அவுஸ்திரேலிய தமிழ்ச் சைவ அமைப்புகள் இணைந்து அமரர் விஸ்வலிங்கம் ஐயா அவர்களின் ஆத்ம சாந்திக்காக ஏற்படுத்திய பிரார்த்தனைக் கூட்டத்திலே வாசிக்கப்பெற்ற கவிதையஞ்சலி
இயற்றியவர்: 'சிவஞானச் சுடர்' பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார் (வாழ்நாட் சாதனையார்)
அமரர் விஸ்வலிங்கம்
மெள்ளத்தான் மூடியதோ? விரைந்துன் உயிரும்
விமலன்றாள் பற்றியதோ? சாந்தி! சாந்தி!!
வெண்சிரிப்புன் உள்ளத்தின் தூய்மை காட்டும்!
விரித்தணைக்கும் கைகளோ கேண்மை செப்பும்!
வண்ணவிதழ் உதிர்க்குஞ்சொல் அன்பைச் சிந்தும்!
வந்தமைந்த சிந்தைசிவத் தியானம் செய்யும்!
கண்ணனைய சைவத்திற்(கு) உன்பங் களிப்பும்
கனடாவில் சைவமன்றம் நிறுவிய பாங்கும்
எண்ணரிய உன்சேவை ஏற்றம் இயம்பும்!
இறைநிலையை அடைந்தனையே தெய்வந் தானே!
இன்சொல்லால் எமையெலாம் கவர்ந்திட் டானை!
ஏழைபணக் காரபேதம் காட்டா தானை!
பொன்மனத்தால் ‘போற்றிஓம்நமச் சிவாய’ வென்றே
பொழுதெல்லாம் செப்பிச்சிவன் கழல்தொழு தானை!
பன்முகத்து ஆளுமையோ டரும்பணி யியற்றிப்
பார்ப்போர்க்குச் சிவப்பழமாய்த் தோற்றி னானை!
அன்புநெறி தனைப்பரப்பி அறம்வளர்த் தானை!
அவனியிலே காணும்நாள் இனியும் வருமோ?
உள்ளத்தால் ஒழுக்கத்தால் உண்மை பேசும்
உத்தமனாய் வாழ்ந்தெல்லாம் செப்பப் போமே?
எள்ளளவும் பிறர்மனதைப் புண்படுத் தாது
இல்லத்தை நாடியன்பர் எவர்வந் தாலும்
கள்ளமில்லா மனத்தோடு கைகூப் பினின்று
காதலொடு விருந்துவைப்பாய்! களையா விழிகள்
மெள்ளத்தான் மூடியதோ? விரைந்துன் உயிரும்
விமலன்றாள் பற்றியதோ? சாந்தி! சாந்தி!!
வையமெல்லாம் சைவநெறி தனைப்ப ரப்ப
வடிவாம்பிகைத் துணைவியொடு இணைந்தே அன்பன்
மெய்வருந்தி அன்புநெறிச் சஞ்சி கையை
விருப்புடனே பலர்படிக்க வழிச மைத்தான்!
கையிரண்டைக் கூப்பிநாமும் அஞ்சலி செய்வோம்
கடமைவீரன் அவன்பணியின் பெற்றி என்னே!
பெய்வளையாள் பிறவாவரம் அவனுக் அருளப்
பிறங்குசிவன் இறவாப்பே ரின்பமீய்ந் தனனோ?
---------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment