காசாவில் ‘பஞ்ச அபாயம்’ குறித்து ஐ.நா. எச்சரிக்கை
காசாவில் போர் நிறுத்த பேச்சுகள் தீவிரம்: மக்கள் வெளியேற இஸ்ரேல் புது உத்தரவு
போர் நிறுத்தப் பேச்சுக்கு மத்தியிலும் காசாவில் ஹமாஸ்–இஸ்ரேலிய படை வீதிகளில் சண்டை
தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் தகுதி இழப்பு
இந்தியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா!
காசாவில் ‘பஞ்ச அபாயம்’ குறித்து ஐ.நா. எச்சரிக்கை
- இஸ்ரேலின் தாக்குதலால் 48 மணி நேரத்தில் 400 பேர் வரை பலி
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா பகுதி பஞ்சத்தை நோக்கிச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. எனினும் உதவிகளை அதிகரிக்கும் பாதுகாப்புச் சபை தீர்மானம் பெரும் இழுபறிக்குப் பின் அமெரிக்க நேரப்படி நேற்று வாக்கெடுப்புக்கு விடப்படவிருந்தது. ஆனால் போர் நிறுத்தம் ஒன்றை இந்தத் தீர்மானம் வலியுறுத்தவில்லை.
மறுபுறம் காசாவில் இதுவரை இல்லாத மோசமான போராக மாறி இருக்கும் இந்தப் போரை நிறுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய அரபு இராச்சியத்தினால் கொண்டுவரப்பட்ட நகல் தீர்மானத்தின் மீது கடந்த திங்கட்கிழமை வாக்கெடுப்பு நடத்தவிருந்த நிலையில் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு நேற்று வாக்கெடுப்புக்கு விடப்படவிருந்தது. ஆதரவாக வாக்களிப்பதாக அமெரிக்கா உறுதி அளித்திருக்கும் இந்தத் தீர்மானத்தில், மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு அவசர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டபோதும், போரை உடன் முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தப்படவில்லை.
இந்தத் தீர்மானத்தில் “போர்நிறுத்தம்” என்ற சொற்பிரயோகத்தை பயன்படுத்த இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான வீட்டோ அதிகாரம் பெற்ற அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டு வந்தது. ஹமாஸ் ஒழிக்கப்படும் வரை காசாவில் போர் நிறுத்தம் இல்ல என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த புதன்கிழமை (20) கூறியிருந்தார்.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி 1200 பேர் கொல்லப்பட்டு 240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதலை அடுத்து ஆரம்பமான இந்தப் போரில் இஸ்ரேலின் இடைவிடாத பயங்கரத் தாக்குதல்களால் காசா பகுதி பேரழிவை சந்தித்துள்ளது.
காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி இருப்பதோடு 6,000க்கும் அதிகமானவர்கள் காணமல்போயுள்ளனர். இவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
காசாவில் ஒட்டுமொத்த மக்களும் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ளனர் என்று ஐ.நா ஆதரவு உலகளாவிய பட்டினி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அரைமில்லியனுக்கும் அதிகமானோர் “பேரழிவு நிலைமையை” சந்தித்துள்ளார்கள் என்று அது குறிப்பிட்டுள்ளது.
“இத்தகைய இழப்பு மற்றும் அழிவுடன், கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் காசா மக்களுக்கு மேலும் பசி, நோய் மற்றும் விரக்தியை மட்டுமே கொண்டு வரும் என்று நாம் பல வாரங்களாகக் கூறி வருகிறோம்” என ஐ.நா மனிதாபிமான தலைவர் மார்டின் கிப்பித், எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரை மில்லியன் பேர் பசியால் வாடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் இது 4 மடங்கு அதிகம்.
பஞ்சத்தில் வாடும் பகுதியாக வகைப்படுத்த சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று 20 வீதத்திற்கு அதிகமானோர் பட்டினியால் வாடுவது. கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு, மரணங்களின் எண்ணிக்கையும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
மனிதநேய அடிப்படையிலான சண்டை நிறுத்தம் இந்த நிலையை மாற்றக்கூடும் என்று உலக உணவுத் திட்டம் கூறுகிறது.
தொடரும் உயிரிழப்புகள்
2.4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட குறுகிய நிலப்பகுதியான காசாவில் தற்போது 1.9 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
தமது வீடுகள் அழிக்கப்பட்டு நெரிசல் மிக்க முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் உணவு, நீர், எரிபொருள் மற்றும் மருந்துகளை பெற போராடி வருகின்றனர். நோய்கள் பரவி வருவதோடு தொடர்பாடல்களும் அடிக்கடி துண்டிக்கப்பட்டு வருகின்றன.
இடம்பெயர்ந்து துயரங்களை அனுபவித்து வரும் காசா மக்கள் போர் நிறுத்தம் ஒன்றை கோரி வருகின்றனர். “இந்த அவலத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கேட்கிறேன்” என ரபாவில் உள்ள பசுமையில்லம் ஒன்றில் அடைக்கலம் பெற்றிருக்கும் புவாத் அப்ராஹிம் வாதி தெரிவித்தார்.
“இந்தப் போர் அழிவைத் தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை. இது போதும்” என்றார்.
பல வார அழுத்தத்திற்குப் பின்னரே இஸ்ரேல் காசாவுக்கு நேரடியாக உதவிகளை வழங்க முடியுமாக அதன் கெரம் ஷலோம் எல்லைக் கடவையை திறந்தது. ஏற்கனவே காசாவுடனான எகிப்து எல்லைக் கடலையான ரபா வழியாக மட்டுப்படுத்தப்பட்ட உதவிகள் சென்று வருகின்றன.
எனினும் இஸ்ரேல் கடந்த வியாழக்கிழமை இந்த கெரம் ஷலோம் எல்லையின் காசா பக்கமாக தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இந்த எல்லைப் பகுதியால் உதவிகள் செல்வதை உலக உணவுத் திட்டம் இடைநிறுத்தியது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தும் அதே வேகத்துடன் நீடித்து வருகிறது.
ரபாவில் உள்ள குடியிருப்பு வீடுகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதல்களில் எட்டு பொதுமக்கள் கொல்லப்படதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது. கான் யூனிஸில் நடத்திய தாக்குதலில் மேலும் ஆறு பொதுக்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேல் நடத்தும் சரமாரி தாக்குதல்களில் கொல்லப்பட்ட தாய் மற்றும் ஐந்து மகள்கள் உட்பட ஒன்பது பேரின் சடலங்களை மீட்பாளர்கள் மற்றும் அம்புலன்ஸ் பணியாளர்கள் மீட்டுள்ளனர். ஜபலியா நகர் மற்றும் ஜபலியா அகதி முகாமில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாக வபா செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது.
காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் தொடர்பாடல்கள் தடைப்பட்ட சூழலிலும் கடந்த 48 மணி நேரத்தில் 390 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 734 பேர் காயமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தது.
மறுபுறம் பலஸ்தீன போராளிகள் காசாவில் இருந்து டெல் அவிவை நோக்கி வியாழக்கிழமையும் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். காசாவின் பல பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறியிருக்கும் நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
காசாவில் தொடர்ந்து எதிர்ப்பை சந்தித்து வரும் இஸ்ரேலிய இராணுவத்தின் மேலும் இரு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு காசாவில் சிறப்பு மீட்பு தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த 21 வயது லெப்டினன்ட் மற்றும் தெற்கு காசாவில் 7071 பொறியியல் படைப்பிரிவின் 31 வயது மேஜர் ஜெனரல் ஆகியோர் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இரு இஸ்ரேலிய படையினர் படுகாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதில் தெற்கு காசாவில் இடம்பெற்ற சண்டையில் இருவரும் வடக்கு காசாவில் ஒருவரும் காயமடைந்துள்ளதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்தது.
இதன்படி கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளுக்கு இடையே நான்கு இஸ்ரேலிய துருப்புகள் கொல்லப்பட்டிருப்பதோடு காசா மீது தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் மொத்தம் 138 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலின் உத்தியோகபூர்வ தகவல்கள் அடிப்படையில் ஐ.நா தெரிவித்துள்ளது. தவிர காசாவில் மேலும் 770 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
முரண்பாடு நீடிப்பு
எகிப்து மற்றும் அமெரிக்காவின் ஆதரவோடு கட்டாரின் மத்தியஸ்தத்தில் கடந்த மாதம் ஒரு வார போர் நிறுத்தத்தை ஏற்படுத்த முடிந்தது. அதன்போது 80 இஸ்ரேலியர்கள் உட்பட 105 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதோடு அதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 240 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பலஸ்தீன போராளிகளின் பிடியில் மேலும் 129 பணயக்கைதிகள் இருக்கும் நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மற்றொரு போர் நிறுத்தத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் தலைவர் எகிப்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு இதனையொட்டி ஐரோப்பாவிலும் சந்திப்புகள் இடம்பெற்றன.
எவ்வாறானும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் நிலைப்பாடுகளில் பெரும் முரண்பாடு நீடித்து வருகிறது.
இஸ்ரேல் தம்மை அழிக்க நினைப்பது பெரும் தோல்வியில் முடியும் என்றும் மேலும் பணயக்கைதிகளை விடுவிப்பது போர் நிறுத்தம் ஒன்றிலேயே தங்கியுள்ளது என்று ஹமாஸ் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.
பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு இராணுவ நெருக்கடி கொடுத்து மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வது சிறந்த வழியாக இருக்கும் என்று இஸ்ரேல் திட்டமிடுகிறது.
ஆனால் அந்த அணுகுமுறை இதுவரை அவ்வளவாக எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை. அந்த அணுகுமுறையின் கீழ் இதுவரை ஒரு பிணையாளி மட்டுமே மீட்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போர் பிராந்தியம் எங்கும் பரவும் அச்சம் நீடித்து வருகிறது. லெபனான் எல்லையில் இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் இடையே தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருவதோடு யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நன்றி தினகரன்
காசாவில் போர் நிறுத்த பேச்சுகள் தீவிரம்: மக்கள் வெளியேற இஸ்ரேல் புது உத்தரவு
பாதுகாப்புச் சபையில் தொடர்ந்து இழுபறி
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில் தெற்கு காசாவின் பிரதான நகரான கான் யூனிஸில் இருந்து மேலும் மக்களை வெளியேற்றும் புதிய உத்தரவை இஸ்ரேல் பிறப்பித்துள்ளது.
140,000க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் கான் யூனிஸின் பெரும் பகுதி ஒன்றில் இருந்து வெளியேறும்படி இஸ்ரேல் புதன்கிழமை (20) உத்தரவிட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் அங்கு மக்கள் செல்ல முடியுமான பகுதிகள் நாளுக்கு நாள் சுருங்கி வருவதோடு உயிரிழப்பு எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருவது சர்வதேச அளவில் கவலையையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு காசாவை அடுத்து தற்போது கான் யூனிஸை மையமாகக் கொண்டு தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பலஸ்தீனர்கள் மேலும் தெற்காக எகிப்து எல்லையை ஒட்டி ரபா பகுதிக்கு அடைக்கலம் பெற்று வருகின்றனர்.
இதனால் காசாவின் ரபா பகுதி சனநெரிசல் மிக்க இடமாக மாறியுள்ளது. அங்கு ஒரு சதுர கிலோமீற்றர் பகுதிக்கு 12,000 பேர் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.
“மோதலுக்கு முன்னரை விடவும் நான்கு மடங்கு அதிகாரித்து (ரபாவில்) சனநெரிசல் சதுர கிலோமீற்றருக்கும் 12,000 பேரை தாண்டியுள்ளது” என்று மனிதாபிமான விவகாரங்களின் இணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
முறைசாரா இடம்பெயர்ந்த இடங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களில் கழிப்பறைகள் மற்றும் போதுமான தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாத நிலையில், உணவு, தண்ணீர், தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் உதவி விநியோக மையங்களுக்கு முன் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்” என்று அது குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய மற்றும் தெற்கு கான் யூனிஸின் சுமார் 20 வீத பகுதியை உள்ளடங்கும் வகையில் பலஸ்தீனர்களை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
அங்கு 32 தற்காலிக முகாம்களில் இருக்கும் 140,000க்கும் அதிகமானோர் வெளியேற வேண்டியவர்களின் பட்டியலில் இருப்பதாகச் கூறப்படுகிறது. அவர்கள் ஏற்கனவே வடக்கு காசாவில் வீடுகளைவிட்டு வெளியேறித் தெற்கில் இருக்கும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.
2.2 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் 1.9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடரும் சூழலில் அங்கு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000ஐ தாண்டியுள்ளது. இதில் 8,000க்கும் அதிகமானவர்கள் சிறுவர்களாவர். கொல்லப்பட்டவர்களில் 97 ஊடகவியலாளர்கள், 310 சுகாதார பணியாளர்கள் மற்றும் 35 சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் அடங்குகின்றனர்.
தவிர, குறைந்தது 52,586 பேர் காயமடைந்திருப்பதோடு அவர்களில் 8,663 சிறுவர்கள் அடங்குகின்றனர். காசாவின் பெரும் பகுதி இஸ்ரேலிய தாக்குதல்களால் இடிபாடுகளாக மாறியிருக்கும் சூழலில் 4,900 சிறுவர்கள் உட்பட 6,700 பேர் காணாமல் போயுள்ளனர்.
போர் நிறுத்த முயற்சி
இதேவேளை காசாவில் புதிய போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது மற்றும் மேலும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு “தீவிர பேச்சுவார்த்தைகள்” இடம்பெற்று வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. எனினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் முழுமையாக முடிவுக்கு வராத வரை எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என்று ஹமாஸ் அமைப்பு உறுதியாக கூறியுள்ள சூழலில் உடன்பாடு ஒன்றை எட்டுவதில் நிச்சயற்ற நிலை நீடித்து வருகிறது.
எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு கடந்த பதன்கிழமை பயணித்த ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே, அங்கு எகிப்தின் மத்தியஸ்தத்திலான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
இதில் பலஸ்தீன போராளிகளின் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் அதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் பலஸ்தீனர்களை விடுவிப்பது தொடர்பில் தூதுக் குழுவினர் தீவிர பேச்சுவார்த்தைகளில் இடுபட்டு வருவதாக அந்த பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவரும் சாத்தியம் ஒன்று பற்றி பேசுவதற்கு காசாவில் இயங்கும் சிறிய போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் தலைவரும் எதிர்வரும் நாட்களில் எகிப்து செல்லவிருப்பதாக அந்த அமைப்பு கூறியது.
“இது தீவிர கலந்துரையாடல் மற்றும் பேச்சுவார்த்தையாக இருப்பதோடு அது ஓர் இடத்திற்கு இட்டுச் செல்லும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்” என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜோன் கிர்பி செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
எனினும் ஹனியேவின் ஊடக ஆலோசகரான டஹர் அல் நொனா ரோய்ட்டர்ஸுக்கு கூறியதாவது, “இஸ்ரேல் காசாவில் தனது இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்து பலஸ்தீன மக்களுக்கான உதவிகளை அதிகரிக்கும் வரை மேலும் இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்” என்றார்.
“இந்த இரு விடயங்களும் அடைந்த பின் கைதிகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்ட பின்னரே கைதிகள் தொடர்பில் எந்த ஒரு முன்மொழிவும் பேசப்படும்” என்று கெய்ரோவில் அளித்த பேட்டியில் அல் நொனா மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையில் மேலும் தற்காலிக போர் நிறுத்தங்களை ஹமாஸ் நிராகரிக்கிறது. “எகிப்தில் எமது சகோதரர்களுடன் நாம் பேசியதோடு இந்த ஆக்கிரமிப்பு மீதான எங்கள் நிலைப்பாட்டை குறிப்பிட்டு கூறியுள்ளோம். அவசரமாக போரை நிறுத்துவதே எமது முதல் முன்னிரிமையாக உள்ளது” என்றார் அல் நொனா.
மறுபுறம் எகிப்து பேச்சுவார்த்தை தொடர்பில் பொது வெளியில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
எனினும் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை நிராகரிக்கும் அது, ஹமாஸ் தோற்கடிக்கப்படும் வரையில் மட்டுப்படுத்தப்பட்ட மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு மாத்திரமே இணக்கத்தை வெளியிட்டு வருகிறது.
ஹமாஸ் ஒழிக்கப்பட்டு, அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டு, காசா இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் இல்லாத பகுதியாக மாற்றப்படும் வரை இந்தப் போர் தொடரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.
“நாம் போரை நிறுத்துவோம் என்று நினைப்பவர்கள் யதார்த்தத்தில் இருந்து விலகி நிற்கிறார்கள். ஆரம்பம் தொடக்கம் கடைசி வரை அனைத்து ஹமாஸ் பயங்கரவாதிகளும் இறந்தவர்களாக்கப்படுவார்கள்” என்று நெதன்யாகும் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கும் பாதுகாப்புச் சபையின் தீர்மானம் ஒன்றின் மீதான வாக்கெடுப்பு மூன்றாவது நாளாக நேற்று முன்தினத்திலும் ஒத்திவைக்கப்பட்டது.
ஐக்கிய அரபு இராச்சியம் கொண்டுவந்த இந்த நகல் தீர்மானத்தில், தற்காலிக போர் நிறுத்தம் என்ற சொல்லை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றித் தீவிரப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதில் அமெரிக்காவே முட்டுக்கட்டையை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே இவ்வாறான தீர்மானத்தின் மீது அமெரிக்கா வீட்டோ அதிகாரித்தை பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
பிராந்தியத்தில் நீடிக்கும் பதற்றம்
இஸ்ரேலுடனான லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் இஸ்ரேலிய படைகளிடையே அடிக்கடி மோதல் வெடிப்பதோடு செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இந்தப் போர் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை கிராமமான மரூன் அல் ராஸில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டு அவரது கணவர் காயமடைந்திருப்பதாக லெபனான் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில் இஸ்ரேலிய தாக்குதல்களில் லெபனானில் பொதுமக்கள் கொல்லப்படும் மூன்றாவது சம்பவமாக இது உள்ளது.
காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே அடிக்கடி இவ்வாறு பரஸ்பரம் தாக்குதல்கள் இடம்பெற்று வந்தபோதும் அவை எல்லைப் பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவே நீடித்து வருகிறது.
மறுபுறம் அமெரிக்கா மற்றும் மற்ற சர்வதேச படைகள் நிலைகொண்டிருக்கும் ஈராக்கில் உள்ள அல் அஸாத் விமானத் தளத்தின் மீது நேற்று (21) ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் உறுதி செய்துள்ளது.
காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஈராக் மற்றும் சிரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நன்றி தினகரன்
போர் நிறுத்தப் பேச்சுக்கு மத்தியிலும் காசாவில் ஹமாஸ்–இஸ்ரேலிய படை வீதிகளில் சண்டை
ஹமாஸ் தலைவர் ஹனியே எகிப்து விரைவு
போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காசாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரான கான் யூனிஸில் இஸ்ரேலிய படைகள் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே நேற்று (20) வீதிகளில் கடும் சண்டை வெடித்துள்ளது.
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலான வாக்கெடுப்பை ஐ.நா பாதுகாப்புச் சபை மேலும் ஒரு தினத்திற்கு ஒத்திவைத்த நிலையில், அமெரிக்க நேரப்படி நேற்று அந்த வாக்கெடுப்பு இடம்பெறவிருந்தது. ஐக்கிய அரபு இராச்சியம் கொண்டுவந்த நகல் தீர்மானத்தின் மீது கடந்த திங்கட்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தபோதும் பாதுகாப்புச் சபையின் 15 அங்கத்துவ நாடுகளிடையே உடன்பாடு ஒன்றை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்ட வாக்கெடுப்பு மீண்டும் புதன்கிழமை வரை பிற்போடப்பட்டது. குறிப்பாக போர் நிறுத்தம் பற்றிய சொற்பிரயோகத்திற்கு அமெரிக்கா உடன்பட மறுத்து வருகிறது. ஏற்கனவே போர் நிறுத்தம் மீதான பாதுகாப்புச் சபை தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டு மேலும் 240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட கடந்த ஒக்டோபர் 7 தாக்குதலுக்குப் பின்னர் ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாகக் கூறி காசா மீது இஸ்ரேல் நடத்தும் இடைவிடாத தாக்குதல்கள் அந்தப் பகுதியில் பேரிழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடையே பட்டினி அதிகரித்திருப்பதோடு பெரும் எண்ணிக்கையானவர்கள் வீடற்றவர்களாக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கும் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 20,000ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் தெற்கு காசா நகரான கான் யூனிஸின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே கடும் மோதல் இடம்பெற்று வருவதாக குடியிருப்பாளர் தெரிவித்துள்ளனர்.
நகரில் இருக்கும் வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று நேற்று அதிகாலையிலும் காசாவின் பல பகுதிகளில் இஸ்ரேலின் சரமாரி வான் தாக்குதல்கள் தொடர்ந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக வடக்கு காசாவில் ஜபலியா அகதி முகாம் மீது இடம்பெற்ற கடும் தாக்குதல்களில் பல டஜன் பேர் கொல்லப்பட்டிருப்பதோடு சிறுவர்கள் மற்றும் பெண்களே அதிகமாக உயிரிழந்திருப்பதாக வபா கூறியது.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை காசாவில் நடத்திய சரமாரித் தாக்குதல்களில் 100க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காசா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மேலும் மூன்று இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டனர். காசாவில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் அங்கு கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.
காசாவில் மனிதாபிமான நிலைமை அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெகன் சாபகைன் எக்ஸ் சமூகதளத்தில் தெரிவித்துள்ளார்.
“தற்போது இடம்பெற்று வரும் ஷெல் தாக்குதல்கள் மற்றும் போதுமான எரிபொருள் இல்லாமை காரணமாக உதவி விநியோகங்கள் மேலும் கடினமாகி வருகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் தலைவர் எகிப்தில்
மேலும் பணயக்கைதிகளை விடுவிக்கும் மற்றொரு போர் நிறுத்தத்திற்கு தயார் என இஸ்ரேல் அறிவித்த நிலையில், காசாவில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஒன்றுக்காக ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே நேற்று (20) எகிப்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
காசா பகுதிக்கான உதவி விநியோகங்கள் தடைப்பட்டு பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான சர்வதேச அழுத்தம் அகதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கட்டாரைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹமாஸ் தலைவர் ஹனியே உயர்மட்ட தூதுக் குழுவொன்றுடன் எகிப்தை சென்றடைந்திருப்பதோடு அவர் அங்கு எகிப்து உளவுப் பிரிவு தலைவர் மற்றும் ஏனையவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்.
“கைதிகளை விடுவிப்பதற்காக உடன்படிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு ஆக்கிரமிப்பு மற்றும் போரை நிறுத்துவது” தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக ஹமாஸ் வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
காசாவில் தொடர்ந்து 129 பணயக்கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருப்பது இஸ்ரேல் அரசுக்கு தனது சொந்த மக்களிடையே அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஹமாஸுடன் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பத் தயார் என்று இஸ்ரேல் கடந்த செவ்வாயன்று (19) சமிக்ஞையை வெளியிட்டது.
“பணயக்கைதிகளை விடுவிக்கும் முகமாக மற்றொரு மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் மேலதிக மனிதாபிமான உதவிகளுக்கு இஸ்ரேல் தயாராக உள்ளது” என்று இஸ்ரேலிய ஜனாதிபதி இசாக் ஹெர்சொக் தெரிவித்துள்ளது.
பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சியாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது உளவுப் பிரிவுத் தலைவரை ஐரோப்பாவுக்கு இரு சுற்றுப் பயணங்களை அனுப்பி இருந்தார்.
பலஸ்தீன போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு தனது பிடியில் இருக்கும் இரு பணயக்கைதிகளின் படங்களை செவ்வாயன்று வெளியிட்டது. இது இஸ்ரேலுக்கும் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான புதிய உடன்படிக்கை ஒன்று பற்றி கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி மற்றும் அமெரிக்க உளவுப் பிரிவாக சி.ஐ.ஏ. தலைவர் பில் பேர்ன்ஸை இஸ்ரேலின் மொசாட் உளவுப் பிரிவின் தலைவர் டேவிட் பேர்ன் ஐரோப்பாவில் சந்தித்து பேசி இருந்தார்.
ஹமாஸ் பிடியில் இருக்கும் மூன்று டஜனுக்கும் மேலான பணயக்கைதிகளுக்கு பகரமாக காசாவில் குறைந்தது ஒரு வார போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த இஸ்ரேல் முயற்சிப்பதாகத் தெரியவருகிறது.
எகிப்து மற்றும் அமெரிக்காவின் ஆதரவோடு கட்டாரின் மத்தியஸ்தத்தில் காசாவில் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஓரு வாரம் நீடித்த போர் நிறுத்தத்தின்போது இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் 240 பலஸ்தீன கைதிகளுக்கு பதில் 80 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதேவேளை கடந்த இரண்டரை மாதங்களில் நான்காவது முறையாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொஸைன் அமிரப்துல்லாஹியான் நேற்று முன்தினம் கட்டாருக்கு விஜயம் மேற்கொண்டார்.
அங்கு அவர் ஹமாஸ் தலைவர் ஹனியேவை சந்தித்து காசா மற்றும் மேற்குக் கரை நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இஸ்ரேலின் முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்கள் மற்றும் அது காசாவில் நிகழ்த்தும் போர்க் குற்றங்களுக்கு மத்தியிலும் போர்க் களத்தில் பலஸ்தீனர்கள் உறுதியாக உள்ளனர் என்று இதன்போது ஹனியே தெரிவித்துள்ளார்.
“இந்த வழியில் எதிர்ப்பை ஒழித்து வெள்ளைக் கொடியை உயர்த்தச் செய்ய முடியும் என்று சியொனிஸவாதிகளும் அதன் கூட்டாளிகளும் நம்புகின்றனர்” என்று தெரிவித்த ஹனியே, “எப்படி இருந்தபோதும் இந்த எதிர்ப்பு போர்க்களத்தில் இன்னும் உறுதியாகவும் துரிதமாகவும் உள்ளதோடு 75 நாட்கள் நீடிக்கும் இஸ்ரேலிய குற்றங்கள் மற்றும் கூட்டுப் படுகொலைகளுக்கு மத்தியிலும் சியொனிஸ அரசுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது” என்றார்.
முன்னதாக கடந்த மாதம் ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி கமனெய் டெஹ்ரானில் வைத்து ஹனியேவை சந்தித்திருந்தார்.
இஸ்ரேல் கப்பலுக்குத் தடை
காசா போர் பிராந்தியத்தில் பரவும் அச்சுறுத்தல் நீடித்து வருவதோடு, குறிப்பாக தெற்கு லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா போராளிகள் எல்லையில் இஸ்ரேலிய படைகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.
எல்லைப் பகுதியில் இரு மேலதிக படையினருக்கு காயத்தை ஏற்படுத்திய இரு தாக்குதல்கள் இடைமறிக்கப்பட்ட நிலையில் ஹிஸ்புல்லா நிலைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் செவ்வாயன்று (19) கூறியது.
மறுபுறம் யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள், பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தொடர்ந்து ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் பிரதான கப்பல் நிறுவனங்கள் பல தமது கப்பல் பாதையை திசை மாற்றி இருப்பதோடு இந்தத் தாக்குதல்களை கையாள்வதற்கு பன்னாட்டு இராணுவ கூட்டமைப்பு ஒன்றை அமெரிக்கா கடந்த திங்களன்று அறிவித்தது.
இந்நிலையில் தமக்கு எதிராக எந்த நாடேனும் செயற்பட்டால் செங்கடலில் அதன் கப்பல்கள் இலக்கு வைக்கப்படும் என்று ஹூத்திக்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை இஸ்ரேலிய கொடியுடனான கப்பல்களை தமது நாட்டில் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்று மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் நேற்று அறிவித்தார். பலஸ்தீனத்திற்கு எதிராக படுகொலை மற்றும் கொடூரத்தை நிகழ்த்தி வருவதாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.
தவிர, மலேசிய துறைமுகங்களில் சரக்குகளை ஏற்றி இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களுக்கும் தடை விதிக்கப்படுவதாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் உடன் அமுலுக்கு கொண்டுவரப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் தகுதி இழப்பு
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடத் தகுதியற்றவர் என கொலராடோ உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
அந்த மாநிலத்தின் 2024 முன்னோடி வாக்களிப்பில் போட்டியிட நீதிமன்றம் அவருக்குத் தடை விதித்தது. 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க பாராளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்டதில், டிரம்ப்புக்கு உள்ள தொடர்புக்காக அந்தத் தடை விதிக்கப்பட்டது.
அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட ஒரு வேட்பாளர் தகுதியற்றவர் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறை.
இப்போதைக்கு நீதிமன்றத் தீர்ப்பு கொலராடோ மாநிலத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள குடியரசுக் கட்சி முன்னோடித் தேர்தலுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
இருப்பினும் அது பரவலான வேறுபல தாக்கங்களை ஏற்படுத்துமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப்பின் பிரசாரக் குழு, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்தது. நன்றி தினகரன்
இந்தியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா!
- 90 வீதம் பாதிப்பு கேரளாவில்!
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில்தான் 90 வீதத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றவர்களின் எண்ணிக்கை 1701. இவர்களில் கேரளாவில் மட்டுமே 1324 பேர் பதிவாகி இருக்கின்றனர்.
கேரளா மாநிலத்தில் தினமும் 700 முதல் 1,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதேவேளை கேரளாவில் கொரோனாவால் 2 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,33,316 ஆகும். தற்போது கொரோனாவின் JN1 உருமாறிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களில் இல்லாத அளவுக்கு அதாவது, கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் (டிசம்பர் 16) 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் 309 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள், 3,4 நாட்களில் குணமாகி விடுகின்றனர்.
இது இவ்விதமிருக்க, கேரளாவில் சபரிமலைக்கு தற்போது பெருமளவு பக்தர்கள் செல்கின்றனர். இதனால் கேரளாவில் பரவும் கொரோனா ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலும் எதிர்வரும் நாட்களில் பரவும் ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே சபரிமலை செல்லும் பக்தர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தலைநகர் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் பாதிப்பு மீண்டும் உச்சம் தொடுமோ என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.
காய்ச்சல், மூக்கு வடிதல், தொண்டைப்புண், தலைவலி, இரைப்பை குடல் பிரச்சினைகள் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக இருக்கின்றன. பெரும்பாலான நோயாளிகளுக்கு இலேசான மேல் சுவாச பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வகை கொரோனா பாதிக்கப்பட்டோரின் உடல்நிலை 4, 5 நாட்களில் குணமாகும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பெரும்பாலான நபர்களுக்கு இலேசான பாதிப்பே ஏற்படுகிறது. மிகச்சிலருக்கு மட்டுமே தீவிர பாதிப்பு ஏற்படுகிறது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment