எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் திகதி மலையக மக்கள் முன்னணி தலைவர் வே.இராதகிருஸ்ணன் தலைமையில் இந்த நூல்கள் வெளியிடப்படவுள்ளன.
குறித்த நூல்வெளியீடு தொடர்பில் சர்வதேச உறவுகள் மலையக மக்கள் முன்னணி செயலாளர் எச்.எச்.விக்ரமசிங்க கூறுகையில்,
மலையகம் மாற்றத்தை நோக்கி
கடந்த பத்தாண்டு காலப்பகுதியில் நாங்கள் வெளியிட்ட மலையக அரசியல், சமூக, இலக்கிய நூல்கள் மலையக நூல் வெளியீட்டுத் துறையில் அழுத்தமான தடங்களை பதித்துள்ளன. மலையகத்தின் எழுச்சித் தலைவர் பெ.சந்திரசேகரன் என்ற தலைப்பில் 2014 இல் வெளியிடப்பட்ட வரலாற்று நூல் நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த ஒர் அரசியல் தலைவனின் சாதனைப் பதிவாக அமைந்து சிறப்புச் சேர்த்தது.
இலங்கையின் தேசிய அரசியல் தலைவர்கள், மலையக அரசியல் தலைவர்கள், நாடாளுமன்றத்தில் அவரைப்பற்றி ஆற்றிய அனுதாப உரைகளுடன், மலையகக் கல்விமான்கள் என்று சகல தரப்பிலும் பதிவுகளைத் தொகுத்து வெளியான அந்நூல் மலையக அரசியல் தலைவர் ஒருவருக்கு நமது சமூகம் அளிக்க வேண்டிய பெருங்கடனை நிறைவேற்றியது.
மூன்று ஆண்டுகளில் பெ.சந்திரசேகரன் அவர்களின் அறுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு மறுபதிப்பைக் கண்டு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களான மனோகணேசன், பழனி திகாம்பரம், வே. இராதகிருஷ்ணன் ஆகியோரால் 2017இல் தலவாக்கலையில் நடைபெற்ற மே தின விழாவில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் வெளியிட்டு வைத்தது தலைவருக்கு நாம் செலுத்திய மாபெரும் அஞ்சலி ஆகும்.
இரண்டு பதிப்புக்களை கண்ட அந்த நூல ; இலண்டனில் முதல் வெளியீட்டை நிகழ்த்தி நம் தலைவனை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றது. அந்த வழிமுறையில் தேசிய தொழிலாளர் சங்க முக்கிய ஆளுமையான சி.வி.வேலுப்பிள்ளையின் மலையக அரசியல் “தலைவர்களும் தளபதிகளும்”என்ற நூல் மலையக அரசியல் வரலாற்றில் முன்னுதாரணமற்ற அரசியல் எழுத்துப் பதிவாகும்.
குறித்த நூல்வெளியீடு தொடர்பில் சர்வதேச உறவுகள் மலையக மக்கள் முன்னணி செயலாளர் எச் எச் விக்கிரமசிங்க
தோட்டத் தொழிலாளர் வீரப்போராட்டம்
ஐந்து ஆண்டுகளுக்கு முன் 'பத்திரிகையாளர் எஸ்.எம்.கார்மேகம் “வாழ்வும் பணியும்” என்று வெளியான நூல், குறிப்பாக மலையகப்பத்திரிகையுலகில் தனி ஜாம்பவனாகத் திகழ்ந்த அமரர் எஸ்.எம் கார்மேகத்தின் பெயரை வரலாற்றில் பதித்து பெரும் சாதனைப் புரிந்தது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதகிருஸ்ணனால் கம்போடியாவில் நடைபெற்ற சுமார் 1500 பேராளர்கள் கலந்துகொண்ட உலக தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டு பரந்த அங்கீகாரம் பெற்றது.
தொடர்ந்து இலண்டனிலும் இந்நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. புரட்சி பாவலன் பி.ஆர்.பெரியசாமியின் “தோட்டத் தொழிலாளர் வீரப்போராட்டம்” என்ற நூல் 1957 இல் வெளியாகி, ஐம்பத்தாறு ஆண்டுகள் கழித்து அந்த அரிய நூலைக் கண்டெடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாங்கள் மலையகத்தின் மூத்த ஆளுமைகளான பி.பி. தேவராஜ், தெளிவத்தை ஜோசப், பேராசிரியர் சோ. சந்திரசேகரன் ஆகியோரால் கொழும்பில் வெளியிட்ட போது, அரசியல் அரங்கில் அதற்குக் கிடைத்த வரவேற்பு எங்களுக்குப் புதிய ஊக்கத்தைத் தந்தது.
வீரகேசரி வார வெளியீட்டில் வெளிவந்த அமரர் சாரல்நாடனின் 'வானம் சிவந்த நாட்கள்' 2022 இல், நூல் வடிவம் பெற்றபோது, மலையகத் தொழிற்சங்கப் போராட்டத்தின் ஒளி பொருந்திய பக்கங்கள் சுடர்விட்டன.
தொழிற்சங்கப் போராட்டத்திற்காகத் தூக்கில் தொங்கிய ரா.வீராசாமி, ஐ.வேலாயுதம் ஆகியோரின் வரலாற்றை மிக விரிவாக, துல்லியமாகப் பதிவு செய்த மு.நித்தியானந்தன் நீண்ட முன்னுரை, தொழிற்சங்கப் போராட்ட சரித்திரத்திற்குக் கிடைத்த அரும்பெரும் பொக்கிஷமாகும்.
மாத்தளை பெ.வடிவேலன் எழுதிய “வல்லமை தாராயோ?” என்ற சிறுகதை தொகுப்பு சென்ற ஆண்டு தமிழகத்தில் வெளியாகி, டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி முனைவர் டாக்டர் குமார் ராஜேந்திரனின் ஒரு இலட்சம் ரூபா விருதினைப் பெற்று, மலையக எழுத்திற்குக் கடல் கடந்த அங்கீகாரத்தைத் தேடித்தந்தது.
குறித்த நூல்வெளியீடு தொடர்பில் மலையக மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில்
22 ஆளுமைகள் பற்றிய வரலாற்றுக் குறிப்பு
மலையக இலக்கியப் பேராசான் மு.நித்தியானந்தன் எழுதிய “மலையகச் சுடர்மணிகள்”, “மலையக இலக்கியம் சிறுமை கண்டு பொங்குதல்” என்ற இரண்டு நூல்கள் இவ்வாண்டு வெளியாகி, மலையக இலக்கியத்தின் அருமை பெருமைகளை தமிழ் கூறும் நல்லுலகெங்கும் எடுத்துச் சென்றுள்ளது.
இதில் மலையக சுடர்மணிகள் தொகுதியில் மலையகத்தின் 18 ஆளுமைகள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும், 'மலையக இலக்கியம் சிறுமை கண்டு பொங்குதல்' என்ற நூலில் மலையகத்தின் 22 ஆளுமைகள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களின் எமக்கு கிடைத்த ஐம்பத்தொன்பது சிறுகதைகளையும் தொகுத்து, அவர் வாழும் நாளிலேயே அவரது கரங்களில் சமர்ப்பிக்க எண்ணியிருந்தோம்.
கதைகளை அவர் படித்து பிழைகளை திருத்தி கொண்டிருந்த நேரத்தில் அவர் எம்மைவிட்டு பிரிந்தது பெரும் துரதிருஷ்டமாகும். 'தெளிவத்தை ஜோசப் கதைகள்' என்ற தலைப்பில் 476 பக்கங்களில் மு.நித்தியானந்தனும், எச்.எச்.விக்ரமசிங்கவும் வெளியிட்டிருக்கும் தொகுப்பு மலையக நூல் வெளியீட்டில் தனி அத்தியாயம் பதிக்கிறது.
எதிர்வருங்காலங்களில் நாம் வெளியிடவிருக்கும் “மலையகம் இங்கிருந்து எங்கே” பி.மரியதாஸ், எழுத்தாளர் அகிலனின் முன்னுரையுடன் சி.வி.வேலுப்பிள்ளையின் “எல்லைபுறம்”, “கோப்பிக்கிருளாஷிக்கும்மி” ஆபிரகாம் ஜோசப், “கோ.நடேசய்யர் சில ஆய்வுக்குறிப்புகள்” மு.நித்தியானந்தன் ஆகிய மலையக நூல்களும் மலையக அரசியல், சமூக, இலக்கிய வரலாற்றில் செழுமையைச் சேர்க்கும் என்பது திண்ணமாகும்.” என்றுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் சர்வதேச உறவுகள் செயலாளர் எச் எச் விக்கிரமசிங்க
நன்றி தமிழ்வின்
No comments:
Post a Comment