இலங்கைச் செய்திகள்

 ‘யுக்திய’ போதைப்பொருள் சுற்றிவளைப்பு மாணவர்களை இலக்கு வைத்த 4,000 வர்த்தகர் இதுவரை கைது

ஜனாதிபதிக்கும், வடக்கு கிழக்கு தமிழ் எம்.பிக்களுக்கும் இடையில் சந்திப்பு

டிஜிட்டல் NIC: விநியோகம் ஜனவரி முதல் ஆரம்பம்

மகுடம் சூடிய இலங்கை சிறுமி கில்மிஷா உதயசீலனுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

இந்திய தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய ஈழத்து சிறுமி கில்மிஷா



 ‘யுக்திய’ போதைப்பொருள் சுற்றிவளைப்பு மாணவர்களை இலக்கு வைத்த 4,000 வர்த்தகர் இதுவரை கைது

December 23, 2023 7:02 am 

நாட்டிலிருந்து போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 4 ஆயிரம் பேர், பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்துள்ளதாக, பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இந்த சிறந்த செயற்பாட்டுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது. பாதாளக்குழு செயற்பாடுகளையும் போதைப்பொருள் பாவனையையும் முற்றாக அழிப்பதற்கு நாட்டு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும், அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு வடக்கு சமூக பொலிஸ் குழு ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “உங்களின் குடும்பங்களை இல்லாமல் ஒழிக்கும் போதைப்பொருளை முற்றாக அழிக்கும் வேலைத்திட்டமே இதுவாகும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ள போதைப்பொருள் நகரங்கள் முதல் சிறு பிரதேசங்கள் வரையில் பரவியுள்ளது. அவற்றை முற்றாக சமூகத்தில் இருந்து அழிக்க வேண்டும்.எனவே இந்த சிறந்த செயற்பாட்டுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது. பாதாளக்குழு செயற்பாடுகளையும் போதைப்பொருள் பாவனையையும் முற்றாக அழிப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதற்காக சிறந்த திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். எதிர்காலத்திலும் செயல்படுத்துவோம்.

சில பிரதேசங்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்வது யாரென்பது குற்றப்புலனாய்வு பிரிவினர் எமக்கு அறிவித்துள்ளனர். எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படாத மற்றும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட போதைப்பொருட்கள் உங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை சீர்குலைக்கின்றது. இந்த பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு போதைப் பொருட்களை இறக்குமதி செய்யும் தரப்பினரை இலக்கு வைத்தே மேற்கொள்கிறோம். மேற்கொள்ளப்பட்டுள்ள ஒவ்வொரு சுற்றிவளைப்புகளின் போதும் மிக முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் போதைப்பொருள் விற்பனை செய்யும் தரப்பினரும் உள்ளடங்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 4 ஆயிரம் பேர் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்துள்ளனர். இவர்களை கைது செய்து அவர்களிடமிருக்கும் சொத்துகளையும் கைப்பற்றும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.   நன்றி தினகரன்   






ஜனாதிபதிக்கும், வடக்கு கிழக்கு தமிழ் எம்.பிக்களுக்கும் இடையில் சந்திப்பு

- காணி, மீள் குடியமர்த்தல், நல்லிணக்கத்திற்கு அமைவாக சட்டத்தை நடைமுறைப்படுத்தல்

December 21, 2023 6:34 pm 

– தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கையரின் பிரச்சினைகள்
– வடக்கு, கிழக்கு அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்றது.

இதன்போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.

காணி, மீள் குடியமர்த்தல், நல்லிணக்கத்திற்கு அமைவாக சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கையரின் பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் சாத்தியமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன், எஸ்.ராசமாணிக்கம், ஜீ.கருணாகரன்,டீ கலையரசன், குலசிங்கம் திலீபன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.இம்.சீ.எம்.ஹேரத், சுற்றாலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பீ.பீ.ஹேரத் உள்ளிட்டவர்களும் நல்லிணக்கம் தொடர்பிலான நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்துகொண்டிருந்தனர்.   நன்றி தினகரன் 





டிஜிட்டல் NIC: விநியோகம் ஜனவரி முதல் ஆரம்பம்

December 21, 2023 7:33 am

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக புதிய அடையாள அட்டைகளை பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து படிப்படியாக சகலருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அடையாள அட்டைக்கான டிஜிட்டல் புகைப்படத்தை பெறுவதற்கான கட்டணம் 400 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 150 ரூபா முதல் பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





மகுடம் சூடிய இலங்கை சிறுமி கில்மிஷா உதயசீலனுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

- நாட்டிற்கு புகழ் சேர்த்தமைக்கு பாராட்டு

December 19, 2023 9:08 pm 

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் “Zee Tamil” தொலைக்காட்சி அலைவரிசை நடத்திய ‘சரி கம பா little champs 2023’ போட்டியில் மகுடம் சூடிய இலங்கையின் கில்மிஷா உதயசீலனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

14 வயதுடைய கில்மிஷா உதயசீலன் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன், இலங்கைப் பெண் ஒருவர் இந்திய தொலைக்காட்சி பாடல் போட்டியில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.

கில்மிஷா உதயசீலன் நாட்டிற்கு புகழ் சேர்த்தமைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளதுடன், சிறுமியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எதிர்காலக் கல்வி மற்றும் இசை வாழ்வில் வெற்றிபெற தனது ஆசிகளையும் தெரிவித்துள்ளார்.

(கில்மிஷா உதயசீலனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)




நன்றி தினகரன் 






இந்திய தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய ஈழத்து சிறுமி கில்மிஷா

December 18, 2023 10:14 am 

Zee Tamil தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப இசை போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஈழத்து குயில் யாழ்.அரியாலையை சேர்ந்த கில்மிஷா உதயசீலன் வெற்றி வாகை சூடியுள்ளார்.

தென்னிந்திய தொலைக்காட்சியின் ஒன்றின் ஒன்றில் முதன்முறையாக இலங்கையை சேர்ந்த சிறுமி ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இசை நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று (17) நடைபெற்றது. பரபரப்பான தருணத்தில் வெற்றியாளராக இசையமைப்பாளர் யுவன் சங்கராஜாவினால் கில்மிஷா அறிவிக்கப்பட்டார்.   நன்றி தினகரன் 

No comments: