தள்ளாமையை மீறி என் ரஸனை `பால் வண்ணம்’ குறித்து கவிஞர், எழுத்தாளர், ஓவியர் வைதீஸ்வரன் அவர்களின் மதிப்புரை


இது ஒரு ஸ்வாரஸ்யமான, வாழ்க்கையின் பல்வேறு மனித அனுபவங்களின் இலக்கியப் பான்மையான சித்தரிப்புகளின் தொகுப்பு. சிறுகதையா... அல்லது சுய அனுபவங்களின் செறிவான நினைவு கூறலா என்கிற குழப்பம் அவ்வப்போது எழுந்தாலும் ஒரு தரமான படைப்பு என்பதில் ஐயமில்லை.


சுமார் இருபது வருடங்களுக்கு முன் இலங்கைப் போர் முடிந்து அதன் புகைக்கங்குகள் மெல்ல அணைந்து அடங்கிப் புழுங்கிக் கொண்டிருந்த தருணம் ஏராளமான மக்கள் அவதியும் துக்கமுமாக புலம்பெயர்ந்து கொண்ட வருஷங்களில் இலக்கியம் திசையறியாது குழம்பிப் போய் ஸ்தம்பித்துப் போனது. வருடங்கள் போகப் போக மக்களின்

புலம்பெயர்ந்த வாழ்க்கையின் புதிய அனுபவங்களின் சேகரங்கள் அவர்கள் உள்மனத்தில் வேரூன்றி கிளைத்து மனித இயல்பின் படைப்புணர்வை மெல்ல மெல்ல விசாலப்படுத்தி தற்போது சுதாகர் போன்ற நல்ல படைப்பாளிகள் மூலமாக நல்ல ஆவணங்களாக வெளிப்படுவதை நான் கண்டு வாசித்து மகிழ்ச்சி அடைகிறேன்

இவருடைய படைப்புகளில் வடிவச் சிறப்பு உள்ளது. எதையும் சேதிகளாகத் தெரிவிக்காமல் இயல்பான மன ஓட்டத்துடன் உணர்வுடன் வெளிப்படுத்துவது நல்ல கலைநேர்த்தி

எல்லாமே கற்பனை பூசிய நிஜ அனுபவங்களின் வெளிப்பாடு. காதல் மனித நேயம்..சாதுர்யம் வக்கிரம் சுயநலம் இயலாமை எல்லாவற்றுக்கும் இந்தக் கதைகள் நல்ல உதாரணங்கள்.

பால் வண்ணம் கதையை விட " நமக்கு நாமே " கதையை நான் ரஸித்தேன். 96 என்று ஒரு தமிழ்ப்படம் இதே நிறைவேறாக் காதலை அற்புதமான காட்சி யாக்கி இருந்தார்கள். கனவு காணும் உலகம் aborigin பிரச்சினையை இன்னொரு வித்தியாசமான கோணத்தில் பொதுவான டிப்படை மனிதநேயத்தை வெளிச்சமாக்கியது சிறப்பு.

பால் வண்ணம் வாசிக்க வேண்டிய தொகுப்பு. வாழ்த்துக்கள்



No comments: