உலகச் செய்திகள்

ஜோ பைடன் மீதான அதிருப்தி அதிகரிப்பு

இஸ்ரேலுக்கு எதிராக ‘பகிரங்க விசாரணை’

பிராந்திய பதற்றத்திற்கு மத்தியில் மீண்டும் இஸ்ரேலுக்கு விரைந்தார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்

ஜனாதிபதி தேர்தல்: தடை உத்தரவை இரத்து செய்ய கோரும் ட்ரம்ப்

லெபனானில் ஹமாஸ் பிரதித் தலைவர் அல் அரூரி படுகொலை

இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து வடக்கு காசாவை நோக்கித் திரும்பும் பலஸ்தீனர்கள்
ஜோ பைடன் மீதான அதிருப்தி அதிகரிப்பு

January 5, 2024 12:18 pm 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் காசா மோதலை கையாளும் முறைக்கு அதிருப்தி வெளியிட்டு அமெரிக்க கல்வித் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பதவி விலகியுள்ளார். இந்தப் போருக்கு எதிராக அமெரிக்க நிர்வாகத்தில் அதிகரித்து வரும் அதிருப்தியின் தொடர்ச்சியாகவே இந்தப் பதவி விலகல் அமைந்துள்ளது.

இந்த விவகாரத்தால் எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை சந்திக்கக் கூடும் என்று பைடனுக்கு அவரது பிரசாரக் குழுவைச் சேர்ந்தவர்கள் அனுப்பிய கடிதம் ஒன்றில் எச்சரித்துள்ளனர்.

கல்வித் திணைக்களத்தின் திட்டமிடல், மதிப்பீடு மற்றும் கொள்கை மேம்பாட்டு அதிகாரியான தாரிக் ஹபாஷ் கல்விச் செயலாளர் மகுவேல் கார்டோனாவுக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில், “அப்பாவி பலஸ்தீனர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கொடுமைகள் தொடர்பில் நிர்வாகம் கண்மூடி இருப்பதை பார்த்து என்னால் தொடர்ந்தும் அமைதியாக இருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு வழங்குவதாகக் கூறிய முன்னாள் இராஜாங்கத் திணைக்கள அதிகாரி ஜோஷ் போல் கடந்த ஒக்டோபரில் பைடன் நிர்வாகத்தில் இருந்து இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 


இஸ்ரேலுக்கு எதிராக ‘பகிரங்க விசாரணை’

January 5, 2024 9:09 am

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக தென்னாபிரிக்கா தாக்கல் செய்த வழக்கு மீது சர்வதேச நீதிமன்றத்தில் பகிரங்க விசாரணை நடத்தப்படவுள்ளது.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 11 மற்றும் 12 ஆம் திகதியில் நடைபெறும் என்று ஹேகில் உள்ள சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்த வழக்கிற்கு துருக்கி மற்றும் மலேசிய நாடுகள் தென்னாபிரிக்காவுக்கு ஆதரவு வெளியிட்டுள்ளன. தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தின் முன் தோன்றுவதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. இதேநேரம் இந்த வழக்கை நிராகரித்திருக்கும் அமெரிக்கா, “தகுதியற்ற, எதிர்மறையான மற்றும் முழுமையாக எந்த ஒரு அடிப்படையும் அற்றது” என்று குறிப்பிட்டுள்ளது. காசா மீது தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 22,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 

பிராந்திய பதற்றத்திற்கு மத்தியில் மீண்டும் இஸ்ரேலுக்கு விரைந்தார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்

January 5, 2024 6:00 am 

காசாவில் போர் நீடித்து, லெபனானில் ஹமாஸ் பிரதித் தலைவர் படுகொலை செய்யப்பட்டு, ஈரானில்
 குண்டு தாக்குதல்கள் இடம்பெற்று பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் நேற்று (04) மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு விரைந்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் வெடித்த பின் நான்காவது முறையாக இடம்பெறும் பிளிங்கனின் இஸ்ரேலுக்கான விஜயத்தை அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதி செய்தபோதும் அது தொடர்பில் மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

டெஹ்ரானில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டதற்கு ஈரான் உடனடியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது குற்றம்சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த அமெரிக்கா, இஸ்ரேல் இதனைச் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறியது பெய்ரூட் புறநகரில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாஸ் பிரதித் தலைவர் கொல்லப்பட்ட நிலையிலேயே யாரும் உரிமை கோராத டெஹ்ரான் குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் பிளிங்கனின் இஸ்ரேலிய விஜயம் பற்றி அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மத்தியூ மில்லர், பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு பற்றி கவலையை வெளியிட்டிருந்தார்.

“ஏற்கனவே இருக்கும் மோதல் மேலும் விரிவடைவதை பிராந்தியத்தில் உள்ள எந்த ஒருவரும் எந்த நாடும் விரும்புவதில்லை, உலகில் எந்த நாடும் விரும்புவதில்லை” என்றார்.

ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் படைகள் இடையே அடிக்கடி மோதல் இடம்பெற்று வரும் லெபனானுடனான இஸ்ரேலிய எல்லைக்கு கடந்த புதன்கிழமை (03) சென்ற இஸ்ரேல் இராணுவத் தளபதி ஹெர்சி ஹலெவி, “துருப்பினர் உச்ச தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இந்நிலையில் லெபானின் நகூரா கிராமத்தில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் நான்கு ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய போர் விமானம் மூன்று மாடிக் கட்டடம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அதனை தகர்த்ததாக லெபனான் அரச செய்தி நிறுவனம் கூறியது. இதில் மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தப் பதற்றம் யெமன் வரை பரவி இருக்கும் சூழலில், ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் மீதான அதன் தாக்குதல்களை உடன் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிகள் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பலஸ்தீனத்திற்கு ஆதரவாக யெமன் ஹூத்திக்கள் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை காசா மீதான இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இஸ்ரேலிய அறிவுறுத்தலின் கீழ் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் அல் மவாசி பகுதிக்கு அருகில் புதன்கிழமை இரவு தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெற்றன.

அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தின் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் மிக வயது குறைந்தவராக ஐந்து வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டதோடு பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் 10 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

கான் யூனிஸ் மற்றும் மத்திய காசாவின் மேலும் பல பகுதிகளில் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்ததோடு தெற்கின் டெயிரல் பலாஹ்வில் கடும் தாக்குதல்கள் பதிவானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கான் யூனிஸில் இருக்கும் பலஸ்தீன செம்பிறை சங்க தலைமையக கட்டடத்தின் ஐந்தாவது மாடி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் அறுவர் காயமடைந்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமான போரில் காசாவில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 22,500ஐ நெருங்கியுள்ளது. அந்த குறுகிய நிலப்பகுதியில் வாழும் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் போல் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 

ஜனாதிபதி தேர்தல்: தடை உத்தரவை இரத்து செய்ய கோரும் ட்ரம்ப்

- ஜனாதிபதி வேட்பாளரொருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்தடவை

January 4, 2024 8:54 am 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை விதித்து வழங்கப்பட்ட தீர்ப்பை இரத்து செய்ய கோரி, டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தடை விதித்தது.

அரசியலமைப்பின் கிளர்ச்சி என்ற வாக்கியத்தை குறிப்பிட்டுக்காட்டி, ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் அல்லவென நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் 3 ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதி வேட்பாளரொருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்தடவையாகும்.

நன்றி தினகரன் 

லெபனானில் ஹமாஸ் பிரதித் தலைவர் அல் அரூரி படுகொலை

- பலஸ்தீனத்தை தாண்டி போர் அபாயம்

January 4, 2024 6:00 am 

ஈரான், ஹிஸ்புல்லாவின் கண்டனத்திற்கு இடையே அமைதிகாக்க ஐ.நா கோரிக்கை

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலின் ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றின் மூலம் ஹமாஸ் அமைப்பின் பிரதித் தலைவர் சலேஹ் அல் அரூரி கொல்லப்பட்டது காசா போர் பலஸ்தீனத்தை தாண்டி பரவும் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் போரை ஆரம்பித்தது தொடக்கம் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஹமாஸ் அரசியல் தலைவராக அரூரி உள்ளார்.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதி ஒன்றான முஷரபியாவில் உள்ள ஹமாஸ் அலுவலகத்தின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடத்தப்பட்ட தாக்குதலிலேயே அரூரி கொல்லப்பட்டுள்ளார்.

ஐவருடன் கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்தபோது ஏற்பட்ட வெடிப்பிலேயே அரூரி கொல்லப்பட்டதாக லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் தொலைக்காட்சி தெரிவித்தது. இதில் மேலும் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த வெடிப்பில் அரூரி கொல்லப்பட்டதை உறுதி செய்த ஹமாஸ் அதிகாரிகளில் ஒருவரான பசம் நயீம், தமது ஆயுதக் குழுவின் மேலும் இரு அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

‘ஹமாஸ் தலைமைக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையிலேயே சலேஹ் அல் அரூரி மரணித்தார்’ என்று இஸ்ரேலிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த படுகொலைக்கு ஹமாஸ் அமைப்பு கண்டனத்தை வெளியிட்டிருப்பதோடு, இது லெபனான் இறைமை மீதான தாக்குதல் என்று ஹிஸ்புல்லா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் லெபனானை மோதலுக்கு இழுப்பதாக லெபனான் பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஹமாஸ் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படையின் முக்கிய புள்ளியாக இருந்த அரூரி, ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியேவின் நெருங்கிய கூட்டாளியாவார். லெபனானில் அவர் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான தொடர்புகளை பேணுபவராகவும் இருந்து வந்துள்ளார்.

இந்த படுகொலையைச் செய்ததாக உறுதி செய்வதை தவிர்த்துக் கொண்ட இஸ்ரேலிய பேச்சாளர் மார்க் ரெகேவ், ‘யார் இதனைச் செய்தாலும் அது லெபனான் மீதான தாக்குதலாக இருக்காது’ என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

எனினும் லெபனான் மண்ணில் இஸ்ரேல் மேற்கொள்ளும் எந்த ஒரு படுகொலைக்கும் ‘கடுமையான பதிலளிக்கப்படும்’ என்று ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா எச்சரித்துள்ளார்.

காசாவில் கடந்த ஒக்டோரில் போர் வெடித்தது தொடக்கம் லெபனானுடனான இஸ்ரேலின் தெற்கு எல்லையில் லெபனானின் பலம்மிக்க ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலிய படைக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வரும் நிலையிலேயே இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளது.

அரூரி கொல்லப்பட்டதை அடுத்து மர்ஜ் அருகே ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலிய படைகளை இலக்கு வைத்ததாக ஹிஸ்புல்லா கூறியது.

இஸ்ரேலியர்கள் மீது அரூரி கொடிய தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வந்தது. எனினும் கட்டார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தத்தில் மேற்கொள்ளப்படும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் அவர் முக்கிய பங்காற்றி வந்ததாக ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

‘உயிர் தியாகத்திற்கு

காத்திருக்கிறேன்’

ஹமாஸ் ஆயுதப் பிரிவான இஸதீன் அல் தீன் அல் கஸ்ஸாம் அமைப்பின் இணை நிறுவனராக அரூரி இருப்பதாக இஸ்ரேல் குறிப்பிடுகிறது. காசாவுக்குள்ளேயோ அல்லது வெளியேயோ ஹமாஸ் தலைமைகளை ஒழிப்பதாக கடந்த ஓகஸ்ட் மாதம் இஸ்ரேல் எச்சரித்தபோது அதற்கு பதிலளித்த அரூரி, ‘நான் உயிர் தியாகம் செய்ய காத்திருப்பதோடு நான் அதிக காலம் வாழ்ந்து விட்டதாக நினைக்கிறேன்’ என்றார்.

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளின் பிரதான ஆதரவாளராக உள்ள ஈரானின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் நாஸர் கனானி கூறும்போது, ‘அரூரியின் படுகொலை பலஸ்தீனத்தில் மாத்திரமன்றி பிராந்தியத்தில் மற்றும் உலகெங்கும் சுதந்திரத்தை நாடுபவர்கள் இடையே சந்தேகத்திற்கு இடமின்றி எழுச்சியையும் சியோனிஸ ஆக்கிமிப்பாளர்களுக்கு எதிராக போராடுவதற்கும் தூண்டுகிறது’ என்றார்.

அரூரியின் படுகொலையை கண்டித்து ரமல்லா மற்றும் மேற்குக் கரையில் உள்ள மற்ற நகரங்களில் கூடிய நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் ‘பழிதீர்ப்போம், பழிதீர்ப்போம், கஸ்ஸாம்!’ என்று கோசமெழுப்பினர்.

‘இந்தத் தாக்குதல் லெபனான் இறைமையை மீறும் கோழைத்தனமான…பயங்கரவாதச் செயல் என்பதோடு இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பின் வட்டத்தை அதிகரித்துள்ளது’ என்று ஹமாஸ் தலைவர் ஹனியே கூறினார்.

இந்தப் படுகொலையைக் கண்டித்த லெபனான் பிரதமர் நஜிப் மிகாதி, லெபனானை மேலும் போருக்குள் இழுக்கு செயலாக உள்ளது என்றார். அது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் புகார் செய்யத் திட்டமிடுவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் பதற்றம் தீவிரம் அடையும் அச்சம் அதிகரித்துள்ளது. பெய்ரூட்டில் ஹமாஸ் தலைவரின் படுகொலையை அடுத்து பதற்றம் தீவிரம் அடையும் சாத்தியம் பற்றி ஆழ்ந்த கவலை அடைந்திருப்பதாக லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் திட்டம் தெரிவித்துள்ளது.

லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான எல்லைகளை கண்காணிக்கும் இந்த அமைதிகாக்கும் திட்டத்தின் பேச்சாளர் கன்டிஸ் ஆர்டியேல் கூறியதாவது, ‘அனைத்து தரப்பினரும் தங்கள் கொந்தளிப்பை நிறுத்துமாறு நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறோம், மேலும் செல்வாக்கு உள்ள எந்தவொரு தரப்பும் அமைதிகாக்கும்படி வலியுறுத்த வேண்டும்’ என்றார்.

இந்நிலையில் இஸ்ரேலிய போர் அமைச்சரவை உறுப்பினர் ஒருவரான பென்னி கானஸுடனான உரையாடலில், லெபனானில் போர் சூழல் ஒன்று பற்றி பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார்.

எனினும் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராய் இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

22,000ஐ தாண்டிய உயிரிழப்பு

இதேவேளை காசாவில் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முடிவுற்ற 24 மணி நேரத்தில் 207 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு உறுதி செய்தது. இதனால் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 22,313 ஆக அதிகரித்துள்ளது.

57,296 பேர் காயமடைந்திருப்பதோடு 7,000 பேர் வரை காணாமல்போயுள்ளனர். அவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக நம்பப்படுகிறது. காசாவில் மூன்று மாதங்களாக நீடிக்கும் குண்டு மழை காரணமாக அந்த குறுகிய நிலப்பகுதியின் மக்கள் தொகையில் நான்கு வீதத்தினர் கொல்லப்பட்டு, காயமடைந்து அல்லது காணாமல்போயுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றை அடுத்து மக்கள் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் இடிபாடுகளில் சிக்கி இருப்போரை காப்பாற்றுவதற்காக அந்தப் பகுதிக்கு விரைந்தனர்.

‘இதுவரை 12 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். சிறுவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். அவர்கள் என்ன தப்பு செய்தார்கள்? அவர்களில் எனது ஒரு மாத மகனும் உள்ளான். அவன் இஸ்ரேலுக்கு என்ன செய்தான்?’ என்று காசி தர்விஷ் என்பவர் கேள்வி எழுப்பினார். ‘எனது மற்ற மகனுக்கு ஐந்து வயதாகிறது. அவனும் உயிர்த்தியாகம் செய்துள்ளான்’ என்றார்.

மேலும் தெற்காக கான் யூனிஸில் இஸ்ரேல் தமது தலைமையத்தின் மீது இரு முறை தாக்குதல் நடத்தியதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டது. இதனால் ஐவர் கொல்லப்பட்டு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

‘அவர்கள் தெற்காக செல்லும்படி கூறினார்கள். அங்கு பாதுகாப்பானது என்றும் கூறினார்கள். ஆனால் அவர்கள் பொய்யர்கள்’ என்று செம்பிறை சங்கம் மீதான தாக்குதலில் காயமடைந்து நாசர் மருத்துவமனையில் தரையில் வைக்கப்பட்டிருக்கும் தனது மகளை காண்பித்தபடி பாதி அல் அப்ஃ கூச்சலிட்டார்.

இந்தத் தாக்குதல்களை மனசாட்சி அற்றது என்று உலக சுகாதார அமைப்பு கடுமையாக சாடியது. கான் யூனிஸில் நேற்றும் தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்று வந்த நிலையில் பலரும் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை காசாவில் உள்ள மக்களை தொடர்ந்து வெளியேறுவதற்கு உத்தரவிட்டு வரும் இஸ்ரேல் கடந்த செவ்வாயன்று போர் விமானங்கள் மூலம் வீசிய துண்டுப் பிரசுரத்தில் கான் யூனிஸின் பல இடங்களில் இருந்து மக்களை வெளியேறும்படி குறிப்பிட்டுள்ளது.

‘தரைவழி தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டபோது காசா நகரில் இருந்து கிசான் அல் நிஜார் பகுதிக்கு நான் வெளியேறினேன். ரபா நகர் மற்றும் கான் யூனிஸுக்கு இடையில் உள்ள கிசான் அல் நிஜார் முன்னர் பாதுகாப்பான இடமாக இருந்தது’ என்று யூனிஸ் என்பவர் ‘மிடில் ஈஸ்ட் ஐ’ செய்தி இணையதளத்திற்கு குறிப்பிட்டிருந்தார்.

‘மூன்று நாட்களுக்கு முன் 87 தொகுதியில் இருந்து வெளியேறும்படி துண்டுப் பிரசுரம் கிடைத்தது. இன்று அதில் 83, 84 மற்றும் 86 தொகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. நான் 85 தொகுதியில் இருக்கிறேன். அது மாத்திரம் தான் இந்த தொகுதியில் இல்லாத பகுதி. ஆனால் 86 தொகுதியுடன் இது மாத்திரமே வெளியேற்றப்படாத தொகுதியாக உள்ளது. குண்டு வீச்சுக்கு மத்தியில் வாழ்வது மிகக் கடினமானது’ என்று அவர் சுட்டிக்காட்டினார்.

காசாவில் உள்ள 2.3 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட அனைவரும்போல் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதோடு காசாவின் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா பகுதியில் அடைக்கலம் பெற்றவர்கள் எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.   நன்றி தினகரன் 


இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து வடக்கு காசாவை நோக்கித் திரும்பும் பலஸ்தீனர்கள்

தெற்கில் தொடர்ந்து தாக்குதல்: உயிரிழப்பு 22,000 ஆயிரத்தை நெருங்கியது

January 3, 2024 6:00 am 

இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் டாங்கிகள் தெற்கு மற்றும் மத்திய காசா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அது வடக்கில் இருந்து சில துருப்புகளை வாபஸ் பெற ஆரம்பித்துள்ளது. வடக்கு பகுதியில் இஸ்ரேல் தனது போர் நடவடிக்கையின் தீவிரத்தை குறைப்பதற்கான சமிக்ஞையாக இது உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காசாவில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு பெரும் பகுதி இடிபாடுகளாக மாற்றி அங்குள்ள 2.3 மில்லியன் மக்கள் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இந்தப் போர் இன்னும் பல மாதங்கள் நீடிக்கும் என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

எனினும் காசாவில் இருந்து சில படையினரை வாபஸ் பெறுவது மற்றும் மேலும் பல மாதங்களுக்கு போரை நடத்தும் வகையில் உள்ளுர் மட்டத்திலான தேடுதல் நடவடிக்கைகளாக போரை மாற்றுவது பற்றிய திட்டத்தை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கு காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்பினர் வெளியேறிய நிலையில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் அந்தப் பகுதிக்கு திரும்பி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

“இங்கு திரும்பிய மக்கள் எல்லா இடங்களிலும் இரத்தம் மற்றும் பிண வாடை அடிக்கும் நிலையிலும் இடிபாடுகளுக்கு மேல் இருந்துகொண்டும் உறங்கியும் வருகின்றனர்” என்று இந்தப் பகுதிக்கு திரும்பி இருக்கும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“இங்கு பல படுகொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆக்கிரமிப்பு இராணுவத்தை விடவும் மக்களின் எதிர்ப்பு எப்போதும் வலுவானதாக உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“போதுமான உணவு மற்றும் குடிநீர் இல்லாதபோதும் வடக்கு காசாவை ஒருபோதும் கைவிட மாட்டோம்” என்று மற்றொரு பெண் தெரிவித்துள்ளார். “வேதனைகளுக்கு முகம் கொடுத்தபோதும் நான் எனது நிலம், வீடு மற்றும் குடும்பத்தை ஒருபோதும் கைவிடமாட்டேன்” என்றார்.

இந்தப் போரின் ஆரம்பத்தில் தீவிர தாக்குதலுக்கு முகம்கொடுத்த வடக்கு பகுதியில் உள்ள காசா நகரின் ரத்வான் பகுதியில் இருந்து டாங்கிகள் வாபஸ் பெறப்பட்டு வருவதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். காசா நகரின் ஏனைய பகுதிகளில் இருந்தும் டாங்கிகள் வாபஸ் பெறப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் இந்த முடிவு வடக்கு காசாவில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை குறைந்த தீவிர நிலைக்கு மாற்றுவதை காட்டுவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காசாவில் உயிரிழப்புகள் அதிகரித்து, போர் நிறுத்தத்திற்கு சர்வதேசத்தின் அழைப்பு அதிகரித்து வரும் சூழலில் போரின் தீவிரத்தை குறைக்கும்படி அமெரிக்கா இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் இஸ்ரேலிய விமானங்கள் மற்றும் டாங்கிகள் உக்கிர தாக்குதல்களை நடத்தியதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசா எங்கும் நேற்று முன்தினம் (01) இரவு தொடக்கம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 34 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ் நகரின் குடியிருப்புப் பகுதிகள் மீது இடம்பெற்ற வான் தாக்குதல்களில் 22 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா நேற்று குறிப்பிட்டுள்ளது.

மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாமில் இடம்பெற்ற மற்றொரு வான் தாக்குதலில் மேலும் பலர் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்தை நெருங்கி 21,978 ஆக அதிகரித்திருப்பதோடு 57,697 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

“2024 ஆம் ஆண்டில் எனது நோக்கம் உயிரிழக்காமல் இருப்பதாகும். இங்கே குளியலறை, உணவு மற்றும் நீர் எதுவும் இல்லை. கூடாரங்கள் மாத்திரம் தான் இருக்கின்றன” என்று காசாவின் ரபா பகுதியில் இருக்கும் 11 வயது லயான் ஹராரா என்ற சிறுவன் கூறுகிறான். அந்த நகரில் உள்ள மிருகக்காட்சிசாலையின் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் பசித்த விலங்குகளுக்கு இடையே மக்கள் முகாம்களை அமைத்துள்ளனர்.

எனினும் காசாவில் 12 வாரங்க கடந்து போர் நீடித்தபோதும் ஹமாஸ் தொடர்ந்து இஸ்ரேலிய படைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் திறன் பெற்றிருப்பதோடு, டெல் அவிவ் மீதும் தொடர்ந்து ரொக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின்போது 240 பணயக்கைதிகளை பலஸ்தீன போராளிகள் பிடித்த நிலையில் குறுகிய கால போர் நிறுத்தம் ஒன்றில் பணயக்கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டபோதும் தொடர்ந்து 129 பணயக்கைதிகள் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது. இதில் இஸ்ரேலின் தாக்குதல்கள், மீட்பு முயற்சிகள் அல்லது தப்பிச் செல்லும் முயற்சிகளில் சில பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

புதிய போர் நிறுத்தம் ஒன்று மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று தொடர்பில் கட்டார் மற்றும் எகிப்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.

“ஹமாஸின் பயங்கரவாத உட்கட்டமைப்பு அழிக்கப்படாமல், அதன் நிர்வாகத் திறன் ஒழிக்கப்படாமல், போர் முடிவுக்கு வராது” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவையின் உறுப்பினர் ஒருவரான அவி டிச்டர், ‘கான்’ வானொலிக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதன்படி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் இஸ்ரேலிய படை மற்றும் அங்குள்ள இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதல்களில் குறைந்தது 320 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 

No comments: