திருகோணமலை தொடர்பான சர்ச்சைகள்

 December 20, 2023


‘ஆடு நனைகிறதென்று ஓநாய் கவலைப்படுவதாக’ ஒரு கூற்றுண்டு – அவ்வாறுதான் இப்போது சில விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மக்களுக்கு பாதகமான வகையில் திருகோணமலையை இந்தியாவுக்கு வழங்கினால் போராடப் போவதாக – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் கூறியிருக்கின்றார்.
அண்மைக்காலமாக இவ்வாறான கதைகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றனவா என்று சந்தேகப்பட வேண்டியிருக்கின்றது.
அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே அவ்வப்போது திருகோணமலைக்கு சென்று திருகோணமலையை இந்தியாவுக்கு வழங்கப்போவதான – போலியான கதைகளைப் பரப்பி வருகின்றார்.
இதேபோன்று கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கிவரும் கடும்போக்கு குழுக்கள் சிலவும் இவ்வாறான கதைகளை கூறிவருகின்றன.
இந்தியாவின் திட்டங்களுக்காக திருகோணமலை நகரை அண்டிய பகுதிகளிலிருந்து மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்படப் போவதான கதைகளைப் பரப்ப முற்படுகின்றனர்.

சில திட்டங்களை முன்னெடுப்பதற்காக அரசாங்கம் பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றது.
அவைகள் அடிப்படையில் முதலீட்டுத் திட்டங்கள்.
அதனால் திருகோணமலை மக்களுக்கு ஏராளமான நன்மைகள் கிட்டும்.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால் திருகோணமலையில் இந்தியாவின் திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டும்.
அதேவேளை திருகோணமலையை தளமாகக் கொண்டு இயங்கிவரும் முன்னணி அரசியல் செயல்பாட்டாளர்கள் எவருமே இந்த விடயம் தொடர்பில் பேசவில்லை – ஆனால், இவ்வாறான போலியான பிரசாரங்கள் அனைத்தும் வெளியிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதன் பின்னணி தொடர்பில் தமிழ் கட்சிகள் ஆராய வேண்டும்.
பொதுவாக இந்திய அரசின் திட்டங்களை எதிர்க்கும் அரசியல் குழுக்கள் உண்டு. அவ்வாறான குழுக்களே திருகோணமலை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சங்களை விதைக்க முயற்சிக்கின்றன.
திருகோணமலை ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடம்.

திருகோணமலை எவரிடம் இருக்கின்றதோ – அவர் ஒட்டுமொத்த இந்து சமுத்திர பிராந்தியத்தையே கட்டுப்படுத்தும் வல்லமையை பெறுவார் – என்பது நெப்போலியனின் கூற்று.
இன்றைய உலக இராணுவ தொழில் நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் நோக்கினால் இந்தக் கூற்று முன்னைய கவர்ச்சியுடன் நோக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை – எனினும், திருகோணமலையின் மூலோபாய முக்கியத்துவம் இப்போதும் தவிர்க்க முடியாத இடத்திலேயே இருக்கின்றது.

இந்த அடிப்படையில், திருகோணமலையில் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் நிலைகொண்டால் அது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை நிச்சயம் கேள்விக்கு உள்ளாக்கும்.
இந்தப் பின்புலத்தில் திருகோணமலை தொடர்பில் இந்தியா பிரத்தியேக கவனம் செலுத்துவது முற்றிலும் சரியானதும் நியாயமானதுமாகும்.
ஆனால், அதற்காக திருகோணமலையை இந்தியாவுக்கு வழங்கப் போவதான கதைகள் முற்றிலும் தவறானவை.
இவ்வாறான கருத்துகள் பரப்பப்படுவதற்கு பின்னால் நிச்சயமாக இந்தியாவுக்கு எதிரான சக்திகள் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சில வெளிவிவகார தீர்மானங்களின் விளைவாக இந்தியா அதிருப்தியடைந்தது.

இதன் விளைவாகவே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் திருகோணமலை துறைமுகத்தின் பயன்பாடு மற்றும் எண்ணெய் குதங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்க திருகோணமலையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் முதலீடுகளை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த அடிப்படையில் சில திட்டங்களை முன்னெடுப்பதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்கின்றன.
இவ்வாறான பின்புலத்தில்தான், இந்தியா தொடர்பான போலியான செய்திகளை பரப்ப முற்படுகின்றனர்.   நன்றி தினகரன் 



No comments: