“ உரிமைக்கோ அன்றில் விடுதலைப் போராட்டத்திற்கோ வன்முறை
நியாயமானதுதானா..? ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதுதானா…? என்ற வாதம் எப்போழுதுமே காலத்துக்கு காலம் மேலோங்கியிருக்கிறது.
இது பிரபல்யமாக தென்னாபிரிக்கா ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் சரித்திரத்தில் காணப்பட்டது. தீவிரவாத குற்றவாளியாக காணப்பட்டு 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் நெல்சன் மண்டேலா. இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்
அன்று மௌனம் சாதித்தன.
ஆனால், அதே நெல்சன் மண்டேலா பின்னாளில் ஜனாதிபதியாகத் தோன்றி, தன்னை முன்னர் தடை செய்த எல்லா
நாடுகளாலும் ஓர் உன்னத மனிதனாக கௌரவிக்கப் பட்டு அழைக்கப்பட்டார்.
அந்த அளவில்லாவிட்டாலும் ஒரு வகையில் இவை கியூபாவின் காஸ்ட்ரோவுக்கும்
சேகுவேராக்கும் பொருந்தும். அவர்கள் இலங்கை வந்தபொழுது தங்கள் நினைவாக மரங்கள் நாட்டிச் சென்றார்கள். அப்போது அவர்கள்,
வன் முறையாளராக பார்க்கப்படவில்லை.
இந்தப் போராட்டங்கள் எல்லாவற்றிலும் எவ்வளவோ கொடூர சம்பங்கள் இடம் பெற்றன.
ஆனால், வழிமுறைகள் நோக்கத்தின்
அடிப்படையில் நியாயப்படுத்தப்படுகின்றன என்ற சித்தாந்தம் உண்டு. (End Justifies the means)
“
படுகொலையின் பின்னணியில் வன்முறையும் அகிம்சையும் !! என்ற கட்டுரையில் ரவி அண்ணன் எழுதியிருந்தார்.
தன்னார்வத்தொண்டரும் மனித உரிமை செயற்பாட்டாளரும், போர் நீடித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் குரலை உலக நாடுகளை நோக்கி எழுப்பியவருமான அருட்தந்தை
அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் அருமைத்தங்கை ஜெஸி அவர்களின் அன்புக்கணவரான ரவி அண்ணன், இலங்கையிலும் இங்கிலாந்திலும் அவுஸ்திரேலியாவிலும்
அறியப்பட்ட ஓவியர். ஒளிப்படக்கலைஞர் செல்வத்துரை அய்யாவின் புதல்வர்.
புகழ்பூத்த நவாலியூர் சோமசுந்தரப்புலவர் யோகர்
சுவாமிகள் முதலானோரை தனது கெமராவில் படம் எடுத்தவர்தான் செல்வத்துரை
அய்யா. அந்தப்படங்களே இன்றுவரையில்
மக்களிடம் அறிமுகமாகியிருக்கிறது.
கலைஞர் செல்வத்துரை அய்யாவுக்கு ரவீந்திரநாத் தாகூரின் எழுத்துக்களில்
அலாதிப்பிரியம். அதனால், தனக்கு மகன் பிறந்தால் ரவீந்திரன் என்ற
பெயரைச்சூட்டுவதற்கு விரும்பியிருந்தார்.
செல்வத்துரை தம்பதியருக்கு இரண்டாவது புதல்வனாக 1943 ஆம்
ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி பிறந்த, ரவீந்திரன். கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரியிலும் படித்து சட்டக்கல்லூரியில் இணைந்து சட்டத்தரணியானவர்.
தமிழ்க்காங்கிரஸ் கட்சியும் அதிலிருந்து தோன்றிய தமிழரசுக்கட்சியும்
பின்னாளில் உருவான தமிழ்க்கட்சிகளும் சட்டத்தரணிகளின் முகாம்களாகவே விளங்குகின்றன.
இந்த முகாம்களிலிருந்து சமஷ்டி,சுயநிர்ணயம்,தேசியம் பேசிய பலருடன்
நெருக்கமான உறவுகளைக்கொண்டிருந்த ரவீந்திரன்,1983இனக்கலவரத்தையடுத்து இங்கிலாந்து சென்று
தமிழர் தகவல் நிலையம், தமிழ் அகதிகள்
புனர்வாழ்வுக்கழகம் முதலான அமைப்புகளுடன் இணைந்தவர்.
அவுஸ்திரேலியா மெல்பனுக்கு வந்தபின்னரும் தனக்குத் தெரிந்த வழிமுறைகளில்
தமிழர் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபாடு காண்பிப்பவர். இவரது தங்கைதான் எழுத்தாளர் ( அமரர் ) அருண்.
விஜயராணி.
மெல்பனில் முதல் முதலில் தோன்றிய இலங்கைத் தமிழ்ச்சங்கம் (C.T.A) பின்னர்
ஈழத்தமிழ்ச்சங்கமாகி (E.T.A) தற்போது விக்ரோரியா (V.T.A) தமிழ்ச்சங்கமாக
மாறியிருக்கிறது.
ஐந்து தசாப்த காலத்திற்குள்
இவ்வாறு பெயரில் உருமாறியிருக்கும் இந்த அமைப்பின் தொடக்க காலத்தின் உறுப்பினர்தான்
சட்டத்தரணி ரவீந்திரன். இவர் இச்சங்கத்தின் துணைத்தலைவராக
இருந்த காலப்பகுதியில்தான் 1987 இல் எனக்கு முதல் முதலில் அறிமுகமானார்.
சட்டத்தரணி ரவீந்திரன் எங்கள் அனைவருக்கும் “ரவி அண்ணன் “ ஆகியது இக்காலப்பகுதியில்தான்.
1972 ஆம் ஆண்டு கொல்வின் ஆர் டீ. சில்வா உருவாக்கிய புதிய
அரசியலமைப்பு ஏற்படுத்திய இடியப்பச்சிக்கலை இன்றுவரையில் அவிழ்க்கமுடியவில்லை.
அந்த அரசியலமைப்பை அன்று மீறியதனால் அமிர்தலிங்கம் ஆனந்தசங்கரி உட்பட சில
தலைவர்கள் கைதாகியிருந்தனர். அவர்களை மீட்பதற்காக நடந்த வழக்கு
விசாரணைக்கு அன்று சூட்டப்பட்ட பெயர் ட்ரயல் அட் பார்.
அச்சந்தர்ப்பத்தில் பல தமிழ்ச் சட்டத்தரணிகள் இந்த
வழக்கில் தோன்றினர். அவர்களின் நீண்ட பெயர்ப்பட்டியலைப்பார்த்து நான் வியப்படைந்தேன். தமிழர் உரிமைக்கு குரல்கொடுப்பதற்கு இத்தனை தமிழ் சட்டத்தரணிகளா? சிவில் வழக்கறிஞர்கள் - கிரிமினல் வழக்கறிஞர்கள் அனைவரும் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றிணைந்து வெற்றியீட்டிய வழக்குத்தான் அந்த பிரசித்தி பெற்ற ட்ரயல் அட்பார் நீதி விசாரணை.
வீரகேசரியில் இடம்பெற்ற நீண்ட சட்டத்தரணிகளின் பெயர்ப்பட்டியலில்
செல்வத்துரை ரவீந்திரனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இவருடைய
தொடர்பும் நட்புறவும் சகோதர வாஞ்சையும் எனக்கு அவுஸ்திரேலியாவில்தான் கிட்டியது.
தமிழ் அகதிகளுக்கென ஒரு அமைப்பு உருவாகவேண்டிய தேவை தோன்றியதும், அதனைப்பதிவுசெய்தோம். அதன் அமைப்பு விதிகளை
ரவீந்திரன் அவர்களே தயாரித்துத் தந்ததுடன்
அதன் காப்பாளராகவும் இயங்கினார். இதே காலப்பகுதியில் 1988 ஆம் ஆண்டு நவராத்திரி
காலத்தில் சரஸ்வதி பூசை நடத்தி அந்த நிகழ்வில் இலங்கை மாணவர்
கல்வி நிதியம் என்ற அமைப்பை அறிமுகப்படுத்தினேன். என்வசம் வந்து
சேர்ந்திருந்த இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களின்
கோரிக்கைகள் அடங்கிய கோவைகள் சிலவற்றை அறிமுகப்படுத்திய அன்றைய நிகழ்வை மங்களவிளக்கேற்றி
தொடக்கிவைத்தவர்தான் ரவிஅண்ணன்.
அவரே இந்தத்தன்னார்வத் தொண்டு
நிறுவனத்திற்கும் அமைப்புவிதிகளை எழுதித்தந்ததுடன் விக்ரோரியா மாநிலத்தில்
பதிவுசெய்தும் தந்தார். இந்த அமைப்பு 35 ஆண்டுகளை பூர்த்தி செய்தவாறு
ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் உதவியிருப்பதுடன் தங்கு தடையின்றி
இயங்கிவருகின்றது.
அக்காலப்பகுதியில் இலங்கையில் ரவி அண்ணரின் நண்பர்கள் தமிழ் அகதிகள்
புனர்வாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகர் சட்டத்தரணி கே. கந்தசாமி மற்றும் அமிர்தலிங்கம் -
வெ. யோகேஸ்வரன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
அவர்களுக்காக நடத்தப்பட்ட
நினைவுக்கூட்டங்களிலும் ரவி அண்ணன் உரையாற்றினார்.
1990களில் ரவி அண்ணன் தலைமையில் மெல்பனில் அவுஸ்திரேலியத் தமிழர் ஒன்றியம் என்ற
அமைப்பை உருவாக்கினோம். கதம்ப விழா -கலைமகள் விழா - பாரதி விழா - முத்தமிழ் விழா -
நாடகம் -நடனப்பயிற்சி பட்டறைகளும் நடத்தினோம். மாணவர்களின் தமிழ்ப்பேச்சாற்றலை
வளர்க்கவும் ஊக்குவிக்கவும் நாவன்மைப்போட்டிகளையும் நடத்தினோம். அவுஸ்திரேலிய முரசு இதழும்
வெளியிட்டோம்.
ரவி அண்ணன் பேச்சுவார்த்தைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அதனால் அவர்
சந்தித்த சவால்களும் அநேகம்.
எமது தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் எழுத்தாளர் விழா கருத்தரங்குகள்
சிலவற்றுக்கும் தலைமையேற்றவர். இவருக்கும் இலக்கிய கட்டுரைகள் சிறுகதைகள் எழுத
முடியும். ஆனால், அவற்றில் ஆர்வம் காண்பிப்பதில்லை.
நாம் தொகுத்து வெளியிட்ட உயிர்ப்பு கதைத்தொகுதியிலும்
ரவிஅண்ணனின் ஒரு சிறுகதை இடம்பெற்றுள்ளது. சிட்னியில் மறைந்த எழுத்தாளர்கள் காவலூர் ராசதுரை, எஸ்.பொன்னுத்துரை
ஆகியோருக்காக நடந்த இரங்கல் கூட்டத்திற்கும் ரவி அண்ணன்தான் தலைமை.
சமகாலத்தில் ரவி அண்ணன், அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவருகிறார். அத்துடன் சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் ,
ஊடகர் சந்தியாலன் நடத்தும் Focus Thamil வானொலியில் பிரதி வெள்ளி இரவு தோறும் சுவடுகள்
என்ற அரசியல் வரலாற்றுத் தொடரையும் தொகுத்து வழங்குகிறார்.
---0---


%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.jpg)
%20%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%B0%E0%AE%BF.%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88.jpg)
%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D.%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF.jpg)
No comments:
Post a Comment