வேட்டைக்காரன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


எம் ஜி ஆர் நடிப்பில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை அன்றி, ஆண்டிற்கு இரண்டு படங்கள் என்ற ரீதியில் படங்களை தயாரித்து சாதனை புரிந்தவர் சாண்டோ எம் எம் ஏ சின்னப்பா தேவர். அந்த வகையில் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் 1964ல் அவர் தயாரித்து வெளியிட்ட படம்தான் வேட்டைக்காரன். அந்த ஆண்டின் தைப் பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வந்தது.


தேவர் படம் என்றாலே செட் மெனுவைப் போல எம் ஜி ஆர்,

சரோஜாதேவி, எம் ஆர் ராதா, அசோகன், ஆகியோர் இருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் அது தகர்க்கப்பட்டது. சரோஜாதேவியின் கால்ஷீட் கிடைப்பதில் தேவருக்கும், சரோஜாதேவியின் தாயார் ருத்ரம்மாவுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக , இனிமேல் சரோஜாதேவியை போட்டு படம் எடுக்க மாட்டேன் என்று சபதம் செய்து விட்டு திரும்பி வந்த தேவரின் கவனம் சாவித்ரியின் பக்கம் திரும்பியது. அதனைத் தொடர்ந்து படத்தின் கதாநாயகியாக சாவித்ரி ஒப்பந்தமானார். எம் ஜி ஆரும் எந்தவித ஆட்சேபணையையும் தெரிவிக்கவில்லை.

கதாநாயகியை மாற்றிய கையேடு ஒரு மாறுதலுக்காக வழக்கமாக தன் படங்களுக்கு இசையமைக்கும் கே வி மகாதேவனையும் மாற்ற எண்ணினார் தேவர். இது தொடர்பாக எம் எஸ் விஸ்வநாதனை நேரில் சந்தித்து பேசினார் தேவர். விஸ்வநாதனும் சம்மதம் தெரிவித்து விட்டார். ஆனால் விஸ்வநாதனின் தாயாரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஒருகாலத்தில் விஸ்வநாதன் சிரம திசையில் இருந்த போது அவருக்கு சரியான பாதையை வகுத்து கொடுத்தவர் மகாதேவன். அந்த மகாதேவன் தொடர்ந்து இசையமைக்கும் நிறுவனத்துக்கு நீ இசையமைத்து அவருக்கு தீங்கு செய்வதா என்ற தாயின் கண்டனம் விஸ்வநாதனை வேட்டைக்காரன் படத்துக்கு இசையமைக்காமல் தடுத்து விட்டது. அது மட்டுமன்றி அதன் பின் எந்த காலத்திலும் தேவர் படங்களுக்கு விஸ்வநாதன் இசையமைக்கவில்லை!

இவ்வாறு இரண்டு தாயார்களின் தலையீட்டுக்கு மத்தியில் வேட்டைக்காரன் துரித கதியில் தயாரானது. ஆங்கிலத்தில் வெளிவரும் கவ்பாய் படங்களின் பாதிப்பில் இப்படத்தை உருவாக்கினார் தேவர். முதல் தடவையாக எம் ஜி ஆருக்கு கவ்பாய் பாணியில் இறுக்கிய சட்டை, பேண்ட், பெல்ட் எல்லாம் அணிவித்து தலையில் தொப்பியும் மாட்டி புதிய கெட்டப்பில் அவரை படத்தில் காட்சிப்படுத்தினார் தேவர்.


படம் முழுவதும் சுறுசுறுப்பாகவும், துடிதுடிப்பாகவும் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தார் எம் ஜி ஆர். காதலியுடன் சரசமாடுவதாகட்டும் , தாயிடம் பேசுவதாகட்டும், வில்லனிடம் மோதுவதாகட்டும் ஒரே சுறுசுறுப்புதான்! அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறும் சாவித்ரி தன்னுடைய முகபாவங்களினாலேயே நடிப்பை வெளிப்படுத்துகிறார். காதல் காட்சிகளில் நெருக்கத்தை காட்டுபவர் பின்னர் நோய்வாய்ப் பட்டு கலங்கும் போது உருக்கமாக நடிக்கிறார். எம் ஆர் ராதா இருந்தும் பெரியளவில் வேலை இல்லை. அசோகன் வந்த வேகத்திலேயே காணாமல் போகிறார். மானேஜர் மாயவனாக வரும் நம்பியார் கொடூர முகத்தால் மிரட்டுகிறார். ஆனாலும் சாந்த சொரூபியாக அவர் வரும் காட்சிகள் கவனத்தை கவர்கிறது. படத்தில் நடிப்பதற்கு எம் ஜி ஆரிடம் பணத்தையும் கொடுத்து விட்டு அவரிடம் அடியும் வாங்குகிறார் தேவர் ! இவர்களுடன் நாகேஷ் , மனோரமா ஜோடி சிரிக்க வைக்கிறது. எம் வி ராஜம்மா , பேபி ஷகீலா இருவரும் கவர்கிறார்கள்.

படத்தில் வேட்டைக்காரனுக்கு சவால் விடுகிறது ஒரு சிறுத்தை. வீடு

தேடி வந்து அச்சுறுத்தும் அதன் செய்கை ஒரே திகில்தான். சிறுத்தையை பழக்கிய புலிக்குட்டி கோவிந்தராஜனுக்கு சபாஷ்! படத்தில் ஏழு பாடல்கள் எல்லாம் கண்ணதாசன் இயற்ற கே வி மகாதேவன் இசையில் உருவாகி டீ எம் எஸ், சுசிலா குரலில் ஒலித்து மனதை கவர்ந்தன.

உன்னை அறிந்தால் நீ உன்னையறிந்தால், வெள்ளி நிலா முற்றத்திலே, மஞ்சள் முகமே வருக, மெதுவா மெதுவா தொடலாமா , கதாநாயகன் கதை சொன்னான் , கண்ணனுக்கு எத்தனை கோயிலோ பாடல்கள் இன்றும் பிரபலம். இது தவிர நாகேஷ், மனோரமாவுக்கு ஏ எல் ராகவன், ஈஸ்வரி குரலில் சீட்டு கட்டு ராஜா பாடலும் இருக்கிறது.


படத்துக்கு கதைவசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். மூட்டையை போடு கீழே , இல்லை குண்டு வரும் மேலே போன்ற அதிரடி வசனமும் உண்டு. தாயை பிரிந்து ஒரு குழந்தை இருக்கலாம் ஆனால் குழந்தையை பிரிந்து தாயால் இருக்க முடியாது போன்ற உருக்கமான வசனமும் உண்டு.

படத்தின் கதை காட்டுக்குள்ளும், வீட்டுக்குள்ளும் மாறிமாறி நடக்கிறது. ஆரம்ப படம் அக்க்ஷனாகவும், மீதி படம் சென்டிமெண்டாகவும் நகர்கிறது. இதனை விறுவிறுப்பாக டைரக்ட் செய்திருந்தார் எம் ஏ திருமுகம். படமும் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது. வேட்டைக்காரன் ரசிகர்கள் மனதை வேட்டையாடி விட்டான்!

No comments: