மாணிக்க வாசகர் மாசிலா மாணிக்கம்

 
















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் …. அவுஸ்திரேலியா

 


இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

மன்னவன் பாண்டியன் மாபெரும் மண்டபம்

விண்ணவர் வியக்கவே மண்ணகம் மிளிர்ந்தது

 

பாண்டியன் அவையினைப் பார்ப்பவர் வியந்தனர்

பசுந்தமிழ் புலவர்கள் பாங்குடன் நின்றனர்

ஆக்கிய பாடலை அவையேந்தி வந்தனர்

அதற்குரை பகர்ந்தனர் அனைவரும் மகிழ்ந்தனர்

 

பண்ணொடு பாடினார் பலவுரை பகர்ந்தனர்

மன்னவன் வதனமோ மலர்ந்துமே நின்றது

எண்ணிலா பொருள்களை மன்னவன் ஈந்தனன்

பாடிய புலவர்கள் பரவசம் எய்தினார்

 

கற்றவர் பலரையும் பாண்டியன் அணைத்தான்

கடவுளை நம்பினான் கண்ணியங் காத்தான்

மற்றவர் துயருறா வழியிலே நடந்தான்

வாழ்விலே அறத்தை மாண்புடன் காத்தான்

 

நல்லமைச்சர் நாளும் நற்றுணையே என்று

வல்லவரை நாடி நல்லசபை அமைத்தான்

முதலமைச்சர் நாட்டின் முதுகெலும்பாய் அமைய

வாதவூர் வந்தாரை மனங்கொண்டான் மன்னன்


வாதவூர் பிறந்தாரை மன்னவன் மதித்து

தென்னவன் பிரம்மராயன் பட்டத்தைக் கொடுத்தான்

பற்றற்ற மனத்துடனே பதவியிலே அமர்ந்தார்

பாண்டிய நாட்டின் கண்ணியம் காத்தார்

 

பாண்டிய மன்னன் குதிரைப் படையினை

பெருக்கிட மனத்திலே விருப்பங் கொண்டான்

திருப் பெருந்துறையிலே சிறந்த குதிரைகள்

இருப்பதாய் அறிந்தான் வாங்கிட விரும்பினான்

 

அமைச்சர்க்கு அமைச்சரை அழைத்தான் அரசன்

அள்ளிக் கொடுத்தான் பொன்னும் பொருளும்

குதிரை வாங்கிடப் பணித்தான் பாண்டியன்

மதுரையை விட்டு மந்திரி அகன்றார்

 

திருப் பெருந்துறையில் தெரிசனம் கண்டார்

பொன்னை மறந்தார் தன்னை மறந்தார்

குருவடி வீழ்ந்தார் குதிரையை மறந்தார்

பவவினை அகலப் பற்றினார் குருவடி

 

பொன்னைப் பொருளைத் தானம் செய்தார்

புனிதமாம் கோவில் பணிகளைச் செய்தார்

அல்லும் பகலும் குருவை நினைந்தார்

அனைத்தும் துறந்தார் அமர்ந்தார் குருநிழல் 

 

குதிரை வாரா கவலை கொண்டான்

சேதியை அறிந்து சினமதில் ஏறினான்

அழைத்தான் அமைச்சரை வினவினான் பாண்டியன்

அமைச்சர் பகர்ந்தார் வந்திடுங்குதிரை ஆவணிமூலம்

 

பார்த்தான் பார்த்தான் பாண்டியன் பார்த்தான்

ஏய்த்தார் அமைச்சர் என்றுமே எண்ணினான்

குதிரைகள் எதனையும் காணா வரசன்

கொண்டான் கோபம் கொடுஞ்சிறை அடைத்தான்

 

அடியார் உள்ளம் அறிந்தவன் ஆண்டவன்

குதிரைப் பாகனாய் கொணர்ந்தார் குதிரையை

அரசன் மகிழ்ந்தான் அமைச்சரை மீட்டான்

அன்றிர வதிர்ச்சி அங்கே நடந்தது

 

பரிகள் அனைத்தும் நரியாய் மாறின

கடித்தன குதறின கலக்கமே எழுந்தது

மன்னன் கோவம் எல்லையைக் கடந்தது

வாதவூர் பிறந்தார் வதையினில் சுருண்டார்

 

அடியார் துயரைக் கண்டான் ஆண்டவன்

ஆறாம் வைகையைப் பெருகிடச் செய்தான்

பாண்டியன் பதறினான் வெள்ளம் பரந்தது

பாண்டிய மக்களை படர்ந்தது துயருமே

 

வெள்ளம் பரவா தடுத்திட அனைவரும்

அவரவர் பகுதியை அடைத்திடப் பணித்தான்

செம்மனச் செல்வி திகைத்தாள் அடைத்திட

இரங்கிய எம்பிரான் உதவிட வந்தனர்

 

பிட்டை விற்றுப் பிழைக்கும் கிழவி

பிட்டைக் கூலியாய் தருவேன் என்றாள்

பிட்டைச் சுவைத்தார் வேலையை மறந்தார்

கிழவியின் வேலை கிடப்பிலே கிடந்தது

 

அதிகாரி வந்தார் கிழவியை மிரட்டினார்

உறங்கிடும் வேலை யாளினைக்  காட்டினாள்

எடுத்தார் பிரம்பை அடித்தார் முதுகினில்

விண்ணும் அதிர்ந்தது மண்ணும் அதிர்ந்தது

 

அண்ட சராசரம் அனைத்திலும் விழுந்தது

அரசன் பயந்தான் அனைவரும் வெருண்டனர்

வாதவூர் பிறந்தாரை நாடினான் மன்னவன்

மன்னிக்க மன்னிக்க என்றுமே வேண்டினான்

 

வாதவூர் பிறந்தார் மதுரைவிட் டேகினார்

மணி மணியாகப் பாடினார் இறையினை

திருவினைப் பற்றியே மலர்ந்திட்ட யாவுமே

தேனாய் தித்திக்கும் திருவாசக மானது

 

மாணிக்க வாசகர் மாசிலா மாணிக்கம்

வாழ்வெலாம் சிவனை வாழ்த்திய மாமணி

தேசுடைத் தமிழினைச் சிந்தையில் ஏற்றி

வாசகம் கோவையை வழங்கிய வள்ளல்









































































































No comments: