உக்ரைனுக்கு டாங்கிகளை வழங்க அமெரிக்கா மற்றும் ஜேர்மனி தயார்
கூடுதல் ஆயுதங்களை கேட்டு உக்ரைனிய அரசு கோரிக்கை
உக்ரைனுக்கு IMF 16 பில்லியன் டொலர் கடன்
அமெரிக்க ஜனாதிபதி வீட்டில் அதிரடி சோதனை: இரகசிய ஆவணங்கள் மீட்பு
பூமிக்கு மிக அருகால் சிறு விண்கல் பயணம்
உக்ரைனுக்கு டாங்கிகளை வழங்க அமெரிக்கா மற்றும் ஜேர்மனி தயார்
கடந்த பல மாதங்கள் நீடித்த இழுபறிக்குப் பின் உக்ரைனுக்கு டாங்கிகளை வழங்க அமெரிக்கா மற்றும் ஜேர்மனி தீர்மானித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது ரஷ்யாவுடனான போரில் திருப்பமாக அமையும் என்று உக்ரைன் கருதுகிறது.
இதில் குறைந்து 30 எம்1 அப்ரஹாம் டாங்கிகளை வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் குறைந்தது 14 ‘லெபார்ட் 2’ டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்க ஜேர்மனி சான்சலர் ஒலாப் ஸ்கொல்ஸ் தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனை அப்பட்டமான ஆத்திரமூட்டும் செயல் என்று அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதுவர் கண்டித்துள்ளார்.குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே சலஞ்சர்ஸ் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்குவதாக பிரிட்டன் கூறியிருப்பதோடு, ஜெர்மன் தயாரிப்பு ‘லெபார்ட் 2’ டாங்கிகளை வழங்க போலந்து ஜேர்மனியின் ஒப்புதலை கோரியுள்ளது.
உக்ரைனில் வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகும் வசந்த காலத்தில் ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்க இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
கூடுதல் ஆயுதங்களை கேட்டு உக்ரைனிய அரசு கோரிக்கை
ரஷ்யாவுக்கு எதிரான போரில் கூடுதல் ஆயுதங்களுக்கு உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
போர் விமானங்களும் நெடுந்தொலைவு ஏவுகணைகளும் தேவைப்படுவதாக உக்ரைன் கூறியது.
மேற்கத்திய நட்பு நாடுகள் குறைந்தது 150 கவச வாகனங்களைக் கொடுத்து உதவ உறுதியளித்துள்ளன. ஆனால் அவை போதாது என்றும், கூடுதல் ஆயுதங்கள் தேவை என்றும் உக்ரைன் கூறுகிறது.
மேலும், மேற்கத்திய நாடுகள் உறுதியளித்துள்ள கவச வாகனங்கள் வந்துசேர்வதற்கு மாதங்கள் ஆகலாம் என்றும் அது குறிப்பிட்டது.
ஸ்கை செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, கவச வாகனங்கள் தாமதமாக வந்துசேரக்கூடும் என்று அஞ்சுவதாகத் தெரிவித்தார்.
பிரிட்டன் மார்ச் மாத இறுதியில் சலஞ்சர் கவச வாகனங்களை அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது. கனடாவும் உதவி செய்ய முன்வந்துள்ளது.
ஜெர்மானியத் தயாரிப்பான லெபார்ட் 2 ரகக் கவச வாகனங்களை வரும் வாரங்களில் அனுப்பி வைக்கவிருப்பதாக அது கூறியது. நன்றி தினகரன்
உக்ரைனுக்கு IMF 16 பில்லியன் டொலர் கடன்
சர்வதேச நாணய நிதியம் (IMF) உக்ரைனுக்கு 16 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி வழங்குவது குறித்துப் பரிசீலித்து வருகிறது.
வரும் ஏப்ரல் முதல் உதவி நிதி சென்று சேரலாம் என்று ப்ளும்பேர்க் நிறுவனம் கூறுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவித் திட்டத்தைச் செயல்படுத்த பல நிபந்தனைகள் உள்ளன. முதலில் ஜி7 தொழில்வள நாடுகள் அதை அங்கீகரிக்க வேண்டும். அடுத்து உக்ரைன் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாண்டு உக்ரைனுக்குச் சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் தேவைப்படும் என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிடுகிறது.
உக்ரைனிய நிதி அமைச்சர் இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 42 பில்லியன் அமெரிக்க டொலர் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறுகிறார். நன்றி தினகரன்
அமெரிக்க ஜனாதிபதி வீட்டில் அதிரடி சோதனை: இரகசிய ஆவணங்கள் மீட்பு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் டெல்வாரில் உள்ள வீட்டில் 13 மணிநேரம் இடம்பெற்ற அதிரடி சோதனையில் அமெரிக்க நீதித் திணைக்கள விசாரணையாளர்கள் மேலும் ஆறு ரகசிய ஆவணங்களை கண்டுபிடித்துள்ளனர்.
இதில் சில ஆவணங்கள் அவர் செனட்டராக இருந்தபோது உள்ளவை என்பதோடு மற்றையவை ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காலத்தில் துணை ஜனாதிபதியாக செயற்பட்டபோது இருந்த ஆவணங்களாகும்.
இதன்போது கையால் எழுதப்பட்ட தனிப்பட்ட குறிப்புகள் மற்றும் வேறு அவணங்களும் எடுத்துச் செல்லப்பட்டதாக பைடனின் வழக்கறிஞர் பொப் பவுர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு பைடன் மற்றும் அவரது மனைவி இருக்கவில்லை.
துணை ஜனாதிபதியாக இருந்தபோதான பதிவுகள் மற்றும் ரகசிய ஆவணங்கள் குறித்து தனது ஒட்டுமொத்த வீட்டு வளாகத்தையும் சோதனையிட ஜனாதிபதி ஜோ பைடன் நீதித் திணைக்களத்திற்கு அனுமதி அளித்திருந்தார்.
முன்னதாக பைடனின் நிறுவனம், வெளிங்கடன் வீட்டு வாகனத் தரிப்பிடம் மற்றும் வீட்டின் களஞ்சியத்தில் இருந்து ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. எனினும் கண்டுபிடிக்கப்பட்ட அந்த ஆவணங்களை உடனடியாக தேசிய காப்பகம் மற்றும் நீதித் திணைக்களத்திடம் கைளித்ததாக பைடன் குறிப்பிட்டிருந்தார். எனினும் அவர் அதனை ஏன் வைத்திருந்தார் என்பது உறுதி செய்யப்படவில்லை.
ஜனாதிபதி பதிவு சட்டத்தின்படி பதவிக் காலம் நிறைவடைந்த பின் வெள்ளை மாளிகை பதிவுகள் பாதுகாப்பாக வைக்க முடியுமான வகையில் தேசிய காப்பகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரகசிய ஆவணங்களை கையாண்ட விதம் குறித்து விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையிலேயே பைடனும் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
பூமிக்கு மிக அருகால் சிறு விண்கல் பயணம்
நிலவை விடவும் மிக நெருக்கமான தொலைவில் சிறிய விண்கல் ஒன்று நேற்று (27) பூமிக்கு மிகவும் அருகால் கடந்து சென்றது.
மினிபஸ் அளவான 2023 பி.யு. என்ற அந்த விண்கல் தென் அமெரிக்காவின் தெற்கு முனையால் 3,600 கி.மீ நெருங்கமாக பூமியை கடந்தது. இது செய்மதிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள தொலைவை விடவும் நெருக்கமானதாகும்.
ஒரு வாரத்துக்கு முன்னரே இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதனால் பூமிக்கு ஆபத்து இல்லை என உறுதி செய்யப்பட்டது. இந்த விண்கல் பூமியை தாக்கினாலும் அதன் பெரும்பகுதி வளிமண்டத்திலேயே அழிக்கப்பட்டுவிடும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமாக நாசா தெரிவித்தது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment