மணி ஓசை - - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ் Inbox Das Suntheradas

 கோடீஸ்வரரான தந்தை தனக்கு பிறந்த அவலட்சணமான மகனை


பிறந்தவுடனே கொல்ல முனைகிறார்.ஆனால் ஒரு முதியவர் தடுத்து தானே அக் குழந்தையை வளர்க்கிறார்.குழந்தை வளர்ந்து வாலிபனாகி ஊருக்கும் உறவுக்கும் நல்லது செய்கிறான்.


ஆபத்தில் சிக்கும் தன் தம்பியையும் காப்பாற்றுகிறான்.அவனின் காதலும் கை கூட உதவுகிறான்.தாயும் தந்தையும் உயிரோடு இருந்தும் அவர்களின் அன்பும்,அரவணைப்பும் கிட்டாமல் மறைகிறான். அழகு என்பது உருவத்தில் இல்லை, உள்ளத்தில் தான் என்பதை உணர்த்துவதே படத்தின் கதை.

இந்த கதை சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்த தெய்வ

மகன் படத்தின் கதை போல் தோன்றும்.ஆனால் இதே கதை 1963ம் ஆண்டு மணி ஓசை என்ற பெயரில் படமானது. சிவாஜி ஏற்ற மூன்று கதா பாத்திரங்களையும் மணி ஓசையில் மூவர் ஏற்றனர்.பணக்கார தந்தையாக நடிகவேள் எம் ஆர் ராதாவும்,உடல் ஊனமுற்ற மகனாக கல்யாணகுமாரும்,இரண்டாவது மகனாக முத்துராமனும் நடித்தனர்.குறையுடன் பிறந்த குழந்தையை வளர்ப்பவராக வி நாகையா நடித்தார்.அதே வேடத்தை தெய்வ மகனிலும் அவரே ஏற்று நடித்திருந்தார் !

முதுகு வீங்கி,கூன் விழுந்து,விந்தி விந்தி நடக்கும் சிரமமான கதாநாயகன் பாத்திரத்தில் கல்யாணகுமார் நடித்திருந்தார்.கொடுத்த வேடத்தை அற்புதமாக செய்திருந்தார் அவர்.வெகுளித்தனமாக எல்லோரிடமும் பேசுவது,தம்பிக்காக திருட்டு பழியை ஏற்று தண்டனை அடைவது,தாத்தாவை காப்பாற்ற முரடனாக மாறுவது,தன் இயலாமை நினைத்து வருந்துவது என்று படம் முழுதும் வியாபித்திருந்தார் கல்யாணகுமார்.அன்று இருந்த நட்சத்திர நடிகர்களை பயன்படுத்தாது வளரும் நடிகரான கல்யாணகுமாரை நடிக்க வாய்த்த இயக்குனரை பாராட்ட வேண்டும்.

இவருடன் படம் முழுவதும் வருபவர் எம் ஆர் ராதா.வழமையான அலட்டல்,ஆர்ப்பாட்டம் இல்லாமல் அளவுடன் தன்னுடைய வில்லன் ரோலை செய்திருந்தார்.ஈவு இரக்கமில்லாத தந்தை அவர் வருவது ஆத்திரம் மூட்டினாலும் அவர் பேசும் வசனங்கள் அதனை அடக்குகிறது.அவருக்கு பணிந்து நடக்கும் மனைவியாக குமாரி ருக்மணி,மகனாக முத்துராமன்,அவரின் காதலியாக விஜயகுமாரி ஆகியோர் நடித்தனர்.இவர்களுடன் டீச்சராக புஷ்பலதா நடித்தார்.வளர்ந்து வரும் நடிகராக அறியப்பட்ட நாகேஷ் நகைச்சுவையை தனியாக கவனித்து சிரிக்க வைத்தார்.


படத்தின் பாடல்களை கண்ணதாசன் இயற்ற விஸ்வநாதன் , ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்கள் .இவர்கள் கூட்டில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒலித்த தேவன் கோயில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் அருலோசை பாடல் 60 ஆண்டுகள் கடந்தும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.அத்தோடு ஆட்டுக் குட்டி ஆட்டுக் குட்டி மாமாவை பாரு,வருசமாசா தேதி பார்த்து,கட்டித்தங்க ராசாவுக்கு காலை நேரம் கல்யாணம் பாடல்களும் சுவையாக ஒலித்தன.

படத்துக்கான கதை வசனத்தை பாசுமணி

எழுதியிருந்தார்.உணர்ச்சிமிக்க காட்சிகளாகட்டும்,எம் ஆர் ராதா பேசும் வசனங்கள் ஆகட்டும் பாசுமணியின் வசனங்கள் ஆழமாக இருந்தன.

படத்தை ஒளிப்பதிவு செய்தவர் எம் கர்ணன்.அங்கங்கே அவர் கை வண்ணம் தெரிந்தது.படத் தொகுப்பை தேவராஜன் கவனித்துக் கொண்டார். இவர்கள் இருவரும் பிற்காலத்தில் இயக்குனர்களாக மிளிர்ந்தார்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.

படத்தை தயாரித்தவர் கண்ணதாசனின் அண்ணனான ஏ எல் சீனிவாசன்.தனது ஏ எல் எஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் படத்தை தயாரித்தார்.பிரபல இயக்குனர்களான ஏ பீம்சிங்,கே எஸ் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு முதல் தடவையாக படம் இயக்க வாய்ப்பளித்த இவர் மணி ஓசை படம் மூலம் பி மாதவனை டைரக்டராக அறிமுகப்படுத்தினார்.ஸ்ரீதரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாதவன் இந்த படம் மூலம் இயக்குநராகி பிற்காலத்தில் பிரபல இயக்குனராக திகழ்ந்தார்.அதுமட்டுமன்றி சிவாஜியின் ஆஸ்தான பட இயக்குனராக அறியப்பட்டார்.


முதல் படம் என்ற போதும் படத்தை நேர்த்தியாக எடுத்து தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் மாதவன் .மணி ஓசை வெற்றி படமாக அமையாத போதும் இந்தப் படத்தின் மூலம் அவரின் திறமையை அறிந்து கொண்ட சிவாஜி தான் நடிக்கும் அன்னை இல்லம் படத்தை டைரக்ட் செய்யும் வாய்ப்பை மாதவனுக்கு வழங்கினார் .

No comments: