடுகின்றன.

இருந்தாலும், அவற்றின் பார்வைக்குள் சிக்காமல் பயணிக்கும் தந்திரமும் தெரிந்திருக்கவேண்டும் என்கிறார் கவிஞர்.

ஒவ்வொருவருக்கும்  உடை, உறையுள், உணவு வேண்டும்.   உடை மானத்தை மறைக்க, இருப்பிடம் வாழ்வதற்கான வசிப்பிடம். உணவு உயிர் வாழ்வதற்கு.  இவற்றில் ஏதோ ஒன்றில்லாமல் வாழ்வது கடினம்.

மானத்தை மறைத்து வாழ்ந்தால்தான் உறையுளும் உணவும் தேடுவதற்கு உழைக்கமுடியும்.

 ஆடை இல்லையென்றாலும் ஒரு கையால் மறைந்து,  மறு கையால் ஆடை நெய்துகொள்வேன் எனச்சொல்வதற்கு எத்தகைய மனவுறுதி வேண்டும்.  அதனை கவிஞர் நயமுடன் சொல்கிறார்.

ஓடும் நதிகள் மலையிலிருந்து உற்பத்தியானாலும், அது கடலைச் சங்கமிப்பதற்கு முன்னர், காடு, மேடு பள்ளம்,  பறைகளையெல்லாம்  ஊடறுத்துக்கொண்டுதான் முன்னோக்கிப்பாயும்.

இடையில் பாறைகள் குறுக்கிட்டுவிட்டாலும், அவற்றையும் தழுவி குளிர்மைப்படுத்திவிட்டுத்தான் செல்லும்.  நதியின் நோக்கம் முன்னோக்கிச்செல்வதுதான்.  அது தனது இயல்பினை என்றைக்கும் மாற்றிக்கொள்ளாது.

மாந்தரும் தமது குறிக்கோளிலேயே அவதானத்துடன் இருக்கவேண்டும் என்பதையும் ஓடும் நதியை உருவகப்படுத்திச்  சொல்கிறார்.

எத்தனை அர்த்தம் பொதிந்த வரிகள் பாருங்கள்.

நதி, தன்னோடு விதைகளையும் அழைத்துவருகிறது. அந்த விதைகளும் குறுக்கிடும் பாறைகளை முட்டி மோதித்தான் கடந்து செல்கின்றன. எனினும்,  அதில் ஏற்படும் காயங்களே புத்துயிர் பெற்று பயிராகின்றது.  விருட்சமாகின்றது.

இங்கே கவிஞர் வைரமுத்து,  நதியின் இயல்பை மத்திரம் சித்திரிக்காமல்,  தன்னோடு தவழ்ந்துவரும் விதைகளின் இயல்பினையும் காண்பிக்கின்றார்.

வாழவேண்டும் என்ற உணர்வை இந்த வரிகள் புலப்படுத்துகின்றன.

துன்பப்படும்போது கண்டுகொள்ளாமல், துணிந்து வாழ்ந்து நல்ல நிலைக்கு எட்டியதும்,  போலிப்புகழாரங்கள் சூட்டும் சமூகத்தையும் கவிஞர் சுட்டிக்காண்பிக்கின்றார்.

அதற்காக புண்களை மூடும் பூக்களைப்பற்றி நாம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை எனச்சொல்கிறார்.

சமூகம் என்பது நான்குபேர் என்று சொல்வார்  தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன்.  சமூகம் இப்படித்தான் இருக்கும், ஆனால், அது எப்படி இருக்கவேண்டும் எனச்சொல்பவர்தான் சிந்தனையாளன் எனச்சொல்வார் இலங்கையின் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான்.

ஒவ்வொரு மனிதருக்கும் அடையாளம் இருக்கிறது. அந்த அடையாளம் வெறுமனே மாத்திரம்  இருப்பின்,  அந்த மனிதர் வெறுமனே அடையாள அட்டைக்குத்தான் சமம். அந்த மனிதர் சமூகத்திற்காக ஏதும் பயனுள்ள பணிகளைச்செய்தால், அவருக்கென ஒரு முகவரி,  நிரந்தர அடையாளமாகிவிடும்.  இதனையும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அழுத்தமாக இக்கவிதையில் பதிவுசெய்துள்ளார்.

கடந்து வந்த பாதையை மறப்போமேயானால், செல்லும் பாதையும் இருட்டாகிவிடும் என்பது வாழ்வியல் தத்துவம்.  அதனையும் கவிஞர் நினைவூட்டுகிறார் இவ்வாறு:

ஞாபக நீரோடையின் சலசலப்பு… நசுங்கிய நம்பிக்கைகளுக்கு என் பேனாவிலிருந்தொரு ரத்த தானம்.

இங்கும் பாருங்கள், இரத்தம் சிந்திவிட்டது எனச்சொல்லவில்லை. தனது இரத்தம் மற்றும் ஒரு உயிரைக் காப்பதற்காக தானமாக பயன்படும் என்கிறார்.

வாழ்வின் சுகம் என்பது, எத்தனையோ சுமைகளைக்கொண்டதுதான் என்பதை புரியவைக்கிறார்.

குழந்தைகள் தமது கையில் பேனையோ பென்ஸிலோ, கிடைத்துவிட்டால் சுவரில் கோடுகளில் தொடங்கித்தான் ஏதாவது வரைவார்கள். அதுவே சித்திரமாகிவிடும்.

அத்தகையதே எமது வாழ்க்கையும். அதற்கும் ஒரு தொடக்கம் இருக்கிறது. என்பதை கோடுகளை உவமானமாக சொல்கிறார் கவிஞர்.  கருவில் உற்பத்தியாகும் குழந்தைதான் பின்னர் பல சந்ததிகள் உருவாவதற்கு காரணமாக திகழ்கின்றன.

அவ்வாறே கோடுகளும் கோலங்களாகின்றன. அவற்றை சித்திரம் எனவும் அழைக்கின்றோம்.

கவிப்பேரராசு வைரமுத்து அவர்களின் இக்கவிதை மிகச்சிறந்தது. இதில் இடம்பெற்றுள்ள வரிகளைப்பற்றி மணிக்கணக்கில் பேசவும் முடியும் பக்கம் பக்கமாக எழுதவும் முடியும்.( நன்றி : ஞானம் – ஜனவரி 2024 இதழ் )

No comments: