காரைநகரை உலகறியச் செய்த பேரறிஞர்!

 


அமரர் தி.விசுவலிங்கம்

  ----------------------------------------- சாவித்திரி வைத்தீசுவரக்குருக்கள்

 -------------------------------------------இராணி வைத்தீசுவரக்குருக்கள் 

புலம்பெயர் தேசம் சென்று சைவத்துக்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றிய அறிஞர்கள் வரிசையில் கனடா சைவசித்தாந்த மன்றத்தின் தாபகராக - காப்பாளராக - தலைவராகத் திகழ்ந்த திரு. தி.விசுவலிங்கம் ஐயா அவர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். விசுவலிங்கம் ஐயா அவர்களது மறைவு சைவத் தமிழ்உலகுக்குப் பேரிழப்பு எனின் அது மிகையாகாது. சைவசமயநூல்களைப் பதிப்பித்தும் அன்புநெறி என்ற மாத இதழைத்தொடர்ச்சியாக வெளியிட்டும் அமரர் ஆற்றிய சமயத் தொண்டு தனித்துவமானது.

கனடா சைவசித்தாந்த  மன்ற  வெளியீடுகளாக வெளிவந்த  நூல்கள்  மற்றும் அன்புநெறி மாத இதழ்கள் ஊடாகப் புலம்பெயர் சூழலில் மட்டுமன்றி ஈழத்திலும் தமிழ் மக்களிடையே சைவசமய  தத்துவங்களையும் திருமுறைப் பெருமையையும் நிலைநிறுத்தக் காரணமானவர் தனது உடல் பொருள் ஆவி    அனைத்தையும் சைவ  சமயத்துக்கு அர்ப்பணித்தவர் விசுவலிங்கம் ஐயா அவர்கள். எமது தந்தை கலாநிதி சிவத்திரு. க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்தம் சிறப்புக்களையும் தன்னலமற்ற சைவத் தமிழ்ப்பணியையும்2001ஆம் வெளியிட்ட வைத்தீசுவரர் மலர் வாயிலாக உலகறியச்செய்தவர் விசுவலிங்கம் ஐயா அவர்களே. இவ்வாறு ஒரு மலர் வெளிவர இருப்பது எமது தந்தைக்கு அப்போது தெரியாது. ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்த அறிஞர்களிடம் கட்டுரைகளையும் பாடல்களையும் திரட்டி தந்தையின் 85 ஆவது வயதில் சைவ சித்தாந்த மன்றத்தின் சிறப்பு வெளியீடாக வைத்தீசுவரர் மலரை வெளிட்ட பெருமைக்கும் நன்றிக்கும் உரிய பெருந்தகை அமரர் விசுவலிங்கம் ஐயா அவர்கள்.

அன்புநெறி 2015 ஆம் ஆண்டு எமது தந்தை -வைத்தீசுவரக்குருக்கள் தில்லைக் கூத்தனின் திருவடி நீழலைச் சென்றடைந்த வேளை தந்தையின் நினைவாக அன்புநெறி மலரை வெளியிட்டதுடன் இன்றுவரை ஆண்டு தோறும் தந்தையின்  நினைவாக அன்புநெறி இதழ்களையும் சிறப்பு மலர்களையும் வெளியிட்டு நன்றி பாராட்டும் சான்றோன். விசுவலிங்கம் ஐயா அவர்கட்கும் அவர் தம்குடும்பத்தவர்களுக்கும் நாம் பெருங் கடப்பாடுடையோம். விசுவலிங்கம் ஐயா அவர்களது ஆத்மா சாந்தியடையவும் அவரது மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தவர்கள் ஆறுதலையும் அமைதியையும் பெற ஈழத்துச் சிதம்பரத்திலே  வீற்றிருந்து அருள்பாலிக்கும் சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமானதும் பூரணா புட்கலை சமேத ஆண்டிக் கேணி ஐயனாரதும் திருவடிகளைத் வணங்கிப் பிரார்த்திக்கின்றோம்.

 (நன்றி -- அன்புநெறி மலர்)


 


 

No comments: