மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 5 : ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை.

 


இப்போது நந்தனும் புங்கும் பெயின்ரின் தரத்தை நிர்ணயிக்கும் குவாலிற்றி கொன்ரோல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஹெவின் என்னும் ஜெர்மன் நாட்டு மனிதர் குறூப்லீடராக இருந்தார். அறுபது வயதை நெருங்கும் நோமா என்ற நியூசிலாந்துப் பெண்மணியும், நட்டஷா என்ற கிறீக் நாட்டு இளம்பெண்ணும் ரீம்லீடர்களாக இருந்தார்கள்.

 ஒருமுறை வேலை சற்று முன்னதாக எல்லாப்பகுதிகளிலும் முடிவடைந்துவிட்டது. இரவு ஒரு மணி இருக்கும். வேலை செய்யுமிடத்தை துப்பரவு செய்துவிட்டு, ஒவ்வொருவரும் அவரவர் வேலையில் மூழ்கி இருந்தார்கள். புங் நிலத்தில், முதுகை சுவருடன் சார்த்தியபடி தனது ரெலிபோனில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தாள். வியட்நாமியர்கள் கொடுத்து வைத்தவர்கள். குள்ள உருவம் கொண்டதால் வளைந்து நெளிந்து வேலை செய்வார்கள். நினைத்த நேரம் நினைத்தபடி இருந்து எழும்புவார்கள்.

 அப்போது அங்கே ஜோசுவா வந்தான். அவன் இப்போது Electro Deposition (பிறைமர் அடிப்பதற்கு முன், இரும்பிற்கு மின்னால் பதியவைத்தல்) என்ற பகுதியின் குறூப்லீடராக இருக்கின்றான். சுற்று முற்றும் பார்த்துவிட்டு புங்கிற்கு முன்னால் குந்தி இருந்தான்.

 புங் ஆச்சரியப்படவில்லை. ஏற்கனவே அறிந்திருந்தாளா?

 அவன் அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான். வேறு எந்தப் பெண்ணிடமும் உருவாகாத ஒரு உணர்ச்சி. புங் உதட்டை ஒருபுறமாகச் சுழித்தாள்.

நந்தனையும் மற்றும் சில பெண்களையும் சைகையால் தன்னருகே வரும்படி கூப்பிட்டார் நோமா. அருகே நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த அற்புதமான காட்சியை எட்டிப் பார்க்கும்படி சொன்னார். புங் குழைந்து குழைந்து பேசுவதும், ஜோசுவா நாணிக்கோணி நிற்பதும் தெரிகின்றன.

 “இது எங்கே போய் முடியப்போகின்றதோ தெரியவில்லை!” என்றார் ஏக்கப்பெருமூச்சுடன் நோமா.

 “ஆச்சிமா தான் இஞ்சை எல்லாருக்கும் ‘கீற்’ ஏத்துகின்றாள்” என்றாள் நட்டஷா. நோமா நட்டஷாவை முழுசிப் பார்த்தார். ‘ஓ… நீ ஏதோ ஒழுங்கான நடத்தை உள்ளவள் போல’ என்பது அந்தப் பார்வையின் அர்த்தமாக இருந்தது.

 “இளசுகள் தான் கூத்து அடிக்குதுகள் எண்டு பார்த்தால், இஞ்சை வயது போன கிழடுகளும் அப்பிடியாகத் தான் இருக்கு” என்றார் சலிப்புடன் நோமா.

 தொழிற்சாலைகளில் பதவி உயர்வு, அல்லது புதிய உறவுகள் ஏற்படும்போது குடும்பத்தைக் கவனிப்பதில் ஒருவருக்கு நாட்டம் குறையலாம். அந்த நேரம் கணவனோ அல்லது மனைவியோ குடும்பத்தைப் பொறுப்பெடுக்க வேண்டும். இல்லாவிடில் குடும்பத்தின் கதி அதோ கதிதான். குடும்பம் உருக்குலையப் போவதாக கட்டியம் கூறினார் நோமா.

 தொழிற்சாலையில் நடைபெறும் குவாலிற்றி சேர்க்கிள்களில் அடிக்கடி புங் பங்குபெறுவாள். அவளது குறூப் ஒரு தடவை போட்டியில் முதல் பரிசு பெற்றது. அவர்கள் ஒருவாரத்திற்கு ஜப்பான் போனார்கள். விடயம் கேள்விப்பட்டது முதல் அவள் தன் வியட்நாம் மொழியை மறந்துவிட்டாள். என்நேரமும் ஆங்கிலத்தில் கதைத்தாள். அதுவரைகாலமும் மதிய உணவு வேளையில் கணவன் பிள்ளைகளுடன் வியட்நாம்மொழியில் கதைத்து வந்தவள் ஆங்கிலத்திற்குத் தாவினாள். இது எல்லாம் ஜப்பான் போய் வரும் வரைக்கும்தான். அதன் பின்பு வேதாளம் மீண்டும் முருங்கைமரத்தில் ஏறி, வியட்நாம் பாஷையில் கதைத்தது.

 அவளின் இந்த மாறுதல் எப்படி ஏற்பட்டது என்பது நந்தனுக்குப் புதிராக இருந்தது.

 ஒருவேளை அவளின் ஜப்பான் பயணம்கூட அவளின் மன நிலையை மாற்றியிருக்கலாம்.

 அன்று எல்லோரும் இரண்டுமணிக்கு வீட்டிற்குப் புறப்படும்போதும், அவர்கள் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. எழுந்து நின்று கதைத்துக் கொண்டே இருந்தார்கள். ஜோசுவாவின் கனைப்பும் புங்கின் கொஞ்சு மொழியும் இரண்டறக் கலந்திருந்தன.

 பொதுவாக இரவுவேளைகளில் பெண்கள் வேலைக்கு வரும்போது, அவர்களை ஆண்கள் தவறாக எடை போட்டு விடுகின்றார்கள். அவர்களைத் தமது வலைக்குள் வீழ்த்த எத்தனிக்கின்றார்கள். சிலர் பொறிக்குள் அகப்பட்டுக் கொள்கின்றாகள். சிலர் தப்பி விடுகின்றார்கள்.

 அடுத்தநாள் புங்கும் நந்தனும் ஒன்றாக வேலை செய்து கொண்டிருக்கும்போது, அங்கம்பக்கம் பார்த்துவிட்டு புங் சொன்னாள்.

 “உனக்கு ஒன்று தெரியுமா? எனது கணவருக்கும் ஜோசுவாக்கும் ஒரே வயது! இன்னுமொன்று சொல்கின்றேன் கேள். ஜோசுவாவின் மனைவிக்கு அவனைவிட நான்கு வயதுகள் கூட.

 நானும் உனது மனைவியும் வயது கூடிய கணவன்மார்களைத் தெரிவு செய்திருக்கும்போது, ஜோசுவா நான்குவயதுகள் கூடிய பெண்ணைத் திருமணம் செய்துள்ளான். ஜோசுவா பாவம் அல்லவா?”

 “ஜோசுவா பாவம்” என்று சொல்லும்போது அவள் முகம் போன போக்கு நந்தன் தன் வாழ்நாளில் பார்த்திராத பார்வை. சொல்லிவிட்டு நந்தனைக் கூர்ந்து பார்த்தாள். நந்தன் மெளனமாக நின்றான்.

 பொதுவாக ஆண்கள் சமவயது அல்லது தன்னிலும் வயது குறைந்த பெண்களையே திருமணம் செய்கின்றார்கள். இங்கே ஜோசுவா தன்னைவிட நான்கு வயதுகள் கூடிய பெண்ணைத் திருமணம் செய்திருக்கின்றான். அதுவே அவனை இந்த இழி செயலைச் செய்யத் தூண்டியிருக்கலாம்.

 அன்று ஜோசுவா இரண்டு தடவைகள்---சாப்பாட்டுக்கு முன் ஒரு தடவை, சாப்பாட்டிற்கு பின் ஒருதடவை---புங்கைப் பார்த்துப் போனான். அடுத்தநாள் நான்கு தடவைகள் வந்து போனான். அதன்பிறகு குறைந்தது நான்கு தடவைகள் என்று கணக்கு வைத்துக் கொண்டான். அவனைக் காணும்தோறும் நந்தனுக்குப் புண்ணிலே புளிப்பிடித்தது போலாயிற்று.

 நந்தனும் புங்கும் உற்ற நண்பர்கள். நந்தனுக்கோ ஜோசுவாவை அறவே பிடிப்பதில்லை. ஆனால் இப்போது புங்கிற்கு ஜோசுவா என்றால் உயிர். இந்த விந்தையை அடிக்கடி நந்தன் நினைத்துக் கொள்வான். ஒரு காலத்தில் தனது பதவி உயர்வுகளுக்கு ஆப்பு வைத்தவன், இன்று தன் நண்பியைக் கணக்குப் பண்ணுகின்றான் என ஆத்திரம் வந்தது நந்தனுக்கு.

 நோமா ஜோசுவாவை அடிக்கடி அங்கே வரவேண்டாம் என்று கத்தத் தொடங்கினார். எச்சரிக்கை விடுத்தார். அவன் அதற்கும் ஒரு உபாயம் வைத்துக் கொண்டான். அவன் தான் காரின் குவாலிற்றியை பரிசோதிக்க வந்து போவதாகச் சொன்னான். அதன்பிறகு அவனைக் காணும்தோறும் எல்லாரும் அவனைக் ‘குவாலிற்றி’ என்று பட்டம் தெளித்தார்கள்.

 “நீ என்ன காரின் குவாலிற்றியைச் செக் பண்ணுகின்றாயா? அல்லது பெண்களின் குவாலிற்றியைச் செக் பண்ணுகின்றாயா?” என்று வெளிப்படையாகவே சிலர் கேட்கத் தொடங்கினர்.

 அவன் “இரண்டும்” என்று சொல்லிவிட்டுப் போவான்.

 புங் தினம் தினம் ஒவ்வொரு நிறத்தில் உள்ளாடை அணிந்து வருவாள். பெரும்பாலும் உள்ளாடை ஒவரோலுக்குள்ளால் தலைநீட்டி எட்டிப் பார்க்கும். தோட்டின் நிறமும் அதற்குத் தகுந்தால் போல் இருக்கும். அங்கு வேலை செய்பவர்கள் அவளின் தோட்டின் நிறத்தை வைத்து அவள் அணியும் உள்ளாடைகளின் நிறத்தை மட்டுக்கட்டுவதில் ஈடுபடிருந்தார்கள்.

 ஒவ்வொருநாளும் வேலை தொடங்குவதற்கு முன்னர் 5 நிடங்கள் மீற்றிங்கும் உடற்பயிற்சியும் நடக்கும். அவர்களுடன் வேலை செய்யும் றான் என்னும் வியட்நாமியன் அவளின் தோட்டைக் பார்த்துவிட்டு, சில நண்பர்களுடன் கைப் பாஷையில் தனது மார்பையும் இடுப்பிற்குக் கீழும் தொட்டுக்காட்டிக் கதைப்பான், சிரிப்பான்.

 ஒவ்வொரு இரண்டுமணி நேரத்திற்கும் முகப்பூச்சையும் லிப்ஸ்ரிக்கையும் செப்பனிட்டாள் புங். சென்ற் வாசனை குறையாதவாறு பார்த்துக் கொண்டாள். சிலவேளைகளில் வேலை செய்யும் இடத்திலேயே நகத்தை வெட்டித் துப்பரவாக்கி nail polish போடுவாள். தலை வாருவாள்.

 அவள் ஜோசுவாவுடன் கதைப்பதை வைத்துக் கொண்டு – அவர்களுக்கிடையே என்ன நடைபெறுகின்றது என்பதை உய்த்துணரத் தொடங்கினான் நந்தன். அப்படியான வேளைகளில் அவள் குரலின் தொனி கூட மாறிவிடும். காதலின் பாஷை தேடி அவள் குரல் மிமிக்கிரி செய்யும்.

 ஆரம்பத்தில் இடைவெளியைப் பேணி வந்தவர்கள், நாளாக நெருங்கத் தொடங்கினார்கள். முதலில் குறூப்லீடர், ரீம்மெம்பர் என்ற மரியாதை இருந்தது. போகப் போக நெருக்கமானார்கள். கண்மண் தெரியாமல் காரியங்கள் நடைபெறும்போது எதற்கு மரியாதை?

தொழிற்சாலையில் வானொலி எந்த நேரமும் பாடிக் கொண்டிருக்கும். அதன் சத்தத்தை மாத்திரம் கூட்டிக் குறைக்கலாம். ஸ்ரேசனை மாற்ற முடியாது. இவர்கள் இருவரையும் எப்போதாவது நோமா கண்டுவிட்டால், அவர்கள் இருவருக்கும் தெரியாமல் வால்யூமைக் கூட்டிவிட்டு ஒளிந்து நின்று பார்ப்பார். ஒரு அடி இடைத்தூரத்தில் நின்று கதைப்பவர்கள், மெதுமெதுவாக மூக்கும் மூக்கும் முட்டும் தூரத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களிற்கு வானொலியின் வால்யூம் கூட்டப்பட்டதோ, தங்களை யாராவது பார்க்கின்றார்களோ என்ற எதுவித கரிசனையும் இல்லாமல் மூழ்கி இருப்பார்கள்.

 புங்கிற்கு இரண்டு வீடுகள் இருந்தன. அதில் ஒரு வீடு அவளின் பெயரிலும், மற்ற வீடு அவளதும் கணவனதும் பேரிலும் இருந்தன. புங் தனது வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாள். அந்த வீட்டில் நிறைய வேலை செய்யவேண்டி இருந்ததால், கொன்ராக்ற் முடிய வீட்டில் இருந்தவர்களை எழுப்பிவிட்டதாகச் சொன்னாள். வீடு திருத்த வேலைகள் செய்ய ஆரம்பித்திருப்பதால் பகல் வேளைகளில் தான் அங்கு சென்று வருவதாகச் சொன்னாள்.

 “இனி எப்போது மறுபடியும் உமது வீட்டிற்குப் போகப் போகின்றாய்?” அன்று வந்த ஜோசுவா அவளைப் பார்த்து இப்படிக் கேட்டான். அதற்கு அவள் சும்மா பதில் சொல்லியிருக்கலாம். ஆனால் நாணிக்கோணி, வாயைச் சுழித்து, வளைந்து நெளிந்து பதில் சொன்னாள்.

 “கட்டாயம் சொல்ல வேண்டுமோ?”

 நந்தன் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டான். நடுவில், அந்த றென்றுக்குக் குடுத்த வீட்டில் எதோ கசமுசா நடந்திருக்கின்றது.

 தெளிந்த நீரோடையில் வரும் திடீர் வெள்ளம் அங்கிருப்பவர்களை அள்ளிச் செல்வது போல, ஜோசுவா புங்கை அள்ளிச் சென்றுவிட்டான்.

 

தொடரும்….

No comments: