நூல் விமர்சனம்

 எழுத்துலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளரான திரு. மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவரது நூலான “ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழியின் வளர்ச்ச்சி” என்ற நூலின் வெளியீட்டு விழா சில மாதங்களுக்கு முன் மெல்பனில் நடைபெற்றது. அந்நூலைப்பற்றிய எனது பார்வையை இங்கு வழங்குகின்றேன்.


ஒரு மொழியின் வளர்ச்சி என்பது அதைத் தாய்மொழியாகக் கொண்ட இனம் எப்படி அம்மொழியை உயிர்த்திருக்க வைத்துள்ளது என்பதைப் பொருத்துள்ளது. உயிர்த்திருக்க வைத்துள்ளது என்றால் அந்த இனம் அதன்மொழியை எப்படி அழியாமல் பாதுகாத்து வைத்துள்ளது என்பதாகும்.

ஒரு மொழி அழியாமல் இருக்க வேண்டுமானால் முதலில் அம்மக்கள் அம்மொழியைப் பேசவேண்டும். தன் சந்ததியினருக்கும் தம் மொழியைக் கடத்த வேண்டும். தம்மொழியை கற்றுத்தர பள்ளி கல்லூரி என நிறுவ வேண்டும். மொழிக்காக நாளிதழ், வார மாத இதழ்கள் நடத்த வேண்டும். வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றிலும் கவனம் செலுத்துவதோடு திரைப்படங்களையும் தயாரித்து வலம் வரவேண்டும்.

இவ்வாறின்றி எந்த செயல்பாடுகளிலும் ஈடுபாடில்லாமல் பேசிக்கொண்டிருந்தால் கொஞ்சகாலத்தில் படிப்படியாக வழக்கொழிந்து மடிந்து விடும். இதற்கு சான்றாக எத்தனையோ வழக்கொழிந்த மொழிகளை வரலாறு மெய்ப்பித்திருக்கிறது. இந்த பின்னணியில் நின்று இந்த நூலுக்கு எனது விமர்சனத்தை வைக்கிறேன்.

ஒரு ஊருக்கு செல்ல வேண்டுமானால் அதற்கு பாதை என்று ஒன்றிருக்கும். அந்த பாதையைப்போல ஆஸ்திரேலிய நாட்டில் தமிழ் மொழியின் வளர்ச்சி என்பதை இவர்
ஆஸ்திரேலிய நாட்டினைப் பற்றிய விபரங்களோடு இந்நூலில் தந்துள்ளார்.

நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் இருக்கும் வெங்கலமணி மற்றும் அதில் பொறிக்கப்பட்டிருக்கும் தமிழ் எழுத்துக்களில் இருந்து தொடங்கி தமிழரின்
குடியேற்றம் ஆஸ்திரேலியாவில் எப்படியெல்லாம் நிகழ்ந்தது என்பதை பட்டியலிடுகிறார்.

மேலும் இங்கு குடியேறிய பெரும்பாலான தமிழர்களான இந்தியா மற்றும் இலங்கைத் தமிழர்களின் குடியேற்றம் எந்த அடிப்படையில் நிகழ்ந்திருக்கிறது என்பதையும் அதனால் அவர்களின் சிந்தனை செயற்பாடுகள் எவ்வாறு வெவ்வேறாய் உள்ளது என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.

ஆஸ்திரேலியாவில் தமிழ் அமைப்புக்கள் எந்த நோக்கத்திற்காக தோற்றுவிக்கப் பட்டன என்பதைக் கூறும் இவர் அவற்றுள் ஏற்பட்டுள்ள பிளவுகள் அதற்குண்டான காரணங்கள் போன்றவற்றையும் பட்டும் படாமலும் பதிவிடுகிறார். மேலும் தமிழ்ப் பள்ளிகள் தோன்றிய விதத்தையும் அவை விரிவடைந்து ஆற்றிய அற்புத பணிகளையும் பட்டியலிட்டுருப்பது நமக்கு இவர் திரட்டிய தகவல்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை எடுத்தியம்புகிறது.

அடுத்ததாக ஊடகங்களைப்பற்றி கூறுகையில் தமிழ் வானொலி தொட்டு தொலைக்காட்சி, திரைப்படம், பத்திரிகை மற்றும் சஞ்சிகைகள் என வரையறுத்து கூறுவதோடு அதற்குண்டான முன்னெடுப்புகள் செய்தவர்கள் தொட்டு பங்காற்றியவர்ஙள் அனைவரையும் ஒன்று விடாமல் கூறியிருப்பதை பாராட்டுக்குரியது.

ஆஸ்திரேலிய மண்ணில் நூலகங்கள் தொடங்கிய விதத்தை கூறுவதுடன் ஆக்கங்களை உருவாக்கும் படைப்பாளிகளைப் பற்றியும் விரிவாக கூறியிருப்பது போற்றப்பட வேண்டியதே.
நாடகங்கள் ஆஸ்திரேலியாவில் என்பது தொன்னூறுகளில் தோன்றிய விதத்தையும் அதன் வளர்ச்சி பற்றியும் பதிவிட்டுள்ளா்.

குழந்தை இலக்கியத்தை பற்றிக் குறிப்பிடும்போது அது ஆணிவேரைப் போன்றது அதைப் படைப்பது மிகவும் சிரமமானது என்று கூறும் இவர் குழந்தைகளின் உளவியலைப் புரிந்தால் மட்டுமே இது சாத்தியம் என்று கூறுவதால் படைப்பாளியான இவர் படைப்பின் இன்னொரு தளத்தில் பயணிப்பவர்களை பாராட்டியிருப்பது இவரது பண்பையும் உண்மையை ஏற்பதிலும் இவரை உயர்த்தி காட்டுகிறது.

சிறுகதைகளையும் நாவலையும் பற்றிச் சொல்லும்போது அதற்கு கொடுத்திருக்கும் விளக்கம் வித்தியாசமானதொரு கோணத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர் திரு. கே. எஸ். சுதாகர் அவர்களின் “சென்றிடுவீர் எட்டுத்திக்கும்” என்ற சிறுகதைத் தொகுதியைப் பற்றி விவரிக்கும்போது தன் மனதில் தோன்றியதை அப்படியே எழுதியுள்ளார்.

சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள பன்னிரெண்டு கதைகளையும் ஒவ்வொன்றாக விவரிக்கும்போது அவற்றை எந்த அளவுக்கு உணர்வு பூர்வமாக அணுகியிருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

அதன் வெளிப்பாடுதான் நல்ல விசயத்தை வாசித்தால் நல்ல விசயத்தை பார்த்தால் அதைப்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்று குறிப்பிடுவதோடு நிற்கவில்லை. சுவையான ஒரு உணவை உண்கிறோம். அதைப்பற்றி நம் கருத்தைச் சொன்னால் குறைந்தா போய்விடுவோம் என்கிறார்.

பிடித்தால் பிடித்திருக்கிறது. ஏன் பிடித்திருக்கிறது. என்னென்ன விதத்தில் சுவையை ஏற்படுத்தி தந்திருக்கிறது என்று சுவைத்தவர் சொன்னால் சமைத்தவர் சந்தோசப்படுவார் என்று கூறியிருப்பது அபிப்பிராயத்தை சொல்லாதவர்களைப் பற்றிய அவரது மனநிலையை காட்டக் கூடியதாகவும் உள்ளது.

அடுத்ததாக சிட்னியில் வசிக்கும் தேவகி கரணாகரன் அவர்களின் “அன்பின் ஆழம்” என்ற சிறுகதைத் தொகுதியைப் பற்றியும் சிறப்பான கருத்துக்களை கொடுத்துள்ளார்.
பணிக்கு செல்லும் கணவன் மனைவி மற்றும் அவர்களுக்குள் உருவெடுக்கும் பிரச்சினை எல்லாவற்றையும் கூறிவருவதோடு அப்பிரச்சினையை சரிவர கையாளாவிட்டால் ஏற்படும் விபரீதமான முடிவுகளைப் பற்றி கதையில் வருவதை அப்படியே இவர் நம் கண்முன் கொண்டு வருகிறார்.

இன்னொரு கதையில் ஒரு தாயின் கதையை
அது முதியோர் இல்லத்தில் நிறைவுறும் போது அத்தாயின் மனநிலையை கதையின் ஆசிரியர் விவரித்திருப்பதை இவர் சொல்லும்போது அக்கதையை நாம் படித்த உணர்வு ஏற்படுகிறது. அந்த அளவுக்கு இந்த நூலை உருவாக்க இவர் எடுத்துள்ள முயற்சி வெளிப்படுகிறது.

கட்டுரைகளைப் பற்றியும் கவிதைகளைப் பற்றியும் இவர் குறிப்பிடத் தவறவில்லை. கட்டுரையை பற்றி குறிப்பிடுகையில் 1994ல் வெளிவந்த அக்கினிக்குஞ்சு சஞ்சிகையில் திரு. யாழ். பாஸ்கர் அவர்களின் “தமிழர்களின் அடையாளங்களைப் பேணுங்கள்” என்ற கட்டுரையின் சிறப்பைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

அடுத்ததாக எழுத்தாளர் திரு. முருகபூபதியைப் பற்றி கூறும்போது ஆஸ்திரேலிய நாட்டின் தமிழ்ப் படைப்பாளிகளில் முன்னிற்பவர் என்றும் ஆஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சியில் இவரின் பங்களிப்பு மிகவும் காத்திரமானது என்பது உண்மையின் உரைகல்லாக நின்று சான்றளிக்கிறது.

கல்வித்துறையில் நீண்டகாலம் பணியாற்றியவரும் முன்னாள் தமிழ்க் கல்வி இயக்குனருமான எழுத்தாளர் திரு. எம். ஜெயராமசர்மா அவரகளின் “எங்கே போகிறோம்”, “நெஞ்சு பொறுக்குதில்லையே”, “திருந்த வேண்டும்” போன்ற கட்டுரைகளின் முதன்மைத்தன்மை பற்றி கூறும்போது அவற்றின் சிறப்பை அறிய முடிகிறது.

கங்காரு நாட்டின் மூத்த படைப்பாளியான திரு. சிசுநகேத்திரன் மற்றும் திருமதி. மனோ ஜெகேந்திரன் ஆகியோரின் பங்களிப்பையும் பதிவிட்டிருக்கிறார்.

கவிதைகளை பற்றிச் சொல்லும்போது திரு. ஜெயராமசர்மாவின் மனக் கொந்தளிப்பை “பால் மணக்கும் பாலரொடும்” என்ற தொடங்கும் கவிதை படம்பிடித்துக் காட்ட தவறவில்லை. அம்பிகைபாகர் என்ற பெயருடைய கவிஞர் திரு. அம்பி அவர்களின் கவிதையான “ ஓடிடும் தமிழா நில் நீ ஒரு கணம்” என்று தொடங்கும் கவிதையைச் சுட்டிக்காட்டி பாரதிதாசனையே நினைவூட்டியிருப்பதன் மூலம் தனது ஒப்பீட்டுத் திறனையும் மறைக்க முயலவில்லை.

கவிஞர். ஆழியாள் மதுபாஷினி அவர்களின் “பிறந்த வீட்டில் கறுப்பி” என்று
தொடங்கும் அடையாளம் என்ற கவிதையின் ஊடாக இந்தாட்டினர் இங்கு வந்துள்ள தமிழரை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் தமிழ்முரசு மின்னிதழ் ஆசிரியர் திரு. செ. பாஸ்கரனின் “முடிவுறாத முகாரி” என்ற கவிதைத் தொகுப்பில் வரும் “பறவைகள் எழுந்து பாடும் காலையும்” என்ற கவிதையின் ஊடாக தமிழ் சமூகத்தின் ஏக்கத்தையும் கவிஞர்கள் உணர்ச்சிகளின் வடிகாலாக எப்படிக் கொட்டியிருக்கிறார்கள் என்பதைக் காட்டி நிற்கிறது.

மேலும் தமிழ் வளர தமிழ் அமைப்புக்களும் இசை, நடனம் போன்ற தமிழ் சார்ந்த கலையை வளர்க்க நாட்டியப் பள்ளிகள் இசைப்பள்ளிகள் பல தோன்றிய விதத்தையும் அவை ஆற்றிய அரிய பணிகளைப் பற்றியும் மிகவும்விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் மூத்த குடிமக்கள் சங்கங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வாறு தோன்றின என்பதை விளக்கமாக சொல்லியிருக்கிறார். இந்த அமைப்புக்கள் கொண்டாடி வரும் பண்டிகைகளையும் சிறப்பாக பதிவிட்டிருக்கிறார்.

இறுதியாக இங்குள்ள இளைஞர்களுக்கு தமிழ்மீதுள்ள பற்றையும் அவர்கள் எப்படியெல்லாம் தமிழ் மொழியில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை. அத்தோடு ஆஸ்திரேலியாவில் ஆலயங்களில் தமிழர் என்ற தலைப்பில் தமிழர் எவ்வாறு ஆலயங்களை நிறுவினர் என்றும அந்த ஆலயங்களில் தமிழ் எவ்வாறு செயல் படுகிறது என்பதுடன் ஆஸ்திரேலியாவில் தமிழரது வாழ்வியலும் தமிழும் என்ற பகுதியோடு இந்நூலை நிறைவு செய்துள்ளார்.

அறுசுவை உணவென்றாலும் சிறு குறையாவது இருக்கும். அதுபோல் நிறைகளைச் சொல்லிவரும்போது ஒருசில குறைகளும் இருக்குமல்லவா?

தமிழின் பெருமை யாவரும் அறிந்ததென்றாலும் கடவுள் வாழ்த்தைப் போன்று செந்தமிழின் சீர்மிகு பெருமையை ஒருசில வரிகளிலாவது சொல்லி இந்நூலை ஆரம்பித்திருக்கலாம் என்பது என் உள்ளக்கிடக்கை.

சிட்னியில் வாழும் தமிழரின் எண்ணிக்கையை குறிப்பிடும்போது இங்கு தமிழர்களின் மொத்த எண்ணிக்கையில் நான்கில் மூன்றுக்கும் அதிகமானோர் வாழுகிறார்கள் என்கிறார். இதில் உள்ள வார்த்தைப்பிழை கருத்துப்பிழைக்கு வழிவகுக்கிறது.

இதை “இங்கு தமிழர்கள் மொத்த எண்ணிக்கையில்…….” என்றோ அல்லது “இங்கு மக்களின் மொத்த எண்ணிக்கையில்…….” என்றோ குறிப்பிட்டிருக்க வேண்டும். ஒன்றிரண்டு இடங்களில் எழுத்துப்பிழையும் உள்ளது.

மொத்தத்தில் இந்நூல் வருங்காலத்தில் ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழியின் வளர்ச்சி பற்றி அறிய விரும்புபவர்களுக்கு
ஒரு முன்னோடியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்பேன்.
கதை, கவிதை மற்றும் கட்டுரை எழுதுவதைக் காட்டிலும் தகவல்களைத் திரட்டி இதுபோன்று ஒரு நூலைப் படைப்பதற்கு பொறுமையும் நேரமும் அதிகம் வேண்டும். நூலாசிரியருக்கு எனது பாராட்டுக்கள்.

-சங்கர சுப்பிரமணியன்.

No comments: