அரசியல்வாதிகளைப் பார்த்து மக்கள் கேள்வி கேட்கவேண்டிய நேரம் வந்துள்ளது ! அவதானி


இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 75 வருடங்களாகப் போகின்றது.  இந்த ஏழு தசாப்த காலத்திற்குள் எத்தனை தேர்தல்களை, எத்தனை அரசியல் தலைவர்களை,  அரசியலை வைத்து பிழைப்பு நடத்துபவர்களை மக்கள் பார்த்துவிட்டார்கள்.!?

முன்னர் ஒன்றாக இருந்த தலைவர்கள்,  பின்னர் பிளவுண்டு புதிய புதிய  அரசியல் கட்சிகளை உருவாக்கினார்கள்.  இந்த பிளவுகளையும் பிணக்குகளையும்  இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதலாக மக்கள் பார்த்து வருகின்றனர்.

பாராளுமன்றத் தேர்தல்,  இடைத்தேர்தல்,  ஜனாதிபதித் தேர்தல்,


மாகாண சபைத் தேர்தல், பிரதேச சபைத் தேர்தல், உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் என மக்கள் காலம் காலமாக கடந்த 75 வருடகாலமாக  பலதரப்பட்ட தேர்தல்களை பார்த்து வருகின்றனர்.

ஒருவகையில் இவை உற்சவங்களாகிவிட்டன. மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டில் மற்றும் ஒரு குட்டித் தேர்தல், உள்ளுராட்சி மன்றங்களின் பெயரில் நடக்கவிருக்கிறது.

பல கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.  இனி, தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்களும், பேச்சாளர்களும் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு வருவார்கள். அத்துடன் சந்திக்கு சந்தி மேடைகள் அமைத்து ஒலிவாங்கியை பிடித்துக்கொண்டு முழங்கத் தொடங்குவார்கள்.  ஊடகங்களில் விளம்பரம் செய்வார்கள்.

வாக்குச்சாவடிக்கு நடந்து வரமுடியாத நோயாளர்களையும் வாகனத்தில் தூக்கி வந்து புல்லடி போடச்செய்வார்கள்.

இவ்வளவு காட்சிகளும் மீண்டும் நாட்டில் அரங்கேறப் போகின்றன.

ஆனால்,  மக்கள்  தேர்தல் காலத்தில் மாத்திரம் தம்மைத்தேடி வரும்  வேட்பாளர்களிடம் ஏதும் கேள்விகள் கேட்பார்களா..?    

  எமக்குரிய இந்தத் தேவைகளை செய்து தந்தால்தான் வாக்களிப்போம்   என மக்கள் அவர்களிடம் சொல்வார்களா..? அதற்காகவாவது வாய் திறந்து மக்கள் பேசுவார்களா…?  அல்லது வாங்க மச்சான் வாங்க , வந்த வழியைப் பார்த்து போங்க  - எனப் பாடுவார்களா…?

இதுவரையில் கேட்காதிருந்த மக்கள், இனியாவது கேட்கவேண்டிய காலம் வரவேண்டும்.  மக்களால் தெரிவாகி பராளுமன்றம், மகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்களுக்கு இதுவரையில் சென்றவர்களின் வருடாந்த சொத்து மதிப்பு எவ்வளவு?   என்றாவது  வாக்காளர்கள் தம்மைத்தேடி வரும் அரசியல்வாதிகளிடம் இதுவரையில் கேட்டிருக்கிறார்களா..?

இலங்கை ஜனநாயக நாடு.  பேச்சுரிமையுள்ள நாடு.  வாக்களிக்கும் மக்களுக்கு கேள்வி கேட்கும் உரிமையும் இருக்கிறது.

 பாராளுமன்றத்தில் பேசும் அரசியல்வாதிகளின்   உரைகள் பதிவாகும் ஹன்சார்ட்டை மக்கள் பார்ப்பதில்லை. மக்களால் பாராளுமன்றம் அனுப்பப்பட்ட அரசியல்வாதிகள் அங்கே என்ன பேசுகிறார்கள்…? எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் ?  என்பதை ஊடகங்களிலிருந்துதான் மக்கள் அறிந்துகொள்கிறார்கள். 

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இன்னமும் நீதியின் முன்பாக  நிறுத்தப்படவில்லை. ஆண்டுகள் நான்காகப்போகிறது. எனினும் ஒரு  முக்கிய செய்தி  நீதிமன்றத்திலிருந்து வந்துள்ளது.

சம்பவம் நடந்த காலத்தில் ஜனாதிபதியாகவிருந்த மைத்திரிபால சிறிசேன ,  நூறு மில்லியன் ரூபா தண்டப்பணம் செலுத்தவேண்டுமாம்.  அவரால் அந்த உத்தரவை எதிர்த்து மேன்முறையீடும் செய்ய முடியாதவகையில் தீர்ப்பு வந்திருப்பதனால்,  அந்தப்பணத்தை சேகரிக்க தனக்கு மக்கள்தான் உதவவேண்டும் என அவர் சொல்லியிருக்கிறார்.

அவரது வேண்டுகேளை அவதானித்த  சிங்கள கலைஞரான சுதத்த திலகசிறி என்பவர்,   புறக்கோட்டை பஸ் நிலையத்தில் உண்டியல் குலுக்கி பணம் சேர்த்துள்ளார். அவ்வாறு சேர்த்த பணத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் சென்று கையளித்துமுள்ளார்.  முன்னைய ஜனாதிபதித் தேர்தலிலும்,  கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போதும்  இதே மைத்திரி  நாட்டு மக்களிடமும் தனது தொகுதி மக்களிடம் வாக்குப்பிச்சை கேட்டார்.  இப்போது அவருக்காக ஒரு கலைஞர் வீதியில் இறங்கி மக்களிடம் பணம் கேட்டு பிச்சை எடுக்கிறார். 

தேர்தலில்  வாங்கிய வாக்கையும், வீதியில் பெற்ற பிச்சையையும் மீண்டும் திருப்பிக்கொடுக்க முடியாது !

ஒரு முன்னாள் ஜனாதிபதி காலத்தில், அவரது கவனயீனத்தினால் நடந்த படுபாதகச்செயலுக்கு தண்டப்பணம்  நூறு கோடி ரூபா. கொல்லப்பட்டது அப்பாவி பொதுமக்கள். அதிலும்  சிலுவையில் அறையப்பட்ட யேசுபிரானை வணங்கச் சென்றவிடத்தில் நடந்த அநர்த்தம்.  மூன்றரை ஆண்டுகள் கடந்த பின்னர், இப்போதுதான் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது.

சரி… போகட்டும். இதுகுறித்து பாராளுமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவும், மைத்திரிபால சிறிசேனவும்  வாய்ப்பேச்சில் மோதிக்கொண்டபோது உதிர்த்த வார்த்தைகள் எத்தகையது என்பதை பாருங்கள்.

புறக்கோட்டையில் மைத்திரிக்காக பிச்சை எடுத்தவர் ஒரு சிங்கள கலைஞர். ஆனால், மைத்திரிதான் அங்கே பிச்சை எடுக்கிறார் எனச்சொல்கிறார் பீல்ட் மார்ஷல்.

அதற்கு எதிர்வினையாற்றும் மைத்திரி, தன்னை விமர்சிக்கும் பீலட்மார்ஷல் முன்னர் மகிந்த காலத்தில் சிறையிலிருந்தபோது, அவரை பொதுமன்னிப்பில் விடுவித்து, இழந்துபோன பட்டத்தையும் தான்தான் கொடுத்ததாகவும், தன்னை விமர்சிக்கும் தகுதி அவருக்கு இல்லையென்றும், முன்னர் இவரும் குண்டுத்தாக்குதலில் குடல் வெளியே வந்து சிகிச்சை பெற்றவர் எனவும், தன்னை விமர்சித்து வரும் சந்திரிக்காவும் ஒரு குண்டுத் தாக்குதலில் கண்ணை இழந்ததாகவும் சொல்கிறார்.

2019 இல் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு சென்றவர்கள் திரும்பி வரவில்லை. அவர்களில் பலர் கண்களையும் உடல் உறுப்புகளையும் இழந்தனர். 

அவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைப்பதற்கு பாடுபடாத இந்த அரசியல் வாதிகள்,  தங்களுக்குள் பிடுங்குப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தனது அரசியல் எதிரிகளுக்கு    குடல் போனதையும் கண் போனதையும் பற்றி பேசும் மைத்திரியார், அன்று  தேவாலயங்களில் உயிரை இழந்த மக்களுக்கு மீண்டும் உயிரைத்தான் தரமுடியாது,

ஏன் அவ்வாறு நடந்தது என்பதை கண்டறிவதற்காகவாவது இந்த பாராளுமன்ற அரசியல்வாதிகள் இதுவரையில் ஆக்கபூர்வமாக என்ன நடவடிக்கை எடுத்தார்கள்…?

வரவிருக்கும் தேர்தல் காலத்தில் மக்கள் இவர்களிடம் கேட்கவேண்டிய கேள்விகள் அநேகம் இருக்கின்றன.

--------0-------

                   

No comments: