எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 50 2002 இல் அவுஸ்திரேலியா தினத்தில் கிடைத்த விருது ! முருகபூபதி

இம்மாதம் 26 ஆம் திகதி அவுஸ்திரேலியா தினமாகும்.  அதற்காக


அரசு  பொதுவிடுமுறை வழங்கியது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரும் இந்நாளில் ஒருதடவை நான் எதிர்பார்க்காத நிகழ்வு ஒன்று நடந்தது.

 2002 ஆம் ஆண்டு  ஜனவரி  25 ஆம் திகதி.  அதாவது அவுஸ்திரேலியா தினத்துக்கு முதல்நாள் மாலை வேலை முடிந்து வீடு திரும்பி, களைப்போடு உறங்கிக்கொண்டிருந்தேன். மறுநாள் விடுமுறை என்பதால்,     “ அப்பாடா   என்றிருந்தது.

உறக்கம் கண்களை தழுவிக்கொண்டிருந்தபோது, கட்டிலுக்கு அருகிலிருந்த தொலைபேசி சிணுங்கியது.  மறுமுனையில் நண்பர் நல்லையா சூரியகுமாரன்.

இவர் கிழக்கிலங்கையில் கல்குடா தொகுதியின் முன்னாள்


பாராளுமன்ற உறுப்பினரும் , முன்னாள் அமைச்சருமான                      ( அமரர் ) நல்லையாவின் புதல்வர்.  இடதுசாரி சிந்தனை கொண்டவர். இங்கே தொழில் கட்சியிலும் அங்கம் வகிப்பவர். அத்துடன் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் மனித உரிமை செயற்பாடுகளிலும் ஈடுபாடுள்ளவர்.

என்னை  “ மச்சான்  “ என்றும் அழைப்பார்.  நாம் மெல்பனில் 1988 இல் உருவாக்கிய தமிழ் அகதிகள் கழகத்தின் ஸ்தாப உறுப்பினர்.  தமிழ் அகதிகளின் நலன்களுக்காக குரல்கொடுத்து வந்திருப்பவர்.

அவர் ஏன் அந்த மாலை வேளையில் எனக்கு கோல் எடுக்கிறார் என யோசித்தவாறே,   எப்படி சூரி…? என்ன விசயம்..?  “ எனக்கேட்டேன்.

 “ மச்சான் நாளைக்கு என்ன செய்கிறீர்…?   “ எனக்கேட்டார்.

 “ நாளை பொதுவிடுமுறை தினம்.  வீட்டில்தான் இருப்பேன்.  “ என்றேன்.

 “ மச்சான்,  நாளை காலை ஒன்பது மணிக்கு பண்டுரா பார்க்கிற்கு வரமுடியுமா..? நாளை இங்கே ஒரு கொண்டாட்டம் இருக்கிறது.   என்றார்.

 “ அப்படி என்ன கொண்டாட்டம்.?  என்ன விசயம் ?   என்று மீண்டும் கேட்டேன்.

 “ மச்சான்,   நாளைக்கு Australia Day . கட்டாயம் வாரும்.  உம்மை எதிர்பார்க்கின்றேன்.    என்று  வலியுறுத்தி சொல்லிவிட்டு , இணைப்பினை துண்டித்துக்கொண்டார்.

பிள்ளைகள்,  எனது குடும்ப நண்பர் வீட்டு பிள்ளைகளுடன் மறுநாள் நேரத்தை செலவிடவிருந்தனர்.  அவர்களை தொலைதூரத்திலிருந்த அந்த வீட்டுக்கு அழைத்துச்சென்று விட்டுவிட்டு, நான் மாத்திரம் பண்டுரா பூங்காவிற்கு சென்றேன்.

பூங்கா விழாக்கோலம் பூண்டிருந்தது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன.  அதன் பின்னர் டெரபின் மாநகர மேயர் உரையாற்றினார். அதனையடுத்து விருது வழங்கும் நிகழ்ச்சி என அறிவித்தார்கள்.

பெயர் சொல்லச்சொல்ல யார் யாரோ மேடைக்குச்சென்று விருதும் அழகான பெரிய பூச்செண்டும்  பெற்றுக்கொண்டார்கள்.

திடீரென எனது பெயர் அறிவிக்கப்பட்டு, நான் யார், மெல்பனில் என்ன செய்கின்றேன். எனது வாழ்வும் பணிகளும் எத்தகையது என்று அந்த மேயர்,  எழுதிவைத்திருந்த குறிப்புகளை வாசித்துவிட்டு, எனக்கும் விருது என அழைத்தார்.

எனது நீண்ட பெயரை ( Letchumanan Murugapoopathy )  சற்று சிரமப்பட்டு உச்சரித்தார் அந்த மேயர். 


சபையில் அமர்ந்திருந்த நண்பர்கள்  சூரியையும்  மருத்துவர் பொன். சத்தியநாதனையும்  பார்த்தேன். அவர்கள்  தாம்  அணிந்திருந்த கண்ணாடிக்குள்ளால் இமைகளை தாழ்த்தி என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்தனர்.

“ ஓ…  இதற்குத்தானா  என்னை கட்டாயப்படுத்தி அழைத்தீர்…? “  என்று நண்பர் சூரி அருகில் சென்று மெதுவாகச்சொல்லிவிட்டு, மேடையேறி விருதையும் பூச்செண்டையும் மேயரிடம் பெற்றபொது, தான் எனது பெயரை சரியாக உச்சரித்தேனா எனவும் கேட்டு  மேயர் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு சிரித்தார்.

 அந்த அவுஸ்திரேலிய தின விழாவில் கலந்துகொண்ட சில அரசியல்வாதிகள், மாநகர சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அருகில் வந்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

விருந்துபசாரம் நடந்தது. இவ்வாறு நடக்கும் எனத் தெரிந்திருந்தால்,


பிள்ளைகளையும் அழைத்து வந்திருக்கலாமே என யோசித்தேன்.

பின்னர் அங்கிருந்து நேரே, Ivanhoe இலிருந்த சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன்  அண்ணன் அவர்களின் இல்லம் சென்று, அவரது துணைவியார் ஜெஸி ரவீந்திரனிடம் அந்த பெரிய பூச்செண்டை கொடுத்தேன்.

அவர்கள் என்ன விசேஷம் எனக்கேட்டார்கள். கிடைத்த விருது பற்றிச்சொன்னேன்.  வாழ்த்தினார்கள்.  பிறகுதான் எனக்கு சில விடயங்கள் தெரியவந்தன.

எனது பெயரை அந்த விருதுக்கு யார் யார் பரிந்துரைத்திருந்தார்கள் என்ற தகவல் கசிந்தது. அவர்கள் சட்டத்தரணி ரவி அண்ணன், நண்பர்கள் நடேசன், சூரிய குமாரன், மருத்துவர் பொன் சத்தியநாதன்.  ரவீந்திரன் அண்ணர்தான் என்னைப்பற்றிய பரிந்துரை குறிப்புகளை எழுதிக்கொடுத்திருக்கிறார்.


ஒரு சில நாட்களில் Northcote Leader News Paper அலுவலகத்திலிருந்து ஒரு பெண் பத்திரிகையாளர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அங்கே வரச்சொன்னார்.

வேலை முடிந்து அங்கே சென்றேன். என்னை வரவேற்று அமரவைத்து சில கோணங்களில் படம் எடுத்தார்கள்.

அந்த வாரம் Northcote Leader News Paper இல் எனது படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. இலக்கிய சகோதரி அருண். விஜயராணி இலங்கை பத்திரிகைகளில் என்னைப்பற்றி எழுதியிருந்தார்.

நான் பணியாற்றிய  நிறுவனத்தில்  ஊழியர்களினால் வெளியிடப்படும்  மாதாந்த  இதழில் ( News Letter -  2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ) ஆக்கத்துறை மேலாளர் என்னைப்பற்றிய குறிப்புகளை படத்துடன் எழுதி வெளியிட்டார்.

அதனைப்பார்த்த பல்லினத்தையும் சேர்ந்த ஊழியர்கள், என்னையும் எனது எழுத்து மற்றும் பொதுப்பணிகளையும்  அறிந்து வேடிக்கையாக ஏதேதோ சொல்லி அழைக்கத் தொடங்கினர்.  எனது பெயர் மறந்து அவர்கள் சூட்டிய பட்டப்பெயர்தான் அங்கிருந்து நான் விலகியது வரையில் அங்கே நிலைத்திருந்தது. அங்கே நீண்ட காலம் பணியாற்றியதை முன்னிட்டும் எனக்கு ஒரு  ஞாபகார்த்த விருதும் தந்தார்கள்.

2002 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தினத்தில் எனக்கு டெறபின்


மாநகர சபையினால் வழங்கப்பட்ட சிறந்த பிரஜைக்கான விருது  பற்றிய செய்தி அறிந்த, எஸ். பி. எஸ். வானொலி ஊடகவியலாளர் திரு. அந்தனி நிக்கலஸ் ஆனந்தராஜா  என்னைத் தொடர்புகொண்டு, பேட்டி கண்டு ஒலிபரப்பினார்.

சில நாட்கள் கடந்தன. மற்றும் ஒரு நாள் ஒரு அவுஸ்திரேலிய பெண்மணி, தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வந்து  சமூகம் சார்ந்து ஏதேனும் துறையில் முக்கியமான பணிகளை முன்னெடுத்து வந்திருப்பவர்களை நேரில் சந்தித்து உரையாடிவிட்டு ஒரு நிகழ்ச்சியில் அழைத்து கௌரவிக்கவிருப்பதாகச் சொன்னார்.

அந்தப்பெண்மணி, மற்றும் ஒரு பெண்ணையும் அழைத்துக்கொண்டு வீடு தேடி வந்தார்.

என்னை பேட்டி கண்டார். அத்துடன் நாம் நடத்திவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தன்னார்வத் தொண்டு பணிகள் சார்ந்த கோவைகள், நான் எழுதியிருந்த புத்தகங்கள் யாவற்றையும் பார்த்தார். குறிப்புகள் எடுத்துக்கொண்டார். சில கோணங்களில் படங்கள் எடுத்தார்.

தனது சார்பிலும் கல்வி நிதியத்திற்கு நன்கொடை கொடுத்தார். உடனே அதற்கு பற்றுச்சீட்டும் வழங்கினேன்.  வாழ்த்திவிட்டு, மீண்டும் தொடர்புகொள்வதாகச்சொல்லிச்சென்றார்கள் அந்த இரண்டு பெண்களும்.

சில நாட்களில் மீண்டும் அந்தப்பெண்ணிடமிருந்து அழைப்பு வந்தது.

மெல்பன் நகரில் ஒரு முகவரியை தந்து, அங்கே நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தார்.

 “ ஏன்…?  “ எனக்கேட்டேன்.

 “ அந்த  நிகழ்ச்சியில் ஒரு ஆவணப்படம் காண்பிக்கவிருப்பதாகவும்.  அதில் என்னைப்பற்றியும் சொல்லப்படுகிறது. அவசியம் வாருங்கள்.  “ என்றார்.

மகனையும் அழைத்துக்கொண்டு அங்கே சென்றேன்.  அப்போது அவனுக்கு 15 வயது.

அந்த மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில்,  மெல்பனுக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் அகதியாக வந்தவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றிய கருத்தரங்கு நடந்தது. அதனையடுத்து ஒரு ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. அதில் பல்லினத்தையும் சேர்ந்த அகதிகள் கல்வி, கலை,  இலக்கியம், தன்னார்வப்பணி,  வர்த்தகம் முதலான துறைகளில் மேற்கொண்ட கவனத்திற்குட்பட்ட விடயங்களை ஆவணப்படுத்தியிருந்தார்கள்.

அதில் என்னையும் காண்பித்து, என்னைப்பற்றிய குறிப்புகளையும் சொன்னார்கள்.  அங்கும் விருந்துபசாரம் நடந்தது.

என்னை வந்து சந்தித்து பேட்டி கண்டு, படங்கள் எடுத்த அந்தப்பெண்களிடம்,  “ யார் உங்களிடம் என்னைப்பற்றிச்சொன்னது..?    எனக்கேட்டேன்.

தங்களது Project இற்கு பொருத்தமான ஆட்களை தேடிக்கொண்டிருந்ததாகவும்,  உங்களை நன்கு தெரிந்த ஒருவர்தான், உங்கள் பெயரை பரிந்துரைத்தார் எனச்சொன்னார்கள்.

 “ யார்…?    எனக்கேட்டேன்.

   Mr. Nithyanandan  “ என்றனர்.

நண்பர் மாவை நித்தியானந்தன்தான்  அவர் என்பதை பின்னர் அறிந்துகொண்டேன்.

அவுஸ்திரேலியாவில் இந்தச்  சம்பவங்கள் யாவும் நான் எதிர்பார்க்காமல் நடந்தேறின. அதன்பிறகுதான்,  எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான்  வாழ்க்கை என்ற வசனத்தை எனது பல பதிவுகளில் எழுத நேர்ந்தது. எனக்கு மட்டுமல்ல மனிதர்களாகப்பிறந்த அனைவருக்கும்    எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துகொண்டேயிருக்கும்.

ஏற்றம், இறக்கம், அங்கீகாரம், தோல்வி, ஏமாற்றம், துரோகம், துயரம், இழப்பு… இவ்வாறு எத்தனையோ நிகழும்.   நானும் இவற்றையெல்லாம்  கடந்து வந்திருக்கின்றேன்.

இந்த வாரம் ஜனவரி மாதம் அவுஸ்திரேலியா தினம் வந்தமையால்,  எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரில்  21 ஆண்டுகளுக்கு முன்னர் இதே மாதத்தில் நடந்த சம்பவங்களை இங்கே நனவிடை தோய்ந்தேன்.

( தொடரும் )

 

 

 

 

 

No comments: